வியாழன், 23 ஏப்ரல், 2015

பலமாதங்களாக இந்த திரைப்படத்தை ஹார்ட் டிஸ்க்-ல் வைத்திருந்தேன் என்றாலும் ஒரு நாளும் அதை பார்க்க வேண்டும் என்று தோன்றியதில்லை.. அதில் வரும் காட்சிகள் சிலவற்றை ஓட்டிப் பார்த்ததில் அந்த படத்தின் மீதான எனது பார்வை வேறாக இருந்தது.. ஆனால் கடந்த வார இறுதியில் இந்த திரைப்படத்தினை பார்த்தேன்.. நான் ஓட்டிப் பார்த்த காட்சிகளை தாண்டி பல விஷயங்கள் அதில் இருப்பதை படம் பார்த்தே பிறகே உணர்ந்தேன்.. காவியம் என்று கூற முடியாது என்றாலும் நிச்சயம் மனதில் கொஞ்ச நாள் தங்கிவிடக் கூடியது.. 

பெருவாரியான ஆண்களுக்கு பால்ய வயதில் தன்னை விட வயதில் மூத்த பெண்களின் மீது ஒரு சிறிய ஈர்ப்பு இருக்கும்.. அது என்ன என்று தனக்கும் விளங்காத மற்றவர்களுக்கும் விளங்க வைக்க முடியாத ஒரு வித ஈர்ப்பு.. அந்த ஈர்ப்பு பாடம் எடுத்த ஆசிரியை, பக்கத்து வீட்டு பெண், அத்தை பெண், அல்லது அத்தையாக கூட இருக்கலாம்.. பெயர் சொல்ல முடியாத அந்த ஈர்ப்பினை நிறைய ஆண்கள் தன் சிறுவயதில் உணர்ந்திருப்பார்கள்.. எனக்கு 4ம் வகுப்பு எடுத்த ஆசிரியை ஒருவரை மிகவும் பிடிக்கும்.. மிகவும் அழகாக இருப்பார்.. அவர் அழகாக இருந்ததாலேயே நிறைய மாணவர்களுக்கு அவரைப் பிடிக்கும்.. அவர் வகுப்பில் மட்டும் எந்த சேட்டையும் செய்யாமல் கொடுக்கும் வீட்டுப்பாடங்களை முடித்து நல்ல பெயரை சம்பாதிக்கப் பார்ப்பேன்.. இது போல் பால்யக் காலத்து ஈர்ப்புக் கதைகள் கொண்டவர்கள் ஏராளம்.. அப்படி ஒரு அழகானப் பெண்ணின் மேல் ஈர்ப்புக் கொண்ட  சிறுவனின் பார்வையில் செல்லும் படம் தான் "மெலீனா".. 
அனேகமாக இந்த படத்தை பார்க்காத நண்பர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.. காரணம் அந்த மெலீனாவாக நடித்த மோனிகா பெலுச்சியும், அதில் வரும் "சில காட்சிகளும்" தான்.. ஒரு பெண்ணின் அழகு எப்படி அவளை துன்பத்திற்கு ஆளாக்குகிறது என்பதை பேசிச் செல்கிறது  திரைப்படம்.. இந்த திரைப்படத்தை பார்க்காத நண்பர்களுக்காக கதை சொல்கிறேன்.. படம் பார்த்துவிட்ட நண்பர்கள் தவிர்த்துக் கொள்ளலாம்..

இத்தாலியின் சிசிலியில் வசிக்கும் ரெனாடோ என்ற 12 வயது சிறுவன் புது சைக்கிள் வாங்கிக் கொண்டு தன்னை விட இளைஞர்கள் சிலர் அடங்கிய குழுவில் இணைந்து கொள்ள சொல்கிறான்.. அங்கே அவர்கள் ஒரு பெண் வருகைக்காக காத்திருக்கிறார்கள்.. ரெனாடொவும் அவர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை பார்க்கிறான்.. அன்று முதல் அவள் மீது ஒரு ஈர்ப்பு வந்துவிடுகிறது.. அவளை பின்தொடர்ந்து கொண்டே இருக்கிறான்.. அவள் வீடு, அவள் செல்லும் இடம் என்று  எதையும் விடுவதில்லை... அவளின் கணவன் ஒரு ராணுவ வீரன்.. இரண்டாம் உலகப் போருக்கு சென்றுயிருக்கிறான்.. அங்கு இருக்கும் பல ஆண்களின் கண்கள்அவள் மீதே இருக்கின்றன.. அதனால் பல பெண்களுக்குஅவள் எதிரியாக தெரிகிறாள்.. ஒரு நாள் அவளின் கணவன் போரில் இறந்து விட்டான் என செய்தி வருகிறது.. அவளின் ஒரே ஆதரவாக இருக்கும் அவளின் அப்பாவும் போர் விமானங்கள் செய்த வெடி குண்டு தாக்குதலில் இறந்து போகிறார்.. அதற்க்கு வரும் ஆண்களும் அவளை காமத்துடனே பார்க்கிறார்கள்.. எல்லா ஆண்களும் தன்னிடம் காமத்தை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் எனப் புரிந்துகொண்டு வாழ வேறு வழி தெரியாமல் அங்கு முகாம் அமைத்து தங்கியிருக்கும் ஜெர்மனியின் நாசிப் படை வீரர்களோடு சேர்ந்து கொண்டு ஊர் சுற்றுகிறாள்.. அந்த நாசிப் படை வீரர்கள் முகாமை காலி செய்துகொண்டு சென்றதும் ஊர் பெண்கள் அவளை அடித்து அவமானப் படுத்திவிட அவள் ஊரை காலி செய்து கொண்டு சென்று விடுகிறாள்.. இறந்து போகாத அவளின் கணவன் திரும்பி வந்ததும் அவள் பற்றிய தகவலை யாரும் சொல்ல மறுக்க ரெனாடோ ஒரு கடிதம் மூலம் அவனுக்கு தெரியபடுத்துகிறான்.. சில மாதங்கள் கழித்து கணவன், மனைவி இருவரும் அதே ஊருக்கு வர முதலில் ஆச்சர்யமாக பார்க்கும் ஊர் மக்கள் பிறகு அவளை மரியாதையாக அணுகுகின்றனர்.. மார்க்கெட்டில் இருந்து அவள் திரும்பி வரும் பொழுது கையில் இருக்கும் பையை அவள் தவறவிட அவளைப் பின்தொடர்ந்து வந்த ரெனாடோ வந்து அவளுக்கு உதவுகின்றான்.. முதல் முறையாக " Good luck signora malena" எனப் பேசுகிறான்.. அவள் சிரித்துவிட்டு செல்கிறாள்.. 

மெலீனாவை நினைத்து சுய இன்பம் கொள்ளும் ரெனாடொவை அவன் அம்மா பேய் பிடித்துக் கொண்டது என நினைத்துக் கொள்ள அவனின் அப்பா "அவன் வயசுக்கு வந்துட்டான்" எனக் கூறி விபசார விடுதியில் கொண்டு விடும் காட்சி புரட்சிக்கரமாக இருந்தது.. நம் ஊர் அப்பாக்களின் எதிர்வினை இது போன்ற செயல்களில் எப்படி இருக்கும் என்று யோசிக்காமல் இருக்க முடியவில்லை.. 

விபச்சாரத்தில் ஈடுபடுவது ஆண், பெண் இருவரும் தான்.. ஆனால் தண்டனை மட்டும் பெரும்பாலும் பெண்களுக்கே.. அழகாக இருப்பதால் மெலீனாவை துரத்தி துரத்தி வரும் ஆண்கள், படத்தின் இறுதியில் ஊர்  பெண்கள் அவளை அடித்து துன்புறுத்தும் போது வேடிக்கைப் பார்ப்பதும், அடி வாங்கி தலை முடியை சிரைத்து விட்டப் பின்பு மெலீனா வேடிக்கைப் பார்க்கும் ஆண்களை நோக்கி கத்துவதும் மனதை நெகிழ்த்தும் காட்சிகள்..

அழகான, கணவன் இல்லாமல் வாழும் ஒரு பெண்ணின் மேல் இந்த உலகம் (எல்லா ஊர்லயும் மனுஷன் மனசு ஒரே மாதிரி தான் சிந்திக்குது போல ..)  செலுத்தும் பார்வை பற்றிய ஒரு மறைமுக கேள்வியை ரெனாடோ என்ற சிறுவனின் பார்வையில் எழுப்பிச் செல்கிறது இந்த திரைப்படம்... 

Posted on முற்பகல் 1:24 by Elaya Raja

No comments

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

சுஹாசினி மேடம் பேசுன பேச்சுக்காகவே இந்த படத்தோட விமர்சனம் பலரால் எழுதப்பட்டுவிட்டது.. என் விமர்சனத்துக்காகவும் வாசகர்கள் யாரும் காத்திருக்கவில்லை என்பதால் கொடுத்த நூறு ரூபாய்க்கு எந்த அளவுக்கு வொர்த் ஆக இருந்தது, படம் பார்க்கும் போது எனக்கு நெருடிய விஷயங்கள் இவைகளை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.. துல்கர், நித்யாமேனன் இருவரும் நன்றாக நடித்திருந்தார்கள்.. இளமை "பொங்கி வழிந்தது" அவர்கள் இருவரின் நடிப்பிலும்.. நித்யாமேனன் பல காட்சிகளில் சும்மா பளபளவென இருந்தார்.. அதே போல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரகாஷ் ராஜ், லீலா சாம்சன் காட்சிகள் ரசிக்கும் படி இருந்தன.. பிரகாஷ் ராஜை விட லீலா சாம்சன் நடிப்பு வெகு இயல்பாக இருந்தது.. அவரின் வசன உச்சரிப்பிலும் எவ்வித நடிப்பும் தெரியவில்லை.. 

லிவிங் டுகெதர் என்றால் இவளோ தானா..?? எனக்கு "Friends with benefits" படம் தான் நியாபகம் வந்தது.. அதில் லிவிங் டுகெதர் இல்லை.. அறையை மட்டும் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.. காதல் என்று  ஹீரோவும், ஹீரோயினும் சொல்லிகொள்வதில்லை.. ஆனால் காமம் மட்டும் அவர்களுக்கிடையே உண்டு.. இந்த படத்தில் காதலிக்குறேன் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.. கண்மணி கண்மணி என்று கொஞ்சிக் கொள்கிறார்கள்.. காமம் கொள்கிறார்கள்.. என்னமோ ஒரு மாதிரி குழப்பமாகவே இருந்தது.. "லிவிங் டுகெதர்னா  இதான் பண்ணுவாய்ங்களோ" என்று தோன்ற ஆரம்பித்தது.. 

ஹீரோ தடாலென ஒரு கருவை சொல்லி மேல் அதிகாரியிடம் வீடியோ கேம் ப்ராஜெக்ட் பெறுவது எல்லாம் இது போன்ற பாண்டஸி காட்சிகளில் தான் நடக்கும்.. வசனங்கள் நிறைய இடங்களில் நன்றாக இருந்தன.. ஆனால் அந்த வசனங்கள் எல்லாம் ஏதோ செயற்கையாக இருப்பதாகப்பட்டது.. இந்த படத்தில் மட்டுமல்ல "அலைபாயுதே"விலும் இதே போல் தோன்றியிருக்கிறது... 

கிளைமாக்ஸ் நெருங்கும் போது இருவரும் சண்டை போட்டு கொள்ளும் காட்சி ரொம்ப செயற்கையாக இருந்தது.. வெட்டியா சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.. என் மூளைக்கு அந்த சண்டையின் பின்னணி அவ்வளவாக புரியவில்லை... 

நிறைய காட்சிகள் மங்கலாக இருப்பதை போல் இருந்தன.. அது தியேட்டர் பிரச்சனையா இல்லை P.C.ஸ்ரீராம் காட்சிகளை எடுத்ததே அப்படித்தானா  என்று தெரியவில்லை.. ஆனால் நிறைய புதிய கோணங்களில் காட்சிகளை காட்டியிருந்தார்.. இசை சொல்ல வேண்டியது இல்லை.. "மன மன மெண்டல் மனதில்", தீம் மியூசிக் சூப்பர்..

இது போன்ற நெருடல்கள், சில கடுப்பேத்தும் காட்சிகளையும் தாண்டி படம்  எனக்கு பிடித்தே இருந்தது.. 

இடைவேளையின் போது எனக்கு முன் வரிசையில் அமர்ந்திருந்த இருவர் எழுந்து என்னை கடந்து போகும் போது "என்னா படம் நல்லா இருக்கு.. தண்டமா இதுக்கு வந்துட்டோம்" என்று பேசிக் கொண்டு போனார்கள்.. காஞ்சனா-2வும் இதுவும் காட்சிகள் மாறி மாறி ஓடுவதால் காஞ்சனா போகலாம் என்று நினைத்து வேறு வழி இல்லாமல் "சரி இதை பார்ப்போம்"  என உள்ளே வந்துவிட்டார்கள்  போல.. இடைவேளைக்குப் போனவர்கள் திரும்பி வரவே இல்லை.. சுஹாசினி மேடம்  "தகுதியான விமர்சகர்கள் மட்டுமே விமர்சனம் பண்ண வேண்டும்" என்று சொல்லும் போதே "தகுதியான பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்க்க வர வேண்டும்" எனக் கூறியிருக்கலாம்..

Posted on பிற்பகல் 10:59 by Elaya Raja

No comments

புதன், 15 ஏப்ரல், 2015

இணையம் வந்த பிறகு எந்த ஒரு விஷயம் நடந்தாலும் காட்டு தீ போல வெகுவேகமாக பரவிவிடுகிறது.. அதுவும் சமூக வலைத்தளங்கள், வாட்ஸ் அப் போன்றவற்றில் பரவும் செய்திகள் உடனே பிரபலமாகிவிடுகின்றன.. நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் வெகு சீக்கிரம் மக்களை சென்றடைகிறது..  சமீபகாலமாக மீம்ஸ்(MEMES) என்றழைக்கப்படும் கலாசாரம் facebook , twitter, whats app போன்றவற்றில் வெகு பிரபலம்.. facebook-ல் நண்பனின் நிலைத்தகவலுக்கு  கமெண்ட்  போடுவதற்கும் மற்றவரின் கமெண்ட்க்கு  பதில் போடுவதற்கும் என்று இந்த மீம்ஸ் இணைய பயனாளர்களால் அதிகம் உபயோகிக்கப்படுகிறது.. இதில் அதிகம் உபயோகிக்கப்படும் மீம்ஸ்கள்  கவுண்டமணி,வடிவேலு, சந்தானம், செந்தில் போன்ற காமெடி நடிகர்களின் ரியாக்சன் அல்லது புகழ்பெற்ற வசனங்களை கொண்ட  மீம்ஸ்களே.. வெறும் கமெண்ட் போடுவதோடு நின்று விடாமல் வெறுமனே கலாய்க்க என்றே சில மீம்ஸ்கள் சமீபகாலமாக உருவாகிக் கொண்டிருக்கின்றன.. அப்படி கலாய்க்கப்படும் மீம்ஸ்களில் பல , 80-களிலும், 90-களிலும் ரஜினி, கமலுக்கு இணையாக கோலிவுட்டை கலக்கிய டி.ராஜேந்தர், விஜயகாந்த் போன்றவர்களுடையதே.. 


ரஜினிக்கு  அடுத்தப்படியாக எங்கள் ஊர் சுற்றுவட்டாரத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் விஜயகாந்த் தான்.. அவருக்கு அடுத்துதான் கமல்.. ஒவ்வொரு விஜயகாந்த் படமும் திருவிழாவைப் போல் கொண்டாடப்படுவதை சிறுவனாக பலமுறை கண்டிருக்கிறேன்.. என் மாமாக்கள் விஜயகாந்த் ரசிகர்கள்.. அதனால் ஒவ்வொரு படத்திற்கும் என்னையும் அவர்களுடன் கூட்டிச் செல்வார்கள்.. அப்பொழுதெல்லாம் விஜயகாந்த் என்றாலே காலை சுழட்டி எதிரிகளை எட்டி உதைக்கும் அவரது ஸ்டைல் தான் நியாபகம் வரும்.. விஜயகாந்த் அரசியலில் நுழையும் கொஞ்ச காலத்திற்கு முன்பு செய்த சில படங்கள் அவரை காமெடியாகப் பார்க்க வைத்தது.. நெறஞ்ச மனசு படத்தில் கண்ணை கட்டியபடி பைக் ஓட்டுவதும், நரசிம்மாவில் இவருக்கு கரன்ட் ஷாக் வைத்ததும் கரன்ட்கே ஷாக் அடிப்பதும், கஜேந்திரா படத்தில் மீசையில் கை வைத்ததும் எதிரிகள் பறப்பதும், இதில் உச்சமாக தர்மபுரி படத்தில் தாம்புல தட்டைக் கொண்டு துப்பாக்கி குண்டை திசை திருப்புவதும் என்று விஜயகாந்த் என்ற ஆக்சன் ஹீரோ காமெடி செய்து கொண்டிருந்தார்.. விஜயகாந்தின் இந்த கடைசி கால திரைப்படங்களில் ரமணா மட்டுமே அவரை ஹீரோவாகவே காட்டியப் படம்.. 


அவர் அரசியலில் நுழைந்த போது இரண்டு மாபெரும் கட்சிகளுக்கு மாற்றாக, சினிமாவில் வரும் ஹீரோவைப் போலவே பார்த்தவர்களில் நானும் ஒருவன்.. ஆனால் குடித்துவிட்டு என்ன பேசுகிறோம் என தெரியாமல் உலரத் தொடங்கிய அவரின் ஹீரோ இமேஜ் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து  முழு நேர காமெடியனாக மாறிப் போனார்.. அவர் பற்றிய மீம்ஸ் அனைத்தும் சரக்கடித்து விட்டு அவர் பேசுவதாகவும், அவரின் ஆங்கிலத்தை கிண்டலடிப்பதாகவும் தான் இருக்கின்றன.. நடிகை மஞ்சுளா இறந்த போது "ஆழ்ந்த நன்றியை தெரிவிச்சிக்குறேன்", "ஊழல் எல்லாம் நல்ல விஷயம்" என்று காமெடி செய்து விஜயகாந்த் இளைஞர்களின் பிடித்தமான மீம்ஸ் பெர்சனாலிட்டி ஆனார்.. "நான் விஜயகாந்த் ரசிகன்" என்று சொன்னாலே மற்றவர்கள் கேலி செய்யும் நிலை தான் இப்பொழுது.. "என்னடா விஜயகாந்த் படத்தை எல்லாம் டிவில பாக்குற" என்று கேக்கும் அளவிற்கு விஜயகாந்தின் பிம்பம் மாறிவிட்டது.. சமீபத்தில் விஜயகாந்த் சைபர் க்ரைமில் புகார் செய்யும் அளவிற்கு விஜயகாந்த் மீம்ஸ் புகழ் பெற்றியிருக்கிறது..


விஜயகாந்தைப் போலவே 80-களில் ரஜினி, கமலுக்கு செம்ம கடும் போட்டியாக இருந்தவர் டி .ஆர்.. கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், கலை, ஒளிப்பதிவு, இசை, தயாரிப்பு, இயக்கம் என்று சகலகலா வல்லனவனாக சுழன்றவர் .. இவரது இசையும், பாடல் அரங்க அமைப்புகளும் அப்பொழுது வெகு பிரபலம்.. இவரது படங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி படங்களுக்கும் இசை அமைக்கும் அளவிற்கு புகழ் பெற்றவர்.. படங்களும் செண்டிமெண்ட் தூக்கலாக தாய்குலங்களை கவரும் அளவிற்கு இருக்கும்.. ஆனால் 80-களுக்குப் பிறகு வந்த படங்களில் எல்லா கதாபாத்திரங்களும் அவரைப் போலவே பேச தொடங்கிவிட்டன.. நான் கல்லூரி படிக்கும் போது வீராசாமி திரைப்படம் வந்தது.. டி.ஆரை கலாய்க்க வேண்டும் என்றே நண்பர்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு முதல் நாள் முதல் காட்சி பார்த்து விட்டு வந்தார்கள்.. அதில் மும்தாஜ் உடன் அவர் ஆடும் "வச்சிக்குறேன் உன்ன வச்சிக்குறேன்" பாடல் அத்தனை கேலியாகப் பார்க்கப்பட்டது.. "டண்டனக்கா" என்றாலே டி.ஆர்  நியாபகம் வரும் அளவிற்கு மிமிக்ரி கலைஞர்களும் அவரை இமிட்டேட்செய்து வருகிறார்கள்.. இப்படி இன்றைய தலைமுறை இளைஞர்களால் காமெடியாகப் பார்க்கப்படும் டி.ஆரின்  இமேஜ்  facebook, whats app-களில் விஜயகாந்தை போல்  நசுங்கிப் போனது.. 


போன வருடம் மீம்ஸ்-ல்  முதல் இடம் பிடித்தது லிங்கு "பாய்" தான் .. அஞ்சான் படத்தால் பாதிக்கப் பட்ட ரசிக கண்மணிகள் லிங்கு பாயை மீம்ஸ்ல் விட்டு கிழி கிழியென கிழித்துவிட்டார்கள்.. கொஞ்ச நாள் கழித்து அவர் கொடுத்த இன்டெர்வியூவில் அது பற்றி மிகவும் வருத்தப்பட்டு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.. சூரியாவும் அஞ்சான் மீம்ஸ் வலையில் கொஞ்சமாக சிக்கினார்.. 

இப்படி அதிகம் மீம்ஸ்களில் கலாய்க்கப் பட்டதால் விஜயகாந்தும், டி.ஆரும் படைத்த சாதனைகள் அனைத்தும்  "அப்படியா" என்று கேட்பவர்கள் வியக்கும் அளவிற்கு மக்கள் மனதில் இருந்து மறக்கடிப்பட்டுவிட்டது.. சமீபத்தில் behindwoods, விஜயகாந்த் செய்த சாதனைகளை மீண்டும் நியாபகப்படுத்தும் விதமாக "The real vijaykanth" என்ற வீடியோவை வெளியிட்டது.. டி.ஆரும் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல.. தொடர்ந்து சில்வர் ஜூப்ளி படங்களை கொடுத்தவரே.. ஆனால் இந்த மீம்ஸ், மிமிக்ரி கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவற்றால் இருவரின் பிம்பமும் மாறிப்போனது கொடுமையே.. 

எதையும் பெரிதாக அலட்டிக் கொள்ளாத இன்றைய இணைய தலைமுறையால் காமெடி ஆக்கப்படும் மாஜி ஹீரோக்களும், படங்களும் கூடிக் கொண்டே தான் போகின்றன.. இந்த மீம்ஸ் போல இன்னும் வருங்காலம் நமக்காக என்னனென்ன வைத்திருக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்...

Posted on முற்பகல் 2:01 by Elaya Raja

No comments

வியாழன், 9 ஏப்ரல், 2015

சினிமா டூ ஹோம் (C2H) என்ற நிறுவனத்தை திருட்டு VCD களுக்கு எதிராக சேரன் தொடங்கி அதன் முதல் சோதனை முயற்சியாக  வெளிவந்திருக்கும் JK வை நண்பர்கள் டவுன்லோட் செய்து வைத்திருப்பதில் பார்க்க தோன்றாமல் ஒரிஜினல் DVD வாங்கி படத்தினை பார்த்தேன்.. அதில்  பார்க்கும் பொழுது ஏதோ  யோக்கியத்தனமாக நடந்து கொண்டோம் என ஒரு சிறு மனநிறைவு.. "முடியும்னு நீ நினைக்குற வரைக்கும் ஓடிட்டே இருந்தா முடியாததுன்னு எதுவுமே இல்ல.."-இப்படி ஒரு வசனம் படத்துல வருது.. அதுதான் சேரனை C2H-ஐ முயற்சிக்க வைத்திருக்கும் என நினைக்கிறேன்.. C2H-ன் ஆயுட்காலம் எத்தனை என்று தெரியவில்லை.. ஆனால் இப்படி ஒரு முயற்சிக்கு நிச்சயம் பெரும் பாராட்டுக்குரியவர் சேரன்..


JK - படம் வழக்கமான சேரனின் பீல் குட் மூவி வகையை சார்ந்தது தான்.. ஆனால் வழக்கமான சேரன் படங்களில் இருந்து இதில் சிறு வித்தியாசங்களை உணர்ந்தேன்.. சேரன் படங்கள் நல்ல கதையம்சத்துடன் நகருமே தவிர மேக்கிங்-ல் அதிக கவனம் செலுத்த மாட்டார்.. ஆனால்  இந்த படத்தில் ஒரு ரிச்னெஸ் தெரிந்தது.. கேமரா கோணங்கள் ஆகட்டும், அந்த ஆபீஸ் செட்கள் ஆகட்டும் எல்லாமே வழக்கமான சேரன் படங்களில் இருந்து புதிதாக தெரிந்தன.. சேரன் தனது திரை வாழ்வினை தொடங்கிய அதே நேரத்தில் தொடங்கிய பல இயக்குனர்கள் இப்போதைய ட்ரென்ட்-க்கு மேக்கிங், கதையில் சோபிக்க முடியாமல் திணறும் பொழுது பாரதி கண்ணமாவில் இருந்து JK வரை "நல்ல இயக்குனர்" என்ற பெயரை தக்கவைத்தபடி படங்கள் இயக்கி வரும் சேரன் திறமையானவர் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. 

JK-வின் பெரும் பலம் படம் முழுதும் வரும் ஒரு வித பாசிடிவ் எனெர்ஜி.. குடும்ப உறவுகளின் மீதான பாசம், நண்பர்களின் மீதான நம்பிக்கை, என்று நிறைய நல்ல விஷயங்கள்.. JK எனும் ஜெயக்குமாராக நடித்திருக்கும் சர்வானந்த் குறை சொல்ல முடியாத நடிப்பை வழங்கியிருக்கிறார்.. ஆனால் சில காட்சிகளில் வசன உச்சரிப்பு தான் லிப்-க்கு சிங்க் ஆகவில்லை.. நித்யா மேனன் "கொழுக் மொழுக்" என  அழகாக இருக்கிறார்.. நடிக்கும் வாய்ப்பினை நன்றாகவே பயன்படுத்தியிருக்கிறார்.. சந்தானம் காமெடி பெரிய அளவில் உதவவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.. பிரகாஷ் ராஜ் வில்லனைப் போல் சில காட்சிகளே வருகிறார்.. மனோபாலாவிற்கு வழக்கமான  அச்சுபிச்சு காமெடி காட்சிகள் இல்லை.. வாய்பேச முடியாத ஒவியனாக ஒரு நல்ல கதாபாத்திரம்.. சந்தானம் நடித்திருக்கும் படத்தில் அவரிடம் "கலாய்" வாங்காமல் மனோபாலா நடித்திருக்கும் முதல் படம் இதுவென்றே நினைக்கிறேன்..   

முதல் பாதி சர்வானந்த் பிசினஸ் செய்ய முயற்சிப்பது, புதிது புதிதாக ஐடியா-க்கள் பிடிப்பது என்று கொஞ்சம் வேகமாக செல்கின்றன.. ஆனால் இரண்டாம் பாதி எளிதாக யூகிக்கும் படியான சில காட்சிகள் போன்றவற்றால் போர் அடிக்கவே செய்தது.. DVD-ல் பார்த்தால் பெரிதாக அது உறுத்தவில்லை.. தியேட்டர்-ல் பார்த்திருந்தால் கொஞ்சம் சிரமமாகவே இருந்திருக்கும்..

ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை - கொஞ்சம் மெதுவாக நகரும், வன்முறை இல்லாத, குடும்பத்துடன் பார்க்கும்படியான நல்ல பீல் குட் மூவி.

Posted on பிற்பகல் 9:20 by Elaya Raja

No comments