நிறைவேறாத ஆசைகளையெல்லாம் நாம் நிறைவேற்றிக்கொள்வது கனவுகளில் தான். சமந்தாவுக்கு முத்தம் கொடுப்பதோ அல்லது ஆஜானுபாகுவாய் இருக்கும் நம் எதிரியை அடிப்பதோ எல்லாவற்றிற்கும் வடிகாலாய் இருப்பது கனவுகளே. நல்ல கனவாய் இருந்தால் விழித்ததும் "சே.. எல்லாம் கனவா..?" என வருத்தப்படுவதும் கெட்ட கனவாய் இருந்தால் "நல்லவேளை.. எல்லாம் கனவு" என சந்தோசப்படுவதும் என நம் விருப்பத்திற்க்கேற்ப தேர்ந்தெடுத்துக் கொள்ள வசதியான ஒன்று.  இப்படி நம் ஆளுமைக்கு உட்பட்ட ஒரு இடத்தில் இன்னொருவன் வந்து நம் கனவுகளை வடிவமைத்தால் எப்படி இருக்கும். அத்தோடு நம் செல்வங்களையும் கொள்ளையடித்தால்? அது தான் கிறிஸ்டோபர் நோலனின் "இன்செப்ஷன்"உலக சினிமா பார்க்கும் ரசிகர்களுக்கு நோலன் பற்றிய அறிமுகமெல்லாம் தேவையில்லை. பேட்மேன், தி டார்க் நைட், தி ப்ரெஸ்டீஜ் போன்ற படங்களின் மூலம் தனக்கென்று ஒரு பாணியையும் தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருப்பவர். நோலனின் படம் என்பதாலே 2014ல் வெளிவந்த அவரின் "இன்டெர்ஸ்டெல்லார்" படத்திற்கு ஏக வரவேற்ப்பு. புத்திசாலியான இயக்குனர் என்று ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளவர். இந்த படமும் நோலனை உலக அளவில் பிரபலபடுத்திய படமே. 

2010-ல் இந்த படத்தினை நண்பர்கள் லேப்டாப்-ல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் டப்பிங்கில் தான். எனக்கு இது போன்ற படங்கள் எல்லாம் அப்போது அலர்ஜி. அதனால் பார்க்காமல் தவிர்த்து விட்டேன். இதை பற்றி நண்பர்களிடம் பேசும் போதெல்லாம் அவர்களும் "அந்த படத்தை ஒரு தடவை எல்லாம் பாத்தா புரியாது.. குறைஞ்சது நாலு தடவையாவது பாக்கணும்.. அப்பதான் புரியும்.." எனக் கூறவே நானும் அதற்க்கு பயந்து கொண்டே பார்க்காமல் இருந்துவிட்டேன். இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு முரட்டு தையரியத்தில் பார்க்க துணிந்தேன். அதன் ரிசல்ட் இதோ இங்கு மனம் கவர்ந்த சினிமா கட்டுரையில் முடிந்திருக்கிறது.

நிச்சயமாக எல்லாரும் புகழ்ந்த படம் என்றோ ரேட்டிங் அதிகம் உள்ள படம் என்றோ இங்கு எழுதவில்லை. படம் பார்த்த நண்பர்களுக்கு அது தெரியும் என நினைக்கிறேன். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் அந்த விறுவிறுப்பு அவர்கள் செய்யும் செயல்களும், பேசிக் கொள்ளும் விஷயங்களும் முழுவதும் புரிந்தால் மட்டுமே சாத்தியம். இல்லையேல் ஒரு முக்கால்வாசியாவது புரிய வேண்டும். ஏன் அப்படி சொல்கிறேன் என்றால், நான் ஒரு முறை மட்டுமே பார்த்துவிட்டு நண்பனிடம் சென்று "எனக்கு படம் நல்லா புரிஞ்சதே" என்றதும் அப்படியா எனக் கேட்டுவிட்டு படம் பற்றி ஒரு கேள்வி கேட்டான்.. அங்கேயே நான் "ஆப்" ஆகிவிட்டேன். சப்டைட்டில் அவளோ ஷார்ப்பா படிச்சும் இந்த விஷயத்தை மிஸ் பண்ணிட்டோமே எனத் தோன்றியது. "இன்செப்ஷன்" மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டும்.

படத்தின் ஹீரோ லீயர்னோடோ டிகாப்ரியோ. இவரை இயக்க வேண்டும் என்று நோலன் நீண்ட காலமாகவே முயற்சி செய்திருக்கிறார். மனிதர் மாட்டவே இல்லை. கடைசியாக "இன்செப்ஷன்" கதையில் இம்ப்ரெஸ் ஆகி கனவு திருடனாக கலக்கி விட்டார். இவர் நடிப்பை பறை சாற்றும் படங்களோடு ஒப்பிட்டால் இதில் வழக்கமான ஒரு ஹாலிவுட் ஆக்சன் ஹீரோ அவ்வளவே. படத்தில் என்னைக் கவர்ந்த இன்னொரு அம்சம். படத்தின் விஷுவல். லோக்கல் ஆக சொல்ல வேண்டும் என்றால் தாறுமாறு. படத்தின் விஷுவல் ட்ரீட்க்கு நோலன் சொல்லும் காரணம். மனிதனின் கனவுகளுக்கு எல்லையே இல்லை. அதனால் தான் விசுவலில் மிகவும் கவனம் செலுத்தியதாக சொல்லியிருக்கிறார்.

நோலன் இந்த கதையை எழுதியது 2001ஆம் வருடம். முதலில் இது ஒரு ஹாரர் படமாக தான் முடிவு செய்திருந்தார். பிறகு இந்த படத்தினை எடுக்க தனக்கு இன்னும் முதிர்ச்சி வேண்டும் என்று அதனை தள்ளிவைத்து விட்டு வேறு படங்கள் இயக்க தொடங்கினார். "தி டார்க் நைட்" படத்தின் வெற்றி நோலனை உலக அளவில் கொண்டு சேர்க்க "இன்செப்ஷன்" இயக்க இது தான் நேரம் என இறங்கினார். ஹாரர் கதை ஹெயிஸ்ட் கதையாக மாறியது.

படத்தில் நோலன் கூறியிருக்கும் விஷயங்கள் பற்றி ஹார்வர்ட் யூனிவர்சிட்டியில் கனவுகள் பற்றி ஆய்வு செய்யும் டைரட்ரே பாரெட் (deirdre barrett - இங்கயே பெயரை படித்துக் கொள்ளவும்) கூறுவது "நோலன் எல்லா தகவல்களையும் சரியாக கூறவில்லை தான் ஆனாலும் பல தகவல்களை சரியாகவே கூறியிருக்கிறார்கள்.." சதுரங்க வேட்டை படத்தில் வரும் "பொய்யோட கொஞ்சம் உண்மையும் சேர்க்கணும்.. அப்பதான் பொய் எது உண்மை எதுன்னு தெரியாது" என்ற ஒரு வசனம் வரும் அதைதான் நோலன் "இன்செப்ஷன்"-ல் செய்திருக்கிறார் போல. எது எப்படியோ நமக்கு நல்ல படம் கிடைத்திருக்கிறது. அப்படியே விட்டுவிடுவோம்.

இந்த படத்தினை இன்னும் பார்க்காமல் இருக்கும் நண்பர்கள் அனைவரும் தவறாமல்  இந்த கனவு உலகத்தில் தங்களை தொலைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.