இந்த புத்தகத்தை படிக்கும்படி என்னை தூண்டியது இதன் தலைப்பு தான். காரணம் நான் “மரண தண்டனை” வேண்டும் என்ற கருத்துடையவன். டெல்லி கற்பழிப்பையும், சிறுமியைக் கற்பழித்து எரித்துக் கொன்றுவிட்டு சிறை சென்று பெயிலில் வெளியே வந்து தன் தாயையும் கொன்ற தஷ்வந்த் போன்ற ஈவு இரக்கமில்லாத கொடூரர்களை கொண்ட நாட்டில் எப்படி “மரண தண்டனையை” ரத்து செய்ய முடியும். செய்த குற்றத்திற்கு வேறு என்ன தண்டனையைக் கொடுத்து அவர்களின் கொலை வெறிக்குப் பலியான “அப்பாவிகளின்” இறப்பிற்கு நியாயம் செய்ய முடியும். இது போன்ற கருத்துகள் கொண்ட நான், “அப்படி என்னதான் சொல்லி மரண தண்டனை வேண்டாம்ன்னு சொல்றான்னு பாப்போம்” என்ற முடிவுடனே படிக்கத் தொடங்கினேன்.


ஆல்பெர் காம்யு (Albert camus) இந்த புத்தகத்தை எழுதியது 1959. அப்போதைய பிரான்ஸ் நாட்டு சட்டப்படி மரண தண்டனை கில்லட்டின்(Guillotin) எனப்படும் தலைவெட்டும் இயந்திரம் மூலம் நிறைவேற்றபட்டது. இந்த இயந்திரத்தைக் கண்டுப்பிடித்த Dr.கில்லட்டின் கருத்துப்படி “மரண தண்டனைப் பெறுபவர் தன் கழுத்தில் மெல்லிய குளிர்ச்சியை மட்டுமே வெட்டப்படும் போது அறிவார்” எனக் கூறியிருக்கிறார். ஆனால் மருத்துவ அறிக்கை, தலை துண்டிக்கப்பட்ட பிறகும் முக்கியமான உடல் உறுப்புகள் தொடர்ந்து தாக்குப்பிடிக்கின்றன எனக் கூறுகிறது. தண்டனையை நிறைவேற்றுபவரின் கூற்றுப்படி, "தலை துண்டிக்கப்பட்ட உடல் 20 நிமிடங்களுக்குப் பிறகும் மயானத்தில் புதைக்க எடுத்துச் சென்ற போது துடித்துக் கொண்டிருந்தது" என்கிறார்கள். “இப்படி ஒரு கோரமான, முன்னுதாரணமான தண்டனை வருங்காலத்தில் குற்றம் செய்ய துனிபவர்களுக்கு பயத்தைக் கொடுக்கும் என்ற கூற்று முற்றிலும் தவறு. அவை எக்காலத்திலும் குற்றங்கள் குறைவதற்கு துணை புரிந்ததில்லை.” என்கிறார் ஆல்பெர் காம்யு. மேலும் “குற்றம் புரிந்தால் தன் தலை இப்படி துண்டிக்கப்படும் என மக்களுக்கு தெரிய வேண்டுமென அரசு நினைத்தால் அதை மக்கள் முன்னிலையில் செய்யட்டும். மாறாக எதற்காக நான்கு சுவற்றுக்குள் இதை செய்ய வேண்டும்? அப்படி நான்கு சுவற்றுக்குள் செய்தால் குற்றம் செய்தவனுக்கு நீதி நிறைவேற்றப்பட்டது என்ற செய்தியை படித்து விட்டு மக்கள் கடந்து போய் விடுவார்கள். அது இவர்களுக்கு மிகவும் வசதியாக போய்விடுகிறது.” என்கிறார்.


மரண தண்டனையை இவர் எதிர்ப்பதற்கு மேலும் சில காரணங்களை அடுக்குகிறார். “குற்றம் புரிந்தவன் திருந்துவதற்கான வாய்ப்பை நீங்கள் மரண தண்டனை கொடுப்பதன் மூலம் மறுக்கிறீர்கள். அவன் திருந்தவே மாட்டான் என்று நீங்கள் எப்படி முடிவு செய்கிறீர்கள்.” இது மட்டுமல்ல அவரது வாதம்.
பதினான்கு வயது சிறுமி ஒருத்தியை கொன்றதற்காக 1957 மார்ச் மாதம் 15 அன்று பர்டன் அப்பாட் (Burton Abbott) என்பவருக்கு கலிபோர்னியாவில் மரண தண்டனை நிறைவேற்றபட்டது. அவர் திரும்ப திரும்ப முறையிட்ட போதும் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மார்ச் 15ஆம் தேதி 9.10 மணிக்கு அவரது வழக்குரைஞர்கள் ஓர் இறுதி முறையீட்டை செய்வதற்காக அவரது தண்டனை நிறைவேற்றத்தை தள்ளிவைப்பதர்க்கு அனுமதி வழங்கப்பட்டது. மரண தண்டனையை ஒத்தி வைக்கச் சொல்லி அந்த கமிட்டியின் செயலாளர் சிறைச் சாலையை நேரடியாக தொடர்பு கொண்ட போது அப்பாட்டின் மரண தண்டனை (விஷவாயு செலுத்துதல்) பாதி நிறைவேற்றபட்டிருந்தது. அப்பாட் மரணமடைந்தார். அவர் இறந்து சிறிது காலம் கழித்து அப்பாட் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார். இது போல் சில அப்பாட்கள் தவறான சாட்சிகள் மற்றும் சூழ்நிலையின் காரணமாக உயிரிழக்க நேரிடுகிறது என்கிறார் ஆல்பெர் காம்யு.


“திருந்தவே மாட்டார்கள்” வகைமையைச் சேர்ந்த கொடூர கொலைகாரர்களை என்ன செய்வது, அப்படியே காலம் முழுக்க சாப்பாடு போட்டு உயிருடன் வைத்திருக்கலாமா? என்ற கேள்வி புத்தகம் படிக்கத் தொடங்கியதிலிருந்தே என்னை உறுத்திக் கொண்டிருந்தது. அதற்கு எழுத்தாளரின் வாதம் “மரண தண்டனையின் இடத்தை ‘கடின உழைப்புத் தண்டனை’ எடுத்துக் கொள்ளும். கடின உழைப்பு தண்டனைக்கு மரண தண்டனை மேல் என நினைப்பவர்கள் கற்பனைத் திறன் அற்றவர்கள்.” என்பதே. மேலும் “அப்படி ‘கடின உழைப்பு தண்டனை’ முடியாது மரண தண்டனை தான் தர வேண்டும் என அரசு நினைத்தால் அதை கொஞ்சம் அறிவியல் துணையோடு தூக்கத்திலிருந்து மரணத்திற்கு செல்வதைப் போல் இலகுவாக்கி விடுங்கள். இல்லையேல் ஒரு விஷத்தைக் கொடுத்து அதை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டுமென்பதை அவரிடமே விட்டுவிடுங்கள்.” என்கிறார்.

“இப்படி ஒரு கொலையை செஞ்ச இவன் சாகனும். அவன் எல்லாம் தப்பிக்கவே கூடாது” என பலியானவரின் தரப்பாக இருந்து கொலையாளியின் மரண தண்டனையை நீங்கள் கொண்டாடியிருந்தால் உங்கள் மீதும் எழுத்தாளர் குற்றம் சுமத்துகிறார். இதோ அவரது வார்த்தைகளில்: “பலியானவர் குற்றமற்றவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலியானவரின் பிரதிநிதியாக தன்னை முன்னிறுத்தும் சமூகம் குற்றமற்றது என்று கூறிக் கொள்ள முடியுமா? அதனால் மிகக் கடுமையாகத் தண்டிக்கப்படும் குற்றத்திற்கு ஓரளவுக்கேனும் அது பொறுப்பேற்க வேண்டும்.”

“மரண தண்டனை வேண்டும்” என்ற எனது நிலைபாட்டினை இந்த புத்தகம் முழுவதும் உடைத்தெறிந்துவிட்டது எனக் கூற மாட்டேன். ஆனால் அதன் மீது சிறு விரிசலை எழுத்தாளரின் வாதம் ஏற்படுத்தியிருக்கிறது. அது ஒருவேளை புத்தகம் படித்து முடித்து சில மணி நேரங்களே ஆகி இருப்பதால் கூட இருக்கலாம். என்னை உணர்ச்சியவயப்பட வைக்கும் கொலைப் பற்றி வருங்காலத்தில் படிக்க நேர்ந்தால், அந்த பலியானவரின் பிரதிநிதியாக என்னை மீண்டும் நினைத்துக் கொண்டு “இந்த மாதிரி ஆளுங்க எல்லாம் கண்டிப்பா சாகனும்” என்றே உரைப்பேன் என நினைக்கிறேன்.


மொழிபெயர்ப்பு தத்துவார்த்தமாக இருந்ததால் 70 பக்க புத்தகத்தை படித்து முடிக்க எனக்கு ஒரு வார காலம் ஆகிவிட்டது. அவரின் வாதங்களை முழுவதும் கிரகித்துக் கொள்ள வேண்டும் என்றே மிக நிதானமாக படித்து முடித்தேன். 1957 ஆல்பர்ட் காம்யு பிரெஞ்சு மொழியில் எழுதி ஆங்கிலத்தில் "Reflections on the Guillotine" என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் மொழிப்பெயர்ப்பை பரிசல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வாய்ப்பு கிடைத்தால் வாசித்துப் பாருங்கள் மரண தண்டனை குறித்தான ஒரு புது பார்வை உங்களுக்குள் தோன்றும்.