வியாழன், 22 அக்டோபர், 2015

விஜய் அவார்ட்ஸ்-ல் "தனக்குப் பிடித்த நடிகை நயன்தாரா.. இன்னைக்கு செம்ம அழகா வந்திருக்காங்க... ப்ப்பா.." என விஜய் சேதுபதி கூறிய கொஞ்ச நாள் தனுஷ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் "நானும் ரவுடிதான்" படத்தின் அறிவிப்பு வந்தது. விஜய் சேதுபதி அப்படி பேசியது வெகுஜன மக்களின் கவனம் ஈர்த்த பிறகு வந்த இந்த அறிவிப்பு தனுஷின் வியாபார யுக்தியை காட்டுவதாகவே எனக்கு தெரிந்தது. அதுமட்டுமல்லாமல் சிவகார்த்திகேயனின் சகப் போட்டியாளராக பேசப்படும் (அப்படியெல்லாம் எதுவும் இல்லை எனும் போதும்) விஜய்சேதுபதியை வைத்து தனுஷ் படம் தயாரிப்பது சிவகார்த்தியனுக்கும் - தனுஷ்க்கும் விரிசல் என்ற செய்தியையும் பரப்பியது. எது எப்படியோ "நானும் ரவுடிதான்" படம் பார்த்தாகிவிட்டது. அது பற்றி இனி பேசுவோம்.


படத்தின் ட்ரைலர் தான் முழுக்கதையும். போலீஸ் ராதிகாவின் மகன் விஜய்சேதுபதி ரவுடி ஆக வேண்டும் என ஆசைப்பட்டு பிராடு வேலை செய்கிறார். இன்னொரு போலீசின் மகளான நயன்தாராவை பார்த்ததும் காதலிக்கிறார். தன் பெற்றோரை கொன்ற பார்த்திபனைக் கொன்றால் தான் காதல் செய்வேன் என நயன் கூற காமெடி ரவுடியான விஜய்சேதுபதி பெரும்பலம் கொண்ட பார்த்திபனை கொன்றாரா? இல்லையா? இதுதான் நானும் ரவுடிதான் கதை.

படத்தின் மிகப் பெரிய பலம் கடைசி காட்சி வரை காமெடியாகவே பயணிக்கும் திரைக்கதை. ஒவ்வொருக் காட்சியிலும் நம்மை சிரிக்க வைக்கும் வசனம் வந்துவிடுகிறது. அடுத்த பலம் நடிகர்கள் தேர்வு. விஜய் சேதுபதி, நயன்தாரா காம்பினேஷன் பிரமாதம். விஜய் சேதுபதி வழக்கம்போல் வித்தியாசமான வசன உச்சரிப்பின் மூலம் நம்மை சிரிக்க வைக்கிறார். நயன்தாராவை விட நம்மை அதிகம் ஈர்ப்பது விஜய் சேதுபதி தான். நயன்தாரா காது கேட்க்காத காதம்பரியாக நன்றாக நடித்திருக்கிறார். நயனின் நடிப்பும் அவரும்  நாளுக்கு நாள் மெருகேறி கொண்டே போகின்றது. அவரின் சொந்த குரலும் சேர்ந்து அவரின் நடிப்பை புதிதாக உணரச் செய்கிறது. ஆர்.ஜே. பாலாஜிக்கு மிக முக்கியமான படமாக இது இருக்கும். அவரின் காமெடி இந்த நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கிறது. பார்த்திபன் முதன்முறையாக வில்லன். பார்த்திபனின் வில்ல தனத்தை விட காமெடியை மிகவும் ரசித்தேன். அதுவும் கிளைமாக்ஸ் பிரமாதம். ஆனந்தராஜ், "நான் கடவுள் " ராஜேந்திரன், மன்சூர் அலி கான், ராகுலாக வரும் அந்த வயதானவர் அனைவரும் தன் பங்களிப்பினை சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தின் ஒளிப்பதிவு மிகவும் கவர்ந்தது. பாடலும் அதை படமாக்கிய விதமும் சூப்பர். 

சமீபத்தில் "snatch", "Lock, stock and two smoking barrels" என்ற படங்கள் பார்த்தேன். இரண்டும் "Crime comedy" வகையை சேர்ந்த படங்கள். காட்சியில் கொலை நடக்கும் அதைப் பார்க்கும் நமக்கு சிரிப்பு வரும். இதே போன்றது தான் (சில காட்சிகளில்) நானும் ரவுடிதான் படமும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ராஜேந்திரன், விஜய் சேதுபதியை அழைத்து சென்று கொலையை "லைவ் டெமோ" செய்து காட்டும் காட்சி. ஆனால் இதற்க்கு சிரித்து முடித்தப் பிறகு "இது போன்ற காட்சிகள் வன்முறையை சாதாரணமாக எடுத்துக் கொள்ள நம் மனங்களைப் பழக்கிவிடுமோ" என்ற சமூக சிந்தனை (?) தானாக தோன்றியது. நயன்தாரா பார்த்திபனிடம் "உங்களைப் போடணும் சார்.." என்று சொல்லும் காட்சியில் தியேட்டரில் சிரிப்பு. என் பக்கத்தில் பத்து வயது மதிக்கத்தக்க மகனோடு வந்திருந்த தந்தை அந்த காட்சியில் தன் சிரிப்பை அடக்கி கொண்டதைப் போல் எனக்கு தோன்றியது. இயக்குனர் நினைத்திருந்தால் அந்த "இரட்டை அர்த்த வசனத்தை" திருத்தி இருக்கலாம். 

மொத்தத்தில் இந்த ரவுடியை நிச்சயம் எல்லோரும் ரசிக்கலாம்.

Posted on பிற்பகல் 10:52 by Elaya Raja

No comments

சனி, 3 அக்டோபர், 2015

புத்தக வாசிப்பும் சரி சினிமா பார்ப்பதும் சரி இரண்டும் சரியான நேரத்தில் நம்மை நல்ல புத்தகங்களையும் நல்ல சினிமாக்களையும் நோக்கி இழுத்து செல்லும். இதை அனுபவப் பூர்வமாக கூறுகிறேன். நான் முதலில் புத்தக வாசிப்பை தொடங்கியது ராஜேஷ்குமார் நாவல்களில் தான். படித்து முடித்ததும் ஒரு ஆக்சன் படம் பார்த்த உணர்வை கொடுத்தால் ராஜேஷ்குமார் எழுத்தின் மீது பைத்தியமாக இருந்தேன். ஒரு கட்டத்தில் கதைகள் ஒரே மாதிரி இருப்பதை போல ஒரு உணர்வு தோன்றவும் மாறுதலுக்காக சுஜாதா நாவல்கள் படிக்க தொடங்கினேன். அப்படியே கல்கி, வைரமுத்து, ஜெயகாந்தன் என்று படிக்கத் தொடங்கினேன். இப்படி இருந்த பொழுது தான் பா.ராகவன் எழுதிய “ஹிட்லர்” புத்தகம் படித்தேன். நாவல் அல்லாத ஒரு புத்தகத்தை நான் படித்தது அதுவே முதல் முறை. அதன் மூலம் வரலாறு, அரசியல் சம்மந்தமான புத்தகங்கள் படிக்க தொடங்கினேன். அப்படிதான் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்”, பா.ராகவன் அவர்களின் “9/11 சூழ்ச்சி-வீழ்ச்சி-மீட்சி”, “பாகிஸ்தானின் அரசியல் வரலாறு” போன்ற புத்தகங்களை வாசித்தேன்.

சமீபகாலமாக எனது புத்தக வாசிப்புக்கு ஒரு மாபெரும் இடைவெளி விட்டுவிட்டேன். காரணம் சினிமா. கிடைக்கும் நேரமெல்லாம் கம்ப்யூட்டரில் படம் பார்க்க தொடங்கிவிடுவேன். அதனால் புத்தக கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் இது பத்தாதென்று எங்கள் ஊர் நூலகத்தில் எடுத்த புத்தகம் என்று நிறைய சேர்ந்து விட்டது. “ஹிட்லர்” புத்தகம் படித்ததில் இருந்து பா.ராகவன் அவர்களின் எழுத்து மிகவும் பிடித்திருந்தது. அதனால் நூலகத்தில் எடுத்த “சதாம்ஹுசைன் வாழ்வும் இராக்கின் மரணமும்” என்ற புத்தகத்தை வாசிக்க தொடங்கினேன். ஆச்சர்யமாக இருந்தது. ஒரு வாழ்க்கை வரலாறு புத்தகத்தை கூட இத்தனை விறுவிறுப்பாய் ஒரு திர்ல்லர் நாவலைப் போல எழுத முடியுமா என்று.


கிழக்கு பதிப்பகத்தில் இருந்து வரும் வரலாறு புத்தகங்கள் எல்லாம் நான்-லீனியர் சினிமா போல இருக்கும். இதுவும் அப்படியே. சதாமின் மரண தண்டனை தீர்ப்பில் தொடங்கும் நூல் அப்படியே சதாமின் பிறப்பு, அரசியல் என்ட்ரி, இராக் பிரதமர் கொலை முயற்சி, அதற்க்கு அமெரிக்காவின் பணபலம், ஆயுத பலம், சதாமின் கட்சி ஆட்சியை பிடிப்பது, சதாம் துணை அதிபர் ஆவது, பிறகு அதிபரை துரத்தி தானே அதிபர் ஆவது, ஈரானை தாக்குவது, பிறகு குவைத்தையும் தாக்குவது, அதனால் அமெரிக்காவை பகைத்துக் கொண்டு போரில் தோல்வியுற்று மரணதண்டனை பெறுவது என்று எல்லாவற்றையும் தொட்டு விரிகிறது. பக்கங்கள் வழுக்கி கொண்டு போவதைப் போல ஒரு உணர்வு. அத்தனை விறுவிறுப்பு.

தான் சொல்வதை கேட்க்கும் வரை, தான் சொல்வதை தாண்டி யோசிக்காத வரை தான் அமெரிக்கா நண்பனாக இருக்கிறது. அதை மீறும் பட்சத்தில் மரணம் தான். ஒசாமா ஆனாலும் சரி சதாம் ஆனாலும் சரி இரண்டு பேருக்கும் ஒரே நீதி தான். மத்திய கிழக்கில் அமெரிக்கா கொண்டிருக்கும் நேசத்திற்கும் மேற்கொள்ளும் போர்களுக்கும் அனைத்திற்கும் காரணம் அவற்றின் எண்ணெய் வளம் தான். இதையே தான் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் புத்தகமும் கூறுகிறது. கடனை உலக வங்கியின் மூலம் அள்ளிக் கொடுத்து ஒரு நாட்டினை கடன்காரனக்கி அதன் அந்த நாட்டின் வளத்தை சுரண்டி எடுப்பது. அமெரிக்கா என்பது ஆட்சியாளர்கள் தான். ஆனால் ஆட்சியாளர்கள் மாறினாலும் மற்ற நாடுகளின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறை மாறியதாக தெரியவில்லை.

சதாம் ஒரு சர்வாதிகாரியாக இருந்தாலும் இராக்கில் நிறைய மாற்றங்களையும் நிறைய நல்ல விஷயங்களும் செய்திருக்கிறார். அதே நேரத்தில் தன்னை எதிர்ப்பவர்களுக்கு மரணமே பதில் எனவும் இருந்திருக்கிறார். தன்னை எதிர்த்து நின்ற குர்திஷ் இன மக்களை படுபயங்கர ரசாயன ஆயுதங்கள் கொண்டு ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தார். இந்த மாபெரும் இனப் படுகொலையே பின்னால் அமெரிக்கா சதாமை தூக்கிலிட காரணமாக் காட்டப்பட்டது.

உலக அரசியல் பற்றி நிறைய தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த புத்தகம் என்னுள் விதைத்திருக்கிறது. முடிந்தால் நண்பர்கள் படித்து பார்க்கவும் என பரிந்துரைக்கிறேன்.

Posted on பிற்பகல் 10:31 by Elaya Raja

No comments

வியாழன், 1 அக்டோபர், 2015

விஜய் ஒரு பாண்டஸி திரைப்படத்தில் நடிக்கிறார் (அவர் நடித்த படங்கள் முக்கால்வாசி கிட்டத்தட்ட பாண்டஸி தான்) என்று புலி திரைப்படம் பற்றி செய்திகள் வந்தபோது "பரவாலையே.. விஜய் புதுசா ஏதோ ட்ரை பண்றாரே" என்று நினைத்தேன். சிம்பு தேவன் இயக்குனர் என்றதும் கொஞ்சம் திக்கென்று இருந்தது. காரணம் "இம்சை அரசன்" தவிர மற்ற படங்கள் அனைத்தும் மண்ணைக் கவ்வியதே. இருந்தாலும் விஜய் படம் என்பதால் சிரத்தை எடுத்து வெற்றி கொடுப்பார் என நம்பினேன். ஆனால் பெரிய ஏமாற்றம்.

சமீபகால தமிழ் திரைப்படங்களில் மேற்கொண்ட முயற்சிகளில் "புலி" மிகவும் மோசமான முயற்சி என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. நமது தமிழ் சினிமாவில் பாண்டஸி என்ற "genre" மிகவும் அரிதாகவே முயற்சிக்கப்படுகிறது. விட்டாலச்சர்யா, ராம.நாராயணன் காலத்திய படங்கள் தாண்டி பெரியதாக யாரும் முயற்சிக்கவில்லை. செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், இரண்டாம் உலகம் மட்டும் எனக்கு நினைவு வருகிறது. "இரண்டாம் உலகம்" கிராபிக்ஸ்-ல் காட்டிய சிரத்தையை திரைக்கதையில் காட்டவில்லை. இரண்டாம் உலகத்திற்கு ஏற்ப்பட்ட அதே நிலைமை தான் இன்று "புலி" படத்திற்கும் நிகழ்ந்திருக்கிறது.பாண்டஸி வகைப் படங்கள் நிச்சயம் செலவு பிடிக்கும் தயாரிப்புகள் தான். உலக சினிமா பார்க்கும் இன்றைய ரசிகர்கள் "ராஜகாளியம்மன்", "பாளையத்தம்மன்" வகை கிராபிக்ஸ் காட்சிகளில் எல்லாம் திருப்தி அடைய மாட்டார்கள். அவர்களை திருப்திபடுத்த செலவு செய்யவேண்டும். ரிஸ்க் எடுக்க விரும்பாத தயாரிப்பாளர்கள் அதனால் தான் அதனை தவிர்த்து விடுகிறார்கள். மார்க்கெட் உள்ள ஹீரோ நடித்தால் போட்ட முதல் எடுத்துவிடலாம் என்ற தைரியத்தில் தான் "புலி" படம் எடுக்கபட்டிருக்கிறது என நினைக்கிறேன். எல்லா மொழிகளிலும் "டப்பிங் படம்" என்ற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுவிடாமல் இருக்க தெலுங்கில் இருந்து இரண்டு நடிகர்கள் ஹிந்திக்கு ஸ்ரீதேவி என்று இறக்கியிருக்கிறார்கள்.

விஜய் திரையில் வரும் போதெல்லாம் மிகவும் பரிதாபமாகவே எனக்கு தெரிந்தார். மக்களை தியேட்டர்க்கு அழைத்து வரும் சக்தி கொண்ட ஒரு மாஸ் ஹீரோ சிறு பிள்ளை தனமான ஒரு கதையில் நடிக்க முன்வந்திருக்கிறார் என்பது மிகவும் கசப்பான ஒரு உண்மை. விஜய்யிடம் எனக்கு மிகவும் பிடித்தது எல்லா படங்களிலும் சற்றும் குறையாத அவரின் எனர்ஜி. அந்த எனர்ஜி இந்த படத்திலும் சற்றும் குறையவில்லை. ஆனால் அத்தனையும் விழலுக்கு இரைத்த நீராகிப் போனது தான் வருத்தம். வித்தியாசமான படம் பண்ண வேண்டும் என்ற அவரின் முடிவு வரவேற்க்கப்பட வேண்டியதுதான். ஆனால் இது போன்ற போலி தனமான கிராபிக்ஸ் கொண்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கும் படங்களை அவரின் ரசிகர்களோ சினிமா விரும்பிகளோ ஏற்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம். இது போன்ற அபத்தமான முயற்சிகள் தோல்வி அடையும் போது மக்கள் "என்னிடம் புதுசாக எதுவும் எதிர்ப்பார்க்கவில்லை "என்ற முடிவிற்கு விஜய் வந்துவிடக் கூடாது என வேண்டிக்கொள்கிறேன். 

படத்தின் விஷுவல் பாராட்டப் படவேண்டியது. ஆனால் கிராபிக்ஸ் படு மொக்கை. ஹாலிவுட் தரத்திற்கு நம்மால் நம் பட்ஜெட்டில் கிராபிக்ஸ் கொடுக்க முடியாது என்பது வாதமாக இருந்தால் இது போன்று கேலிக்குள்ளாகும் முயற்சிகளை ஏன் செய்யவேண்டும். 

படத்தில் திறமையான நடிகர்கள் எத்தனையோ இருந்தும் அவர்கள் அனைவரும் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்த ஸ்ரீதேவி இப்படி ஒரு படத்தில் நடித்தது மிகவும் வருத்தப்படவேண்டியது. மேக்கப் இல்லாமல் அழகாக தெரியும் ஸ்ரீதேவிக்கு கர்ண கொடூர மேக்கப். ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், சுதீப், பிரபு எல்லோரும் வெறும் பேருக்கு மட்டும் தான்.

இரண்டு நாட்களுக்கு முன்பு "மாயா" படம் பார்த்தேன். புதுமுக இயக்குனர். பல பேர் அடித்து துவைத்த பேய் வகை படம். ஆனால் திரைக்கதையில் எத்தனை மெனக்கெடல். ஒவ்வொரு காட்சியும் படம் பார்க்கும் ரசிகனை மதித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் "புலி"..? "120 ரூபா கொடுத்து உள்ள வரவனுக்கு இது போதும்" என்ற தோரணையில் எழுதப்பட்டதைப் போல உள்ளது. நான் ஒன்றும் சினிமா சூத்திரம் கற்று தேர்ந்தவன் அல்ல. ஆனால் படம் பார்த்து முடித்ததும் இந்த படம் என்னை திருப்தி படுத்தியதா இல்லையா என்பதை உணரத் தெரிந்தவன். நான் கொடுத்த காசுக்கு உண்மையாக இல்லாத ஒரு பொருளை விமர்சிக்கும் உரிமையோடு கூறுகிறேன் "புலி" ஒரு மோசமான திரைப்படம்.

Posted on முற்பகல் 11:38 by Elaya Raja

No comments