இந்த படத்தினை எந்த விமர்சனமும் படிக்காமல் முன்னாடியே பார்த்துவிடலாம் என எனக்கு தோன்றியதற்கான காரணங்கள்.

  1.       சிவகார்த்திகேயனின் கவனமான கதைத் தேர்வு முறை. அவருக்கு நன்றாக தெரிகிறது மக்கள் எதனால் தன்னை ரசிக்கிறார்கள், தன் படத்தில் என்ன எதிர்பார்ப்பார்கள், எந்த வசனம் நன்றாக வரவேற்க்கப்படும் என்று. ஆனால் பெண் வேடத்தில் நடிக்கிறார் என்றதும் சின்ன நெருடல் இருந்தது. அது வொர்க்-அவுட் ஆகாமல் போனால் என்னாகும் என்பது நிச்சயம் அவருக்கும் தெரியும் அதனால் கண்டிப்பாக எல்லோரும் ரசிக்கும்படி கொடுக்க வேண்டும் என முயற்சித்து இருப்பார் என நம்பினேன்.
  2.       PC ஸ்ரீராம். பெரிய இயக்குனர்களின் படங்களை மட்டும் ஒப்புக் கொள்ளும் PC இதில் பணிபுரிகிறார் என்றதும் இத்தனை வருட சினிமா அனுபவம் கொண்ட அவர் நிச்சயம் ரசிக்கும்படியான கதையாகத் தான் இருந்திருக்கும் என நினைத்தேன்.
  3.       கீர்த்தி சுரேஷ். இதற்க்கு விளக்கம் எல்லாம் தேவை இல்லை என்று நினைக்கிறேன். (எங்கள் ஊரில் இவருக்கு ரசிகர் மன்றம் தொடங்கி நானே தலைவராக பதவி ஏற்கலாம் என்றிருக்கிறேன்.)

என்னை ஏமாற்றவில்லை ரெமோ. உள்ளே செல்லும் போதே “No logic only magic” என்றபடியே தான் சென்றேன். ஒவ்வொரு காட்சியிலும் டைமிங் வசனங்களால் சிரிப்பினை ஏற்படுத்தியபடியே இருந்தார்கள். நல்ல வேளை சிவாவிற்கு ஒபெனிங் சாங் எல்லாம் இல்லை.


“அவ்வை சண்முகி” மாதிரி என நாம் சொல்லிவிடக் கூடாது என்பதால் “அவ்வை சண்முகி 2” கதைக்கு ஹீரோ தேவை என்ற காரணத்தை உருவாக்கி அந்த கெட்டப்பில் ஹீரோயின் ஹீரோவை பார்க்க ஹீரோ அந்த பெண் வேடத்தில் ஹீரோயினை கரெக்ட் பண்ணுகிறார் என சாமர்த்தியமாகத் தான் செய்திருக்கிறார்கள். ஹீரோ எந்த வேலையும் செய்யாமல் மிடில் கிளாஸ் பையனாக இருக்கும் போது பயங்கர பந்தாவாக காஸ்டியும் செய்வதும், காதல் செய்வது மட்டுமே வேலை என காட்டிக் கொண்டே இருப்பதும் சலிப்போ சலிப்பு. சதீஷ், மொட்டை ராஜேந்திரன் இருவரும் சிவாவோடு சேரும் காட்சிகளில் சிரிப்பலை அதிகம் ஆனப் படியே இருந்தது. சரண்யா பொன்வண்ணன் வழக்கமான, காமெடி கலந்த அம்மா. காலம் காலமாக செய்யும் கதாப்பாத்திரம் என்பதால் அசால்ட்டாக முடித்துவிடுகிறார். கீர்த்தி சுரேஷ் நடிக்க தெரிந்த அழகான நடிகை. “ரஜினி முருகனை” விட இதில் காட்சிகள் அதிகம். நடிக்கவும் கொஞ்சம் வாய்ப்பு (நான் “தொடரி” பார்க்கவில்லை).

வசனங்கள் படத்தின் ஆகச் சிறந்த பலம். மொக்கை போடாமல் எப்படி பட்ட வசனங்கள் இன்றைய “whatsapp” இளைஞர்கள் யுகத்தில் செட்டாகும் என்று உஷாராக வைத்திருக்கிறார்கள். PC ஸ்ரீராம்-க்கு பெரிய வேலை இல்லாத கதை தான். ஆனாலும் தன்னுடைய அனுபவத்தால் படத்தின் காட்சிகளுக்கு ஒரு “ரிச்னெஸ்” கொடுத்துள்ளார்.

இது போன்ற கதையம்சம் கொண்ட படங்களில் லாஜிக் எல்லாம் “அப்படின்னா” என்பதை போல் தான் இருக்கும். இதிலும் அப்படி உள்ளது என்றாலும் பெரும்பாலான காட்சிகளில் லாஜிக் முயற்சித்திருக்கிறார்கள் என தோன்றியது. சிவகார்த்திகேயனுக்கு பெரிய “மாஸ்” பீல் கொடுக்க ரெமோ முயற்சித்திருக்கிறது. அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்லவேண்டும். தியேட்டரில் கிடைக்கும் விசில் சத்தம் அதை ஆமோதிக்கிறது.

“லாங் வீகென்ட்” சமயத்தில் சிரித்துப் பார்க்க தோதான படம் தான் ரெமோ.