புதன், 20 ஜனவரி, 2016

சில படங்கள் பார்க்கும் போது "யப்பா.. என்னா படம்.. நாமெல்லாம் டைரக்டர் ஆனா இப்படி ஒரு படம் எடுக்க முடியுமா..?"  என்ற பயம் என்னுள் எழும். மெட்ராஸ், தனி ஒருவன், மாயா  போன்ற படங்கள். சில படங்கள் பார்க்கும் போது "ச்ச.. இவளோ தானா ..? சினிமா ரொம்ப ஈஸி தான் போல.. நான் கூட டைரக்டர் ஆகிடலாம் போல.." என தோன்றும். அப்படிபட்ட இரண்டாம் வகையை சேர்ந்த படம் தான் "ரஜினி முருகன்". இப்படி கூறுவதால் கமர்சியல் படங்கள் செய்து வெற்றி கொடுப்பது ஈஸி எனக் கூறவில்லை. மேலோட்டமாக  பார்பதற்கு "சுலபமான" சினிமாவாக தோன்றும் வகை என்றுதான் கூறுகிறேன்.

ஒவ்வொரு இயக்குனர்கள் research, reference, புதுமையாக செய்கிறேன்  என்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் போது "அசால்ட்டாக" காமெடி காட்சிகள், ஹீரோ ஹீரோயின் காதல் காட்சிகள், குத்துப்பாடல் என்று தன் முந்தையப் படத்தின் பார்முலாவை அப்படியே அடியொற்றி ஹிட்டு கொடுத்திருக்கும் இயக்குனரை பாராட்டத் தான் வேண்டும். "என்னாது ரஜினி முருகன் ஹிட்டா..?" என அதிர்ச்சி ஆகாதீர்கள். தியேட்டரில் சென்று இந்த படத்தினை பார்த்தால் எதனால் "ஹிட்டு" எனக் கூறுகிறேன் என உங்களுக்குப் புரியும்.


என்னதான் நாம் உலக சினிமா, நியூ வேவ் சினிமா என நிறைய பேசினாலும் பண்டிகை தினங்களில் இது போன்ற கமர்சியல் அம்சம் கொண்ட படங்களை பார்க்கத் தான் நம் மக்கள் விரும்புகிறார்கள் என்பதுதான் நிதர்சனம். எங்கள் வீட்டில் கூட "ரஜினி முருகன்" போகலாம் என்றே நச்சரித்தார்கள். "மட்டமான மசாலா" படம், கதையே இல்லை என எத்தனை விமர்சகர்கள் "கழுவி" ஊற்றினாலும் எல்லா ஏரியாவிலும் "கல்லா" கட்டும் படங்கள் இது போன்ற மசாலா படங்களே. தேசிய விருது வாங்கிய "குற்றம் கடிதல்" எங்கள் ஊரில் ரிலீசாகவே இல்லை. "காக்கா முட்டை" ஒரு வாரத்தை தாண்டவில்லை. ஆனால் "காஞ்சனா 2" 25 நாட்கள் ஓடியது. அதனால் தான் "ரஜினி முருகன்" போன்ற படங்கள் விநியோகஸ்தர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறுகின்றன. பொங்கல் ரிலீஸ் படங்களில் எனக்குப் மிகவும் பிடித்தது "கதகளி" தான். ஆனால் "கதகளி" இரண்டாவது வாரம் வரை எங்கள் ஊரில் தாக்கு பிடிக்குமா என்பது சந்தேகமே. ஆனால் "ரஜினி முருகன்" நிச்சயம் இரண்டாவது வாரம் தாண்டும். "ரஜினி முருகன்" பற்றி பேசாமல் கமெர்சியல் சினிமாவிற்கு ஆதரவாய் பேசிக் கொண்டிருக்க காரணம் "மட்டமான மசாலா" படம் என பலர் கழுவி ஊற்றும் படங்கள் சில நேரங்களில் எனக்குப் பிடித்துப் போய்விடும். "ஏன்டா.. உலக சினிமா பாக்குற நீ இந்த மாதிரி மட்டமான படத்தை எல்லாம் நல்லா இருக்குனு எப்படிடா சொல்ற"ன்னு  யாரும் நாக்கு மேல பல்லு போட்டு பேசிடக் கூடாதுல, அதனால் தான் சமாளித்துக் கொண்டிருக்கிறேன். என்னளவில் பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனை திருப்திப்படுத்தி அனுப்பும் எல்லா படங்களும் நல்ல படங்களே. அது "ஷகிலா" நடித்த படமாக இருந்தாலும் கூட.

"ரஜினி முருகன்" சாதாரண கமெர்சியல் படமாக இருந்தாலும் "ஆடியன்சை" சிரிக்க வைக்கும் காமெடி காட்சிகள் நிறையவே இருக்கின்றன. பிடிவாதமாக "நான் சிரிக்க மாட்டேன்" "எனக்கு இது போன்ற படங்கள் பிடிக்காது" என்ற முடிவோடு நீங்கள் இருந்தால் மட்டுமே காமெடி காட்சிகள் பிடிக்காமல் போகும். பேசி பேசியே கொல்லும் வடிவேலின் "ஜெராக்ஸ்" சூரி பேசும் ஒன்லைனர்கள் மற்றும் "பாடி லாங்குவேஜ்" இந்த படத்தில் நன்றாகவே எடுபட்டிருக்கின்றன. ஒரு வேளை சிவகார்த்திகேயன் காரணமாக இருக்கலாம். இருவரின் காம்பினேசனும் "சத்யராஜ்-கவுண்டமணி" அளவிற்கு இல்லை என்றாலும் ஓரளவிற்கு "செட்டவதாகவே" தோன்றுகிறது. நாயகியுடன் இருக்கும் கெமிஸ்ட்ரி-யை விட சூரியுடன் தான் சிவகார்த்திகேயனுக்கு நல்ல கெமிஸ்ட்ரி. 

ஜனவரி 17 காலை 10 மணிக்கு விஜய் டிவியில் "உன் மேல ஒரு கண்ணு" என்ற பாடலை பார்க்கும் வரை இந்த படத்தினை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு வரவே இல்லை.அதில் கீர்த்தி சுரேசை பார்த்தவுடன் "படத்தினை கண்டிப்பாக தியேட்டரில் பார்த்தே ஆக வேண்டும்" என்று தோன்றி விட்டது. கீர்த்தி சுரேஷ் மட்டும் இந்த படத்தில் நடிக்காமல் போயிருந்தால் "ரஜினி முருகனுக்கு" இத்தனைப் பெரிய விமர்சனம் சாத்தியமே இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விமர்சனமே ஹீரோயினால் தான் சாத்தியம் ஆனது  எனும் போது ஹீரோயின் பற்றி சொல்ல இன்னும் என்ன இருக்கிறது.

இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வந்த பாடல்கள் சலிப்பாக இருந்தது. "உன் மேல ஒரு கண்ணு" பாடலைத் தவிர. (நான் படம் பார்க்க சென்றதே அந்த பாட்டுக்காக தானே) சில இடங்களில் ஏதோ பழைய படத்தை பார்த்துக் கொண்டிருப்பதை போன்ற ஒரு உணர்வு. சிவகார்த்திகேயன் என் காலேஜ் சீனியர் என்பதால் அவர் படங்கள் வெற்றி பெற வேண்டும் என நினைப்பதோடு ஒவ்வொரு படத்திலும் ஒரு நடிகனாக "தன்னை" உயர்த்திக் கொள்ள வேண்டும் என நினைப்பேன். காரணம் அவர் பெறும் வெற்றி ஏதோ நாமே பெறும் வெற்றியை போல தோன்றுவதால். ஆனால் எல்லா படங்களிலும் காமெடி காட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவனைகளை காட்டி காட்சிகளை ஒப்பேற்றினாலும்  இன்னும் அவரிடம் ஒரு "தனித்தன்மை" வரவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.

இவையனைத்தையும் படித்து விட்டு "சரிடா.. படத்தோட கதை என்னடா.." எனக் கேட்கமாட்டீர்கள் என நினைக்கிறேன். "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" எடுத்த இயக்குனரிடமிருந்தும் சிவகார்த்தியகேயனிடமிருந்தும் வேறு விதமான படங்களை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. மொத்தத்தில் "நம்பி போங்க.. சந்தோஷமா வாங்க.."

Posted on முற்பகல் 2:03 by Elaya Raja

No comments

செவ்வாய், 19 ஜனவரி, 2016

ஆறேழு படங்கள் ரிலீசாகும் பண்டிகை நாட்கள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டதால் சமீப காலமாக ரெண்டு அல்லது மூன்று படங்கள் தான் அதிகப்பட்சம். இந்த முறை ஒன்று கூடுதலாக நான்கு படங்கள். இந்த வருட பொங்கல் ரிலீஸ் படங்கள் எல்லாம் ராக், அண்டர்டக்கர், ஸ்டோன் கோல்ட், டிரிபிள் ஹெச் போன்றோர் இல்லாத WWE போல தான் எனக்கு தெரிந்தது. தியேட்டரில் சென்று படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வமே வரவில்லை. நான்கு படங்களில் ஓரளவு வித்தியாசமாக இருக்கும் என்று நான் கொஞ்சம் எதிர்பார்த்தது "கதகளி" மட்டுமே.

"பொங்கல் ரிலீஸ் படங்களில் நான் கொஞ்சம் எதிர்பார்ப்பது "கதகளி" படத்தினை தான்..  காரணம் அதோட டைரக்டர் பாண்டிராஜ்.." என என்  நண்பனிடம் கூறியபோது "ஆமா.. அவரு பெரிய கிறிஸ்டோபர் நோலன்.. அவரு படத்தை இவன் எதிர்பார்க்குறான்.." என்றான். அவனுடைய டைமிங், ரைமிங் நன்றாக இருந்ததால் நானும் சிரித்துவிட்டேன். ஆனால் அவனுக்கு பதில் கூறவில்லை. அவனைப் போலவே நினைக்கும் நண்பர்களுக்காக என் எதிர்பார்ப்பின் காரணம் பற்றி சில வரிகள். அவர் இயக்கிய பசங்க, வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2 (இது நம்ம ஆளு கணக்கில் இல்லை) இந்த ஐந்து படங்களில் என்னளவில் மெரினா மட்டுமே கொஞ்சம் மொக்கை. கிட்டதட்ட டாகுமெண்டரி போல நகரும் படம். மற்ற நான்கு படங்களும் "நல்லா இருக்கு" என பெரும்பாலானோரை சொல்ல வைத்த படங்களே. எதை எடுத்தாலும் கலாய்க்கும் இன்றைய இணைய யுகத்தில் "கலாய்" வாங்காத அளவிற்கு "டீசெண்ட்" ஆன படம் எடுக்கும் "Consistency" கொண்ட வெகு சில இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்பதாலே "கதகளி"யை எதிர்பார்த்தேன்.

"கதகளி" என் எதிர்ப்பார்பில் எந்த குறையும் வைக்கவில்லை. படம் ஆரம்பித்த உடன் சம்பந்தமே இல்லாமல் திடீரென முளைத்த "திருவிழா"ப் பாடல் என்னுள் ஒரு பயத்தை உண்டு பண்ணியது. "ஐயையோ.. பாண்டிராஜ் சொதப்பிடுவாறு போலயே.." என்று நினைத்தேன். நான் நினைத்தது சரியென நிரூபிக்கும் படியே விஷால் - காதரின் தெரசா காதல் காட்சிகளும் இருந்தன. பெரிதாய் ரசிக்கும் படி இல்லை. அதே வேளை "சாவடிக்கவும்" இல்லை என்பது பெரும் ஆறுதல். இது போன்ற "டெம்ப்லேட்" சினிமா ஓடிக்கொண்டிருக்கவும் இரவுக் காட்சி என்பதால் தூக்கம் எனக்கு கண்களை சுழற்றியது. ஆனால் நல்லவேளை நாற்பது நிமிடங்கள் நான் தாக்குப் பிடிக்கவும் படம் பரபரப்பாகும் காட்சிகளை தவற விடாமல் பார்த்துவிட்டேன். உடன் வந்த நண்பன் உறக்கத்தால் சில காட்சிகளை தவற விட்டுவிட்டான். 

படத்தின் ட்ரைலரில் சொல்லப்பட்டது தான் முழுக்கதையும். "தம்பா" எனும் கடலூரின் கட்டப்பஞ்சாயத்து, ரௌடியிச பெரிய மனிதர் இறந்து போக கொலைப்  பழி, அவரோடு முன் விரோதம் கொண்ட US ரிட்டன் ஆன, மூன்று நாளில் திருமணம் நடக்கவிருக்கும் விஷால்  மீது விழுகிறது. அந்த கொலைப் பழியில் இருந்து அவர் மீண்டு வந்தாரா..? ஏகப்பட்ட எதிரிகளை சம்பாதித்து வைத்திருக்கும் அவரை உண்மையாகவே கொன்றவர் யார் ? என்பதை விவரிக்கும் படம் தான் "கதகளி". காட்சி அமைப்புகள்  ஓரளவு நம்பகத்தன்மையோடு நகர்கின்றன. சின்ன சின்ன ஜிகினா வேலைகள், நிறைய காட்சிகளை ரசிக்க வைக்கின்றன. முக்கியமாக சண்டை முடிந்தவுடன் "செல்பி" எடுத்து அனுப்பும் காட்சி, US ரிட்டன் விஷால் சீன் போடும் போது அதற்க்கு காதரின் தெரசாவின் எதிர்வினை போன்றவை. நிறைய கதாபாத்திரங்கள். ஆனாலும் எல்லோருக்கும் திரைக்கதையில் வேலை இருக்கிறது. சண்டைக்காட்சிகளும் நன்றாக இருந்தன. நடுநடுவே "பாண்டிய நாடு" மட்டும் அங்கங்கே   நினைவில் வந்தது. கிளைமாக்சில் "ட்விஸ்ட்" "ட்விஸ்ட்" "ட்விஸ்ட்" என்று போய்க் கொண்டே இருக்கின்றன. 

நிச்சயம் ஒரு முறை பார்த்து ரசிக்கும் படியான படமே இந்த "கதகளி".


Posted on பிற்பகல் 10:04 by Elaya Raja

No comments

சனி, 9 ஜனவரி, 2016

இந்த பதிவினை “ஹே ராம்” பார்த்து முடித்த ஐந்தாவது நிமிடம் எழுத தொடங்குகிறேன். இந்த திரைப்படம் என்னுள் ஏற்ப்படுத்திய தாக்கத்தை விவரிக்க  வார்த்தைகள் முழுமையாக கைகூடுமா என்று தெரியவில்லை. ஆனால் கூடுமான வரையில் நான் இதுவரை எழுதிய பதிவுகளில் சிறந்த பதிவாக இதனை எழுதி விட வேண்டும் என்ற முனைப்புடன் தொடங்குகிறேன். தமிழ் சினிமா கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட பொக்கிஷமான “ஹே ராம்” படத்தினை வருடம் தவறிப் பார்த்தாலும் தவற விடாமல் பார்த்துவிட்டேன் என்பதில் எனக்கு திருப்தி.


“ஹே ராம்” படம் வெளியாகி இருந்த நேரத்தில் திரையரங்கில் சென்று பார்த்து பிடிக்காமல் நொந்து போய் வெளியே வந்த நண்பர்கள் “என்னடா இவன்.. இதப் போய் பொக்கிஷம்ன்னு சொல்றான்..” என நினைக்க வாய்ப்புண்டு. ஆனால் என்னளவில் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான வரலாற்றுப் பதிவாகத் தான் இந்த படத்தினை நினைக்கிறேன். தமிழ் சினிமா கலை என்ற வடிவத்தை தாண்டி வணிகம் என்ற வட்டத்துக்குள் வந்து மிக நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. பணம் போட்டு படம் தயாரிக்கும் தயாரிப்பாளரும் பணம் கொடுத்து படம் பார்க்க வரும் ரசிகனும் தன்னை திருப்தி செய்யும் படத்தினை தான் எதிர்பார்ப்பார்கள். அதில் தவறில்லை. ஆனால் அது முழுக்க முழுக்க வணிகம் மட்டுமே சார்ந்ததாகவே மாறியது தான் சோகம். இப்படி ஒரு சூழலில் வரலாற்றினை சினிமாவில் பதிவு செய்யும் படங்கள் மிகவும் குறைவே. வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், ராஜ ராஜ சோழன், போன்ற படங்கள் 50களோடும்  60களோடும் முடிந்தே விட்டது. அதை தாண்டி தற்போதைய தலைமுறைக்கென வரலாற்றுப் பின்னணியோடு வரும் படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

வியாபார ரீதியான வெற்றி என்பதையெல்லாம் தாண்டி சினிமாவை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்தி செல்ல முயன்றிருக்கும் படம் தான் “ஹே ராம்.” வியாபார ரீதியான வெற்றி பற்றி யோசிக்காமல் தான் எடுத்துக் கொண்ட கருவிற்கு உண்மையாக இருந்திருக்கிறார் கமல். இப்படி சொல்ல காரணம் உண்டு. தமிழ் சினிமாவில் மட்டும் கதை எங்கு நடப்பதாக இருந்தாலும் அங்கு உள்ள முக்கிய கதாப்பாத்திரங்கள் தமிழில் தான் உரையாடுவார்கள். அது ஆந்திராவாக இருந்தாலும் சரி, மும்பையாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் தமிழ் தெரியும். சமீபகாலமாக கதாபாத்திரங்கள் தமிழ் தவிர்த்து வேறு மொழி பேசுவதாக காண்பித்தால் அவர்கள் வாய்ஸ்க்கு மேலே தமிழ் "வாய்ஸ் ஓவர்" வைக்கும் பழக்கம் தமிழ் சினிமாவில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி தமிழ் சினிமா ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று மெனக் கெடும் இயக்குனர்களுக்கு மத்தியில் பெங்கால், ஹிந்தி, இங்கிலீஷ் என்று பல மொழிகள் பேசுவதாக காண்பிக்கப்படும் “ஹே ராம்” படத்தில் சப்டைட்டில் கூட போடாமல் அப்படியே பேச வைத்திருப்பது “இயக்குனர்” கமல்ஹாசனின் தைரியத்தை பறைசாற்றுவதாகவே எனக்கு தோன்றியது. ஒரு வேளை தமிழ் சினிமா ரசிகர்கள் அந்த அளவிற்கு “புத்திசாலிகள்” என்று கமல் நினைத்து விட்டாரா என்று தெரியவில்லை.

இந்தப் படத்தினை ஒரு மாதத்திற்கு முன்பு பார்த்திருந்தால் இந்த அளவிற்கு என்னை ஈர்த்திருக்குமா என்று தெரியவில்லை. காரணம் ஒரு மாதம் முன்பு தான் “இந்தியப் பிரிவினை – உதிரத்தால் ஒருகோடு” என்ற புத்தகத்தை வாசித்திருந்தேன். பிரிவினையால் நிகழ்ந்த கொடுமைகளையும், இந்து-முஸ்லிம் கலவரத்தினையும் கண் முன் நிறுத்தியது அந்த புத்தகம். ஏனோ வாசித்து முடித்ததில் இருந்து “ஹே ராம்” படம் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அந்தப் புத்தகத்தின் காரணமாக, அது கொடுத்த தெளிவின் காரணமாகதான் காந்தியை கோட்சே கொல்வதற்கான காரணமாக படத்தில் சொல்லப்படுவதை தெரிந்து கொள்ள முடிந்தது. படத்தில் பேசப்படும் பல வசனங்கள் என்னால் புரிந்துக் கொள்ளப்பட முக்கியமான காரணம் அந்த புத்தகம் தான். ஒரு காட்சியில் ரயில்வே கிராஸிங் கேட் மூடப்பட்டிருக்க அந்த வழியே வரும் ராஜாவின் கார் நிற்கிறது. ராஜாவுடன் கமல், அதுல் குல்கர்னி, மற்றும் ஒருவர் இருக்கிறார். அப்போது குல்கர்னி “ராஜா.. நான் வேணா பேசி கேட்டை திறக்க சொல்லவா..” எனக் கேட்பார். அபோது அந்த ராஜா “எல்லா கேட்டும் என்னைப் போல ராஜாக்களுக்கு மூடப்பட்டிருக்கும் போது இந்த கேட்டை மட்டும் திறக்கச் சொல்றதுல என்னப் பயன் இருக்கு.." என்று கேட்பார். அந்த புத்தகம் படிக்காமல் படம் பார்த்திருந்தா “அது ஏதோ ஒரு வசனம்” எனக் கடந்துப் போயிருப்பேன். ஆனால் அதன் முழு அர்த்தம் வேறு. இந்திய சுதந்திரத்தையும், இந்தியப் பிரிவினையும் ஒட்டி நேரு தலைமையிலான காங்கிரஸ் சமஸ்தானங்களை இந்தியாவோடு இணைக்க முயல்கிறது. அப்போது சில ராஜாக்கள் மறுக்க பலரை கெஞ்சியும், கொஞ்சியும், சிலரை மிரட்டியும் சமஸ்தானங்களை வல்லபாய் படேல் இணைத்தார். பல ராஜாக்களுக்கு இதனால் பெரும் மன வருத்தம் காங்கிரஸ் மீது நிலவி வந்தது. இப்படி வரலாற்றுப் பின்னணி ஓரளவிற்கு தெரிந்து கொண்டு “ஹே ராம்” பார்த்திருந்தால் மறக்க முடியாத படமாக இது இருந்திருக்கும்.

ஒவ்வொரு வசனத்திலும் நுணுக்கமாக பல விஷயங்களைப் புகுத்தி இருக்கிறார் கமல்ஹாசன். ஒரு காட்சியில் கமல் தன் மாமாவோடு காந்தியைப் பார்க்க போயிருப்பார். அப்போது காந்தி தமிழ் பேசுகிறேன் என்று “நேத்திக்கு என்றால் tomorrow தானே” எனக் கேட்க “இல்லை.. நேத்திக்கு என்றால் yesterday” என்பார்கள். உடனே காந்தி “Then my critics are right. They say this Gandhi still stuck with yesterday..” என்பார். இப்படி ஒவ்வொரு வசனங்களும் கவனிக்க வைக்கிறது. ராணி முகர்ஜி கற்பழிப்பது கொலை செய்யப் படும் காட்சியும், ஷாருக்கான் சாகும் காட்சியும் வெறும் சினிமா காட்சிகளாக மட்டும் எனக்குத் தெரியாமல் நிஜமாகவே நடந்த அந்த கோர சம்பவங்களை நினைக்க வைத்து கண்களை நனைத்துவிட்டன.

ஆனால் இப்படி பல பிளஸ்கள் எனக்கு தெரிந்தாலும் படம் பார்க்கும் போது உறுத்திய சில விஷயங்கள். கமல் மறுமணம் செய்த பிறகு மீண்டும் ராணி முகர்ஜியுடன் வாழ்ந்த வீட்டிற்கு வருவார். அப்போது செய்திதாளில் "இன்று பாகிஸ்தான் பிறக்கிறது.. நள்ளிரவில் இந்தியாவிற்கு சுதந்திரம்" என்று காண்பிக்கப்படும். அப்படி பார்த்தால் காந்தி சாவதற்கு ஐந்து மாதங்களே இருக்கிறது. அதற்குள் வசுந்தாரவை மனம் மாறி ஏற்றுக் கொள்வது, மீண்டும் ஊருக்கு வந்து தங்கியிருப்பது, அதற்குள் வசுந்தராதாஸ் கர்ப்பம் ஆவது, மறுபடியும் மனம் மாறி டெல்லிக்கு காந்தியை கொல்ல வருவது என்று நிறைய சம்பவங்கள் நடக்கிறது. இதில்லாமல் கமல் மாமனார் கிரிஷ் கர்னாட் “நீங்க போனப்புறம் என்னென்னவோ நடந்துப் போச்சி..” என்று நிறைய பட்டியல் போடுவார். இப்படி அந்த ஐந்து மாத காலத்தில் ஏகப்பட்ட சம்பவங்கள் காட்டுவது மட்டும் எனக்கு உறுத்தலாகத் தோன்றியது.

என் உடன் இருந்த அரைத் தோழர் ஒருவர் ஒரு முறை சொன்னார். “ஹே ராம்” படம் தொடங்கிய அரைமணி நேரத்தில் அவரும் அவருடன் சென்ற நண்பரும் திரையரங்கில் தூங்கிவிட்டார்கள் என்று. சில இடங்களில் காட்சிகள் தெளிவாக விளக்கபடவில்லையோ என தோன்றியது. இப்படி ஒரு மேக்கிங் உள்ள படத்தை வெகுஜன ரசிகர்கள் கண்டுகொள்ளாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை தான். கமல் படங்களில் நிறைய காலம் கடந்தே கவனிக்கப் படுகிறது என்று எனக்குத் தோன்றும். ஒரு வேளை காலம் கடந்து நான் ரசித்துப் பார்ப்பதால் அப்படி தோன்றுகிறதா என்றுத் தெரியவில்லை. இந்தப் படம் மட்டும் அல்ல சிறு வயதில் நான் பார்க்கமுடியாமல் மொக்கையாக இருப்பதாக நினைத்து ஒதுக்கிய கமல் படங்கள் எல்லாம் இப்போது பார்க்கும் போது பிடித்துத்தான் இருக்கிறது. “மகாநதி”, ‘குணா”, “ஆளவந்தான்” இப்போது “ஹே ராம்”. உலகப் படங்கள் பார்க்கிறேன் பேர்வழி என்று மெதுவாக நகரும் படங்கள் நிறையப் பார்த்ததால் "ஹே ராம்" படமும்  மெதுவாக நகர்வதாகவோ போர் அடிப்பதாகவோ நான் உணரவில்லை.


கமல் மீது எத்தனை விமர்சனங்கள் இருப்பினும் “கமல் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞன்” என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இந்தியப் பிரிவினையும் அதை ஒட்டி நிகழ்ந்த வன்முறையும் பற்றி பேசியிருக்கும் ஒரே தமிழ் படம் “ஹே ராம்” தான் என்பதை நினைத்து கமல் பெருமிதம் கொள்ளலாம். என்னளவில் இது தமிழ் சினிமாவில் முக்கியமான வரலாற்றுப்பதிவு. 

Posted on பிற்பகல் 11:53 by Elaya Raja

No comments

திங்கள், 4 ஜனவரி, 2016

நிறைய படங்களில் நடித்த திரைப் பிரபலங்கள் சிலர், திரைப் படங்கள் எதுவும் இல்லாமல் செல்வம், புகழ், வெளிச்சம் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுவதையும், புகழை இழந்த விரக்தியிலும் உழல்வதைப் பற்றி நிறைய படித்திருப்போம். தமிழ் சினிமாவில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் இருந்தனர், இருக்கின்றனர், இருக்கப் போகின்றனர். அதில் நிறைய குழந்தை நட்சத்திரங்கள் வளர்ந்து கதாநாயகனாகவோ கதாநாயகிகளாவோ வலம் வருவார்கள். உதாரணமாக கமல்ஹாசன், குட்டி பத்மினி, மீனா, சிம்பு, மாஸ்டர் மகேந்திரன், போன்றோர். ஆனால் பல குழந்தை நட்சத்திரங்கள் இன்று எங்கே எப்படி இருக்கின்றனர் என்று எதுவும் தெரியாது. அப்படி ஒரு குழந்தை நட்சத்திரம் வளர்ந்து பின் ஊடக வெளிச்சம், புகழ் எதுவுமற்று வாழும் வாழ்க்கையை பதிவு செய்திருக்கும் படம் தான் இந்த “அபுர் பாஞ்சாலி”.


இந்திய சினிமாவை உலக அரங்கில் தலை நிமிரச் செய்த இயக்குனர் சத்யஜித்ரே. அவரின் முதல் படைப்பான, ஆகச் சிறந்த படைப்பாக சினிமா உலகம் கருதும் படம் “பதேர் பாஞ்சாலி”. அதில் முக்கிய “அபுர்” கதாபாத்திரமாக நடித்த சுபீர் பானர்ஜி அந்த ஒரு திரைப்படம் மட்டுமே நடித்தார். அவருக்கும் சினிமாவிற்கும் உண்டான தொடர்பு “பதேர் பாஞ்சாலி”யோடு முடிந்து விட்டது. இந்த மக்கள் கூட்டத்தில் மனம் நெகிழச் செய்த அந்த “அபுர்” சிறுவன் தொலைந்து விட்டான். அவரைப் பற்றிய டாகுமென்ட்ரி வகையில் இருக்கும் படம் தான் இது. சுபீர் பானர்ஜியின் நிகழ் கால வாழ்க்கை வண்ணமாகவும், கடந்த கால வாழ்க்கை கருப்பு வெள்ளையாகவும் வர சத்யஜித்ரேயின் “அபு” ட்ரையாலாஜி காட்சிகள் சுபீர் பானர்ஜியின் வாழ்க்கையோடு ஒத்துப் போகும் காட்சிகள் நடுநடுவே உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பதேர் பாஞ்சாலியின் “அபு” கதாபாத்திரம் உலகிலேயே மிகவும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் என ஜெர்மன் அரசு அறிவித்து “அபு”வாக நடித்த சுபீர் பானர்ஜியை கவுரவிக்க எண்ணுகிறது. அதற்காக அவரை கண்டுபிடித்து ஜெர்மன் அனுப்பும் பொறுப்பினை ஆர்கா என்ற மாணவனிடம் ஒப்படைக்கிறது சத்யஜித்ரே திரைப்படக் கல்லூரி. ஆனால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்கியிருக்கும் சுபீர் பானர்ஜி “தனக்கும் அபு கதாப்பாத்திரத்திற்கும் சத்யஜித்ரேவுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்று பிடிவாதமாக அந்த அழைப்பை ஏற்க மறுக்க ஆர்காவின் விடா முயற்சியால் ஒப்புக் கொள்கிறார். சிடு மூஞ்சியாக இருக்கும் சுபீர் பானர்ஜி கொஞ்சம் கொஞ்சமாக ஆர்காவிடம் நட்போடு பழகி பதேர் பாஞ்சாலிக்குப் பிறகான தன் வாழ்க்கையை அவனோடு பகிர்ந்து கொள்கிறார்.

வெறும் ஒரு மணி நேரம் 36 நிமிடங்களே ஓடக் கூடிய இந்த படம் முதலில் கொஞ்சமாக பொறுமையை சோதித்தது. கதையோடு ஒன்ற ஆரம்பித்ததும் மெதுவான காட்சியமைப்புகள் பெரிதாய் பாதிக்கவில்லை. இள வயது சுபீர் பானர்ஜியாக நடித்தவரின் நடிப்பும், அவரின் மனைவியாக அளவான மேக்கப்போடு அழகாக வருபவரின் நடிப்பும் நன்றாக இருந்தது.

“பதேர் பாஞ்சாலி” உலகம் முழுக்க கொண்டாடப்பட்டாலும் இந்தியாவை மிகவும் வறுமையான நாடாக தவறாக சித்தரித்திருப்பதாக அதன் மீது குற்றச் சாட்டுகளும் வைக்கப்பட்டன. 60 வருடங்கள் கழித்து பார்க்கும் போதும் “பதேர் பாஞ்சாலி”யின் காட்சிகள் என்னை பாதித்தன. அபுக் குடும்பத்தின் வறுமையும் ஆசைப்பட்ட தின்பண்டம் கூட வாங்கி சாப்பிட முடியாத “அபு” “துர்கா” இருவரின் இயலாமையும் அவர்களுக்காக வருத்தப்பட வைத்தன. சரி இது வெறும் திரைப்படம் தானே என்று நினைத்தால் வறுமையைத் தவிர அபுவின் வாழ்க்கையை அப்படியே அடியொற்றி இருக்கிறது சுபீர் பானர்ஜியின் வாழ்க்கை. அபுவின் அப்பா மயங்கி விழும் காட்சி அங்கே காட்டப்பட இங்கே பானர்ஜியின் அப்பா கட்டிலில் கிடத்தபடுகிறார். இங்கே பானர்ஜியின் அப்பா மரணம் தழுவ அங்கே அபுவின் அப்பாவிற்கு சடங்குகள் செய்கிறான் அபு. இங்கே பானர்ஜி பெண் பார்க்க செல்லும் காட்சி காட்டப்பட அங்கே அபுவின் திருமணம் காட்டபடுகிறது. இங்கே பானர்ஜியின் மனைவியின் இறப்பை ஜீரணிக்க முடியாமல் பானர்ஜி கதவை சாத்திக் கொள்ள அங்கே அபு மூடிய கதவின் பின்னே அழுது கொண்டிருக்கிறான். இப்படி சுபீர் பானர்ஜியின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கிறான் அபு. அபு ட்ரையாலாஜி முழுதாக பார்த்தப் பின் இந்த திரைபடத்தை பார்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.


அபு ட்ரையாலாஜி முழுவதும் பார்த்து விட்டு நல்ல படம் பார்க்க விரும்பினால் நண்பர்கள் இதனை பார்க்கலாம்.

Posted on முற்பகல் 6:15 by Elaya Raja

No comments