வெங்கட் பிரபுவின்   அடையாளமான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை எண்ணில் ஏற்படுத்தவில்லை. முதல் பாகம் எனக்கு மிகவும் பிடிக்கும். இருப்பினும் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம், அத்தனை ஈர்ப்பாக இல்லை. ஆனாலும் முதல் நாள் பார்க்கலாம் என்று டிக்கெட் புக் செய்தாகிவிட்டது. மொக்கையாக போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை  எல்லாம் படம் ஆரம்பித்த 15 நிமிடத்தில் மறந்துபோய் படத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.திருமணம் ஆகி செட்டில் ஆன ஷார்க்ஸ் டீம் அணி நண்பர்கள் ஜெய்யின் காதல் திருமணத்திற்காக தேனி செல்கிறார்கள். அங்கு அவர்களது டீம்-மை சேர்ந்த அஜய் ஆகாஷை பார்க்கிறார்கள். அந்த ஊரில் நடக்கும் அத்தனை போட்டிகளிலும் தனது அணியே ஜெயிக்க வேண்டும் அதற்காக எதையும் செய்ய தயங்காத வைபவ்-க்கும் தனக்கும் இருக்கும் பிரச்சனையை சொல்லி அடுத்த நாள் வேறொரு அணியுடன் நடக்க இருக்கும் போட்டியில் விளையாட அழைக்கிறார் அஜய். இவர்கள் ஒப்புக் கொண்டு மேட்ச் ஜெயிக்கிறார்கள். இறுதி போட்டியில் வைபவ் அணியுடன் விளையாட வேண்டும். ஜெய் அணி விளையாடினால் தனது அணி தோற்று விடும்  என்று வைபவ் செய்யும் உத்தியின் காரணத்தால் ஜெய்யின் திருமணம் நின்று போக அதே காரணத்தால் நண்பர்கள் கூட்டமும் கலைந்து போகிறது. மீண்டும் நண்பர்கள் இணைந்து வைபவ் -டீமை இன்னொரு போட்டியில் ஜெயித்து, ஜெய்யின் திருமணத்தை முடிப்பதே சென்னை 28 - 2ம் பாகம்.

சென்னை 28 பெரிய பலமே அதில் நடித்திருந்த  அனைவரிடத்திலும் இருந்த கெமிஸ்ட்ரி தான். நிஜமாகவே நாம் பார்த்து பழகிய நண்பர்களை போல அவர்களுக்குள்  கலாய்த்துக் கொள்வது  ஏதாவது  பிரச்சனை வந்தால் உடன் இருந்து தோள் கொடுப்பது என்று அந்த நண்பர்கள் கூட்டத்தை அத்தனை உயிர்ப்பாக கொண்டு வந்திருந்தார் வெங்கட். அதே நடிகர்கள் அப்படியே. அந்த கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் அப்படியே மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த போது ஒருவர் பெயரும் தெரியாது. ஆனால் இப்போது அதில் நடித்திருந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாளம் உண்டு. அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நடித்திருக்கிறார்கள்.

சிவா நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார். துவண்டு போன அவரது சினிமா Career இந்த படத்தின் மூலம் மீண்டும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஜெய் வழக்கமான படம் போலவே காதல் காட்சிகள், சில சீரியஸ் காட்சிகள். வைபவ் கிராமத்தில் கெத்து காட்டும் கதாப்பாத்திரமாக நன்றாக செய்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரத்திற்கு இன்னும் கெத்து ஏத்தும் விதமாக யுவனின் அருமையான பின்னணி இசை வேறு. மற்ற கதாபாத்திரங்கள் எல்லோரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள்.

திரைக்கதை பெரிய அளவில் இல்லை என்றாலும் நடிகர்களின் உறுத்தாத நடிப்பு, டைமிங் வசனங்கள், சிறப்பான எடிட்டிங் என்று எல்லாம் சேர்ந்து படத்தை ரசிக்க வைக்கிறது. அங்கங்கே சிவா "ரெவியூ" செய்வது போல "Youtube" வீடியோ காட்சிகளாக "ஆன்லைன்" விமர்சகர்களை கலாய்த்திருப்பது நல்ல உத்தி.  இதுபோல நிறைய "Surprise" மூலம் இந்த இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தைப் போலவே  ரசிக்கும்படி செய்திருக்கிறார் வெங்கட். பிரியாணி, மாஸ் தோல்விகளுக்குப் பிறகு இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றி வெங்கட்க்கு உற்சாகம் கொடுப்பதாக இருக்கும்.

முதல் பாகத்தில் தன் நண்பர்களுடன் இருந்துவிட்டு வந்ததைப் போல ஒரு  ஜாலியான  அனுபவத்தைக் கொடுத்த வெங்கட் பிரபு, நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் நண்பர்களுடன் மீண்டும் ஒரு சுற்றுலா சென்று வந்ததை போல ஒரு சிறப்பான அனுபவத்தை இந்த இரண்டாவது இன்னிங்ஸ்-ல் கொடுத்திருக்கிறார். முகம் சுழிக்க வைக்கும் டபுள் மீனிங் வசனங்கள், மொக்கை காமெடி என்று கொள்ளாமல் நண்பர்களோடு சென்று ரசித்து விட்டு வரும்படியான ஒரு "stress buster" தான் இந்த படம்.