பலமாதங்களாக இந்த திரைப்படத்தை ஹார்ட் டிஸ்க்-ல் வைத்திருந்தேன் என்றாலும் ஒரு நாளும் அதை பார்க்க வேண்டும் என்று தோன்றியதில்லை.. அதில் வரும் காட்சிகள் சிலவற்றை ஓட்டிப் பார்த்ததில் அந்த படத்தின் மீதான எனது பார்வை வேறாக இருந்தது.. ஆனால் கடந்த வார இறுதியில் இந்த திரைப்படத்தினை பார்த்தேன்.. நான் ஓட்டிப் பார்த்த காட்சிகளை தாண்டி பல விஷயங்கள் அதில் இருப்பதை படம் பார்த்தே பிறகே உணர்ந்தேன்.. காவியம் என்று கூற முடியாது என்றாலும் நிச்சயம் மனதில் கொஞ்ச நாள் தங்கிவிடக் கூடியது.. 

பெருவாரியான ஆண்களுக்கு பால்ய வயதில் தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மீது ஒரு சிறிய ஈர்ப்பு இருக்கும்.. அது என்ன என்று தனக்கும் விளங்காத மற்றவர்களுக்கும் விளங்க வைக்க முடியாத ஒரு வித ஈர்ப்பு.. அந்த ஈர்ப்பு பாடம் எடுத்த ஆசிரியை, பக்கத்து வீட்டு பெண், அத்தை பெண், அல்லது அத்தையாக கூட இருக்கலாம்.. பெயர் சொல்ல முடியாத அந்த ஈர்ப்பினை நிறைய ஆண்கள் தன் சிறுவயதில் உணர்ந்திருப்பார்கள்.. எனக்கு 4ம் வகுப்பு எடுத்த ஆசிரியை ஒருவரை மிகவும் பிடிக்கும்.. மிகவும் அழகாக இருப்பார்.. அவர் அழகாக இருந்ததாலேயே நிறைய மாணவர்களுக்கு அவரைப் பிடிக்கும்.. அவர் வகுப்பில் மட்டும் எந்த சேட்டையும் செய்யாமல் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை முடித்து நல்ல பெயரை சம்பாதிக்கப் பார்ப்பேன்.. இது போல் பால்யக் காலத்து ஈர்ப்புக் கதைகள் கொண்டவர்கள் ஏராளம்.. அப்படி ஒரு அழகானப் பெண்ணின் மேல் ஈர்ப்புக் கொண்ட  சிறுவனின் பார்வையில் செல்லும் படம் தான் "மெலீனா".. 
அனேகமாக இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. காரணம் அந்த மெலீனாவாக நடித்த மோனிகா பெலுச்சியும், அதில் வரும் "சில காட்சிகளும்" தான்.. ஒரு பெண்ணின் அழகு எப்படி அவளை துன்பத்திற்கு ஆளாக்குகிறது என்பதை பேசிச் செல்கிறது  திரைப்படம்.. இந்த திரைப்படத்தை பார்க்காத நண்பர்களுக்காக கதை சொல்கிறேன்.. படம் பார்த்துவிட்ட நண்பர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்..

இத்தாலியின் சிசிலியில் வசிக்கும் ரெனாடோ என்ற 12 வயது சிறுவன் புது சைக்கிள் வாங்கிக் கொண்டு தன்னை விட இளைஞர்கள் சிலர் அடங்கிய குழுவில் இணைந்து கொள்ள சொல்கிறான்.. அங்கே அவர்கள் ஒரு பெண் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.. ரெனாடொவும் அவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பார்க்கிறான்.. அன்று முதல் அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது.. அவளை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறான்.. அவள் வீடு, அவள் செல்லும் இடம் என்று  எதையும் விடுவதில்லை... அவளின் கணவன் ஒரு ராணுவ வீரன்.. இரண்டாம் உலகப் போருக்கு சென்றுயிருக்கிறான்.. அங்கு இருக்கும் பல ஆண்களின் கண்கள்அவள் மீதே இருக்கின்றன.. அதனால் பல பெண்களுக்குஅவள் எதிரியாக தெரிகிறாள்.. ஒரு நாள் அவளின் கணவன் போரில் இறந்து விட்டான் என செய்தி வருகிறது.. அவளின் ஒரே ஆதரவாக இருக்கும் அவளின் அப்பாவும் போர் விமானங்கள் செய்த வெடி குண்டு தாக்குதலில் இறந்து போகிறார்.. அதற்க்கு வரும் ஆண்களும் அவளை காமத்துடனே பார்க்கிறார்கள்.. எல்லா ஆண்களும் தன்னிடம் காமத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிந்துகொண்டு வாழ வேறு வழி தெரியாமல் அங்கு முகாம் அமைத்து தங்கியிருக்கும் ஜெர்மனியின் நாசிப் படை வீரர்களோடு சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுகிறாள்.. அந்த நாசிப் படை வீரர்கள் முகாமை காலி செய்துகொண்டு சென்றதும் ஊர் பெண்கள் அவளை அடித்து அவமானப் படுத்திவிட அவள் ஊரை காலி செய்து கொண்டு சென்று விடுகிறாள்.. இறந்து போகாத அவளின் கணவன் திரும்பி வந்ததும் அவள் பற்றிய தகவலை யாரும் சொல்ல மறுக்க ரெனாடோ ஒரு கடிதம் மூலம் அவனுக்கு தெரியபடுத்துகிறான்.. சில மாதங்கள் கழித்து கணவன், மனைவி இருவரும் அதே ஊருக்கு வர முதலில் ஆச்சர்யமாக பார்க்கும் ஊர் மக்கள் பிறகு அவளை மரியாதையாக அணுகுகின்றனர்.. மார்க்கெட்டில் இருந்து அவள் திரும்பி வரும் பொழுது கையில் இருக்கும் பையை அவள் தவறவிட அவளைப் பின்தொடர்ந்து வந்த ரெனாடோ வந்து அவளுக்கு உதவுகின்றான்.. முதல் முறையாக " Good luck signora malena" எனப் பேசுகிறான்.. அவள் சிரித்துவிட்டு செல்கிறாள்.. 

மெலீனாவை நினைத்து சுய இன்பம் கொள்ளும் ரெனாடொவை அவன் அம்மா பேய் பிடித்துக் கொண்டது என நினைத்துக் கொள்ள அவனின் அப்பா "அவன் வயசுக்கு வந்துட்டான்" எனக் கூறி விபசார விடுதியில் கொண்டு விடும் காட்சி புரட்சிக்கரமாக இருந்தது.. நம் ஊர் அப்பாக்களின் எதிர்வினை இது போன்ற செயல்களில் எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.. 

விபச்சாரத்தில் ஈடுபடுவது ஆண், பெண் இருவரும் தான்.. ஆனால் தண்டனை மட்டும் பெரும்பாலும் பெண்களுக்கே.. அழகாக இருப்பதால் மெலீனாவை துரத்தி துரத்தி வரும் ஆண்கள், படத்தின் இறுதியில் ஊர்  பெண்கள் அவளை அடித்து துன்புறுத்தும் போது வேடிக்கைப் பார்ப்பதும், அடி வாங்கி தலை முடியை சிரைத்து விட்டப் பின்பு மெலீனா வேடிக்கைப் பார்க்கும் ஆண்களை நோக்கி கத்துவதும் மனதை நெகிழ்த்தும் காட்சிகள்..

அழகான, கணவன் இல்லாமல் வாழும் ஒரு பெண்ணின் மேல் இந்த உலகம் (எல்லா ஊர்லயும் மனுஷன் மனசு ஒரே மாதிரி தான் சிந்திக்குது போல ..)  செலுத்தும் பார்வை பற்றிய ஒரு மறைமுக கேள்வியை ரெனாடோ என்ற சிறுவனின் பார்வையில் எழுப்பிச் செல்கிறது இந்த திரைப்படம்...