வியாழன், 10 செப்டம்பர், 2015

"ரீமேக்" ராஜா என்று அழைக்கப்பட்ட இயக்குனர் "ஜெயம்" ராஜா, மோகன் ராஜாவாக மாறி வெற்றிக் கூட்டணியான தன் தம்பியுடன் இணைந்து பாக்ஸ் ஆபிஸை நொறுங்கச் செய்திருக்கும் தனி ஒருவனை இன்று தான் பார்த்தேன். கிடைத்த விமர்சனங்களுக்கும் ரசிகர்களின் பாராட்டுக்கும் இத்தனை பெரிய வணிகரீதியான வெற்றிக்கும் தகுதியான படம்.ரீமேக் படங்கள் இயக்கி வெற்றிக் கொடுப்பது சாதாரணம் அல்ல. ஒரிஜினல் படம் பெற்ற வெற்றியை தக்கவைப்பதும் நிச்சயம் வெற்றி பெரும் என்ற ரசிகர்களின், விநியோகஸ்தர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதும் என்று நிறைய பொறுப்பு இயக்குனருக்கு இருக்கிறது. மேலே சொன்ன வாக்கியங்கள் எல்லாம் ராஜாவிற்கு சப்போர்ட் செய்யத்தான். இயக்கிய 5 ரீமேக் படங்களில் நான்கு படங்கள் மிகப்பெரிய வெற்றி. அதில் நிச்சயம் ராஜாவின் உழைப்பும் திறமையும் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. "வேலாயுதம்" படம் இவரின் சொந்த கதையுடன் வந்த முதல் படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் அது நாகர்ஜுனா நடித்த "ஆசாத்" என்று தெலுங்கு படத்தின் காப்பி என்றும் செய்திகள் வந்தது. 

"தனி ஒருவன்" எதனால் இத்தனை பாராட்டுக்கள் பெற்று வருகிறது..? சமூக அக்கறை கொண்ட கதை அம்சம் + புத்திசாலித்தனம் நிறைந்த பல காட்சிகள் + அரவிந்த்சாமியின் அலட்டல் இல்லாத அமைதியான ஸ்டைலிஷான வில்லத்தனம் + வழக்கமான கமர்சியல் சினிமாவில் வரும் கிளிஷே காட்சிகள் இல்லாதது. இவை எல்லாம் சேர்ந்து தனி ஒருவனை பாக்ஸ் ஆபிஸிலும் ரசிகர்கள் மத்தியிலும் வெற்றி பெற வைத்திருக்கின்றன. இன்றைய இளைய (இணைய) தலைமுறை ட்ரைலர் வந்த உடனே அது எந்த படத்தின் காப்பி என்று சொல்லும் அளவிற்கு உலக சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கும் பொழுது இன்னும் (வழக்கமாக சொல்லப்படும் வார்த்தை தான்) அரைத்த மாவையே அரைக்காமல் ஏதாவது புதிதாக அரைக்க முயற்சிக்கலாம்.

இயக்குனர் ராஜா போன வாரம் புதுயுகம் தொலைக்கட்சியில் பேசும் பொழுது ஒரு சிறிய குழுவை வைத்து நாட்டில் நடந்து கொண்டிருக்கும் சில பிரச்சனைகள் குறித்து ஆய்வு செய்து அதன் பிறகே திரைக்கதை அமைத்ததாக கூறினார். இது போன்ற டீடைலிங் செய்து திரைக்கதை அமைக்கும் பட்சத்தில் படத்தின் நம்பகத்தன்மை அதிகமாக இருக்கும்.

தமிழ் சினிமா சற்று முன்னேற்றப் பாதையில் செல்வதாக எனக்கு தோன்றுகிறது. புது முயற்சிகள், பாடல்களை தவிர்ப்பது, வழக்கமான ஹீரோ துதி பாடும் வசனங்களோ பாடலோ இல்லாமல் இருப்பது என்று கொஞ்சம் நம்பிக்கை அளிக்கிறது. ஆனால் முன்னணி ஹீரோக்கள் மேலே சொன்னவற்றை தன் படங்களில் கடைப்பிடிப்பதாக தெரியவில்லை. விரைவில் அவர்களும் மாற்றங்களை ஒப்புக்கொண்டு அதிலிருந்து வெளி வருவார்கள் என நம்பலாம்.

தனி ஒருவனில் பாராட்ட நிறைய இருக்கிறது. முதலில் நெகடிவ் தனம் கலந்த அரவிந்த்சாமி. அந்த கதாப்பாத்திரத்தை வில்லன் என்று சொல்வது பத்தோடு பதினொன்றாக கலந்து விடும். ஆய் ஊய் என்று கத்திக் கொண்டு திரியும் வில்லனாக இல்லாமல் அமைதியான அலட்டல் இல்லாத ஒரு வில்லத்தனம். ஜெயம் ரவி மித்ரன் கேரக்டருக்கு மிகப் பொருத்தம். நயன்தாரா பாடலுக்கு மட்டும் என்று இல்லாமல் நடிக்க நிறைய காட்சிகள். தம்பி ராமையா அரவிந்த் சாமி அப்பாவாக நிறைய இடங்களில் சிரிக்க வைத்தார். மிகவும் ரசித்தேன் அவர் பேசும் வசனங்களை. 

படத்தில் குறைகள் என்று பெரிதாக எதுவும் எனக்கு தெரியவில்லை. அப்படி மற்ற நண்பர்களுக்கு தெரிந்தால் அதையெல்லாம் மறந்து விட்டு விறுவிறுப்பான ஒரு தமிழ் படத்தை ரசித்து விட்டு வாருங்கள்.

Posted on முற்பகல் 10:58 by Elaya Raja

No comments

புதன், 9 செப்டம்பர், 2015

நான் சுசீந்திரன் படங்களின் ரசிகன். காரணம் கமர்ஷியல் சினிமாவில் கொஞ்சமேனும் "ரியலிசம்" கலப்பவர் என்பதால். அது செண்டிமெண்ட் காட்சியாகட்டும், ஆக்சன் காட்சியாகட்டும். படம் பார்க்கும் ரசிகனை திரையில் தெரியும் ஹீரோவை தன்னில் ஒரு பாதியாய் சில காட்சிகளேனும் உணரச் செய்துவிடுவார். அதனால் தான் அவரின் நான் மகான் அல்ல, பாண்டியநாடு, ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்களை எனக்குப் பிடித்திருந்தது. அவரின் ராஜ பாட்டையை இங்கே மறந்து விடுவது உத்தமம். பாண்டிய நாடு படத்துக்கு பின் சுசீந்திரன் மற்றும் விஷால் இணைந்திருக்கும் படம் என்று மிக எதிர் பார்த்தேன். Full மீல்ஸ் சாப்பிட போய் லிமிடெட் மீல்ஸ் கிடைத்த மாதிரி ஆகிவிட்டது இந்த "பாயும் புலி". நல்ல பவர் புல்லான டைட்டில். 


அண்டர்கவர் போலீஸ் விஷால் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிடிக்க நியமிக்கப்படுகிறார். ஆனால் வழக்கமான தமிழ் பட ஹீரோ பார்முலா மாறாமல் பார்த்த கணமே நாயகியுடன் காதலில் விழுந்து கடமைக்கு நடுநடுவே காதல் செய்கிறார். பாசமான, ஊர் மக்கள் மத்தியில் நற்மதிப்பு கொண்ட ஹீரோவின் குடும்பத்திலேயே தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் அரசியல் ஆசை கொண்ட அண்ணன் சமுத்திரக்கனி. சமுத்திரக்கனி தான் குற்றவாளி என்பதை விஷால் கண்டுபிடித்தாரா..? சத்தியமா கண்டுபிடித்துவிடுவார் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். அது எப்படி என்பதை 2 மணி 15 நிமிடத்தில் சொல்லும் படம் தான் பாயும் புலி.

வழக்கமான ஆக்சன் ஹீரோவாக விஷால். கொஞ்சூண்டு லூசு தனம் கலந்த ஹீரோயினாக காஜல். பல  படங்களில் பார்த்து சலித்து போன ஹீரோயினை ஹீரோ உஷார் பண்ணும் சில காட்சிகள். ஹீரோவின் நண்பனாக சுத்திக் கொண்டு அங்கே அங்கே கவுண்டர் கொடுக்கும் காமெடியனாக சூரி. குடும்பத்தில் பாசமான அண்ணனாகவும், பொறுப்பான மகனாகவும், ரவுடி கும்பலின் தலைவனாக இரக்கம் இல்லாத வில்லனாகவும் சமுத்திரக்கனி. நடிப்பில் யாரும் குறை வைக்கவில்லை. சூரியின் காமெடி சில இடங்களில் மட்டுமே சிரிக்கும் படி இருந்தது.

இன்னும் எத்தனை நாட்கள் நம் தமிழ் பட இயக்குனர்கள் ஹீரோ முதன் முதலில் ஹீரோயினை பார்த்ததும் ஒரு பாட்டு, காதல் தொடங்கியதும் ஒரு பாட்டு, காதலின் நடுவே ஒரு பாட்டு என்று வைத்து நம்மை சாகடிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மெதுவாக செல்லும் படத்தை மேலும் மெதுவாக்கவே இந்த பாடல்கள் உதவுகின்றன. "சிலுக்கு மரமே" பாடல் மட்டுமே ரசிக்கும் படி இருந்தது. மற்றவை மறந்துவிடலாம்.

சுசீந்திரன் டச் சில காட்சிகளில் நன்றாக இருந்தது. படத்தின் ஆரம்பத்தில் ரௌடிகளால் கொல்லப்பட்ட போலீசின் பெற்றோர் தற்கொலை செய்து கொள்ளும் காட்சி,போட்டோவை வைத்து சமுத்திரக்கனி மீது விஷால் சந்தேகப்படும் காட்சி, கிளைமாக்ஸ் காட்சி, என்று சில காட்சிகளால் படம் ரொம்ப மோசமில்லை என்ற முடிவுக்கு நம்மை கொண்டு செல்கிறது.

கடைசியா ஒரு வரி. பாயும் புலி - பாய்ச்சல் குறைவு

Posted on முற்பகல் 7:45 by Elaya Raja

No comments