விஜய் ஒரு பாண்டஸி திரைப்படத்தில் நடிக்கிறார் (அவர் நடித்த படங்கள் முக்கால்வாசி கிட்டத்தட்ட பாண்டஸி தான்) என்று புலி திரைப்படம் பற்றி செய்திகள் வந்தபோது "பரவாலையே.. விஜய் புதுசா ஏதோ ட்ரை பண்றாரே" என்று நினைத்தேன். சிம்பு தேவன் இயக்குனர் என்றதும் கொஞ்சம் திக்கென்று இருந்தது. காரணம் "இம்சை அரசன்" தவிர மற்ற படங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வியதே. இருந்தாலும் விஜய் படம் என்பதால் சிரத்தை எடுத்து வெற்றி கொடுப்பார் என நம்பினேன். ஆனால் பெரிய ஏமாற்றம்.

சமீபகால தமிழ் திரைப்படங்களில் மேற்கொண்ட முயற்சிகளில் "புலி" மிகவும் மோசமான முயற்சி என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நமது தமிழ் சினிமாவில் பாண்டஸி என்ற "genre" மிகவும் அரிதாகவே முயற்சிக்கப்படுகிறது. விட்டாலச்சர்யா, ராம.நாராயணன் காலத்திய படங்கள் தாண்டி பெரியதாக யாரும் முயற்சிக்கவில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் மட்டும் எனக்கு நினைவு வருகிறது. "இரண்டாம் உலகம்" கிராபிக்ஸ்-ல் காட்டிய சிரத்தையை திரைக்கதையில் காட்டவில்லை. இரண்டாம் உலகத்திற்கு ஏற்ப்பட்ட அதே நிலைமை தான் இன்று "புலி" படத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது.பாண்டஸி வகைப் படங்கள் நிச்சயம் செலவு பிடிக்கும் தயாரிப்புகள் தான். உலக சினிமா பார்க்கும் இன்றைய ரசிகர்கள் "ராஜகாளியம்மன்", "பாளையத்தம்மன்" வகை கிராபிக்ஸ் காட்சிகளில் எல்லாம் திருப்தி அடைய மாட்டார்கள். அவர்களை திருப்திபடுத்த செலவு செய்யவேண்டும். ரிஸ்க் எடுக்க விரும்பாத தயாரிப்பாளர்கள் அதனால் தான் அதனை தவிர்த்து விடுகிறார்கள். மார்க்கெட் உள்ள ஹீரோ நடித்தால் போட்ட முதல் எடுத்துவிடலாம் என்ற தைரியத்தில் தான் "புலி" படம் எடுக்கபட்டிருக்கிறது என நினைக்கிறேன். எல்லா மொழிகளிலும் "டப்பிங் படம்" என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிடாமல் இருக்க தெலுங்கில் இருந்து இரண்டு நடிகர்கள் ஹிந்திக்கு ஸ்ரீதேவி என்று இறக்கியிருக்கிறார்கள்.

விஜய் திரையில் வரும் போதெல்லாம் மிகவும் பரிதாபமாகவே எனக்கு தெரிந்தார். மக்களை தியேட்டர்க்கு அழைத்து வரும் சக்தி கொண்ட ஒரு மாஸ் ஹீரோ சிறு பிள்ளை தனமான ஒரு கதையில் நடிக்க முன்வந்திருக்கிறார் என்பது மிகவும் கசப்பான ஒரு உண்மை. விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்தது எல்லா படங்களிலும் சற்றும் குறையாத அவரின் எனர்ஜி. அந்த எனர்ஜி இந்த படத்திலும் சற்றும் குறையவில்லை. ஆனால் அத்தனையும் விழலுக்கு இரைத்த நீராகிப் போனது தான் வருத்தம். வித்தியாசமான படம் பண்ண வேண்டும் என்ற அவரின் முடிவு வரவேற்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் இது போன்ற போலி தனமான கிராபிக்ஸ் கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அவரின் ரசிகர்களோ சினிமா விரும்பிகளோ ஏற்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம். இது போன்ற அபத்தமான முயற்சிகள் தோல்வி அடையும் போது மக்கள் "என்னிடம் புதுசாக எதுவும் எதிர்ப்பார்க்கவில்லை "என்ற முடிவிற்கு விஜய் வந்துவிடக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். 

படத்தின் விஷுவல் பாராட்டப் படவேண்டியது. ஆனால் கிராபிக்ஸ் படு மொக்கை. ஹாலிவுட் தரத்திற்கு நம்மால் நம் பட்ஜெட்டில் கிராபிக்ஸ் கொடுக்க முடியாது என்பது வாதமாக இருந்தால் இது போன்று கேலிக்குள்ளாகும் முயற்சிகளை ஏன் செய்யவேண்டும். 

படத்தில் திறமையான நடிகர்கள் எத்தனையோ இருந்தும் அவர்கள் அனைவரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஸ்ரீதேவி இப்படி ஒரு படத்தில் நடித்தது மிகவும் வருத்தப்படவேண்டியது. மேக்கப் இல்லாமல் அழகாக தெரியும் ஸ்ரீதேவிக்கு கர்ண கொடூர மேக்கப். ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், பிரபு எல்லோரும் வெறும் பேருக்கு மட்டும் தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு "மாயா" படம் பார்த்தேன். புதுமுக இயக்குனர். பல பேர் அடித்து துவைத்த பேய் வகை படம். ஆனால் திரைக்கதையில் எத்தனை மெனக்கெடல். ஒவ்வொரு காட்சியும் படம் பார்க்கும் ரசிகனை மதித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் "புலி"..? "120 ரூபா கொடுத்து உள்ள வரவனுக்கு இது போதும்" என்ற தோரணையில் எழுதப்பட்டதைப் போல உள்ளது. நான் ஒன்றும் சினிமா சூத்திரம் கற்று தேர்ந்தவன் அல்ல. ஆனால் படம் பார்த்து முடித்ததும் இந்த படம் என்னை திருப்தி படுத்தியதா இல்லையா என்பதை உணரத் தெரிந்தவன். நான் கொடுத்த காசுக்கு உண்மையாக இல்லாத ஒரு பொருளை விமர்சிக்கும் உரிமையோடு கூறுகிறேன் "புலி" ஒரு மோசமான திரைப்படம்.