இணையம் வந்த பிறகு எந்த ஒரு விஷயம் நடந்தாலும் காட்டு தீ போல வெகுவேகமாக பரவிவிடுகிறது.. அதுவும் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் போன்றவற்றில் பரவும் செய்திகள் உடனே பிரபலமாகிவிடுகின்றன.. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வெகு சீக்கிரம் மக்களை சென்றடைகிறது..  சமீபகாலமாக மீம்ஸ்(MEMES) என்றழைக்கப்படும் கலாசாரம் facebook , twitter, whats app போன்றவற்றில் வெகு பிரபலம்.. facebook-ல் நண்பனின் நிலைத்தகவலுக்கு  கமெண்ட்  போடுவதற்கும் மற்றவரின் கமெண்ட்க்கு  பதில் போடுவதற்கும் என்று இந்த மீம்ஸ் இணைய பயனாளர்களால் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.. இதில் அதிகம் உபயோகிக்கப்படும் மீம்ஸ்கள்  கவுண்டமணி,வடிவேலு, சந்தானம், செந்தில் போன்ற காமெடி நடிகர்களின் ரியாக்சன் அல்லது புகழ்பெற்ற வசனங்களை கொண்ட  மீம்ஸ்களே.. வெறும் கமெண்ட் போடுவதோடு நின்று விடாமல் வெறுமனே கலாய்க்க என்றே சில மீம்ஸ்கள் சமீபகாலமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.. அப்படி கலாய்க்கப்படும் மீம்ஸ்களில் பல , 80-களிலும், 90-களிலும் ரஜினி, கமலுக்கு இணையாக கோலிவுட்டை கலக்கிய டி.ராஜேந்தர், விஜயகாந்த் போன்றவர்களுடையதே.. 


ரஜினிக்கு  அடுத்தப்படியாக எங்கள் ஊர் சுற்றுவட்டாரத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜயகாந்த் தான்.. அவருக்கு அடுத்துதான் கமல்.. ஒவ்வொரு விஜயகாந்த் படமும் திருவிழாவைப் போல் கொண்டாடப்படுவதை சிறுவனாக பலமுறை கண்டிருக்கிறேன்.. என் மாமாக்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.. அதனால் ஒவ்வொரு படத்திற்கும் என்னையும் அவர்களுடன் கூட்டிச் செல்வார்கள்.. அப்பொழுதெல்லாம் விஜயகாந்த் என்றாலே காலை சுழட்டி எதிரிகளை எட்டி உதைக்கும் அவரது ஸ்டைல் தான் நியாபகம் வரும்.. விஜயகாந்த் அரசியலில் நுழையும் கொஞ்ச காலத்திற்கு முன்பு செய்த சில படங்கள் அவரை காமெடியாகப் பார்க்க வைத்தது.. நெறஞ்ச மனசு படத்தில் கண்ணை கட்டியபடி பைக் ஓட்டுவதும், நரசிம்மாவில் இவருக்கு கரன்ட் ஷாக் வைத்ததும் கரன்ட்கே ஷாக் அடிப்பதும், கஜேந்திரா படத்தில் மீசையில் கை வைத்ததும் எதிரிகள் பறப்பதும், இதில் உச்சமாக தர்மபுரி படத்தில் தாம்புல தட்டைக் கொண்டு துப்பாக்கி குண்டை திசை திருப்புவதும் என்று விஜயகாந்த் என்ற ஆக்சன் ஹீரோ காமெடி செய்து கொண்டிருந்தார்.. விஜயகாந்தின் இந்த கடைசி கால திரைப்படங்களில் ரமணா மட்டுமே அவரை ஹீரோவாகவே காட்டியப் படம்.. 


அவர் அரசியலில் நுழைந்த போது இரண்டு மாபெரும் கட்சிகளுக்கு மாற்றாக, சினிமாவில் வரும் ஹீரோவைப் போலவே பார்த்தவர்களில் நானும் ஒருவன்.. ஆனால் குடித்துவிட்டு என்ன பேசுகிறோம் என தெரியாமல் உலரத் தொடங்கிய அவரின் ஹீரோ இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து  முழு நேர காமெடியனாக மாறிப் போனார்.. அவர் பற்றிய மீம்ஸ் அனைத்தும் சரக்கடித்து விட்டு அவர் பேசுவதாகவும், அவரின் ஆங்கிலத்தை கிண்டலடிப்பதாகவும் தான் இருக்கின்றன.. நடிகை மஞ்சுளா இறந்த போது "ஆழ்ந்த நன்றியை தெரிவிச்சிக்குறேன்", "ஊழல் எல்லாம் நல்ல விஷயம்" என்று காமெடி செய்து விஜயகாந்த் இளைஞர்களின் பிடித்தமான மீம்ஸ் பெர்சனாலிட்டி ஆனார்.. "நான் விஜயகாந்த் ரசிகன்" என்று சொன்னாலே மற்றவர்கள் கேலி செய்யும் நிலை தான் இப்பொழுது.. "என்னடா விஜயகாந்த் படத்தை எல்லாம் டிவில பாக்குற" என்று கேக்கும் அளவிற்கு விஜயகாந்தின் பிம்பம் மாறிவிட்டது.. சமீபத்தில் விஜயகாந்த் சைபர் க்ரைமில் புகார் செய்யும் அளவிற்கு விஜயகாந்த் மீம்ஸ் புகழ் பெற்றியிருக்கிறது..


விஜயகாந்தைப் போலவே 80-களில் ரஜினி, கமலுக்கு செம்ம கடும் போட்டியாக இருந்தவர் டி .ஆர்.. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு, இயக்கம் என்று சகலகலா வல்லனவனாக சுழன்றவர் .. இவரது இசையும், பாடல் அரங்க அமைப்புகளும் அப்பொழுது வெகு பிரபலம்.. இவரது படங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி படங்களுக்கும் இசை அமைக்கும் அளவிற்கு புகழ் பெற்றவர்.. படங்களும் செண்டிமெண்ட் தூக்கலாக தாய்குலங்களை கவரும் அளவிற்கு இருக்கும்.. ஆனால் 80-களுக்குப் பிறகு வந்த படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் அவரைப் போலவே பேச தொடங்கிவிட்டன.. நான் கல்லூரி படிக்கும் போது வீராசாமி திரைப்படம் வந்தது.. டி.ஆரை கலாய்க்க வேண்டும் என்றே நண்பர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு வந்தார்கள்.. அதில் மும்தாஜ் உடன் அவர் ஆடும் "வச்சிக்குறேன் உன்ன வச்சிக்குறேன்" பாடல் அத்தனை கேலியாகப் பார்க்கப்பட்டது.. "டண்டனக்கா" என்றாலே டி.ஆர்  நியாபகம் வரும் அளவிற்கு மிமிக்ரி கலைஞர்களும் அவரை இமிட்டேட்செய்து வருகிறார்கள்.. இப்படி இன்றைய தலைமுறை இளைஞர்களால் காமெடியாகப் பார்க்கப்படும் டி.ஆரின்  இமேஜ்  facebook, whats app-களில் விஜயகாந்தை போல்  நசுங்கிப் போனது.. 


போன வருடம் மீம்ஸ்-ல்  முதல் இடம் பிடித்தது லிங்கு "பாய்" தான் .. அஞ்சான் படத்தால் பாதிக்கப் பட்ட ரசிக கண்மணிகள் லிங்கு பாயை மீம்ஸ்ல் விட்டு கிழி கிழியென கிழித்துவிட்டார்கள்.. கொஞ்ச நாள் கழித்து அவர் கொடுத்த இன்டெர்வியூவில் அது பற்றி மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.. சூரியாவும் அஞ்சான் மீம்ஸ் வலையில் கொஞ்சமாக சிக்கினார்.. 

இப்படி அதிகம் மீம்ஸ்களில் கலாய்க்கப் பட்டதால் விஜயகாந்தும், டி.ஆரும் படைத்த சாதனைகள் அனைத்தும்  "அப்படியா" என்று கேட்பவர்கள் வியக்கும் அளவிற்கு மக்கள் மனதில் இருந்து மறக்கடிப்பட்டுவிட்டது.. சமீபத்தில் behindwoods, விஜயகாந்த் செய்த சாதனைகளை மீண்டும் நியாபகப்படுத்தும் விதமாக "The real vijaykanth" என்ற வீடியோவை வெளியிட்டது.. டி.ஆரும் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல.. தொடர்ந்து சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவரே.. ஆனால் இந்த மீம்ஸ், மிமிக்ரி கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் இருவரின் பிம்பமும் மாறிப்போனது கொடுமையே.. 

எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இன்றைய இணைய தலைமுறையால் காமெடி ஆக்கப்படும் மாஜி ஹீரோக்களும், படங்களும் கூடிக் கொண்டே தான் போகின்றன.. இந்த மீம்ஸ் போல இன்னும் வருங்காலம் நமக்காக என்னனென்ன வைத்திருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்...