மலையாள சினிமாவின் ஆகப் பெரும் பலமே அவர்கள் எடுத்துக் கொள்ளும் கதைக்களன் தான். மிகச் சிறிய வியாபாரம் கொண்ட அவர்கள் அத்தனை நம்பிக்கையையும், உழைப்பையும் கதையில் கொடுப்பதால் மிகச் சிறந்த படங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. நிச்சயம். வணிக சினிமாக்கள் இல்லாமல் இல்லை. ஆனால் அதிலும் நேர்த்தியை, கதை சொல்லும் உத்தியை உயர்த்திப் பிடித்தப்படி இருக்கிறார்கள். இத்தனை பீடிகைகள், மலையாள சினிமா குறித்த சிலாகிப்புகள் எதற்கு என உங்களுக்கு தோன்றலாம். நேற்று நான் பார்த்த "மும்பை போலீஸ்" என்ற மலையாள படம் தான் காரணம்.


பிரித்விராஜ் போனில் பேசியபடி வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறார். தான் கொலையாளியை கண்டுபிடித்துவிட்டதாக சொல்லிக் கொண்டு வரும் போது அவருக்கு முன்னே சென்று கொண்டிருக்கும் லாரியில் இருந்து ஒரு பிரிட்ஜ் கீழே விழ வண்டியை திரும்ப முயன்று விபத்துக்குள்ளாகிறார். விபத்தில் மீண்டும் வரும் அவருக்கு தான் யார், என்ன வேலை செய்தோம், நண்பர்கள் யார், என அனைத்தும் மறந்து போகிறது. அசிஸ்டென்ட் கமிஷ்னர் ஆக  பணிபுரிந்த பிரித்விராஜ்க்கு அவரது மேலதிகாரியும் நண்பரும் பிரித்விராஜ் தங்கையின் கணவருமான ரகுமான் அனைத்தும் நினைவு படுத்த முயல்கிறார். மேலும் விபத்திற்கு முன்பு அவர்கள் இருவரின் நண்பரும் போலீஸ் அதிகாரியுமான ஜெயசூர்யாவின் கொலை குற்றவாளியை பிரித்விராஜ் கண்டுபிடித்துவிட்டதாகவும் அதனால் இந்த கேஸை தொடர்ந்து அவரே ஏற்றுக் கொள்ளும்படியும் சொல்கிறார் ரகுமான். பழைய நினைவுகள் எதுவுமில்லாத  பிரித்விராஜ் தான் ஏற்கனவே கண்டுபிடித்து விபத்தினால் மறந்து போன அந்த குற்றவாளியை மீண்டும் கண்டுபிடித்தாரா இல்லையா என்பது தான் மீதி கதை.

தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை தமிழிலும் சில படங்களில் நிரூபித்த பிரித்விராஜ், விபத்துக்கு முன்பு யாருக்கும் அடங்காத திமிரான, அடாவடி போலீஸாகவும் விபத்துக்கு பின்பு அமைதியான தான் யார் என்றே தெரியாத குழப்பமான போலீஸாகவும் வேறுபாடு காட்டி அசத்தியிருக்கிறார். அவரைத் தவிர மற்றவர்களுக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு தான் என்ற போதும் ரகுமான், ஜெயசூர்யா இருவரும் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள்.


ஒரு மிகச்சிறந்த சஸ்பென்ஸ் திரில்லர் இந்த படம். முதல் காட்சியில் இருந்தே ஆர்வத்தை தூண்டிக் கொண்டே சென்று நம்மால் எதையும் யூகிக்க முடியாத படி காட்சிகளை நகர்த்தி செல்கிறார்கள். ஒவ்வொரு காட்சியிலும் நுணுக்கமாக சில விஷயங்களை வைத்து புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கும் திரைக்கதை இது. இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்தால் மலையாள சினிமாவில் பெரும் நடிகராக இருக்கும் பிரித்விராஜ் போல் இங்கு இருக்கும் பெரிய நடிகர்கள் அவருடைய கதாபாத்திரத்தில் நடிப்பார்களா என்பது கேள்விக்குறியே.

ஒரு விறுவிறுப்பான திரைப்படத்திற்கு தேவையான புத்திசாலித்தனமான திரைக்கதை தான் இந்த "மும்பை போலீஸ்" படத்தின் பலம்.