சினிமா டூ ஹோம் (C2H) என்ற நிறுவனத்தை திருட்டு VCD களுக்கு எதிராக சேரன் தொடங்கி அதன் முதல் சோதனை முயற்சியாக  வெளிவந்திருக்கும் JK வை நண்பர்கள் டவுன்லோட் செய்து வைத்திருப்பதில் பார்க்க தோன்றாமல் ஒரிஜினல் DVD வாங்கி படத்தினை பார்த்தேன்.. அதில்  பார்க்கும் பொழுது ஏதோ  யோக்கியத்தனமாக நடந்து கொண்டோம் என ஒரு சிறு மனநிறைவு.. "முடியும்னு நீ நினைக்குற வரைக்கும் ஓடிட்டே இருந்தா முடியாததுன்னு எதுவுமே இல்ல.."-இப்படி ஒரு வசனம் படத்துல வருது.. அதுதான் சேரனை C2H-ஐ முயற்சிக்க வைத்திருக்கும் என நினைக்கிறேன்.. C2H-ன் ஆயுட்காலம் எத்தனை என்று தெரியவில்லை.. ஆனால் இப்படி ஒரு முயற்சிக்கு நிச்சயம் பெரும் பாராட்டுக்குரியவர் சேரன்..


JK - படம் வழக்கமான சேரனின் பீல் குட் மூவி வகையை சார்ந்தது தான்.. ஆனால் வழக்கமான சேரன் படங்களில் இருந்து இதில் சிறு வித்தியாசங்களை உணர்ந்தேன்.. சேரன் படங்கள் நல்ல கதையம்சத்துடன் நகருமே தவிர மேக்கிங்-ல் அதிக கவனம் செலுத்த மாட்டார்.. ஆனால்  இந்த படத்தில் ஒரு ரிச்னெஸ் தெரிந்தது.. கேமரா கோணங்கள் ஆகட்டும், அந்த ஆபீஸ் செட்கள் ஆகட்டும் எல்லாமே வழக்கமான சேரன் படங்களில் இருந்து புதிதாக தெரிந்தன.. சேரன் தனது திரை வாழ்வினை தொடங்கிய அதே நேரத்தில் தொடங்கிய பல இயக்குனர்கள் இப்போதைய ட்ரென்ட்-க்கு மேக்கிங், கதையில் சோபிக்க முடியாமல் திணறும் பொழுது பாரதி கண்ணமாவில் இருந்து JK வரை "நல்ல இயக்குனர்" என்ற பெயரை தக்கவைத்தபடி படங்கள் இயக்கி வரும் சேரன் திறமையானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. 

JK-வின் பெரும் பலம் படம் முழுதும் வரும் ஒரு வித பாசிடிவ் எனெர்ஜி.. குடும்ப உறவுகளின் மீதான பாசம், நண்பர்களின் மீதான நம்பிக்கை, என்று நிறைய நல்ல விஷயங்கள்.. JK எனும் ஜெயக்குமாராக நடித்திருக்கும் சர்வானந்த் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார்.. ஆனால் சில காட்சிகளில் வசன உச்சரிப்பு தான் லிப்-க்கு சிங்க் ஆகவில்லை.. நித்யா மேனன் "கொழுக் மொழுக்" என  அழகாக இருக்கிறார்.. நடிக்கும் வாய்ப்பினை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.. சந்தானம் காமெடி பெரிய அளவில் உதவவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பிரகாஷ் ராஜ் வில்லனைப் போல் சில காட்சிகளே வருகிறார்.. மனோபாலாவிற்கு வழக்கமான  அச்சுபிச்சு காமெடி காட்சிகள் இல்லை.. வாய்பேச முடியாத ஒவியனாக ஒரு நல்ல கதாபாத்திரம்.. சந்தானம் நடித்திருக்கும் படத்தில் அவரிடம் "கலாய்" வாங்காமல் மனோபாலா நடித்திருக்கும் முதல் படம் இதுவென்றே நினைக்கிறேன்..   

முதல் பாதி சர்வானந்த் பிசினஸ் செய்ய முயற்சிப்பது, புதிது புதிதாக ஐடியா-க்கள் பிடிப்பது என்று கொஞ்சம் வேகமாக செல்கின்றன.. ஆனால் இரண்டாம் பாதி எளிதாக யூகிக்கும் படியான சில காட்சிகள் போன்றவற்றால் போர் அடிக்கவே செய்தது.. DVD-ல் பார்த்தால் பெரிதாக அது உறுத்தவில்லை.. தியேட்டர்-ல் பார்த்திருந்தால் கொஞ்சம் சிரமமாகவே இருந்திருக்கும்..

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை - கொஞ்சம் மெதுவாக நகரும், வன்முறை இல்லாத, குடும்பத்துடன் பார்க்கும்படியான நல்ல பீல் குட் மூவி.