வெள்ளி, 9 டிசம்பர், 2016

வெங்கட் பிரபுவின்   அடையாளமான சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் பெரிய எதிர்பார்ப்பை எண்ணில் ஏற்படுத்தவில்லை. முதல் பாகம் எனக்கு மிகவும் பிடிக்கும். இருப்பினும் இரண்டாம் பாகத்தின் முன்னோட்டம், அத்தனை ஈர்ப்பாக இல்லை. ஆனாலும் முதல் நாள் பார்க்கலாம் என்று டிக்கெட் புக் செய்தாகிவிட்டது. மொக்கையாக போய் விட்டால் என்ன செய்வது என்ற பயத்தை  எல்லாம் படம் ஆரம்பித்த 15 நிமிடத்தில் மறந்துபோய் படத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டேன்.திருமணம் ஆகி செட்டில் ஆன ஷார்க்ஸ் டீம் அணி நண்பர்கள் ஜெய்யின் காதல் திருமணத்திற்காக தேனி செல்கிறார்கள். அங்கு அவர்களது டீம்-மை சேர்ந்த அஜய் ஆகாஷை பார்க்கிறார்கள். அந்த ஊரில் நடக்கும் அத்தனை போட்டிகளிலும் தனது அணியே ஜெயிக்க வேண்டும் அதற்காக எதையும் செய்ய தயங்காத வைபவ்-க்கும் தனக்கும் இருக்கும் பிரச்சனையை சொல்லி அடுத்த நாள் வேறொரு அணியுடன் நடக்க இருக்கும் போட்டியில் விளையாட அழைக்கிறார் அஜய். இவர்கள் ஒப்புக் கொண்டு மேட்ச் ஜெயிக்கிறார்கள். இறுதி போட்டியில் வைபவ் அணியுடன் விளையாட வேண்டும். ஜெய் அணி விளையாடினால் தனது அணி தோற்று விடும்  என்று வைபவ் செய்யும் உத்தியின் காரணத்தால் ஜெய்யின் திருமணம் நின்று போக அதே காரணத்தால் நண்பர்கள் கூட்டமும் கலைந்து போகிறது. மீண்டும் நண்பர்கள் இணைந்து வைபவ் -டீமை இன்னொரு போட்டியில் ஜெயித்து, ஜெய்யின் திருமணத்தை முடிப்பதே சென்னை 28 - 2ம் பாகம்.

சென்னை 28 பெரிய பலமே அதில் நடித்திருந்த  அனைவரிடத்திலும் இருந்த கெமிஸ்ட்ரி தான். நிஜமாகவே நாம் பார்த்து பழகிய நண்பர்களை போல அவர்களுக்குள்  கலாய்த்துக் கொள்வது  ஏதாவது  பிரச்சனை வந்தால் உடன் இருந்து தோள் கொடுப்பது என்று அந்த நண்பர்கள் கூட்டத்தை அத்தனை உயிர்ப்பாக கொண்டு வந்திருந்தார் வெங்கட். அதே நடிகர்கள் அப்படியே. அந்த கெமிஸ்ட்ரியும் இந்த படத்தில் அப்படியே மீண்டும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தில் நடித்த போது ஒருவர் பெயரும் தெரியாது. ஆனால் இப்போது அதில் நடித்திருந்த ஒவ்வொருவருக்கும் தனித்தனி அடையாளம் உண்டு. அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நடித்திருக்கிறார்கள்.

சிவா நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்த படத்தில் தனது டைமிங் வசனங்கள் மூலம் சிரிக்க வைத்திருக்கிறார். துவண்டு போன அவரது சினிமா Career இந்த படத்தின் மூலம் மீண்டும் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன். ஜெய் வழக்கமான படம் போலவே காதல் காட்சிகள், சில சீரியஸ் காட்சிகள். வைபவ் கிராமத்தில் கெத்து காட்டும் கதாப்பாத்திரமாக நன்றாக செய்திருக்கிறார். அவரது கதாப்பாத்திரத்திற்கு இன்னும் கெத்து ஏத்தும் விதமாக யுவனின் அருமையான பின்னணி இசை வேறு. மற்ற கதாபாத்திரங்கள் எல்லோரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்திருக்கிறார்கள்.

திரைக்கதை பெரிய அளவில் இல்லை என்றாலும் நடிகர்களின் உறுத்தாத நடிப்பு, டைமிங் வசனங்கள், சிறப்பான எடிட்டிங் என்று எல்லாம் சேர்ந்து படத்தை ரசிக்க வைக்கிறது. அங்கங்கே சிவா "ரெவியூ" செய்வது போல "Youtube" வீடியோ காட்சிகளாக "ஆன்லைன்" விமர்சகர்களை கலாய்த்திருப்பது நல்ல உத்தி.  இதுபோல நிறைய "Surprise" மூலம் இந்த இரண்டாவது பாகத்தை முதல் பாகத்தைப் போலவே  ரசிக்கும்படி செய்திருக்கிறார் வெங்கட். பிரியாணி, மாஸ் தோல்விகளுக்குப் பிறகு இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றி வெங்கட்க்கு உற்சாகம் கொடுப்பதாக இருக்கும்.

முதல் பாகத்தில் தன் நண்பர்களுடன் இருந்துவிட்டு வந்ததைப் போல ஒரு  ஜாலியான  அனுபவத்தைக் கொடுத்த வெங்கட் பிரபு, நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் நண்பர்களுடன் மீண்டும் ஒரு சுற்றுலா சென்று வந்ததை போல ஒரு சிறப்பான அனுபவத்தை இந்த இரண்டாவது இன்னிங்ஸ்-ல் கொடுத்திருக்கிறார். முகம் சுழிக்க வைக்கும் டபுள் மீனிங் வசனங்கள், மொக்கை காமெடி என்று கொள்ளாமல் நண்பர்களோடு சென்று ரசித்து விட்டு வரும்படியான ஒரு "stress buster" தான் இந்த படம்.

Posted on முற்பகல் 4:15 by Elaya Raja

No comments

வியாழன், 1 டிசம்பர், 2016

சுஜாதாவின் “ஆ..” என்ற நாவலில் “மண்டைக்குள் குரல் கேட்கும் நாயகன்” என்ற கருவைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் விஜய் ஆண்டனியின் “சைத்தான்” முதல் நாளே பார்த்தாகிவிட்டது. இப்படி முதல் நாளே பார்க்கும் ஆர்வத்தை தூண்டிய “YouTube-ல் முதலில் ரிலீஸ் செய்த ஒன்பது நிமிடக் காட்சிகளும் மீண்டும் ரிலீஸ் செய்த 4 நிமிடக் காட்சிகளும்” நல்லதொரு விளம்பர யுக்தி. கதையை கணிக்க முடியாமல் நல்லதொரு ஆர்வத்தையும் தூண்டின அந்த காட்சிகள்.


IT நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் நல்ல “புத்திசாலியான” விஜய் ஆண்டனி அனாதைப் பெண்ணான கதாநாயகியை Matrimony தளத்தில் பார்த்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணம் முடிந்த சில நாட்களில் திடிரென விஜயின் மண்டையில் ஒரு குரல் கேட்க தொடங்குகிறது. அவரை தற்கொலை செய்து கொள்ளும்படியும் ஜெயலக்ஷ்மியை கொள்ளும்படியும் தூண்டுகிறது. மனநல மருத்துவரின் உதவியை நாடும் விஜய்க்கு தன் பூர்வ ஜென்மம் குறித்த சில விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. அவரது பூர்வ ஜென்மம் குறித்த தேடலும், அடுத்தடுத்து நடக்கும் விஷயங்களுமே “சைத்தான்”. (இப்படி கதை சொல்றதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு)

முதல் காட்சியிலையே கதையினை தொடங்கியது நல்ல விஷயம். ஒரு வித ஆர்வத்தை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து கதை கொஞ்சம் கொஞ்சமாக முதல் பாதி முழுவதும் யாருடைய குரல் அது, பேயா, இல்லை கற்பனையா என்று கதாநாயகன் போலவே அதனை தெரிந்து கொள்ள நமக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது. முதல் பாதியில் அப்படி சுவாரசியத்தை ஏற்படுத்திவிட்டு அதை இரண்டாம் பாதியில் தவற விட்டுவிட்டார்கள். நீளமான, தமிழ் சினிமாவுக்கே உரித்தான சில காட்சிகள், இரண்டாம் பாதியின் வேகத்தை குறைத்து விடுகிறது. திடிரென முளைக்கும் வில்லன் கதையில் பொருந்தாமல் போனதைப் போல் இருந்தது. வில்லனின் இடமும், கிளைமாக்ஸ் சண்டை நடக்கும் அந்த அறையும் “The Equalizerபடத்தினை நினைவூட்டியது. “End credits” போடும் போது அவிழும் ஜெயலக்ஷ்மி குறித்தான அந்த ட்விஸ்ட் இன்னும் கொஞ்சம் எல்லோரும் புரிந்துக் கொள்ளும்படி அல்லது இன்னும் விவரமாக காட்டி இருக்கலாம் என்று தோன்றியது.

விஜய் ஆண்டனி “இந்தியா-பாகிஸ்தான்” தவிர்த்து மற்ற எல்லாப் படங்களிலும் ஒரு வித இறுக்கமான, அதிகமான முகப்பாவனைகளை காட்டத் தேவைப்படாத கதாப்பாத்திரங்களையும் கதைக் களத்தினையுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த படமும் அது போலவே. கதாநாயகியுடன் வரும் சில காட்சிகள் மட்டும் சிரித்த முகமாக கொஞ்ச நேரம் வலம் வருகிறார்.

ஒளிப்பதிவும், பின்னணி இசையும் நன்றாக இருந்தது. முக்கியமாக “ஜெயலக்ஷ்மி” பாடலும், அந்த தீம் இசையும் காட்சிகளை சுவரசியப்படுத்தியது.

சமீபகாலமாக வரும் “சென்ஸ்” இல்லாத படங்களுக்கு மத்தியில் “சைத்தான்” நன்றாகவே இருக்கிறது. வித்தியாசமான ஒரு அனுபவத்தைக் கொடுக்கும் விறுவிறுப்பான திரைப்படம். விஜய் ஆண்டனிக்கு இதுவும் வெற்றிப்படமாகவே இருக்கும்.

Posted on முற்பகல் 2:47 by Elaya Raja

No comments