சனி, 21 மார்ச், 2015

ஆங்கிலப் படங்கள் சிலவற்றைப் பார்க்கும் போது ஏன் இப்படி நம் தமிழில் முயற்சி செய்யாமல் இருக்கிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். ஒரு சாதாரணக் கதைக்கு அருமையாக திரைக்கதை அமைத்து விறுவிறுப்பாக அடுத்து என்ன நடக்கும் என்று கொஞ்சம் கூட என்று நம்மை யூகிக்க விடாமல் ரசிக்க வைக்கும் படங்கள் அங்கு ஏராளம் என்பது உலக சினிமா ரசிகர்களுக்கு நன்றாக தெரியும். அதுபோன்று அசத்தலாக நம் தமிழில் ஒரு படம் வரவேண்டும் என்று நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன். அப்படி ஒரு படம் தான் “ராஜதந்திரம்”.


“Heist film, con movie” என்ற genre-ல் நம்மவர்கள் முயற்சி செய்யும் படங்கள் (தமிழில் அப்படியான படங்கள் குறைவு தான் எனும் போதும்) எல்லாம் ஆங்கில படங்கள் சிலவற்றின் காப்பி ஆகவோ அல்லது யூகிக்க முடியும் படியான திராபையான காட்சிகளுடனோ தான் பெரும்பாலும் அமைந்துவிடும். உதாரணமாக “நாணயம்” என்றொரு படம். ஆங்கிலப் படங்கள் சிலவற்றின் நகலாகவே இருந்தது. சமீபத்தில் “சதுரங்க வேட்டை” சற்று நல்ல முயற்சி. தமிழ்நாட்டில் நடந்த சில மோசடிகளை சுற்றி பின்னப்பட்டக்  கதையாக சுவாரசியம் தந்தது. ஆனால் அதில் பல காட்சிகள் நாடகத் தனமாக நகர்ந்து பெரும் சோர்வை தந்தது. பல வருடங்களுக்கு முன் பாக்யராஜ் நடித்து வெளிவந்த “ருத்ரா” திரைப்படம் ஒரு சுவாரசியமான “con movie” வகை எனக் கூறலாம். புத்திசாலித்தனமானக் காட்சிகள் பாக்யராஜின் அசத்தலான நடிப்பில் பல இருக்கும். உதாரணமாக பாக்யராஜின் அறிமுகத்தில் ஜோக்கர் வேஷம் போட்டு வந்து வங்கியை கொள்ளை அடிக்கும் காட்சி. உலக சினிமாவை விரல் நுனியில் வைத்திருக்கும் இன்றைய இளைய சமுதாயத்தை ஈர்க்க திரைக்கதையில் அதிக சுவாரசியம் சேர்க்க வேண்டும். அதை தான் செய்திருக்கிறது “ராஜதந்திரம்”.

சிறு சிறு ஏமாற்று வேலைகள் செய்து பிழைத்து வரும் மூன்று நண்பர்கள். ஏதாவது பெரிதாக செய்து விட்டு செட்டில் ஆகத் துடிக்கும் ஒரு நண்பன். அது போன்று செய்து விட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்ள விரும்பாத ஹீரோ, தான் காதலிக்கும் பெண் வீட்டின் கடன் தொல்லையை தீர்க்க கொஞ்சம் பெரிய திருட்டில் ஈடுபட அடுத்தடுத்து நடக்கும் அதிரடிகள் தான் ராஜதந்திரம். ரொம்பவும் சிக்கல் இல்லாத கதை. ஆனால் அதை சொல்லியிருக்கும் விதம் செஸ் விளையாட்டைப் போல் விறுவிறுப்பு.

படத்தில் கவனம் ஈர்த்தவைகள் என்றால் முதலில் சொல்ல நினைப்பது குள்ளனாக வரும் தர்புகா சிவா (உபயம்:விக்கிபீடியா). அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும் தியேட்டரில் கைதட்டல். சரளமான பேச்சு, அசால்ட்டான உடல் மொழி, என்று ஆரம்பக் காட்சியில் இருந்து நம்மை கவனிக்க வைக்கிறார். ஒரு பெரிய ரவுண்டு (சினிமாவில்) வருவார் என்று தோன்றுகிறது. அடுத்து ஹீரோவாக வரும் வீரா. “நடுநிசி நாய்கள்” என்ற கர்ண கொடூர படத்தில் அறிமுகமானவர். அதன் பிறகு அவருக்கு கிடைத்திருக்கும் ஒரு நல்ல வாய்ப்பு இந்த படம். நன்றாகவே செய்திருக்கிறார். முதல் பாதியில் சற்று தடுமாற்றம் இருந்தாலும் இரண்டாம் பாதியில் நடிப்பில் அசத்துகிறார். அடுத்து காஞ்சி அழகப்பனாக வரும் பட்டியல் கே.சேகர். ரொம்பவும் சாதாரணமான நடிப்பில் ரசிக்க வைக்கிறார். படம் பார்க்கும் போதே ஏதாவது தயாரிப்பாளர் அல்லது இயக்குனர் ஆக இருப்பார் என்று நினைத்தேன். விக்கிபீடியாவை ஆராய்ந்த பிறகு தான் தெரிந்தது தயாரிப்பாளர் சேகர் என்று. ஹீரோயின் ரெஜினா அழகாக வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்கிறார். நரேன், இளவரசு, ஹீரோவிடம் பைக் வாங்கி ஏமாறும் நபர் என்று பலர் கவனம் ஈர்க்கிறார்கள்.

இயக்குனர் A.G.அமித். தமிழில் அசத்தலான இயக்குனர்களின் வரிசையில் ஒரு புதுவரவு. இவரது இன்டர்வியூ ஒன்றை செய்திதாளில் படித்தேன். “இந்த வகை genre-ல் என்னென்ன காட்சிகள் வருமோ அதையெல்லாம் எழுதி அது போன்ற காட்சிகள் வராமல் பார்த்துக் கொண்டோம்” எனக் கூறியிருந்தார். அது உண்மை என்பது பல காட்சிகளில் ஒத்துக் கொள்ள நேர்ந்தது. தொழில் நுட்ப ரீதியாகவும் படம் சிறப்பாக உள்ளது. வசனங்கள் அட்டகாசம். குறிப்பாக தர்புகா சிவா பேசும் பல ஒன்-லைனர்ஸ்.

இந்த வருடத்தில் விறுவிறுப்பாக செல்லும் திரைக்கதையோடு முதல் திரைபடம் இதுவே.

ராஜதந்திரம் – கொடுக்குற காசுக்கு மேலே வொர்த்-ஆன மூவி.

Posted on பிற்பகல் 11:22 by Elaya Raja

No comments

வெள்ளி, 13 மார்ச், 2015

1975-ல் "அன்னக்கிளி" மூலம் தொடங்கிய இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் 1992-ல் "ரோஜா" படத்தின் மூலம் ஏ.ஆர்.ரகுமான்  வரும் வரை யாராலும் அசைக்க முடியவில்லை. கணக்கில் அடங்கா திரைப்படங்கள் அவரது இசையுடன் எழுபதுகளின் இறுதியிலும், 80களிலும் வெளிவந்து வெற்றி வாகை சூடியது. ஒரு பாடல், இரண்டு பாடல் அல்ல. அனைத்துப் பாடல்களும் வெற்றிப் பாடல்களாகவே இருந்தன. இளையராஜாவின் இசைப் பயணம் தொடங்கிய சமயம் எம்.எஸ்.விஸ்வநாதனின் அந்திமக்காலம் தொடங்கியிருந்தது. அப்பொழுதும் எம்.எஸ்.வி. சில வெற்றிப் பாடல்களைக் கொடுத்தே வந்தார். பில்லா, போக்கிரி ராஜா, நாளை நமதே, இதயக் கனி, நினைத்தாலே இனிக்கும் போன்ற படங்களின் மூலம். ஆனால் புதிய அலையான இளையராஜாவின் பக்கம் வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக  நகர்ந்து கொண்டிருந்தன. அப்படி தான் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யமும் ஏ.ஆர்.ரகுமான் மூலம் ஓட்டை காண ஆரம்பித்தது. எம்.எஸ்.வி.க்கு படங்கள் குறையத் தொடங்கியதும் இளையராஜா  மிகவும் பரபரப்பான இசையமைப்பாளர் ஆனார். குழந்தைளுக்கு இளையராஜாவின் பேர் சூட்டும் அளவிற்கு எல்லோராலும் விரும்பப்படும் இசையமைப்பாளர் ஆனார் (கட்டுரைக்கு தேவை இல்லாத ஒரு  செய்தி: எனது தாய்மாமாவின் பெண் இளையராஜாவின் ரசிகையாம். அதனால் அவர் எனக்கு இந்த பெயரைப் பரிசீலனை செய்ய , எனது பாட்டியின் பெயரும் "இளையாள்" என்பதால் எனக்கு இளையராஜா என்ற பெயர் சூட்டப்பட்டது.) இவருடைய பாடல்களாலே வெள்ளி விழா கண்டப் படங்கள் ஏராளம். "மைக்" மோகன் என்ற நடிகர் இன்றும் நம் நினைவில் இருப்பதற்கு முக்கியமான காரணம் இளையராஜா பாடல்கள்  தான். "மோகன் ஹிட்ஸ்" என்ற கேசட்டுகளை நான் சிறுவனாய் இருந்த சமயம் செல்லும் இடங்களில் எல்லாம் பார்த்திருக்கிறேன். இப்படி இளையராஜாவின் இசையாலையே பல படங்கள் வெள்ளி விழா படங்கள் ஆகின என்றால் அது மிகையில்லை. ஆனால் அதுவே இளையராஜாவிற்கு "தான்" தான் என்ற மிதப்பை கொடுத்தது போல. ஏ.ஆர்.ரகுமான் வரும் வரை அவருடைய இசைக்குப் போட்டி என்று யாரும் இல்லை. எம்.எஸ்.வி. 80 களில் ரிடையர்ட் ஆகிவிட ஒன்-மேன் ஷோவாக வெளுத்துக் கொண்டிருந்தார் இளையராஜா. சங்கர் கணேஷ், சந்திர போஸ் என்று சிலர் மட்டுமே. ஆனால் அவர்களிடமும் இளையராஜா சாயல் இசை மட்டுமே இருந்ததே தவிர வித்தியாசம் காட்ட முடியவில்லை. பல படங்கள் இது சங்கர் கணேஷ் இசையமைத்ததா இல்லை இளையராஜாவா என்று குழப்பமாகவே இருக்கும். 

1989-ல் தான் "கானா புகழ்" + தேனிசை தென்றல் தேவாவின் என்ட்ரி. அவரும் ஒரு இளையாராஜாவின் நகலே. அதனால் இளையராஜாவிற்கு இவர்களின் மூலம் எந்த பங்கமும் வரவில்லை. இளையராஜாவின் தலைக் கனத்தை தாங்க முடியாமல் தமிழ் சினிமாவின் மாபெரும் இயக்குனர்கள் என்று நாம் வியக்கும் மணி ரத்னம், பாலச்சந்தர், பாரதி ராஜா ஆகியோர் புலம்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் இளையராஜாவிடம் "புன்னகை மன்னன்" படத்தில் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ரகுமானை கவனித்த பாலச்சந்தர், மணிரத்னம் இயக்கத்தில் தான் தயாரித்த "ரோஜா" படத்தின் மூலம் அறிமுகப் படுத்தினார். மணிரத்னம் இளையராஜாவுடன் கடைசியாகப் பணியாற்றிய "தளபதி" மாபெரும் மியூசிகல் ஹிட். தளபதி படத்தில் இடம்பெற்ற "ராக்கம்மா கைய தட்டு" பாடல், 2003-ல் BBC மூலம் நடத்தபெற்ற வாக்கெடுப்பில் 155 நாடுகளை சேர்ந்த மக்கள் அளித்த வாக்குகளின் மூலம் உலகின் சிறந்த பத்துப் பாடல்களில் நான்காவது இடத்தில்  உள்ளது. அத்தனை சிறந்த பாடல்களை தளபதிக்காக இளையராஜா கொடுத்திருந்த போதும் "அவருக்கு உடனடியாக ஒரு மாற்று தேவை" என்பதில் பாலச்சந்தர், மணி ரத்னம், பாரதி ராஜா ஆகியோர் உறுதியாக இருந்தனர். அவர்கள் கணித்ததைப் போலவே இளையராஜாவிற்கு சரியான மாற்றாக இருந்தார் ரகுமான். இசையில் இருந்த இளமை ரகுமானை உச்சத்தில் கொண்டு நிறுத்தியது. இளையராஜா பாசறையில் இருந்த இயக்குனர்கள் ஒவ்வொருவராக ஏ.ஆர்.ரகுமான் பக்கம் சென்றனர். (கொசுறு: "ரோஜா" படத்திற்கு இசையமைக்க புதிய கருவிகளை வெளிநாடுகளில் இருந்து ரகுமான் கொண்டு வர முயன்றதாகவும், இளையராஜா தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி சுங்க வரி அதிகாரிகளிடம் மாட்டி விட்டு அந்த கருவிகள் வராமல் தடுத்தார் என்று கேட்டதுண்டு. இதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியாது. நண்பர்கள் தெரிந்தால் சொல்லலாம்.) இப்படி தான் இளையராஜாவின் இசை சாம்ராஜ்யம் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்தது. இப்போதைய ட்ரெண்டுக்கு அவரால் இசையமைக்க முடியாவிடினும் சோகம், சந்தோசம், என்று எல்லா நேரத்திலும் ராஜாவின் பாடல்களை கேட்கும் ரசிகர்கள் இன்னும்  இருக்கிறார்கள். 

இந்த கதையெல்லாம் இப்பொழுது எதற்கு என்றால் "இசை" படம் பற்றி பேசுவதற்காகவே. படத்தை நான் நேற்று தான் பார்த்தேன். எஸ்.ஜே. சூர்யா படத்தை தியேட்டரில் பார்க்கும் எண்ணத்தை "வியாபாரி" படத்தை எண்பது ரூபாய் கொடுத்து தியேட்டரில் பார்த்த பொழுதே புதைத்துவிட்டேன். "அன்பே ஆருயிரே" படம் 2006-ல் வந்தது. இத்தனை வருடங்கள் கழித்து வரும் படம் என்பதால் ஒரு சிறு எதிர்பார்ப்பு இருந்தது. இயக்குனராக எஸ்.ஜே.சூர்யாவை நம்பும் அளவிற்கு நடிகராக அவரை நம்பவில்லை. அவருடைய "ஹாங்க்" கேட்டு கேட்டு "அ .ஆ" படத்தின் போது வெறிப் பிடித்து விட்டது. "இசை" படத்தில்  இசையும் அவரே அமைக்கிறார். அதனால் தான் இத்தனை பெரிய இடைவெளி என்று அறிந்த பொழுது அவரது கடின உழைப்பு பிடித்திருந்தது. அதற்கானப் பலனை பெற்றிருப்பார் என்று நினைக்கிறேன். சரி படம் எப்படி...?

ஆரம்பத்தில் நான் சொல்லியிருக்கும்  இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இடையிலான தொழில் போட்டியை கொஞ்சமாக சினிமா மசாலா கலந்து கற்பனைக் கலந்த கதை என்று  கொடுத்திருக்கிறார் எஸ்.ஜே. ஏ.கே.சிவாவாக சூர்யா, வெற்றிச் செல்வனாக சத்யராஜ். இசையமைப்பாளராக தான் விட்ட இடத்தை எஸ்.ஜே.சூர்யா பிடித்தால் அவர் மீது துவேசம் கொள்ளும் சத்யராஜ், உளவியல் ரீதியாக அவனை பாதித்து மீண்டும் தன் இடத்தைப் பிடிக்க முயல்கிறார். இது தான் "இசை"

முதலில் ஒரு இயக்குனராக சூர்யாவை பாராட்டலாம். நல்லதொரு திரில்லர் படம் பார்த்த ஒரு திருப்தி. முதல் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்ந்தாலும் இரண்டாம் பாதி நல்ல வேகம். ஏகப்பட்ட ட்விஸ்ட்கள். (ஆனால் நம் புத்திசாலி தமிழ் ரசிகர்களிடம் சில ட்விஸ்ட்கள் மட்டுமே எடுபடும்.) 

அடுத்து ஒரு இசையமைப்பாளராக அவரது முயற்சியை பாராட்டலாம். "புத்தாண்டின் முதல் நாள் இது", "இசையாலே" இரண்டும் கேட்டவுடன் பிடித்துப் போகும் ரகம். பின்னணி இசையிலும் நன்றாகவே செய்திருக்கிறார். இன்னும் எடிட்டிங், பாடல் எழுதுவது, ஆர்ட் டைரக்சன் என்று அடுத்தடுத்து முயற்சித்தால் இந்நூற்றாண்டின் டி.ஆராக மாறும் வைப்பு உள்ளது. இயக்குனராக இருந்து இசையமைப்பதை முயற்சித்தவர்களில் (பாக்யராஜ், பேரரசு) இவர் கொஞ்சம் பரவாயில்லை என்றே தோன்றுகிறது.

அடுத்து ஒரு நடிகராக பார்த்தால் நான் முன்பே சொன்னது போல் இவருடைய "ஹாங்க்" காகவே இவரை வெறுத்தேன். அந்த டோனை இந்த படத்திலாவது அவர் தவிர்க்க வேண்டும் என்று எண்ணினேன். கொஞ்சம் தேவலை. ஆனால் பாதிரியாராக வந்து அவர் பேசும் பொழுது பார்த்துக் கொண்டிருந்த கம்ப்யூட்டரை ஓங்கி குத்தலாமா என்ற அளவிற்கு வெறி வந்தது. ஆனால் இரண்டாம் பாதியில் பரவாயில்லை. நன்றாகவே நடித்திருக்கிறார். முக்கியமாக பாத் ரூமில் வாயை மூடிக் கொண்டு அழும் காட்சியில் சூப்பர்.

கதையில் லாஜிக் மீறல் என்று கேட்க கூடாது என்று "எல்லாம் எஸ்.ஜே.சூர்யா என்ற இயக்குனரின் கனவாக" முடித்துவிட்டாரா என தெரியவில்லை. இப்படி ஒரு முடிவினை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்று பயம் கொள்ளாமல் வைத்ததற்காக பாராட்டலாம். அதுவும் ரசிக்கும் படியே இருந்தது. படத்தின் நீளம் பெரும் குறையே. பாவம் தியேட்டரில் பார்த்த ரசிகர்கள். நான் மூன்று நாட்களாகப் பார்த்ததால் என்னைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை. 

இசை - ஒரு நல்ல ம்யூசிகல் த்ரில்லர்.

Posted on முற்பகல் 7:43 by Elaya Raja

No comments

செவ்வாய், 10 மார்ச், 2015

"மெட்ராஸ்" திரைப்படத்தினை வெளிவந்த பொழுதே திரையரங்கில் பார்த்தேன். படம் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் படத்தினைப் பற்றி அப்பொழுது பதிவு எழுத முடியாமல் போய்விட்டது. சமீபத்தில் மறுபடியும் மெட்ராஸ் படத்தினை இருமுறை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுதியே தீர வேண்டும் என்று தோன்றியது.
தோல்வி படங்களாக மட்டுமல்லாமல் மகா மொக்கைப் படங்களாகவும்  நடித்து வந்த கார்த்தியின் மீது மீண்டும் சிறு நம்பிக்கையை ஏற்ப்படுத்தியது இந்த திரைப்படம். வட சென்னை மக்களின் வாழ்க்கையை, அரசியல் அவர்கள் வாழ்வில் ஏற்ப்படுத்தும் தாக்கங்களை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லி இருக்கும் படம். வட சென்னை மக்கள் என்றாலே கத்தியோடும், அருவாளோடும், கொலைகாரகளாகவும் முரடர்களாகவும் காட்டி வந்த தமிழ் சினிமாவில் அவர்களையும், அவர்களின் பாஷையையும் மிகவும் விரும்பச் செய்கிறது இந்த திரைப்படம். எனக்கு சென்னை பற்றி முன்பு அதிகம் தெரியாது.(இப்பொழுது முன்பை விட கொஞ்சம் தெரிந்திருக்கிறது  என்று நினைக்கிறேன்). வடசென்னை என்றாலே சினிமாவில் காட்டும் முடி அதிகம் வளர்ந்த, முரட்டு தனமான, ஜிம் பாய் போன்ற  மனிதர்கள் தான் நியாபகம் வருவார்கள். ஆனால் சென்னை வந்த பிறகு கிடைத்த சில வடசென்னை நண்பர்களால் அந்த எண்ணம் கொஞ்சம் மாறியது. (ஆனால் அந்த நண்பர்களில் ஒருவன் அவன் ஏரியா வில் நடந்த சினிமாவில் வரும் காட்சிகளைப் போல சில சம்பவங்களை சொல்லி சமயங்களில் திகில் கிளப்புவான் ). என் போன்ற, சென்னை அதிகம் பரிச்சயம் அல்லாதவர்களின் வடசென்னை மக்கள் மீதான எண்ண ஓட்டங்களை இந்த படம்கொஞ்சமேனும்  கொஞ்சம் மாற்றி இருக்கும் என்றே நினைக்கிறேன்.

படத்தில் கார்த்தியை விட அன்புவாக வரும் கலையரசன் தான் பட்டையை கிளப்பியிருக்கிறார். பேசும் பாசையிலும் சரி, நடிப்பிலும் சரி அந்த கதாப்பாத்திரத்திற்கு சரியான தேர்வு. அவர் மதயானை கூட்டம் திரைபடத்திலையே நல்ல கவனம் ஈர்க்கும் நடிப்பினை கொடுத்திருப்பார். விரைவில் கதாநாயகனாக எதிர்ப்பார்க்கலாம். 

கார்த்தி சென்னை பாஷை ஆரம்பத்தில் செயற்கையாக தெரிந்தாலும் போக போக நல்ல நடிப்பால் கவர்ந்து கொள்கிறார். பெண் பார்க்கும் படலத்தில் அம்மா படுத்தும் போதும் , "கலையரசி என்னை 'டா' போட்டு  பேசிட்டா மச்சி.." என்று தண்ணி அடித்து விட்டு புலம்பும் போதும் "அதான் நல்லா நடிக்க வருதே அப்புறம் ஏன் அலெக்ஸ் பாண்டியன், அழகு ராஜா மாதிரி படங்கள்ல நடிக்கிராப்ல.." என யோசிக்க வைக்கிறார். 

காதரின் தெரஸா.. அந்த சூழலில் அவர் சற்று உறுத்தவே செய்கிறார். ஆனால் நடிப்பும், பின்னணிக் குரலும் கனகச்சிதம். எல்லோரும் அந்த அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தி போவதே இந்த படத்தின் ஆகச் சிறந்த பலம் என்று நினைக்கிறேன். மாரி, விஜி, கண்ணன், ஜானி என்று சரியான நடிகர்கள் தேர்வு.

இன்னும் என்னை இந்த திரைப்படத்தில் கவர்ந்த இரு விஷயங்கள். ஒளிப்பதிவும், இசையும். சந்தோஷ் நாராயணன். சமீப காலமாக  ரசிகர்களை அதிகம் கவர்ந்த இசை அமைப்பாளர். பின்னணி இசையிலும் சரி, பாடல் இசை அமைப்பிலும் சரி வெளுத்து வாங்குகிறார். இடைவேளையின் போது வரும் சண்டை காட்சியில் இவரின் பின்னணி இசை அந்த காட்சியை இன்னும் ஒருபடி மேலே தூக்கி இருக்கிறது. ஒளிப்பதிவும் அந்த காட்சியில் அபாரம். சம்பவங்களை நேரில் பார்ப்பதை போன்றதொரு உணர்வு.

"அட்டக்கத்தி" என்ற காமெடி படத்தின் மூலம் அனைவரின் கவனம் ஈர்த்த பா.ரஞ்சித் தனது அடுத்த படத்தினை யாரும் எதிர்ப்பார்க்காத வேறு ஒரு தளத்தில் இந்த படத்தினை எடுத்திருக்கிறார். "வெறும் சுவத்துக்காடா இவளோ சண்டை" என நம்மை யோசிக்க வைக்காமல், யோசிப்பவர்களையும் ஏமாற்றாமல் வேகமான காட்சிகளாலும், சரியான வசனங்களாலும் திருப்தி செய்கிறார் . நிச்சயம் நிச்சயம் அடுத்தடுத்து சில நல்ல படங்களை இவரிடம் எதிர்ப்பார்க்கலாம் என்றே தோன்றுகிறது.

உலக சினிமா என்பது வேறு ஒன்றும் அல்ல. நமது வாழ்கையையும், நமது மக்களையும் பிரதிபலிக்கும் சினிமாக்கள் தான் என்று இயக்குனர் சீனு ராமசாமி ஒரு பத்திரிக்கையில் சொல்லி இருந்தார்.  அப்படி பார்த்தால் "மெட்ராஸ்" ஒரு முக்கியமான உலக சினிமா.

Posted on முற்பகல் 6:58 by Elaya Raja

No comments

செவ்வாய், 3 மார்ச், 2015

எல்லா ஹீரோக்களுக்கும் ஒரு படத்திலாவது போலீஸாக நடித்து விட வேண்டும் என்ற கனவிருக்கும். காரணம் படம் வெற்றிப் பெற்றால் மாஸ் ஹீரோக்களின் வரிசையில் சேர்ந்து விடலாம் என்பதால். மக்கள் எல்லா ஹீரோக்களையும் போலீஸ் வேடத்தில் ஏற்றுக் கொள்வதில்லை. அவர்கள் முதலில் காமெடி படங்கள், காதல் படங்கள், குடும்ப படங்கள் என்று நடித்து மக்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும். பிறகு கொஞ்சம் ஆக்சன் கலந்த படங்கள் நடிக்க வேண்டும். முடிவில் ஒரு போலீஸ் படம். (காமெடி போலீஸ் படங்களை இங்கு சொல்லவில்லை..) இந்த பார்முலா இன்று வரை தொடர்கிறது. இந்த பார்முலாவை கடைபிடித்து சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “காக்கி சட்டை”.


மிமிக்கிரி ஆர்டிஸ்ட் டூ காம்பயர், காம்பயர் டூ நடிகர், என்று வளர்ந்து வந்திருக்கும் சிவா, நடிகர் டூ ஆக்சன் ஹீரோ என்ற அடுத்த தளத்திருக்கு முன்னேற இந்த சட்டையை அணிந்திருக்கிறார். காமெடி ஹீரோவை ஆக்சன் வேடத்தில் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா என்ற பயத்தில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அங்கங்கே ஆச்சனை தூவி இந்த சட்டையை தைத்திருக்கிறார்கள். இந்த சட்டை எந்த அளவிற்கு சிவாவிற்கு பொருந்தி இருக்கிறது.

கதை என்று பெரிதாக சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை. சமீபகால திரைப்படங்கள் பெரும்பாலானவை கதைகள் கொண்ட திரைப்படங்களாக வருவதில்லை. காட்சிகளை கொண்ட படங்களாவே வருகிறது. வெறும் காமெடி, காதல் காட்சிகள், பாடல்கள் கொண்டே முதல் நாற்பத்தைந்து நிமிடங்களை நகர்த்திவிட்டு நாற்பத்தாறாவது நிமிடத்தில் கதை என்று ஏதோ கதை விடும் மற்ற சிலப் படங்களைப் போலவே இந்த படமும் நகர்கிறது. சரியாக மூன்று பாடல்கள் முடிந்து இடைவேளை விடுவதற்கு இருபது நிமிடங்களுக்கு முன் கதை என்று ஆரம்பிக்கிறது. உடல் உறுப்பு திருட்டு தான் படத்தின் கதை. “என்னை அறிந்தால்” படமும் இதே கருவை கொண்டதே. ஆனால் இந்த படத்தை காமெடியாகவே நகர்த்தி செல்கிறார்கள். ஆனால் ரசிக்கும் படி சொல்லவில்லை. இடைவேளையின் போது வரும் மழை சண்டை நன்றாகப் படமாக்கபட்டிருக்கிறது. சிவாவும் நன்றாகவே செய்திருக்கிறார். ஆனால் சில இடங்களில் சிவா Uncomfortable – ஆக சண்டை செய்வது நன்றாக தெரிந்தது. காமெடி காட்சிகளில் வழக்கமான அதே ரியக்ஸான்ஸ் தான் சிவாவிடம். அது சற்று அலுப்பாகவே இருந்தது. இப்படியே போனால் சிவா, சலித்துப் போய் விடுவார் என்றே தோன்றுகிறது. மிர்ச்சி சிவா, கார்த்தி இருவரும் ஒரே மாதிரியான ரியக்ஸான்ஸ் மூலமே தொடர் தோல்விகளை சந்தித்தார்கள். கார்த்தி, “மெட்ராஸ்” மூலம் மீண்டு விட்டார். ஆனால் மிர்ச்சி சிவா.? சிவகார்த்திகேயன் உஷாரானால் அதை தவிர்க்கலாம்.

ஸ்ரீதிவ்யா பல காட்சிகளில் ஏக மேக்கப். நடிக்கும் வாய்ப்பு என்று பெரிய அளவில் காட்சிகள் இல்லை. “வருத்தப் படாத வாலிபர் சங்கம்” சிவா-ஸ்ரீதிவ்யா காதல் கலந்த காமெடி படம் என்பதால் இவருக்கு காட்சிகளும் அதிகம், நடிக்கும் வாய்ப்பும் அதிகம். இங்கு சிவா ஆக்சன் பக்கம் போய் விட்டதால் பாடல் காட்சிகளுக்கும், சில காதல் காட்சிகளுக்கும் மட்டுமே பயன்பட்டிருக்கிறார். பிரபு, இமான் அண்ணாச்சி, கல்பனா, மயில் சாமி, மனோபாலா என்று நடிகர்கள் சிலர் இருக்கிறார்கள். வில்லனாக நடித்திருக்கும் விஜய் ராஸ் அமைதியான அளவான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இடைவேளை முடிந்து பத்து நிமிடத்தில் வில்லன், அவரின் கொள்கை, அவரின் பலம் அனைத்தும் நமக்கு தெரிந்து விடுவதால் காட்சிகளில் பெரிய சுவாரசியம் தோன்றவில்லை. மனோபாலாவை வைத்து வில்லனை பிடிக்க திட்டம் இடம் காட்சிகள் எல்லாம் தொன்னூறுகளில் வரவேண்டிய காட்சிகள். அவரை வைத்து காமெடி செய்கிறோம் என்று நிறைய கடுப்ஸ். இதே போன்ற காட்சிகளோடு மனோபாலாவை வைத்து இரண்டு வருடங்களுக்கு முன்பு தான் “மாப்பிள்ளை” வேறு வந்தது. மீண்டும் ஏன் அதே போல இங்கே காமெடி காட்சிகள் என்று தெரியவில்லை.

வழக்கமான அனிருத் பாடல்கள். கேட்கவும் பார்க்கவும் நன்றாகவே இருந்தது.
“எதிர் நீச்சல்” படம் எடுத்த இயக்குனர் துரை செந்தில் குமாரின் இரண்டாவது படம் இந்த காக்கி சட்டை. கதையில் புதுமை இல்லாவிடினும் காட்சிகளில் ஏனும் புதிதாக செய்திருக்கலாம். “அதற்குள் இவரிடம் சரக்கு தீர்ந்து விட்டதா என்ன” என்று யோசிக்கத் தோன்றுகிறது பல காட்சிகள்.

சிவாவிற்கு பெண் ரசிகைகளும், குடும்ப ரசிகர்களும் நிறைய என்பதை தியட்டரில் இருந்த கூட்டம் உறுதி செய்தது. சில தரப்பு ரசிகர்களை இந்த காக்கி சட்டை திருப்தி செய்து விடும். சிவாவின் தற்போதைய மார்க்கெட்டும் அவருக்கு இருக்கும் சிறிய ரசிகர்கள் கூட்டமும் இந்த காக்கி சட்டையை வெற்றிப் படமாக்கி விடும் என்பது மட்டும் உறுதி.

Posted on முற்பகல் 8:47 by Elaya Raja

No comments