“பாபா”, “புதுப்பேட்டை” (“பாரதி” படத்தில் நடித்திருக்கிறாராம். ஆனால் நான் சிறுவனாக இருக்கும் போது அதனை பார்த்ததால் அவரின் முகம் எனக்கு நியாபகம் இல்லை) போன்ற படங்களின் மூலம் குணச்சித்திர, சிறு வேட நடிகராக மட்டுமே நான் அறிந்து வைத்திருந்த பாரதி மணி என்ற மனிதர் மீது இந்த புத்தகம் படிக்கும் முன்பு நான் கொண்டிருந்த பிம்பங்கள் அனைத்தும் புத்தகத்தை வாசித்து முடிக்கும் போது அப்படியே மாறிவிட்டது.

தில்லியில் 50 வருடங்களாக வாழ்ந்த இவர் எழுத்தாளர் கா.நா.சு (இவரை அதிகம் படித்ததில்லை. இனி தான் படிக்க உத்தேசித்திருக்கேன்) அவர்களின் மருமகன் என்ற விஷயமே புதிதாக இருந்தது. பிரபலமான எழுத்தாளரின் மருமகன் என நினைக்கும் போதே அடுத்தடுத்த கட்டுரைகளால் அவரின் தனிப்பட்ட ஆளுமை புலப்படுகிறது. ராஜீவ் காந்தியை ஏர்போட்டில் சந்தித்த சம்பவம், மதர் தெரஸாவுடன் பக்கத்து சீட்டில் விமான பயணம், பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசினா குடும்பத்துடன் கொண்டிருந்த நட்பு, அண்ணாவுடன் அவரது மூக்குப்பொடி நெடியுடன் படம் பார்த்த அனுபவம், நேருவை சந்தித்த அனுபவம் என ஏகப்பட்ட சுவையான(அது என்ன சுவையான??) கட்டுரைகள் புத்தகம் முழுவதும். இத்தனை பெரிய மனிதர்களின் நட்பிருந்தும் அவர்களின் மூலம் எந்த ஆதாயத்தையும் எதிர்ப்பார்க்காத மனிதராக இருந்திருக்கிறார் என்பது இவர் மீது பெரும் மதிப்பினை ஏற்ப்படுத்தியது. வெறும் வட்டச் செயலாளரை தெரிந்திருந்தால் கூட பந்தா பண்ணும் இருபத்தியோராம் நூற்றான்றில் இப்படியொரு மனிதர்.

எழுத்தாளர் அதிஷா அவர்களின் வலைத்தளத்தில் தான் இந்த புத்தகம் பற்றி தெரியவந்தது. நூலகத்தில் இதனை எடுக்கும் போது வெறும் கட்டுரைத் தொகுப்பு புத்தகத்தில் என்ன பெரிதாய் சுவாரசியமாய் இருந்துவிடப் போகிறது என்ற மன நிலையோடு தான் எடுத்து வந்தேன். ஆனால் முடிக்கும் போது நல்லதொரு கட்டுரைத் தொகுதியை படித்த திருப்தி. நான் மிகவும் ரசித்த கட்டுரைகள் நிகம்போத் காட் சுடுகாடு பற்றிய கட்டுரையும், பங்களாதேஷ் நினைவுகள் பற்றிய கட்டுரையும். பங்களாதேஷில் வாழும் தமிழ் குடும்பங்கள் பற்றி வாசித்த போது இந்திய பிரிவினை ஏற்படுத்திய பாதிப்பை உணர முடிந்தது. மொத்தத்தில் நல்லதொரு வாசிப்பனுவத்தையும், தில்லியில் வாழாமலே அங்கு வாழ்ந்ததைப் போன்ற ஒரு பிரமையையும் ஒரு சேர அளிக்கிறது இந்த புத்தகம்.

நண்பர்களை சுலபமாக சம்பாதித்துக் கொள்ளும் மனிதர் என்ற பெரும்பேருக்கு சொந்தகாரரான இவரை ஒரு முறை நேரில் சந்தித்து கைகுலுக்கி விட்டு ஒரு செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் என்னைப் போலவே இதனை வாசிக்கும் அனைவருக்கும் தோன்றும் என நினைக்கிறேன். தவறவிடக் கூடாத, பாரதி மணி என்ற “One book wonder” எழுத்தாளரின் அருமையான அனுபவக் கட்டுரைத் தொகுதி இந்த புத்தகம்.