இப்படி ஒரு படம் இருக்கிறது என்பதே நேற்று தான் தெரியும். முதலில் இந்த இயக்குனரின் நேர்க்காணல் ஒன்றினை படித்தேன். அப்படி என்ன படம் இது என்று தேடும் போது விமர்சனங்கள் அருமையாக இருந்தன. ஆர்வமுடன் சென்று இன்று திரையரங்கில் பார்த்தாகிவிட்டது. முதலில் இதனை பேய் படம் என்று தான் நினைத்து சென்றேன். ஆனால் பேய் படத்தில் என்ன எதிர் பார்த்து செல்வீர்களோ அந்த அனுபவம் நிச்சயம் இதில் கிடைக்கும். “Seat Edge Thriller” என்பார்களே அப்படி ஒரு வகை தான் இந்த படம்.

சிறு சிறு திருட்டுகள் செய்து பணம் பார்க்கும் மூன்று நண்பர்கள். அதிக குடியிருப்புகள் இல்லாத பகுதியில் இருக்கும் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி, தன் மகளை விபத்தில் கொன்ற பணக்காரப் பெண்ணின் குடும்பம் இழப்பீடாக கொடுத்த மூன்று லட்சம் டாலர் பணத்தினை வீட்டில் வைத்திருக்கிறார் என்ற தகவல் மூன்று நண்பர்களில் ஒருவனுக்கு கிடைக்கிறது. கண் பார்வை அற்ற அந்த அதிகாரியின் வீட்டில் இருந்து சுலபமாக பணத்தினை எடுத்து விடலாம் என அங்கு செல்கின்றனர் மூவரும். அவர்களுக்கும் நமக்கும் கிடைக்கும் அடுத்த அடுத்த அதிர்ச்சிகளும் திகில் அனுபவங்களும் மறக்க முடியாத திரைப்பட அனுபவத்தை தருகிறது.

வெறும் 1 மணிநேரம் 28 நிமிடங்களே ஓடக்கூடிய இந்த திரைப்படம் முதல் 15 நிமிடம் தவிர அத்தனை நிமிடங்களும் அடுத்து என்ன நடக்கும் என்ற பதட்டதுடனே நம்மை வைத்திருக்கிறது. குறைந்த கதாபாத்திரங்கள், கட்சிதமான வசனங்கள், நாமே அங்கு இருப்பதை போன்ற உணர்வை தரும் ஒளியமைப்பு, தேவையான இடங்களில் வந்து நம் இதய ஓட்டத்தை நிறுத்தும் இசை தேவையற்ற இடங்களில் அமைதி காக்கும் இசை என்று அருமையாக எல்லாம் அமைந்திருக்கிறது இந்த படத்தில்.

Well Written Script. அதை திரையிலும் சாத்தியப்படுத்தி நல்லதொரு திகில் அனுபவத்தை கொடுத்திருக்கிறார்கள். “கையில் வைத்திருக்கும் பாப்கார்ன் பக்கத்தில் இருப்பவர் முகத்தில் தெறிக்கும் அளவிற்கு நான் பயப்பட வேண்டும்” என நீங்கள் நினைத்தால் நல்ல ஒலி அமைப்பு கொண்ட நாகரிகமான திரையரங்கில் சென்று இந்த படத்தினை பாருங்கள். நிச்சயம் அதற்காக வருத்தப்பட மாட்டீர்கள்.