"அப்பா.. எழுந்து வாங்க.. கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம் " என்று மகேஷ் கூறியதும் சோபாவில் சாய்ந்தபடி டிவி பார்த்துக் கொண்டிருந்த கனகராஜ் தன் கவனம் கலைத்து திரும்பி பார்த்தார்...
"டேய்.. ஆபீஸ்ல இருந்து வந்து முழுசா பத்து நிமிஷம் கூட ஆகல.. அதுக்குள்ள என்னடா வெளிய..?" என்றார் கனகராஜ்...
"சொல்றேன்.. மொதல்ல நீங்க எழுந்து வாங்க..'
"டேய்... பர்ஸ்ட் போய் டிரெஸ்ஸ மாத்திட்டு காபி சாப்டு.. அப்புறம் வெளிய போகலாம்..."
"அப்பா.. அதெல்லாம் வெளிய போய்ட்டு வந்து பாத்துக்கலாம்.. நீங்க எந்திரிங்க.." என்று விடாப்பிடியாக தன் அப்பாவின் கரம் பற்றி எழுப்பினான் மகேஷ்..
"டேய்.. டேய்.. டேய்.. என்னடா நீ... இப்படி பச்சக் குழந்தையாட்டம் அடம் புடிக்குற.." என்று கனகராஜின் சலிப்புடன் எழுந்த குரல் கேட்டு வெளியே வந்த அவரின் மனைவி லலிதா, "என்னங்க நீ.. ரொம்ப நாள் கழிச்சி புள்ள உங்கள வெளிய கூப்புடுறான்.. ஜாலியா சேந்து வெளிய போய்ட்டு வர்றத விட்டுட்டு என்னமோ ரொம்ப சலிச்சிக்குறிங்களே.." என்றாள்...
"சலிச்சிக்குல லலிதா... இப்பதான் ஆபீஸ்ல இருந்து வந்தான்.. ரொம்ப டயர்டா இருப்பான்... அதன் கொஞ்சம் பிரெஷ் ஆகிட்டு வரட்டுமேன்னு சொன்னேன்.."
மகேஷ் , "அப்பா.. அதெல்லாம் நான் ஒன்னும் டயர்டா இல்ல.. நீங்க கெளம்புங்க.." என்று விடாப்பிடியாய்க் கூறினான்..
கனகராஜ் சிரித்துக் கொண்டே தன் மனைவியைப் பார்த்து ., "உன் புள்ளைக்கு இந்த புடிவாதக் குணம் மட்டும் சின்ன வயசுல இருந்து மாறவே இல்லடி.." எனக் கூறிவிட்டு மகேஷிடம் திரும்பி.,"இருப்பா.. டிரெஸ்ஸ மாத்திட்டு வந்துடுறேன்.." என்றப்படியே தன் அறைக்குள் சென்றார்...
மகேஷ் தன் அம்மாவைப் பார்த்து ஒரு வெற்றி புன்னகையை உதிர்த்தான்... மகேஷ் தயாராய் தன் பைக்கில் காத்திருக்க கனகராஜ் உடை மாற்றிவிட்டு வெளியே வந்தார்..
கனகராஜ் ,"டேய்.. எங்க டா போறோம்.." எனக் கேட்க, "சொல்றேன்பா.." எனக் கூறிவிட்டு பைக்கை முறுக்கினான்..
 சென்னை நகர வாகன நெரிசலில் மகேஷ் லாவகமாய் வண்டியை ஓட்டினான்.. கனகராஜ் இப்பொழுது கட்டாயத்தின் பேரில் வந்திருப்பினும் தன் மகனுடன் சேர்ந்து வெளியில் செல்வதை எப்போதும் விரும்பவே செய்தார்... இன்றும் அப்படியே.. "தன் மடியிலும் தோளிலும் குழந்தையாய் தவழ்ந்த மகன், தான் வண்டி ஓட்ட என் இடுப்பை அணைத்தப்படி வந்த மகன் இன்று தான் பின்னால் அமர்ந்திருக்க அவன் வண்டி ஓட்டுகிறான்... என் மகன் வளர்ந்துவிட்டான்.." என்று ஒவ்வொரு முறை மகேஷுடன் வெளியில் செல்லும் போதும் நினைத்துப் பெருமிதம் கொள்வார்... ஒரு நாள் கனகராஜின் முகத்தில் தெரிந்த சிரிப்பின் காரணத்தை மகேஷ் கேட்க அவரும் இதைக் கூறவே.,"அப்பா.. இதுல என்னப்பா இருக்கு.. குழந்தை பொறந்தா குழந்தையாவேவா இருக்கும்.. இதுக்குப் போய் சிவாஜி கணேஷன் ரேஞ்சுக்கு ஓவர் ரியாக்ஷன் கொடுக்குறீங்களே" என்று அவன் தன் அப்பாவைக் கிண்டல் செய்தான்.. தன் மகனின் குறும்பை ரசித்தப்படியே.,"அதெல்லாம் சொன்னாப் புரியாதுடா.... நீ அப்பாவாகும் போது உனக்கே தெரியும்... இதுல எவளோ சந்தோஷம் இருக்கும்னு.." என்றார்...
வண்டியில் சென்றபடியே..,”டேய்.. இப்பவாது சொல்லுடா.. எங்க போறோம்னு..” என்ற கனகராஜை, “அப்பா.. சொல்றேன் பா.. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க...” என மகேஷ் அமைதியாக்கிவிட்டு வண்டியை விரட்டினான்... தி.நகர் சாலையின் ஜன நெரிசலைத் தாண்டிச் சென்று ஒரு நகைக் கடையின் முன்பு வண்டியை நிறுத்தினான்..
கனகராஜ்..,”என்னடா நகைக் கடைக்கு கூட்டிட்டு வந்திருக்க... யாரையாவது உள்ள பாக்கணுமா..” என்றார்..
“இல்ல... வாங்க சொல்றேன்..”
“என்னடா எதக் கேட்டாலும் இதையே சொல்ற..”
“நீங்க பர்ஸ்ட் உள்ள வாங்கப்பா...”
“ம்... சரி வா..”
கனகராஜும் மகேஷும் உள்ளே நுழைய முற்படும் போது கடை வாசலில் நின்ற சிப்பந்தி ஒருவன்..,”வாங்க சார்... என்று வரவேற்றான்..”
மகேஷ் அவனிடம்..,”மோதிரம் செக்சன் எங்க இருக்கு..” எனக் கேட்க “வாங்க சார்.. காட்டுறேன்...” என்று அவர்களை அழைத்துச் சென்றான்... கனகராஜ் மகேஷின் கைகளைப் பிடித்து நிறுத்தி..,”மகேஷ்.. யாருக்குடா மோதிரம்..”
“உங்களுக்குதான்ப்பா...”
“எனக்கெதுக்குடா இப்ப மோதிரம்...”
“சும்மாதான்பா வாங்க..”
“பணம் எதுடா..?”
“என்னோட முதல் மாச சம்பளம்..”
“முதல் மாச சம்பளமா...? சம்பளம் போட்டங்களா...? முன்னையே சொல்லியிருக்கலாம்ல... அப்டியே கோயிலுக்கு போயிட்டு வந்திருக்கலாமே...”
“ரிட்டர்ன் போகும் போது போய்க்கலாம் வாங்க..”
“டேய்..டேய்.. மோதிரம் எனக்கு இப்ப ரொம்ப அவசியமா..?”
“அவசியம் தான்.. வாங்க..” எனக் கூறிவிட்டு மகேஷ் அவரின் பதிலை எதிர்ப்பார்க்காமல் நடக்கத் தொடங்க கனகராஜும் அவனைப் பின் தொடர்ந்தார்...
வரவேற்று அழைத்துச் சென்ற அந்த சிப்பந்தி மோதிர செக்சனில் நின்று கொண்டிருந்த இன்னொருவனிடம்..,”கணேஷ்.. ஸாருக்கு மோதிரம் டிசைன்ஸ் காட்டு..” என அவனிடம் கூறிவிட்டு மகேஷிடம் திரும்பி..,”உக்காந்து பாருங்க ஸார்...” என அவர்களை அமர வைத்தப் பின் மீண்டும் கடை வாசல் அருகே வரும் வாடிக்கையாளர்களை வரவேற்கச் சென்றான்...
கணேஷ் என்று அழைக்கப்பட்ட அந்த சிப்பந்தி மகேஷிடம்..”யாருக்கு சார் மோதிரம்..?” எனக் கேட்க..”இதோ இவருக்கு தான்..” என்று கனகராஜை கைக் காட்டினான்... அந்த சிப்பந்தி மோதிர டிசைன்களை எடுத்து அவர்களின் முன் பரப்பினான்... மகேஷ் ஒவ்வொரு மோதிரமாய் எடுத்து கனகராஜின் மோதிர விரலில் மாட்டி பார்த்தான்.. அரை மணி நேர தேடலுக்குப் பிறகு பதினைந்தாயிரம் ருபாய் விலையில் ஒரு மோதிரத்தை தேர்ந்தெடுத்தான்... அதற்கான பணத்தை செலுத்திவிட்டு வெளியில் வந்த பொழுது...”மகேஷ்... இவளோ விலையில எனக்கு இப்ப எதுக்குடா மோதிரம்..” என்றார் கனகராஜ்... அவரை திரும்பி பார்த்து மெலிதாக சிரித்த மகேஷ்..,”உங்களுக்கு நியாபகம் இருக்காப்பா... நான் அஞ்சாவது படிக்கும் போது உங்ககிட்ட சைக்கிள் வேணும்னு அடம் பிடிச்சேன்... ஆனா உங்ககிட்ட காசு இல்ல... நீங்க நினைச்சிருந்தா என்ன அடிச்சி அடக்கி இருந்திருக்கலாம்... இல்ல என்ன பெருசா கண்டுக்காம விட்டு இருக்கலாம்... ஆனா நான் ஆசைப்பட்ட விஷயம் கிடைக்கும்னு பாட்டி இறந்த பிறகு அவங்க தாலில செஞ்சி அவங்க நியாபகமா போட்டிருந்த மோதிரத்த வித்து எனக்கு சைக்கிள் வாங்கி கொடுத்திங்க....” என்றான்... கனகராஜ் ஏதும் பேசாமல் அந்த பழைய நினைவுகளில் இருந்தார்...
மீண்டும் தொடர்ந்தான் மகேஷ்..,”எனக்கு நல்லா விவரம் தெரிஞ்சப் பிறகு ஒரு நாள் நீங்க இந்த விஷயத்த சொன்ன போது எனக்கு ரொம்ப வருத்தமாயிடுச்சி... சின்ன வயசுலையே பாட்டிய இழந்துட்டு அவங்க நியாபகமா உங்ககிட்ட இருந்த ஒண்ணே ஒண்ணையும் எனக்காக வித்துட்டிங்க... அதனால அப்போ முடிவு பண்ணேன்.. நான் வேலைக்கு போனதும் முதல் மாச சம்பளத்துல உங்களுக்கு ஒரு மோதிரம் வாங்கி கொடுக்கணும்னு... ஆனா கண்டிப்பா பாட்டி நியாபகமா நீங்க வச்சிருந்த அந்த மோதிரத்துக்கு இது ஈடு இல்ல தான்... பட்  என்னோட திருப்திக்காக நீங்க இத ஏத்துக்கணும்...” என்று முடித்தான்...
அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த கனகராஜ் மகேஷின் அருகில் வந்து அவன் விரல்களைப் பிடித்து..,”நீ சொல்றது சரி தான்... கண்டிப்பா பாட்டி நியாபகமா நான் வச்சிருந்த அந்த மோதிரத்துக்கு இது ஈடு இல்ல தான்...” என்றார்... மகேஷ் அவரை ஆமோதிப்பது போல் தலையை மேலும் கீழும் அசைத்தான்...
“அத விட உசத்தி டா இது... ஏன்னா என் மகன் வாங்கி கொடுத்திருக்கான்ல...” என்று கனகராஜ் கூறியபோது மகேஷ் முகத்தில் மகிழ்ச்சி கரைபுரண்டது... இருவரும் சிரித்துக் கொண்டே பைக்கின் அருகில் சென்றனர்... மகேஷ் பைக்கை ஸ்டார்ட் செய்ய முயலும் போது கனகராஜ் கேட்டார்...
“சரி டா... முதல் மாச சம்பளத்துல எனக்கு மட்டும் மோதிரம் வாங்கி கொடுத்துட்டியே... உங்க அம்மாவுக்கு ஒன்னுமே வாங்காம போன அவ கோவிச்சிக்க மாட்டாளா...?”
“இல்லப்பா... கோவிச்சிக்க மாட்டாங்க...”
“எப்படி சொல்ற..?”
“அம்மாவுக்கு இந்த விஷயம் ஏற்கனவே தெரியும்..”
“என்னடா சொல்றா..”
“ஆமாப்பா... நான் காலேஜ் படிக்கும் போதுல இருந்தே அம்மாகிட்ட இத சொல்லிட்டு இருப்பேன்... என் முதல் மாச சம்பளத்துல அப்பாவுக்கு மோதிரம் வாங்கி கொடுக்கனுமா அப்டின்னு... அதுமட்டுமில்ல... சம்பளம் கொடுத்ததும் அம்மாவுக்கு ஆபீஸ்ல இருந்தே போன் பண்ணி விஷயத்தை சொல்லிட்டேன்... அதனால தான் கெளம்பும் போது உங்கள என்கூட போய்ட்டு வர சொல்லி எனக்கு சப்போர்ட் பண்ணாங்க...” என்று முடித்தான் மகேஷ்...
கனகராஜ் மனது முழுவதும் மகிழ்ச்சி மட்டுமே நிரம்பி இருந்தது... அன்பு மட்டுமே நாம் கொடுப்பதை விட இரண்டு மடங்கு நம்மிடம் திரும்பி வரும் என்று அவர் எங்கோ படித்தது நியாபகம் வந்தது... அன்பு காட்ட ஆள் இல்லை என்றால் ஒருவனிடம் எத்தனைக் கோடி இருந்தாலும் அவன் ஏழையே... கனகராஜ் தன்னை பெரும் செல்வந்தானாய் எண்ணிக் கொண்டு பெருமிதமாய் மகேஷின் பின் பைக்கில் அமர்ந்து கொண்டார்.... மகேஷ் பைக்கை விரட்டினான்...