"ஒரு வெற்றிகரமான திரைப்படத்திற்கு திரைக்கதை 80% முக்கியம் என்றால் மீதி 20% அதற்க்கு பொருத்தமான நடிகர்கள் தேவை" என்று பென் - ஹர் போன்ற முக்கியமான படங்களை இயக்கிய வில்லியம் வ்ய்லெர் என்ற இயக்குனர் கூறியிருப்பதாய் சமீபத்தில் படித்தேன். அதைத்தான் செய்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் சுதா கோங்கரா. இயக்குனர் சுதாவின் முதல் படமான "துரோகி" வெளியாகி இருந்த போது படித்த விமர்சனங்கள் அனைத்தும் "ஒரு பெண் இயக்குனரின் படத்தில் இத்தனை வன்முறை காட்சிகளா?" என்பது போன்றே இருந்தன. ஆனால் "இறுதி சுற்று" படத்தின் மூலம் பெண் இயக்குனர் என பேதம் பார்ப்பவர்களின் மண்டையில் ஒரு கொட்டு வைத்திருக்கிறார். 


"இறுதி சுற்று" சாயலில் வேற்று மொழிகளில் நிறைய படங்கள் வந்திருந்தாலும் தமிழுக்கு இது புதிது தான். "சக்தே இந்தியா" படத்தின் சாயல் அதிகமாக தெரிவதைப் போல் இருந்தாலும் படத்தினை  ரசிக்க முடிகிறது. கோபக்கார கோச்சாக, தெனாவெட்டு உடல்மொழியுடன் பிரபுவாக வரும் மாதவனும், அவருக்கு சற்றும் சளைக்காத கோபக்கார மீன்காரப் பெண்ணாக வரும் ரித்திகாவும் இறுதி சுற்றினைத் தாங்கி நிற்கும் தூண்கள். 

மாதவன் பேசும் வசனங்களும் அவரது உடல் மொழியும் ஒரு திறமையான நடிகரை தமிழ் சினிமா "சாக்லேட் பாய்" என முத்திரை குத்தி வீணடித்து விட்டதோ என எண்ண வைத்தது. தேவ் என்ற கதாபாத்திரத்தில் வரும் வில்லனை பார்த்து, "எவளோ சொன்னாலும் உனக்கு புரியாதாடா.. த்தா.. நீ அவளோ தாண்டா.." என சொல்லிவிட்டு செல்லும் காட்சியில் கைதட்டாமல் இருக்க முடியவில்லை. அடுத்து  ரித்திகா சிங். "வா மச்சானே", "ஏய்.. சண்டைக்காரா.." பாடல் வீடியோ பார்த்து விட்டு "இந்த பெண்ணுகாகவே முதல் நாள் சென்று இந்த படத்தினை பார்க்க வேண்டும் என தோன்றுகிறது" என்று முகப்புத்தகத்தில் ஒரு நிலைதகவல் போட்டேன். அத்தனை வசீகரிப்பு இந்த பெண்ணிடம். அழகில் மட்டுமல்ல நடிப்பிலும். முதல் படம் என்று நம்பவே முடியவில்லை. இறுதி சுற்றின் வெற்றியில் பெரும்பங்கு இந்த பெண்ணின் நடிப்பிற்கு தான். இவரையும் மற்ற நடிகைகளைப் போல் வெறும் அழகு பொம்மையாகவும் பாடலுக்காகவும் மட்டும் என்று வீணாக்காமல் தமிழ் சினிமா உபயோகப்படுத்த ஆண்டவனை வேண்டிக் கொள்வோம்.

இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசும் போது மாதவன் சொன்னது. "இந்த படத்தின் வெற்றி இனி பணத்திற்காக மட்டும் என்று இல்லாமல் இது போன்று பாராட்டு பெரும் படங்களாக நடிக்க வேண்டும் என்று எண்ண வைத்திருக்கிறது." எனக் கூறினார். மக்கள் புதிதாக எதிர்பார்க்கிறார்கள் எனவே அதை கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு தமிழ் சினிமா உலகில் பரவி வருகிறது என்பது ஆறுதலிக்கிறது.

மீண்டும் ஒரு முறை திரையரங்கில் பார்க்க வேண்டும் என சில படங்களே நினைக்க வைக்கும். அப்படி ஒரு தமிழ் சினிமா அபூர்வம் தான் இந்த "இறுதி சுற்று".