தமிழ் அல்லாத படங்களை  நான் பார்க்க ஆரம்பித்தது 2005 வாக்கில்  விஜய் டிவி சனிக்கிழமை இரவு தமிழில் டப்பிங் செய்து ஒளிபரப்பும் ஜாக்கி சான், புருஸ்லி, சாமோ ஹங் போன்றவர்களின் படங்களின் மூலம் தான். பிறகு ஆங்கிலப் படங்களை டப்பிங்கில் பார்த்து வந்தேன். கல்லூரி வந்ததும் விடுதியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவு CD பிளேயர் உதவியோடு சீனியர் மாணவர்கள் ஒளிபரப்பும் படங்களைப் பார்ப்போம். நிறைய ஆங்கிலப் படங்கள் அங்கு தான் பார்க்க ஆரம்பித்தேன். அவற்றில் சில டப்பிங்கில் இருக்கும். பலப் படங்கள் ஆங்கிலத்திலேயே இருக்கும். ஆக்சன் , பேய் படங்கள் படங்கள் தவிர மற்றப் படங்களை தவிர்த்து விடுவேன். அப்படி தவிர்த்த ட்ராய், க்ளாடியேட்டர், லார்ட் ஆப் த ரிங்க்ஸ் படங்களை இப்போது தான் பார்த்துக் கொண்டு வருகிறேன். க்ளாடியேட்டர் படத்தினை இரண்டு நாட்களுக்கு முன்பு தான் பார்த்தேன். இத்தனை நாட்கள் எப்படி இதை பார்க்காமல் இருந்தேன் என தோன்றியது.


ரோமன் படையின் தளபதியான மேக்சிமஸ் ஜெர்மானிக் படைக்கு எதிரான போரில் வெற்றியை பெற்றுத்தருகிறான். ஏற்கனவே அவன் மீது நற்மதிப்பு வைத்திருக்கும் மன்னர் மார்கஸ் ஆருலீஸ் தன் மகன் கம்மோடெஸ் அடுத்த மன்னர் ஆகும் தகுதியில்லை இல்லையென்று தளபதியான மேக்சிமசை அழைத்து "நீ மன்னர் ஆக சம்மதமா" எனக் கேட்கிறார். அவன் யோசித்து சொல்வதாக கூறிவிட்டு செல்ல அன்று இரவே இது தெரிந்து கம்மோடெஸ் தன் தந்தையை கொன்றுவிடுகிறான். மேக்சிமஸ்க்கு கம்மோடெஸ் மீது சந்தேகம் வர அவனை சிறைப் பிடித்து ஊருக்கு வெளியே கொண்டு சென்று கொல்லும்படி ஆணையிடுகிறான் கம்மோடெஸ். அவர்களிடம் இருந்து தப்பித்து தன் மனைவியையும் மகனையும் காப்பாற்ற செல்கிறான் மேக்சிமஸ். அதற்குள் இருவரையும் கொன்று விடுகின்றனர் கம்மோடெஸின் சிப்பாய்கள். அவர்களை புதைத்துவிட்டு அங்கேயே மயங்கி விழுந்துவிடும் மேக்சிமஸ் அடிமையாக சிறைபிடிக்கப்பட்டிருக்கிறான். பிறகு ஜுக்காபார் என்ற இடத்தில் ப்ராக்சிமோ என்பவனிடம் விற்க்கப்படுகிறான். ப்ராக்சிமோ உயிர் கொல்லும் விளையாட்டை அந்த ஊரில் நடத்துப்பவன். அதில் மேக்சிமஸ் விளையாட திணிக்கபடுகிறான். அவனது வெற்றி ப்ராக்சிமோவின் நன்மதிப்பை பெறுகிறது. அந்த வீரர்களின் பெயர் "க்ளாடியேட்டர்". ப்ராக்சிமோவும் ஒரு காலத்தில் க்ளாடியேட்டர் ஆக இருந்து விடுதலை அடைந்தவன். கம்மோடெஸ் தன் தந்தையின் நினைவாக ரோமில் நடத்தும் சண்டையில் கலந்து கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்றால் அடிமைத் தனத்தில் இருந்து விடுதலை பெறலாம் எனக் கூற ப்ராக்சிமோ மற்றும் உடன் இருக்கும் மற்ற அடிமை தோழர்களுடன் ரோம் செல்கிறான். அங்கு நடக்கும் சண்டையில் மக்களின் நன்மதிப்பை பெற்றனா ? கம்மோடெஸின் ஆட்சி என்ன ஆனது ? தன் மனைவியையும் மகனையும் கொன்ற கம்மோடெசை மேக்சிமஸ் என்ன செய்தான் என்பது தான் மீதி "க்ளாடியேட்டர்".

மேக்சிமஸ் ஆக ரசல் க்ரூவ். மிகவும் பொருத்தமான ஹீரோ. ரசல் க்ரூவ் நடிப்பில் நான் பார்த்த இரண்டாவது படம் இது தான். இதற்க்கு முன் "ஏ பியூட்டிஃபுல் மைன்ட்" பார்த்திருக்கிறேன். அதிலும் அருமையான நடிப்பை நல்கியிருப்பார். இதில் சண்டைக்காட்சிகளும் சேர்ந்து வருவதால் மிகவும் பிடித்திருந்தது. பிறகு வில்லனாக வரும் ஜகுயன் பெனிக்ஸ்.  ஆள் ஆரம்பத்தில் பார்க்க கொஞ்சம் டம்மியாக தெரியவும் ஏதோ சைடு ரோல் போல என நினைத்தேன். சக்தி வாய்ந்த மதியுகம் மிகுந்த வில்லனாக அவரை காட்டியிருக்கிறார்கள். நன்றாகவே செய்திருந்தார்.

உண்மையான வரலாற்றுக் கதாபத்திரங்களை வைத்து ஒரு கற்பனைக் கதை செய்திருக்கிறார்கள். படத்தின் ஹீரோவான மேக்சிமஸ் கதாப்பாத்திரமே கற்பனை தான். ரோமன் படையை சேர்ந்த “ஹீரோடியன்” என்ற சிப்பாய் எழுதிய புத்தகங்களை அடிப்படையாய் வைத்து உருவாக்கிய ஒரு கற்பனைக் கதாப்பாத்திரம் தான் மேக்சிமஸ். கம்மோடெஷை கொலை செய்த ஒரு சண்டை வீரனை அடிப்படையாய் வைத்து உருவாக்கப்பட்டதே மேக்சிமஸ் கதாப்பாத்திரம்.

எனக்கு சில படங்கள் பார்த்து முடிக்கும் பொழுது ஒரு திருப்தி உணர்வு வரும். அருமையான ஒரு திரைப்படம் பார்த்திருக்கிறோம் என்ற மனநிறைவு. இந்த படம் முடியும் பொழுதும் அதே உணர்வு. அதனால் தான் இதனை இங்கே பகிர்ந்து கொண்டேன். இதுவரை பார்க்காமல் இருக்கும் நண்பர்கள் நிச்சயம் பார்க்க வேண்டுமாய் பரிந்துரைக்கிறேன்.