புத்தக வாசிப்பும் சரி சினிமா பார்ப்பதும் சரி இரண்டும் சரியான நேரத்தில் நம்மை நல்ல புத்தகங்களையும் நல்ல சினிமாக்களையும் நோக்கி இழுத்து செல்லும். இதை அனுபவப் பூர்வமாக கூறுகிறேன். நான் முதலில் புத்தக வாசிப்பை தொடங்கியது ராஜேஷ்குமார் நாவல்களில் தான். படித்து முடித்ததும் ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வை கொடுத்தால் ராஜேஷ்குமார் எழுத்தின் மீது பைத்தியமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் கதைகள் ஒரே மாதிரி இருப்பதை போல ஒரு உணர்வு தோன்றவும் மாறுதலுக்காக சுஜாதா நாவல்கள் படிக்க தொடங்கினேன். அப்படியே கல்கி, வைரமுத்து, ஜெயகாந்தன் என்று படிக்கத் தொடங்கினேன். இப்படி இருந்த பொழுது தான் பா.ராகவன் எழுதிய “ஹிட்லர்” புத்தகம் படித்தேன். நாவல் அல்லாத ஒரு புத்தகத்தை நான் படித்தது அதுவே முதல் முறை. அதன் மூலம் வரலாறு, அரசியல் சம்மந்தமான புத்தகங்கள் படிக்க தொடங்கினேன். அப்படிதான் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, பா.ராகவன் அவர்களின் “9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி”, “பாகிஸ்தானின் அரசியல் வரலாறு” போன்ற புத்தகங்களை வாசித்தேன்.

சமீபகாலமாக எனது புத்தக வாசிப்புக்கு ஒரு மாபெரும் இடைவெளி விட்டுவிட்டேன். காரணம் சினிமா. கிடைக்கும் நேரமெல்லாம் கம்ப்யூட்டரில் படம் பார்க்க தொடங்கிவிடுவேன். அதனால் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் இது பத்தாதென்று எங்கள் ஊர் நூலகத்தில் எடுத்த புத்தகம் என்று நிறைய சேர்ந்து விட்டது. “ஹிட்லர்” புத்தகம் படித்ததில் இருந்து பா.ராகவன் அவர்களின் எழுத்து மிகவும் பிடித்திருந்தது. அதனால் நூலகத்தில் எடுத்த “சதாம்ஹுசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்” என்ற புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன். ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகத்தை கூட இத்தனை விறுவிறுப்பாய் ஒரு திர்ல்லர் நாவலைப் போல எழுத முடியுமா என்று.


கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வரும் வரலாறு புத்தகங்கள் எல்லாம் நான்-லீனியர் சினிமா போல இருக்கும். இதுவும் அப்படியே. சதாமின் மரண தண்டனை தீர்ப்பில் தொடங்கும் நூல் அப்படியே சதாமின் பிறப்பு, அரசியல் என்ட்ரி, இராக் பிரதமர் கொலை முயற்சி, அதற்க்கு அமெரிக்காவின் பணபலம், ஆயுத பலம், சதாமின் கட்சி ஆட்சியை பிடிப்பது, சதாம் துணை அதிபர் ஆவது, பிறகு அதிபரை துரத்தி தானே அதிபர் ஆவது, ஈரானை தாக்குவது, பிறகு குவைத்தையும் தாக்குவது, அதனால் அமெரிக்காவை பகைத்துக் கொண்டு போரில் தோல்வியுற்று மரணதண்டனை பெறுவது என்று எல்லாவற்றையும் தொட்டு விரிகிறது. பக்கங்கள் வழுக்கி கொண்டு போவதைப் போல ஒரு உணர்வு. அத்தனை விறுவிறுப்பு.

தான் சொல்வதை கேட்க்கும் வரை, தான் சொல்வதை தாண்டி யோசிக்காத வரை தான் அமெரிக்கா நண்பனாக இருக்கிறது. அதை மீறும் பட்சத்தில் மரணம் தான். ஒசாமா ஆனாலும் சரி சதாம் ஆனாலும் சரி இரண்டு பேருக்கும் ஒரே நீதி தான். மத்திய கிழக்கில் அமெரிக்கா கொண்டிருக்கும் நேசத்திற்கும் மேற்கொள்ளும் போர்களுக்கும் அனைத்திற்கும் காரணம் அவற்றின் எண்ணெய் வளம் தான். இதையே தான் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகமும் கூறுகிறது. கடனை உலக வங்கியின் மூலம் அள்ளிக் கொடுத்து ஒரு நாட்டினை கடன்காரனக்கி அதன் அந்த நாட்டின் வளத்தை சுரண்டி எடுப்பது. அமெரிக்கா என்பது ஆட்சியாளர்கள் தான். ஆனால் ஆட்சியாளர்கள் மாறினாலும் மற்ற நாடுகளின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை மாறியதாக தெரியவில்லை.

சதாம் ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும் இராக்கில் நிறைய மாற்றங்களையும் நிறைய நல்ல விஷயங்களும் செய்திருக்கிறார். அதே நேரத்தில் தன்னை எதிர்ப்பவர்களுக்கு மரணமே பதில் எனவும் இருந்திருக்கிறார். தன்னை எதிர்த்து நின்ற குர்திஷ் இன மக்களை படுபயங்கர ரசாயன ஆயுதங்கள் கொண்டு ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார். இந்த மாபெரும் இனப் படுகொலையே பின்னால் அமெரிக்கா சதாமை தூக்கிலிட காரணமாக் காட்டப்பட்டது.

உலக அரசியல் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த புத்தகம் என்னுள் விதைத்திருக்கிறது. முடிந்தால் நண்பர்கள் படித்து பார்க்கவும் என பரிந்துரைக்கிறேன்.