நாஞ்சில் நாட்டில் (கன்னியாகுமரி சுற்றுவட்டாரம்) நெசவினை தொழிலாக கொண்ட முஸ்லீம்கள் வாழும் "அஞ்சுவண்ணம் தெரு" பற்றிய நாவல் தான் இது. மீரான் அவர்கள் எழுதிய "கூனன் தோப்பு", "துறைமுகம்" இரண்டு நாவல்களையும் இதற்கு முன்பு வாசித்திருக்கிறேன். வழக்கமான மொழிநடையில் இல்லாமல் வட்டார வழக்கு மொழியைக் கொண்ட அவரது நாவல்கள் முதலில் வாசிக்கும் போது கடினமாகவும், மிக மெதுவாக படிக்கும்படியும் இருந்தது. ஆனால் அந்த இரண்டு நாவல்களை படிக்கும் போதும் பாதியில் நிறுத்திவிடவில்லை. காரணம், எனக்கு கடினமாக தோன்றிய அந்த மொழிநடையைத் தாண்டி சுவாரசியமான கதைசொல்லியாக தோப்பில் முஹம்மது மீரான் தோன்றினார். அதனாலேயே இந்த முறை அஞ்சுவண்ணம் தெருவினை வாசிக்கத் தொடங்கினேன். 


நாவலின் மையக்கதாபாத்திரமான அஞ்சுவண்ணம் தெரு பற்றிய ஆதி வரலாறோடு தொடங்குகிறது நாவல். மலையாளத்து மஹாராஜா ஐந்து முஸ்லீம் நெசவாளர் குடும்பங்களை குடியமர்த்தி பிறகு ஜனங்கள் பெருகி பல தெருக்கள் உருவாகிறது. ஊர்வலத்தின் போது  கண்ணில் படும் முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்ய விரும்பும் மஹாராஜாவை எதிர்க்க முடியாத அந்த பெண்ணின் தந்தை, அப்பெண்ணை உயிரோடு மண்ணில் புதைத்து விட அவள் பிற்பாடு எல்லோராலும் தெய்வமாக வணங்கப்படுகிறாள். இப்படி முதன்முதலில் உருவான அஞ்சுவண்ண தெரு பற்றியும், அங்கே உயிரோடு அடக்கம் செய்யப்பட்ட "தாய்" பற்றியும் சுவாரசியமான பின்னணிக் கதை சொல்லப்படுகிறது. அஞ்சுவண்ண தெரு பள்ளிவாசலை விட உயரமாக கட்டப்பட்ட பாழடைந்த வீட்டை வாங்கி "தாருல் சாஹினா" என பெயர் மாற்றி அங்கு குடிவரும் மேற்கத்திக்காரர் குடும்பம், அதை வாங்கிக் கொடுத்த வாப்பா எனும் கதாப்பாத்திரம்,  தெருவில் இருக்கும் குழாயடியை தன் வசமாக்கி வாயை ஆயுதமாக பயன்படுத்தி வாழும் மம்மதும்மா, அடக்கம் செய்யப்பட்ட தாய் கனவில் தோன்றவும் ஒரே நாளில் கடல், மலை தாண்டி தன் ஜின் உதவியுடன் வந்து தாயின் சமாதி அருகே மஸ்ஜித்  கட்டி கொடுக்கும் மஹமூதப்பா,  ஒற்றை ஆளாக மஹமூதப்பா தைக்காப் பள்ளியில் நேரம் தவறாமல் நைந்த செருப்புடன் இழுத்து இழுத்து நடந்து வந்து  பாங்கு ஓதும்  மைதீன் பிச்சை மோதீன், "மொஹராஜ் மாலை" எனும் காப்பியம் படைத்த ஆலிப்புலவர் மற்றும் அவர் வம்சாவளி குவாஜா அப்துல் லத்தீப் ஹஜ்ரத், மதத்தை வைத்து பணம் சம்பாதிக்க முயலும்  சீக்கா சாவுல் எனும் அனைவருக்கும் ஒரு பின்னணிக் கதை என நாவல் நகர்ந்து கொண்டே இருக்கிறது. 

மதத்தின் மீதான மக்களின் நம்பிக்கைகள் எப்படி இடைத்தரகர்களால் வணிகமாக்கப்படுகிறது என்பது குறித்து எள்ளல் நடையில் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அவர் இங்கே இஸ்லாம் மதத்தை வைத்தே சொல்லியிருந்தாலும் எல்லா மதத்திலும் இப்படி தான் என்பது உரைக்காமல் இருக்கவில்லை. 

நாவலில் பெரும்பாலான இடங்களில் அரபி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் அர்த்தத்தை நினைவில் வைத்துக் கொண்டு வாசிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. மேலும் முஸ்லீம் என்றாலே தீவிரவாதி என்ற பொதுப் பார்வையின் மீதான விமர்சனமாக சில இடங்களை பேசியிருக்கிறார். கேரள எல்லையில் நடைபெறும் உணவுப் பொருட்கள் கடத்தல் காரணமாக சாதாரணமாக நாம் வாங்கும் அரிசி, சர்க்கரை என்ற அத்தியாவசியப் பொருட்களுக்கு எவ்வளவு திண்டாட வேண்டியிருக்கிறது என்பதையும் பதிவு செய்திருக்கிறார். மீரான் பயன்படுத்தும் வட்டார மொழி வழக்கு ஒரே நேரத்தில் வாசிப்பதற்கு (மிக மிக கொஞ்சமே) சிரமமாகவும், இடைவிடாமல் வாசிக்க தூண்டும் ஆர்வத்தினை கொடுப்பதாகவும் இருக்கிறது.

தோப்பில் முஹம்மது மீரான் உருவாக்கிய "அஞ்சு வண்ணம் தெரு" இடிந்த சுவர்களை கொண்ட தைக்காப் பள்ளியோடும், அதன் அருகே "தாருல் சாஹினா"வோடும், வயதாகி போன சிங்கமாக திண்ணையில் சுருண்டு  கிடக்கும் மம்மதும்மாவோடும்  இன்னும் என் நினைவில் அப்படியே இருக்கிறது.