நிறைய படங்களில் நடித்த திரைப் பிரபலங்கள் சிலர், திரைப் படங்கள் எதுவும் இல்லாமல் செல்வம், புகழ், வெளிச்சம் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுவதையும், புகழை இழந்த விரக்தியிலும் உழல்வதைப் பற்றி நிறைய படித்திருப்போம். தமிழ் சினிமாவில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் இருந்தனர், இருக்கின்றனர், இருக்கப் போகின்றனர். அதில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து கதாநாயகனாகவோ கதாநாயகிகளாவோ வலம் வருவார்கள். உதாரணமாக கமல்ஹாசன், குட்டி பத்மினி, மீனா, சிம்பு, மாஸ்டர் மகேந்திரன், போன்றோர். ஆனால் பல குழந்தை நட்சத்திரங்கள் இன்று எங்கே எப்படி இருக்கின்றனர் என்று எதுவும் தெரியாது. அப்படி ஒரு குழந்தை நட்சத்திரம் வளர்ந்து பின் ஊடக வெளிச்சம், புகழ் எதுவுமற்று வாழும் வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் படம் தான் இந்த “அபுர் பாஞ்சாலி”.


இந்திய சினிமாவை உலக அரங்கில் தலை நிமிரச் செய்த இயக்குனர் சத்யஜித்ரே. அவரின் முதல் படைப்பான, ஆகச் சிறந்த படைப்பாக சினிமா உலகம் கருதும் படம் “பதேர் பாஞ்சாலி”. அதில் முக்கிய “அபுர்” கதாபாத்திரமாக நடித்த சுபீர் பானர்ஜி அந்த ஒரு திரைப்படம் மட்டுமே நடித்தார். அவருக்கும் சினிமாவிற்கும் உண்டான தொடர்பு “பதேர் பாஞ்சாலி”யோடு முடிந்து விட்டது. இந்த மக்கள் கூட்டத்தில் மனம் நெகிழச் செய்த அந்த “அபுர்” சிறுவன் தொலைந்து விட்டான். அவரைப் பற்றிய டாகுமென்ட்ரி வகையில் இருக்கும் படம் தான் இது. சுபீர் பானர்ஜியின் நிகழ் கால வாழ்க்கை வண்ணமாகவும், கடந்த கால வாழ்க்கை கருப்பு வெள்ளையாகவும் வர சத்யஜித்ரேயின் “அபு” ட்ரையாலாஜி காட்சிகள் சுபீர் பானர்ஜியின் வாழ்க்கையோடு ஒத்துப் போகும் காட்சிகள் நடுநடுவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பதேர் பாஞ்சாலியின் “அபு” கதாபாத்திரம் உலகிலேயே மிகவும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் என ஜெர்மன் அரசு அறிவித்து “அபு”வாக நடித்த சுபீர் பானர்ஜியை கவுரவிக்க எண்ணுகிறது. அதற்காக அவரை கண்டுபிடித்து ஜெர்மன் அனுப்பும் பொறுப்பினை ஆர்கா என்ற மாணவனிடம் ஒப்படைக்கிறது சத்யஜித்ரே திரைப்படக் கல்லூரி. ஆனால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கும் சுபீர் பானர்ஜி “தனக்கும் அபு கதாப்பாத்திரத்திற்கும் சத்யஜித்ரேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று பிடிவாதமாக அந்த அழைப்பை ஏற்க மறுக்க ஆர்காவின் விடா முயற்சியால் ஒப்புக் கொள்கிறார். சிடு மூஞ்சியாக இருக்கும் சுபீர் பானர்ஜி கொஞ்சம் கொஞ்சமாக ஆர்காவிடம் நட்போடு பழகி பதேர் பாஞ்சாலிக்குப் பிறகான தன் வாழ்க்கையை அவனோடு பகிர்ந்து கொள்கிறார்.

வெறும் ஒரு மணி நேரம் 36 நிமிடங்களே ஓடக் கூடிய இந்த படம் முதலில் கொஞ்சமாக பொறுமையை சோதித்தது. கதையோடு ஒன்ற ஆரம்பித்ததும் மெதுவான காட்சியமைப்புகள் பெரிதாய் பாதிக்கவில்லை. இள வயது சுபீர் பானர்ஜியாக நடித்தவரின் நடிப்பும், அவரின் மனைவியாக அளவான மேக்கப்போடு அழகாக வருபவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.

“பதேர் பாஞ்சாலி” உலகம் முழுக்க கொண்டாடப்பட்டாலும் இந்தியாவை மிகவும் வறுமையான நாடாக தவறாக சித்தரித்திருப்பதாக அதன் மீது குற்றச் சாட்டுகளும் வைக்கப்பட்டன. 60 வருடங்கள் கழித்து பார்க்கும் போதும் “பதேர் பாஞ்சாலி”யின் காட்சிகள் என்னை பாதித்தன. அபுக் குடும்பத்தின் வறுமையும் ஆசைப்பட்ட தின்பண்டம் கூட வாங்கி சாப்பிட முடியாத “அபு” “துர்கா” இருவரின் இயலாமையும் அவர்களுக்காக வருத்தப்பட வைத்தன. சரி இது வெறும் திரைப்படம் தானே என்று நினைத்தால் வறுமையைத் தவிர அபுவின் வாழ்க்கையை அப்படியே அடியொற்றி இருக்கிறது சுபீர் பானர்ஜியின் வாழ்க்கை. அபுவின் அப்பா மயங்கி விழும் காட்சி அங்கே காட்டப்பட இங்கே பானர்ஜியின் அப்பா கட்டிலில் கிடத்தபடுகிறார். இங்கே பானர்ஜியின் அப்பா மரணம் தழுவ அங்கே அபுவின் அப்பாவிற்கு சடங்குகள் செய்கிறான் அபு. இங்கே பானர்ஜி பெண் பார்க்க செல்லும் காட்சி காட்டப்பட அங்கே அபுவின் திருமணம் காட்டபடுகிறது. இங்கே பானர்ஜியின் மனைவியின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் பானர்ஜி கதவை சாத்திக் கொள்ள அங்கே அபு மூடிய கதவின் பின்னே அழுது கொண்டிருக்கிறான். இப்படி சுபீர் பானர்ஜியின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறான் அபு. அபு ட்ரையாலாஜி முழுதாக பார்த்தப் பின் இந்த திரைபடத்தை பார்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.


அபு ட்ரையாலாஜி முழுவதும் பார்த்து விட்டு நல்ல படம் பார்க்க விரும்பினால் நண்பர்கள் இதனை பார்க்கலாம்.