சில படங்கள் பார்க்கும் போது "யப்பா.. என்னா படம்.. நாமெல்லாம் டைரக்டர் ஆனா இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா..?"  என்ற பயம் என்னுள் எழும். மெட்ராஸ், தனி ஒருவன், மாயா  போன்ற படங்கள். சில படங்கள் பார்க்கும் போது "ச்ச.. இவளோ தானா ..? சினிமா ரொம்ப ஈஸி தான் போல.. நான் கூட டைரக்டர் ஆகிடலாம் போல.." என தோன்றும். அப்படிபட்ட இரண்டாம் வகையை சேர்ந்த படம் தான் "ரஜினி முருகன்". இப்படி கூறுவதால் கமர்சியல் படங்கள் செய்து வெற்றி கொடுப்பது ஈஸி எனக் கூறவில்லை. மேலோட்டமாக  பார்பதற்கு "சுலபமான" சினிமாவாக தோன்றும் வகை என்றுதான் கூறுகிறேன்.

ஒவ்வொரு இயக்குனர்கள் research, reference, புதுமையாக செய்கிறேன்  என்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது "அசால்ட்டாக" காமெடி காட்சிகள், ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள், குத்துப்பாடல் என்று தன் முந்தையப் படத்தின் பார்முலாவை அப்படியே அடியொற்றி ஹிட்டு கொடுத்திருக்கும் இயக்குனரை பாராட்டத் தான் வேண்டும். "என்னாது ரஜினி முருகன் ஹிட்டா..?" என அதிர்ச்சி ஆகாதீர்கள். தியேட்டரில் சென்று இந்த படத்தினை பார்த்தால் எதனால் "ஹிட்டு" எனக் கூறுகிறேன் என உங்களுக்குப் புரியும்.


என்னதான் நாம் உலக சினிமா, நியூ வேவ் சினிமா என நிறைய பேசினாலும் பண்டிகை தினங்களில் இது போன்ற கமர்சியல் அம்சம் கொண்ட படங்களை பார்க்கத் தான் நம் மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். எங்கள் வீட்டில் கூட "ரஜினி முருகன்" போகலாம் என்றே நச்சரித்தார்கள். "மட்டமான மசாலா" படம், கதையே இல்லை என எத்தனை விமர்சகர்கள் "கழுவி" ஊற்றினாலும் எல்லா ஏரியாவிலும் "கல்லா" கட்டும் படங்கள் இது போன்ற மசாலா படங்களே. தேசிய விருது வாங்கிய "குற்றம் கடிதல்" எங்கள் ஊரில் ரிலீசாகவே இல்லை. "காக்கா முட்டை" ஒரு வாரத்தை தாண்டவில்லை. ஆனால் "காஞ்சனா 2" 25 நாட்கள் ஓடியது. அதனால் தான் "ரஜினி முருகன்" போன்ற படங்கள் விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன. பொங்கல் ரிலீஸ் படங்களில் எனக்குப் மிகவும் பிடித்தது "கதகளி" தான். ஆனால் "கதகளி" இரண்டாவது வாரம் வரை எங்கள் ஊரில் தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகமே. ஆனால் "ரஜினி முருகன்" நிச்சயம் இரண்டாவது வாரம் தாண்டும். "ரஜினி முருகன்" பற்றி பேசாமல் கமெர்சியல் சினிமாவிற்கு ஆதரவாய் பேசிக் கொண்டிருக்க காரணம் "மட்டமான மசாலா" படம் என பலர் கழுவி ஊற்றும் படங்கள் சில நேரங்களில் எனக்குப் பிடித்துப் போய்விடும். "ஏன்டா.. உலக சினிமா பாக்குற நீ இந்த மாதிரி மட்டமான படத்தை எல்லாம் நல்லா இருக்குனு எப்படிடா சொல்ற"ன்னு  யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசிடக் கூடாதுல, அதனால் தான் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். என்னளவில் பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்பும் எல்லா படங்களும் நல்ல படங்களே. அது "ஷகிலா" நடித்த படமாக இருந்தாலும் கூட.

"ரஜினி முருகன்" சாதாரண கமெர்சியல் படமாக இருந்தாலும் "ஆடியன்சை" சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் நிறையவே இருக்கின்றன. பிடிவாதமாக "நான் சிரிக்க மாட்டேன்" "எனக்கு இது போன்ற படங்கள் பிடிக்காது" என்ற முடிவோடு நீங்கள் இருந்தால் மட்டுமே காமெடி காட்சிகள் பிடிக்காமல் போகும். பேசி பேசியே கொல்லும் வடிவேலின் "ஜெராக்ஸ்" சூரி பேசும் ஒன்லைனர்கள் மற்றும் "பாடி லாங்குவேஜ்" இந்த படத்தில் நன்றாகவே எடுபட்டிருக்கின்றன. ஒரு வேளை சிவகார்த்திகேயன் காரணமாக இருக்கலாம். இருவரின் காம்பினேசனும் "சத்யராஜ்-கவுண்டமணி" அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு "செட்டவதாகவே" தோன்றுகிறது. நாயகியுடன் இருக்கும் கெமிஸ்ட்ரி-யை விட சூரியுடன் தான் சிவகார்த்திகேயனுக்கு நல்ல கெமிஸ்ட்ரி. 

ஜனவரி 17 காலை 10 மணிக்கு விஜய் டிவியில் "உன் மேல ஒரு கண்ணு" என்ற பாடலை பார்க்கும் வரை இந்த படத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வரவே இல்லை.அதில் கீர்த்தி சுரேசை பார்த்தவுடன் "படத்தினை கண்டிப்பாக தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டும்" என்று தோன்றி விட்டது. கீர்த்தி சுரேஷ் மட்டும் இந்த படத்தில் நடிக்காமல் போயிருந்தால் "ரஜினி முருகனுக்கு" இத்தனைப் பெரிய விமர்சனம் சாத்தியமே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விமர்சனமே ஹீரோயினால் தான் சாத்தியம் ஆனது  எனும் போது ஹீரோயின் பற்றி சொல்ல இன்னும் என்ன இருக்கிறது.

இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வந்த பாடல்கள் சலிப்பாக இருந்தது. "உன் மேல ஒரு கண்ணு" பாடலைத் தவிர. (நான் படம் பார்க்க சென்றதே அந்த பாட்டுக்காக தானே) சில இடங்களில் ஏதோ பழைய படத்தை பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற ஒரு உணர்வு. சிவகார்த்திகேயன் என் காலேஜ் சீனியர் என்பதால் அவர் படங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதோடு ஒவ்வொரு படத்திலும் ஒரு நடிகனாக "தன்னை" உயர்த்திக் கொள்ள வேண்டும் என நினைப்பேன். காரணம் அவர் பெறும் வெற்றி ஏதோ நாமே பெறும் வெற்றியை போல தோன்றுவதால். ஆனால் எல்லா படங்களிலும் காமெடி காட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவனைகளை காட்டி காட்சிகளை ஒப்பேற்றினாலும்  இன்னும் அவரிடம் ஒரு "தனித்தன்மை" வரவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

இவையனைத்தையும் படித்து விட்டு "சரிடா.. படத்தோட கதை என்னடா.." எனக் கேட்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" எடுத்த இயக்குனரிடமிருந்தும் சிவகார்த்தியகேயனிடமிருந்தும் வேறு விதமான படங்களை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. மொத்தத்தில் "நம்பி போங்க.. சந்தோஷமா வாங்க.."