பள்ளிப் பருவத்தில் சுதந்திர தினம் என்றாலே விடுமுறையும் பள்ளியில் கொடுக்கும் மிட்டாயும் மாணவர்கள் நாங்கள் சேர்ந்து வகுப்பறையை அலங்கரிப்பதும் தான் நியாபகம் வரும். அப்பொழுதெல்லாம் சுதந்திரத்தின் முழு அர்த்தம் உணர்ந்ததில்லை. ஆனால் அந்த சுதந்திரத்தின் பின்னால் எத்தனை உயிர்பலி என்பதை இது போன்ற புத்தகங்கள் வாசிக்கும் போது தான் தெரிகிறது. 


இந்திய மக்களின் மொத்த பிரதிபலிப்பாய் பார்க்கப்பட்ட காந்தி, நேரு, ஜின்னா, படேல் மற்றும் சிலரின் சிறு சிறு தவறான முடிவுகளுக்கு எண்ணற்ற அப்பாவி மக்கள் மாபெரும் விலை கொடுக்க நேர்ந்திருந்திருக்கிறது என்பதை வாசித்தப் போது மனம் கணக்க ஆரம்பித்துவிட்டது. மக்களின் இறை நம்பிக்கை மனித இனத்தை எப்படி கூறுப் போட்டிருக்கிறது என்பதற்கு பெரும் உதாரணமாய் பிரிவினையை ஒட்டி நிகழ்ந்த படுகொலைகள் நிற்கின்றன. இறை நம்பிக்கையின் பால் விளைந்த இந்த மதங்கள் மனித மனங்களில் எந்த அளவிற்கு வேரூன்றி இருந்திருக்கிறது என்பதை வருத்ததோடு நாம் நினைவில் வைத்திருக்க வேண்டும். எண்ணற்ற படுகொலைகள், கற்பழிப்பு, என்று இந்தியாவே சுடுகாடாய் மாறி இருக்கிறது. கல்கத்தா, பஞ்சாப், டெல்லி என்று எண்ணற்ற இடங்களில் கொலைகளும், கற்பழிப்புகளும் சர்வ சாதரணமாய் நடந்திருக்கிறது. 

இந்தியப் பிரிவினைக்கு இது தான் காரணம், இவர் தான் காரணம் என எதையும், எவரையும் குற்றம் சாட்டாமல் எல்லா தரப்பினரையும் அலசி செல்கிறது இந்த புத்தகம். காங்கிரஸ் தோன்றிய காரணத்தையும், காங்கிரசில் இருந்த ஜின்னா "முஸ்லிம் லீக்" தொடங்கிய காரணத்தையும், அறவழியில் போராடிய, ஹிந்துவான காந்தியை மற்றொரு ஹிந்துவான கோட்சே கொள்வதற்க்கான காரணத்தையும் என்று  எல்லாவற்றையும் தொட்டு செல்கிறது இந்த புத்தகம். மிகவும் குறைந்த பக்கங்களை கொண்ட இந்த புத்தகம் என்னுள் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியிருக்கிறது.