1975-ல் "அன்னக்கிளி" மூலம் தொடங்கிய இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் 1992-ல் "ரோஜா" படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான்  வரும் வரை யாராலும் அசைக்க முடியவில்லை. கணக்கில் அடங்கா திரைப்படங்கள் அவரது இசையுடன் எழுபதுகளின் இறுதியிலும், 80களிலும் வெளிவந்து வெற்றி வாகை சூடியது. ஒரு பாடல், இரண்டு பாடல் அல்ல. அனைத்துப் பாடல்களும் வெற்றிப் பாடல்களாகவே இருந்தன. இளையராஜாவின் இசைப் பயணம் தொடங்கிய சமயம் எம்.எஸ்.விஸ்வநாதனின் அந்திமக்காலம் தொடங்கியிருந்தது. அப்பொழுதும் எம்.எஸ்.வி. சில வெற்றிப் பாடல்களைக் கொடுத்தே வந்தார். பில்லா, போக்கிரி ராஜா, நாளை நமதே, இதயக் கனி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களின் மூலம். ஆனால் புதிய அலையான இளையராஜாவின் பக்கம் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக  நகர்ந்து கொண்டிருந்தன. அப்படி தான் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யமும் ஏ.ஆர்.ரகுமான் மூலம் ஓட்டை காண ஆரம்பித்தது. எம்.எஸ்.வி.க்கு படங்கள் குறையத் தொடங்கியதும் இளையராஜா  மிகவும் பரபரப்பான இசையமைப்பாளர் ஆனார். குழந்தைளுக்கு இளையராஜாவின் பேர் சூட்டும் அளவிற்கு எல்லோராலும் விரும்பப்படும் இசையமைப்பாளர் ஆனார் (கட்டுரைக்கு தேவை இல்லாத ஒரு  செய்தி: எனது தாய்மாமாவின் பெண் இளையராஜாவின் ரசிகையாம். அதனால் அவர் எனக்கு இந்த பெயரைப் பரிசீலனை செய்ய , எனது பாட்டியின் பெயரும் "இளையாள்" என்பதால் எனக்கு இளையராஜா என்ற பெயர் சூட்டப்பட்டது.) இவருடைய பாடல்களாலே வெள்ளி விழா கண்டப் படங்கள் ஏராளம். "மைக்" மோகன் என்ற நடிகர் இன்றும் நம் நினைவில் இருப்பதற்கு முக்கியமான காரணம் இளையராஜா பாடல்கள்  தான். "மோகன் ஹிட்ஸ்" என்ற கேசட்டுகளை நான் சிறுவனாய் இருந்த சமயம் செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்திருக்கிறேன். இப்படி இளையராஜாவின் இசையாலையே பல படங்கள் வெள்ளி விழா படங்கள் ஆகின என்றால் அது மிகையில்லை. ஆனால் அதுவே இளையராஜாவிற்கு "தான்" தான் என்ற மிதப்பை கொடுத்தது போல. ஏ.ஆர்.ரகுமான் வரும் வரை அவருடைய இசைக்குப் போட்டி என்று யாரும் இல்லை. எம்.எஸ்.வி. 80 களில் ரிடையர்ட் ஆகிவிட ஒன்-மேன் ஷோவாக வெளுத்துக் கொண்டிருந்தார் இளையராஜா. சங்கர் கணேஷ், சந்திர போஸ் என்று சிலர் மட்டுமே. ஆனால் அவர்களிடமும் இளையராஜா சாயல் இசை மட்டுமே இருந்ததே தவிர வித்தியாசம் காட்ட முடியவில்லை. பல படங்கள் இது சங்கர் கணேஷ் இசையமைத்ததா இல்லை இளையராஜாவா என்று குழப்பமாகவே இருக்கும். 

1989-ல் தான் "கானா புகழ்" + தேனிசை தென்றல் தேவாவின் என்ட்ரி. அவரும் ஒரு இளையாராஜாவின் நகலே. அதனால் இளையராஜாவிற்கு இவர்களின் மூலம் எந்த பங்கமும் வரவில்லை. இளையராஜாவின் தலைக் கனத்தை தாங்க முடியாமல் தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் என்று நாம் வியக்கும் மணி ரத்னம், பாலச்சந்தர், பாரதி ராஜா ஆகியோர் புலம்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இளையராஜாவிடம் "புன்னகை மன்னன்" படத்தில் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ரகுமானை கவனித்த பாலச்சந்தர், மணிரத்னம் இயக்கத்தில் தான் தயாரித்த "ரோஜா" படத்தின் மூலம் அறிமுகப் படுத்தினார். மணிரத்னம் இளையராஜாவுடன் கடைசியாகப் பணியாற்றிய "தளபதி" மாபெரும் மியூசிகல் ஹிட். தளபதி படத்தில் இடம்பெற்ற "ராக்கம்மா கைய தட்டு" பாடல், 2003-ல் BBC மூலம் நடத்தபெற்ற வாக்கெடுப்பில் 155 நாடுகளை சேர்ந்த மக்கள் அளித்த வாக்குகளின் மூலம் உலகின் சிறந்த பத்துப் பாடல்களில் நான்காவது இடத்தில்  உள்ளது. அத்தனை சிறந்த பாடல்களை தளபதிக்காக இளையராஜா கொடுத்திருந்த போதும் "அவருக்கு உடனடியாக ஒரு மாற்று தேவை" என்பதில் பாலச்சந்தர், மணி ரத்னம், பாரதி ராஜா ஆகியோர் உறுதியாக இருந்தனர். அவர்கள் கணித்ததைப் போலவே இளையராஜாவிற்கு சரியான மாற்றாக இருந்தார் ரகுமான். இசையில் இருந்த இளமை ரகுமானை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. இளையராஜா பாசறையில் இருந்த இயக்குனர்கள் ஒவ்வொருவராக ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சென்றனர். (கொசுறு: "ரோஜா" படத்திற்கு இசையமைக்க புதிய கருவிகளை வெளிநாடுகளில் இருந்து ரகுமான் கொண்டு வர முயன்றதாகவும், இளையராஜா தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சுங்க வரி அதிகாரிகளிடம் மாட்டி விட்டு அந்த கருவிகள் வராமல் தடுத்தார் என்று கேட்டதுண்டு. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியாது. நண்பர்கள் தெரிந்தால் சொல்லலாம்.) இப்படி தான் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது. இப்போதைய ட்ரெண்டுக்கு அவரால் இசையமைக்க முடியாவிடினும் சோகம், சந்தோசம், என்று எல்லா நேரத்திலும் ராஜாவின் பாடல்களை கேட்கும் ரசிகர்கள் இன்னும்  இருக்கிறார்கள். 

இந்த கதையெல்லாம் இப்பொழுது எதற்கு என்றால் "இசை" படம் பற்றி பேசுவதற்காகவே. படத்தை நான் நேற்று தான் பார்த்தேன். எஸ்.ஜே. சூர்யா படத்தை தியேட்டரில் பார்க்கும் எண்ணத்தை "வியாபாரி" படத்தை எண்பது ரூபாய் கொடுத்து தியேட்டரில் பார்த்த பொழுதே புதைத்துவிட்டேன். "அன்பே ஆருயிரே" படம் 2006-ல் வந்தது. இத்தனை வருடங்கள் கழித்து வரும் படம் என்பதால் ஒரு சிறு எதிர்பார்ப்பு இருந்தது. இயக்குனராக எஸ்.ஜே.சூர்யாவை நம்பும் அளவிற்கு நடிகராக அவரை நம்பவில்லை. அவருடைய "ஹாங்க்" கேட்டு கேட்டு "அ .ஆ" படத்தின் போது வெறிப் பிடித்து விட்டது. "இசை" படத்தில்  இசையும் அவரே அமைக்கிறார். அதனால் தான் இத்தனை பெரிய இடைவெளி என்று அறிந்த பொழுது அவரது கடின உழைப்பு பிடித்திருந்தது. அதற்கானப் பலனை பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். சரி படம் எப்படி...?

ஆரம்பத்தில் நான் சொல்லியிருக்கும்  இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இடையிலான தொழில் போட்டியை கொஞ்சமாக சினிமா மசாலா கலந்து கற்பனைக் கலந்த கதை என்று  கொடுத்திருக்கிறார் எஸ்.ஜே. ஏ.கே.சிவாவாக சூர்யா, வெற்றிச் செல்வனாக சத்யராஜ். இசையமைப்பாளராக தான் விட்ட இடத்தை எஸ்.ஜே.சூர்யா பிடித்தால் அவர் மீது துவேசம் கொள்ளும் சத்யராஜ், உளவியல் ரீதியாக அவனை பாதித்து மீண்டும் தன் இடத்தைப் பிடிக்க முயல்கிறார். இது தான் "இசை"

முதலில் ஒரு இயக்குனராக சூர்யாவை பாராட்டலாம். நல்லதொரு திரில்லர் படம் பார்த்த ஒரு திருப்தி. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி நல்ல வேகம். ஏகப்பட்ட ட்விஸ்ட்கள். (ஆனால் நம் புத்திசாலி தமிழ் ரசிகர்களிடம் சில ட்விஸ்ட்கள் மட்டுமே எடுபடும்.) 

அடுத்து ஒரு இசையமைப்பாளராக அவரது முயற்சியை பாராட்டலாம். "புத்தாண்டின் முதல் நாள் இது", "இசையாலே" இரண்டும் கேட்டவுடன் பிடித்துப் போகும் ரகம். பின்னணி இசையிலும் நன்றாகவே செய்திருக்கிறார். இன்னும் எடிட்டிங், பாடல் எழுதுவது, ஆர்ட் டைரக்சன் என்று அடுத்தடுத்து முயற்சித்தால் இந்நூற்றாண்டின் டி.ஆராக மாறும் வைப்பு உள்ளது. இயக்குனராக இருந்து இசையமைப்பதை முயற்சித்தவர்களில் (பாக்யராஜ், பேரரசு) இவர் கொஞ்சம் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

அடுத்து ஒரு நடிகராக பார்த்தால் நான் முன்பே சொன்னது போல் இவருடைய "ஹாங்க்" காகவே இவரை வெறுத்தேன். அந்த டோனை இந்த படத்திலாவது அவர் தவிர்க்க வேண்டும் என்று எண்ணினேன். கொஞ்சம் தேவலை. ஆனால் பாதிரியாராக வந்து அவர் பேசும் பொழுது பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை ஓங்கி குத்தலாமா என்ற அளவிற்கு வெறி வந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் பரவாயில்லை. நன்றாகவே நடித்திருக்கிறார். முக்கியமாக பாத் ரூமில் வாயை மூடிக் கொண்டு அழும் காட்சியில் சூப்பர்.

கதையில் லாஜிக் மீறல் என்று கேட்க கூடாது என்று "எல்லாம் எஸ்.ஜே.சூர்யா என்ற இயக்குனரின் கனவாக" முடித்துவிட்டாரா என தெரியவில்லை. இப்படி ஒரு முடிவினை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று பயம் கொள்ளாமல் வைத்ததற்காக பாராட்டலாம். அதுவும் ரசிக்கும் படியே இருந்தது. படத்தின் நீளம் பெரும் குறையே. பாவம் தியேட்டரில் பார்த்த ரசிகர்கள். நான் மூன்று நாட்களாகப் பார்த்ததால் என்னைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. 

இசை - ஒரு நல்ல ம்யூசிகல் த்ரில்லர்.