சனி, 4 ஜூலை, 2015

"மயக்கம் என்ன" என்ற புத்தகத்தை சமீபத்தில் படித்தேன்.. மது குடிப்பதால் மது குடிப்பவரும், அவர் குடும்பத்தை சார்ந்தவர்களும் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பதையும், மதுவிலிருந்து மீள்வதற்கான வழிகளையும் விவரிக்கிறது இந்த புத்தகம்.. புத்தகத்தைப் படிக்கும் பொழுது மிகவும் வேதனையாக இருந்தது.. கள்ளச்சாரயத்தை ஒழித்து அரசாங்கம் ஆரம்பித்த "டாஸ்மாக்" தமிழ் நாட்டு மக்களின் தலையில் விடிந்த சாபம் என்றால் அது சற்றும் மிகையல்ல.. பள்ளியில் படிக்கும் சிறுவனில் இருந்து பல்லு போன கிழவன் வரை மதுவின் மயக்கத்தில் சீரழிந்து கொண்டிருக்கின்றனர்.. கடை திறக்கும் முன்பே போதையில் தெருவில் கிடைக்கும் எத்தனையோ பேரை நான் பார்த்திருக்கிறேன்.. மதுவின் விற்பனை ஒவ்வொரு வருடமும் உச்சிக்கு தான் சென்றுக் கொண்டிருக்கிறது.. அப்படி என்றால் புது புது குடிகாரர்கள் உருவாகிறார்கள் அல்லது ஒவ்வொருவரும் தான் குடிக்கும் மதுவின் அளவை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.. மதுவின் விலையேற்றம் குடிகாரர்களை பெரிதாக பாதிக்கவில்லை என்றே தோன்றுகிறது.. வருத்தம் அவர்களுக்கு இல்லாமல் போகவில்லை ஆனாலும் குடிப்பதை நிறுத்தவில்லை..

"நான் என்ன டெய்லி குடிக்குறேனா..? எப்பயாவது தானே குடிக்குறேன்.." என நினைக்கும் நண்பர்கள் தயவு செய்து இந்த புத்தகத்தை படிக்க வேண்டுகிறேன்.. டெய்லி குடிப்பவர்களை விட மேற்க்குறிப்பிட்ட நண்பர்களுக்கு தான் ஆபத்து அதிகம்.. இந்த குடியினால் ஏற்படும் நோய்கள் என்று ஒரு பெரும் பட்டியலே வருகிறது.. உடலின் ஒவ்வொரு பாகத்தையும் பாதிக்கும் நோய்கள் இந்த குடியினால் ஏற்படுகிறது.. கொஞ்சம் கொஞ்சமாய் விஷத்தை விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் நம் மக்கள்.. சமீபத்தில் கூட "குடியால் அழிந்த கிராமம்" என்ற தலைப்பில் புதிய தலைமுறையில் ஒரு கட்டுரை வந்திருந்தது.. 

"குடி குடியைக் கெடுக்கும்" ஒவ்வொரு மது புட்டியிலும் உள்ள இந்த வாசகம் குடிக்கும் நபர்களை பொறுத்த வரை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாத வாசகம்.. ஆனால் அந்த வாசகத்தின் நிதர்சனம் மிகக் கொடுமையானது.. இந்த வாசகத்தின் முழு அர்த்தத்தை குடிக்கும் நபர்களை கொண்ட குடும்பங்கள் அறியும்.. நான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.. ஒரு மனிதனிடம்  ஒரு தீய சக்தி (அரக்கன் என்று எதாவது வைத்துக் கொள்ளுங்களேன்) மூன்று சாய்ஸ் (சரியான தமிழ் வார்த்தை கிடைக்கவில்லை) கொடுத்தது.. 1. சிறுமி ஒருத்தியை கொல்லவேண்டும். 2. அல்லது அந்த சிறுமியின் தாயைக் கற்பழிக்க வேண்டும் 3. அங்கே புட்டியில் இருக்கும் மதுவினைக் குடிக்க வேண்டும். இதில் ஏதாவது ஒன்றை செய்தால் அவனை உயிரோடு விடுவதாக சொன்னது. அந்த மனிதன் யோசித்தான்.. சிறுமியைக் கொல்வது பாவம்.. கற்பழிப்பது அதை விட பெரும் பாவம்.. அதற்க்கு பேசாமல் மதுவைக் குடித்து விடலாம்.. யாருக்கும் எந்த தீங்கும் இல்லை என்று நினைத்து மதுவை எடுத்து குடித்துவிட்டான்.. போதை தலைக்கேறியதும் சிறுமியின் தாயைக் கற்பழிக்க முயன்றான்.. அதை தடுக்க வந்த சிறுமியைக் கொன்று விட்டான்.. குடி ஏற்படுத்தும் விளைவினை விளக்க இந்த கதை போதும் என்று நினைக்கிறேன்..

மதுவைக் குடித்து நாசமாகி கொண்டிருக்கும் குடிமகன்கள் ஒரு புறம் என்றால் அதை வைத்து ஊழல் செய்யும் நபர்கள் மறுபுறம்.. பாட்டிலுக்கு மேல் விலை வைத்து விற்கும் டாஸ்மாக் விற்பனையாளர்கள்.. அதில் முக்கால் வாசியை எடுத்துக்கொள்ளும் டாஸ்மாக் சூப்பர்வைசர்கள்.. அவர்களுக்கு மேல் இருக்கும் பெருந்தலைகள் என்று போய்க் கொண்டே இருக்கிறது.. இதை நான் நேரடியாக பார்த்திருக்கிறேன்.. 

அங்கொன்றும் இங்கொன்றுமாய் மதுவுக்கு எதிரான போராட்டமும் எதிர்ப்புகளும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.. ஆனால் அவைகள் பெரும்பாலும் மக்களுக்கான போராட்டமாக அல்லாமல் வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ளும் அரசியல் போராட்டமாக முடிந்து விடுவது தான் வருத்தமளிக்கும் விஷயம்..

"ஏஏ" என்று அழைக்கப்படும் "Alcoholic Anonymous" அமைப்பு மதுவால் பாதிக்கப் பட்டவர்களை மீட்க்கும் பணியை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து வருகிறது.. மதுவிலிருந்து மீள வேண்டும் அல்லது தனக்கு வேண்டியவர்களை அதிலிருந்து மீட்க்க வேண்டும் என நினைப்பவர்கள் "எண் : 4,  பால்போர் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை" என்ற முகவரியிலோ "044-26441941" என்ற எண்ணிலோ தொடர்ப்பு கொள்ளலாம்.. நீங்கள் எந்த ஊரில் இருந்தாலும் அந்த ஊரில் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியவர்களின் விவரங்களை இவர்கள் கூறுவார்கள்..

குடியை ஜாலியாக நினைத்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இந்த புத்தகத்தை படிக்க வேண்டுமாய் பரிந்துரைக்கிறேன்...

Posted on முற்பகல் 4:33 by Elaya Raja

No comments

எனது பதிவுகளை படித்து (என்று நம்பிக் கொண்டிருக்கிறேன்) வரும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.. "இது என் பக்கம்" பக்கம் வந்து இரண்டு மாதங்கள் ஆகிவிட்டது.. எந்த பதிவுகளும் போட இயலவில்லை.. அதனால் தமிழ் நாட்டு மக்களுக்கு எந்த பங்கமும் நிகழ்ந்து விட வில்லை தான்.. அந்த நேரத்திலும் எனக்குள் இருந்த எழுத்தாளன் முழுதாக தூங்கிவிடாமல் விழித்துக் கொண்டு தான் இருந்தான்.. இதோ அவனுக்கு வேலை வந்தவிட்டது (எப்படி இருக்குது பில்ட் அப்). இனி அடிக்கடி பதிவுகள் போட்டு அதை ஷேர் செய்து நண்பர்கள் வட்டங்களை கலங்கடிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்.. அதில் முதல் படியாய் தான் இந்த பதிவு..

கவிதைகள் மட்டும் எழுதிக் கொண்டிருந்த பொழுது சிறுகதைகள் முயற்சி செய்து பார்த்தேன்.. முயற்சி பெரிய வெற்றி இல்லாவிடினும் படித்த நண்பர்கள் திட்டி தீர்க்கவில்லை.. அதையே எனது முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்று நம்பிக் கொண்டு அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் முயற்சியாக ஒரு தொடர்கதை எழுத தொடங்கியிருக்கிறேன்.. நண்பர்கள் படித்து கருத்துக்களை தெரிவிக்கும்படிக் கேட்டுக்கொள்கிறேன்.. இதோ அந்த தொடர்கதையின் இணைப்பு : விஷ்வாவின் காதல் கதை

Posted on முற்பகல் 2:33 by Elaya Raja

No comments