இந்த பதிவினை “ஹே ராம்” பார்த்து முடித்த ஐந்தாவது நிமிடம் எழுத தொடங்குகிறேன். இந்த திரைப்படம் என்னுள் ஏற்ப்படுத்திய தாக்கத்தை விவரிக்க  வார்த்தைகள் முழுமையாக கைகூடுமா என்று தெரியவில்லை. ஆனால் கூடுமான வரையில் நான் இதுவரை எழுதிய பதிவுகளில் சிறந்த பதிவாக இதனை எழுதி விட வேண்டும் என்ற முனைப்புடன் தொடங்குகிறேன். தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட பொக்கிஷமான “ஹே ராம்” படத்தினை வருடம் தவறிப் பார்த்தாலும் தவற விடாமல் பார்த்துவிட்டேன் என்பதில் எனக்கு திருப்தி.


“ஹே ராம்” படம் வெளியாகி இருந்த நேரத்தில் திரையரங்கில் சென்று பார்த்து பிடிக்காமல் நொந்து போய் வெளியே வந்த நண்பர்கள் “என்னடா இவன்.. இதப் போய் பொக்கிஷம்ன்னு சொல்றான்..” என நினைக்க வாய்ப்புண்டு. ஆனால் என்னளவில் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாகத் தான் இந்த படத்தினை நினைக்கிறேன். தமிழ் சினிமா கலை என்ற வடிவத்தை தாண்டி வணிகம் என்ற வட்டத்துக்குள் வந்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. பணம் போட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளரும் பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனும் தன்னை திருப்தி செய்யும் படத்தினை தான் எதிர்பார்ப்பார்கள். அதில் தவறில்லை. ஆனால் அது முழுக்க முழுக்க வணிகம் மட்டுமே சார்ந்ததாகவே மாறியது தான் சோகம். இப்படி ஒரு சூழலில் வரலாற்றினை சினிமாவில் பதிவு செய்யும் படங்கள் மிகவும் குறைவே. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ராஜ ராஜ சோழன், போன்ற படங்கள் 50களோடும்  60களோடும் முடிந்தே விட்டது. அதை தாண்டி தற்போதைய தலைமுறைக்கென வரலாற்றுப் பின்னணியோடு வரும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

வியாபார ரீதியான வெற்றி என்பதையெல்லாம் தாண்டி சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தி செல்ல முயன்றிருக்கும் படம் தான் “ஹே ராம்.” வியாபார ரீதியான வெற்றி பற்றி யோசிக்காமல் தான் எடுத்துக் கொண்ட கருவிற்கு உண்மையாக இருந்திருக்கிறார் கமல். இப்படி சொல்ல காரணம் உண்டு. தமிழ் சினிமாவில் மட்டும் கதை எங்கு நடப்பதாக இருந்தாலும் அங்கு உள்ள முக்கிய கதாப்பாத்திரங்கள் தமிழில் தான் உரையாடுவார்கள். அது ஆந்திராவாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் தமிழ் தெரியும். சமீபகாலமாக கதாபாத்திரங்கள் தமிழ் தவிர்த்து வேறு மொழி பேசுவதாக காண்பித்தால் அவர்கள் வாய்ஸ்க்கு மேலே தமிழ் "வாய்ஸ் ஓவர்" வைக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மெனக் கெடும் இயக்குனர்களுக்கு மத்தியில் பெங்கால், ஹிந்தி, இங்கிலீஷ் என்று பல மொழிகள் பேசுவதாக காண்பிக்கப்படும் “ஹே ராம்” படத்தில் சப்டைட்டில் கூட போடாமல் அப்படியே பேச வைத்திருப்பது “இயக்குனர்” கமல்ஹாசனின் தைரியத்தை பறைசாற்றுவதாகவே எனக்கு தோன்றியது. ஒரு வேளை தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த அளவிற்கு “புத்திசாலிகள்” என்று கமல் நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தினை ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்திருந்தால் இந்த அளவிற்கு என்னை ஈர்த்திருக்குமா என்று தெரியவில்லை. காரணம் ஒரு மாதம் முன்பு தான் “இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒருகோடு” என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். பிரிவினையால் நிகழ்ந்த கொடுமைகளையும், இந்து-முஸ்லிம் கலவரத்தினையும் கண் முன் நிறுத்தியது அந்த புத்தகம். ஏனோ வாசித்து முடித்ததில் இருந்து “ஹே ராம்” படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அந்தப் புத்தகத்தின் காரணமாக, அது கொடுத்த தெளிவின் காரணமாகதான் காந்தியை கோட்சே கொல்வதற்கான காரணமாக படத்தில் சொல்லப்படுவதை தெரிந்து கொள்ள முடிந்தது. படத்தில் பேசப்படும் பல வசனங்கள் என்னால் புரிந்துக் கொள்ளப்பட முக்கியமான காரணம் அந்த புத்தகம் தான். ஒரு காட்சியில் ரயில்வே கிராஸிங் கேட் மூடப்பட்டிருக்க அந்த வழியே வரும் ராஜாவின் கார் நிற்கிறது. ராஜாவுடன் கமல், அதுல் குல்கர்னி, மற்றும் ஒருவர் இருக்கிறார். அப்போது குல்கர்னி “ராஜா.. நான் வேணா பேசி கேட்டை திறக்க சொல்லவா..” எனக் கேட்பார். அபோது அந்த ராஜா “எல்லா கேட்டும் என்னைப் போல ராஜாக்களுக்கு மூடப்பட்டிருக்கும் போது இந்த கேட்டை மட்டும் திறக்கச் சொல்றதுல என்னப் பயன் இருக்கு.." என்று கேட்பார். அந்த புத்தகம் படிக்காமல் படம் பார்த்திருந்தா “அது ஏதோ ஒரு வசனம்” எனக் கடந்துப் போயிருப்பேன். ஆனால் அதன் முழு அர்த்தம் வேறு. இந்திய சுதந்திரத்தையும், இந்தியப் பிரிவினையும் ஒட்டி நேரு தலைமையிலான காங்கிரஸ் சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்க முயல்கிறது. அப்போது சில ராஜாக்கள் மறுக்க பலரை கெஞ்சியும், கொஞ்சியும், சிலரை மிரட்டியும் சமஸ்தானங்களை வல்லபாய் படேல் இணைத்தார். பல ராஜாக்களுக்கு இதனால் பெரும் மன வருத்தம் காங்கிரஸ் மீது நிலவி வந்தது. இப்படி வரலாற்றுப் பின்னணி ஓரளவிற்கு தெரிந்து கொண்டு “ஹே ராம்” பார்த்திருந்தால் மறக்க முடியாத படமாக இது இருந்திருக்கும்.

ஒவ்வொரு வசனத்திலும் நுணுக்கமாக பல விஷயங்களைப் புகுத்தி இருக்கிறார் கமல்ஹாசன். ஒரு காட்சியில் கமல் தன் மாமாவோடு காந்தியைப் பார்க்க போயிருப்பார். அப்போது காந்தி தமிழ் பேசுகிறேன் என்று “நேத்திக்கு என்றால் tomorrow தானே” எனக் கேட்க “இல்லை.. நேத்திக்கு என்றால் yesterday” என்பார்கள். உடனே காந்தி “Then my critics are right. They say this Gandhi still stuck with yesterday..” என்பார். இப்படி ஒவ்வொரு வசனங்களும் கவனிக்க வைக்கிறது. ராணி முகர்ஜி கற்பழிப்பது கொலை செய்யப் படும் காட்சியும், ஷாருக்கான் சாகும் காட்சியும் வெறும் சினிமா காட்சிகளாக மட்டும் எனக்குத் தெரியாமல் நிஜமாகவே நடந்த அந்த கோர சம்பவங்களை நினைக்க வைத்து கண்களை நனைத்துவிட்டன.

ஆனால் இப்படி பல பிளஸ்கள் எனக்கு தெரிந்தாலும் படம் பார்க்கும் போது உறுத்திய சில விஷயங்கள். கமல் மறுமணம் செய்த பிறகு மீண்டும் ராணி முகர்ஜியுடன் வாழ்ந்த வீட்டிற்கு வருவார். அப்போது செய்திதாளில் "இன்று பாகிஸ்தான் பிறக்கிறது.. நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம்" என்று காண்பிக்கப்படும். அப்படி பார்த்தால் காந்தி சாவதற்கு ஐந்து மாதங்களே இருக்கிறது. அதற்குள் வசுந்தாரவை மனம் மாறி ஏற்றுக் கொள்வது, மீண்டும் ஊருக்கு வந்து தங்கியிருப்பது, அதற்குள் வசுந்தராதாஸ் கர்ப்பம் ஆவது, மறுபடியும் மனம் மாறி டெல்லிக்கு காந்தியை கொல்ல வருவது என்று நிறைய சம்பவங்கள் நடக்கிறது. இதில்லாமல் கமல் மாமனார் கிரிஷ் கர்னாட் “நீங்க போனப்புறம் என்னென்னவோ நடந்துப் போச்சி..” என்று நிறைய பட்டியல் போடுவார். இப்படி அந்த ஐந்து மாத காலத்தில் ஏகப்பட்ட சம்பவங்கள் காட்டுவது மட்டும் எனக்கு உறுத்தலாகத் தோன்றியது.

என் உடன் இருந்த அரைத் தோழர் ஒருவர் ஒரு முறை சொன்னார். “ஹே ராம்” படம் தொடங்கிய அரைமணி நேரத்தில் அவரும் அவருடன் சென்ற நண்பரும் திரையரங்கில் தூங்கிவிட்டார்கள் என்று. சில இடங்களில் காட்சிகள் தெளிவாக விளக்கபடவில்லையோ என தோன்றியது. இப்படி ஒரு மேக்கிங் உள்ள படத்தை வெகுஜன ரசிகர்கள் கண்டுகொள்ளாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை தான். கமல் படங்களில் நிறைய காலம் கடந்தே கவனிக்கப் படுகிறது என்று எனக்குத் தோன்றும். ஒரு வேளை காலம் கடந்து நான் ரசித்துப் பார்ப்பதால் அப்படி தோன்றுகிறதா என்றுத் தெரியவில்லை. இந்தப் படம் மட்டும் அல்ல சிறு வயதில் நான் பார்க்கமுடியாமல் மொக்கையாக இருப்பதாக நினைத்து ஒதுக்கிய கமல் படங்கள் எல்லாம் இப்போது பார்க்கும் போது பிடித்துத்தான் இருக்கிறது. “மகாநதி”, ‘குணா”, “ஆளவந்தான்” இப்போது “ஹே ராம்”. உலகப் படங்கள் பார்க்கிறேன் பேர்வழி என்று மெதுவாக நகரும் படங்கள் நிறையப் பார்த்ததால் "ஹே ராம்" படமும்  மெதுவாக நகர்வதாகவோ போர் அடிப்பதாகவோ நான் உணரவில்லை.


கமல் மீது எத்தனை விமர்சனங்கள் இருப்பினும் “கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன்” என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தியப் பிரிவினையும் அதை ஒட்டி நிகழ்ந்த வன்முறையும் பற்றி பேசியிருக்கும் ஒரே தமிழ் படம் “ஹே ராம்” தான் என்பதை நினைத்து கமல் பெருமிதம் கொள்ளலாம். என்னளவில் இது தமிழ் சினிமாவில் முக்கியமான வரலாற்றுப்பதிவு.