சிம்பு என்ற அருமையான நடிகரால் தாமதமாக்கப்பட்டு ஏ.ஆர்.ரகுமானின் அற்புதமான பாடல்களோடு காதல் காட்சிகளுக்கு பேர்போன கெளதம்மேனின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “அச்சம் என்பது மடமையடா”. கௌதம்மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரகுமான் ஆகியோர் “விண்ணைத்தாண்டி வருவாயா” பிறகு ஒன்று சேர்கிறார்கள் என்றதும் ஏற்பட்ட எதிர்பார்ப்பு கெளதம் “என்னை அறிந்தால்” தொடங்கிவிட்டு இதனை கிடப்பில் போட்டதும் கொஞ்சம் சப்பென்று ஆனது. ஆனால் “தள்ளிப் போகதே” மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. சிம்புவின் கால்ஷீட் சொதப்பல் என்ற கௌதமின் பொலம்பல்களுக்கு பிறகு ஒரு வழியாய் வெளிவந்துவிட்டது.


கதை நாம் அடிக்கடி பார்த்துப் பழக்கப்பட்ட ஹீரோயினை ஏதோ காரணத்திற்காக கொல்ல முயலும் வில்லன் கூட்டத்தை அழித்து ஹீரோயினைக் கரம் பிடிக்கும் கதைதான். ஆனால் தன் பாணியில் இளசுகளை ஈர்க்கும் காதல் பொங்கும் காட்சிகளாலும், ஏ.ஆர்.ரகுமானின் துள்ளலான இசையாலும், “வாவ்” என நம்மை சொல்ல வைக்கும் ஒளிப்பதிவினாலும் ரசிகர்களை திருப்திப்படுத்த முயன்றிருக்கிறார். “டைட்டில் கிரெடிட்” போடும் போது “தி காட்பாதர்” படத்தின் ஒரு காட்சியிலிருந்து “இன்ஸ்பைர்” ஆனது என்று காட்டப்பட்டது. எதிரிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் உயிருக்குப் போராடும் தன் தந்தையை கொல்ல வருபவர்களிடமிருந்து காப்பாற்ற முயலும் ஹீரோ என்ற காட்பாதர் படத்தின் காட்சியே “இன்ஸ்பிரேசன்” என்பது “அ.எ.ம.” வரும் நீளமான அந்த மருத்துவமனைக் காட்சி கூறிவிடுகிறது. அந்த ஒரு காட்சி “இன்ஸ்பிரேசன்” என்பது மகிழ்வாக இருப்பினும் கதை கடைசியில் நம் தமிழ் சினிமா “டெம்ப்ளட்” போலவே அமைந்துவிட்டது. இப்படியெல்லாம் கூறுவதால் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை. படம் எனக்கு பிடித்தே இருந்தது. ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தேன்.


சிம்பு (எ) STR என்கிற நடிகரை திரையில் எந்த அளவிற்கு தமிழ் ரசிகர்கள் “மிஸ்” செய்திருக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு காட்சியும் தெளிவுபடுத்தியது. எதார்த்தமான உடல் மொழி, “ஓவர் ஆக்டிங்” என்று எண்ணச் செய்யாத நடிப்பு என்று படத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். இத்தனை திறமை இருந்தும், இவ்வளவு அருமையான “Screen Presence” கொண்டிருந்தும் அதனை சரிவர புரிந்துக் கொள்ளாத, அதனை முழுவதும் உபயோகிக்காத இவரைக் கண்டு வருத்தம் தான் மேலிடுகிறது. சமீபத்தில் விகடனுக்கு இவர் அளித்திருந்த பேட்டியில், “என்னால டைமுக்கு வர முடியாது. என்னை அப்படி எதிர்பாக்காதிங்க. அது என்னோட பர்சனல்” என்று நேரம் கடந்து படப்பிடிப்புக்கு வரும் இவரது தவறுக்கு காரணம் கூறியிருந்தார். மேலும் “ஏ.ஆர். ரகுமான் நைட்ல டியூன் போடுவாரு, அஜித் ஆடியோ ரிலீஸ் வரமாட்டாரு, அப்படியெல்லாம் தெரிஞ்சி தானே அவங்ககூட வொர்க் பண்றீங்க. அதே மாதிரி நான் லேட்டா வந்தாலும் என் வேலைய சரியா முடிச்சிக் கொடுத்துடுவேன்னு தெரியும்” எனக் கூறியிருந்தார். அவர் குறிப்பிட்டதைப் போல் ஏ.ஆர்.ரகுமான் இரவில் இசை அமைப்பதாலோ, அஜித் ஆடியோ ரிலீஸ் வராமல் போவதாலோ யாருக்கும் நேர விரயமோ பண கஷ்டமோ ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால் ஹீரோவாக நடிக்கும் ஒரு நடிகர் காலம் தாழ்த்தி வருவதால் எத்தனை பேர் காத்திருக்க வேண்டியது இருக்கும். சிம்பு என்ற நடிகரை நான் ரசிக்கிறேன். ஆனால் தன்னுடைய இந்த பழக்கத்தால் எத்தனை பேர் பாதிக்கப்படுகிறார்கள் என்று உணராத அவரின் “Attitude”-ஐ வெறுக்கிறேன். (இது படத்தின் விமர்சனம் என்று அல்லாமல் சிம்பு பற்றிய விமர்சனம் என்பதைப் போல் மாறிவிட்டதை உணர்ந்தே இருக்கிறேன்.)


நாயகியாக தமிழுக்கு அறிமுகமாகியிருக்கும் மஞ்சிமா மோகன் நடிப்பிலும் அழகிலும் எந்த குறையும் இல்லை. (எப்போது கெளதம் மேனன் நாயகிகள் ரசிகர்களுக்கு அழகாய் தெரியாமல் போயிருக்கிறார்கள்?) சினிமாவில் முதன்முறையாக வில்லனாக பாடகர் பாபா சாகேல். “Super Selection” என்று தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு பொருத்தம். இனி இவரை “மதுரை தமிழ், சென்னை தமிழ், கோயமுத்தூர் தமிழ்” என்று விதவிதமான தமிழ் பேசும், “முறுக்கு மீசை, தாடி, விக் வைத்த” என்று பல விதமான வில்லனாக தமிழ் சினிமாவில் பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

படத்தின் வசனங்கள் அருமை. பல இடங்களில் “சிம்பிள் அண்ட் சூப்பர்” என்று சொல்லக் கூடிய அளவில் இருந்தது. “சீரியஸ்” காட்சிகளில் கூட காட்சியின் “மூட்”டை கெடுத்துவிடாத “காமெடி” வசனங்கள் திரையரங்கில் பலத்த கைதட்டலைப் பெற்றது.

 “அ.எ.ம” படத்தின் ஆகச் சிறந்த பெரும்பலம் ரகுமானின் பாடல்கள். அதற்காகவே “முதல் நாள் முதல் ஷோ” சென்ற சில நண்பர்களை நான் அறிவேன். முக்கியமாக “தள்ளிப் போகதே”, “ராசாளி” இரண்டும் கிட்டத்தட்ட இளசுகளின் “தேசிய கீதம்” போலதான். அத்தனைப் பாடல்களையும் முதல் பாதியிலையே பயன்படுத்த பெரும் தைரியம் நிச்சயம் வேண்டும். அப்படி செய்தும் அது படத்தின் வேகத்தை பாதித்துவிடாதபடி திரைக்கதை அமைத்த கெளதம்மேனனுக்கு நிச்சயம் பாராட்டுகள் போய் சேர வேண்டும்.


கெளதம் பெரும்பாலும் “More realistic” ஆக படம் செய்பவர். பறந்து பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள்  அவரை மறந்து கூட அவரது படத்தில் இடம் பெறாது. “படித்து முடித்து வேலைக்கு செல்லாமல் தங்கையின் நண்பியைக் காதலிக்கும் இளைஞன், தன் காதலியை அவளுக்கு ஏற்பட போகும் ஆபத்திலிருந்து காப்பாற்ற என்னென்ன செய்வான்” என்ற கருவிற்கு காதல் காட்சிகளில் “More realistic” ஆகவும் அதிரடிக் காட்சிகளுக்கு “less realistic” ஆகவும் திரைக்கதை அமைத்து ரசிகர்களை திருப்திப் படுத்த முயன்றிருக்கிறார். படம் பார்த்த நிறைய நண்பர்கள் இரண்டாம் பாதி “வேஸ்ட்” என்றார்கள். ஒரு வேளை அவர்கள் காதல் காட்சிகளில் மனதை பறிகொடுத்துவிட்டு இரண்டாம் பாதி அதற்க்கு முற்றிலும் வேறாக இருந்ததால் ஏமாற்றமடைந்திருக்கலாம். Spoilder Alert: கடைசியில் சிம்பு போலீசாக வருவது ஹரி, கே.எஸ்.ரவிக்குமார், லிங்குசாமி போன்ற மசாலாப் பட இயக்குனர்களின் படங்களில் இருந்திருந்தால் ரசிகர்கள் சுலபமாக கடந்து போயிருப்பார்கள். அது கெளதம் படத்தில் இருக்கிறது என்பதே பலருக்கு நெருடலாக தெரிகிறது போலும். எத்தனையோ “லாஜிக்” மீறல் படங்களைப் பார்த்து பழகியிருக்கிறோம். இதனையும் அப்படி கண்டு கொள்ளாமல் சிம்பு-மஞ்சிமா ஜோடிக்காகவும், ஏ.ஆர்.ரகுமானின் இசைக்காகவும் ரசித்து விட்டு வரலாம் என்றே நான் சொல்வேன்.