“நான் இந்த படம் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்” என நண்பன் ஒருவனிடம் சொன்னால் அவன் சிரிப்பான். காரணம் நான் அப்படி நம்பிக்கை தெரிவிக்கும் படங்களில் பெரும்பாலானவை மொக்கையாகி விடும் என்பதால். எனது திரைப்பட ரசனையின் மீது அப்படி ஒரு அபார நம்பிக்கை அவனுக்கு. அதனால் சில சமயங்களில் “இந்த படம் நன்றாக இருக்கும்” என நான் நினைக்கும் படங்களை அவன் கிண்டலுக்கு பயந்து சொல்வதில்லை. அப்படி நான் சொல்லாமல் விட்டதில் உதயநிதியின் “மனிதன்” படமும் ஒன்று. இந்த படத்தின் மீதான என் நம்பிக்கைக்கு காரணம் இதன் இயக்குனர் அஹமது தான். அவரின் முதல் படமான “வாமணன்” நான் கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் போது வந்தது. எனக்கு பிடித்திருந்தது. நல்ல வெற்றி பெரும் என அதனை நினைத்தேன். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அவரின் அடுத்தப் படமான “என்றென்றும் புன்னகை” படத்தினை அவ்வளோ ரசித்துப் பார்த்தேன். அந்த படத்தின் மூலம் என் நம்பிக்கைக்குரிய இயக்குனர்கள் வரிசையில் அவரையும் இணைத்துக் கொண்டேன். “Jolly LLB” ஹிந்தி படத்தின் தமிழ் பதிப்பில் உதயநிதி நடிக்க அஹமது இயக்குகிறார் என்றதும் உதயநிதிக்கு ஒரு நல்ல படம் என்று நினைத்துக் கொண்டேன். படத்தின் விமர்சனங்களும் அதை உறுதி செய்ய திரையரங்கில் சென்று பார்த்தாகிவிட்டது. இதோ விமர்சனமும் ரெடி.


உதயநிதி “நான் நடித்த படம்” என்று நிச்சயமாக பெருமைப்பட்டுக் கொள்ளும் படம் தான். அதில் துளியும் சந்தேகம் இல்லை. சந்தானம் காமெடி, ஹாரிஸ் பாடல்கள் என்று சுற்றிக் கொண்டிருந்தவர் “அட.. கதை நல்லா இருக்கே” என மற்றவர்கள் வியக்கும்படியான ஒரு படத்தில் நடித்தது பாராட்டும்படியான விஷயம். ஆனால் இன்னும் “ஓகே ஓகே” படத்தில் கொடுத்த சில ரியாக்சன்ஸ் அவரை விட்டு போக மாட்டேன் என அடம் பிடிக்கிறது. “பணம் நிறைய இருக்குறதால ஹீரோவா நடிக்க வந்துட்டாரு” என மற்றவர்கள் சொல்லும்படி வைத்துக் கொள்ளாமல் படத்துக்கு படம் நடிப்பில் தன்னை மெருகேற்றிக் கொள்ளவேண்டும் என்ற அவரின் அக்கறையை நான் மிகவும் மதிக்கிறேன். என்று அவர் வெளிக் கம்பனிகளில் படம் நடிக்க தொடங்குகிறாரோ அன்று அவர் ஒரு நடிகராக ஜெயித்துவிட்டார் என்று அர்த்தம். பிரகாஷ் ராஜ், ராதாரவி, ஹன்சிகா, விவேக் எல்லோரும் அவர் அவர் பகுதிகளை நன்றாகவே செய்திருக்கிறார்கள் என்ற வழக்கமான விமர்சன வரிகள் அப்படி அப்படியே தான். எந்த மாற்றமும் இல்லை. நல்ல கதை, நல்ல நடிகர்கள், நல்ல இசை, நல்ல ஒளிப்பதிவு எல்லாம் சரியாக இருந்தும் சைடிஷ் இல்லாத சரக்கு போல், ஊறுகாய் இல்லாத விருந்து போல் ஏதோ ஒன்று குறைகிறது.

சமீபகாலமாக நிறைய ஆங்கிலப் படங்கள் பார்க்க பழகிக்கொண்டேன். வித விதமான கதையமைப்புகள் கொண்ட படங்கள். இப்படி பார்க்கத் தொடங்கியிருப்பது ஒரு சாபமோ எனத் தோன்றுகிறது. நல்ல படம் என மற்றவர்கள் கொண்டாடும் படங்களிலும் குறைகள் இருப்பதாய் தோன்றுகிறது. “A Few Good men” என்ற படமொன்றை சமீபத்தில் பார்த்தேன். அருமையான கோர்ட் டிராமா. படம் முடியும் போது ஒரு பரம திருப்தி. அப்படி ஒரு படம். தவறுதான் என்றாலும் அதோடு கம்பேர் பண்ணும் போது இந்த படத்தில் வாதம் செய்வதாய் உதயநிதி, பிரகாஷ் ராஜ் பேசும் வசனங்கள் செயற்க்கையாக தோன்றியது. உதயநிதி ஏதாவது புத்திசாலித்தனமாய் செய்வார் எனப் பார்த்தால் அவரை சுற்றி இருப்பவர்கள் தான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். “Land Cruiser ” காருக்கு கியர் இல்லை என்பதை நிரூப்பிக்கும் காட்சி மட்டுமே உதயநிதியின் கதாப்பாத்திரத்தை கொஞ்சமாய் தூக்கிப் பிடித்தது. முழு படத்திலும் ஏதோ ஒரு வித செயற்கைத் தனம் கலந்திருப்பதாகவே எனக்கு தோன்றியது.


“நல்ல படத்துல கூட ஏண்டா இப்படி குறை கண்டுப்பிடிக்குற” என நண்பர்கள் திட்டவேண்டாம். படம் பார்க்கும் போது தோன்றியவற்றைத் தான் இங்கே பகிர்ந்து கொண்டேன். மொத்தமாய் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரசியமாய் ஏதாவது செய்திருக்கலாம் என்பது மட்டுமே என் எண்ணம். ஆனால் வழக்கமான மொக்கை காமெடி கொண்ட, ஆக்சன் என்ற பெயரில் அபத்தங்கள் கொண்ட, கதையாக இல்லாமல் நல்ல கதை களத்தினை தேர்ந்தெடுத்தற்காக நிச்சயம் “மனிதன்” குழுவினருக்கு பாராட்டுகள்.