இந்த வரிகளும் நண்பன் ஒருவனின் குறும்படத்திற்காக எழுதப்பட்ட  வரிகளே... ஒரு தாய் தன் மகனுக்கு பாடுவதாக எழுதிய பாடல்.. 

பல்லவி :
கருவாய் என்னில் உதித்த பிறையே...
நீயின்றி வாழ்வில் ஏது நிறையே...
உன் புன்னகை தானடா எந்தன் உணவே...
கனவிலும் சுமக்கிறேன் உந்தன் நினைவே...
ஜென்மம் நூறு என்றாலும் உனையே ஈன்றிட வேண்டும்...
ஊர் மெச்சும் பிள்ளையெனவே உன்னை வளர்த்திட வேண்டும்...

சரணம் 1:
நீ பிறந்த நொடியே நானும் பிறந்தேன்...
உன்னுடன் சேர்ந்தே நானும் வளர்ந்தேன்...
உன் மழலைப் பேச்சில் புது மொழி அறிந்தேன்...
நமக்கெனத் தனியே ஓர் உலகம் உணர்ந்தேன்...
மகனாய் பிறந்த நீ எனக்கு இரண்டாம் தாயடா...
அணைத்து முத்தம் கொடுக்கையில் உன் அன்பில் நனைந்தேனடா...

சரணம் 2:
உனக்கென்று பாடவே தாலாட்டும் கற்றேன்...
தாய்ப்பால் ஊட்டும் போதிலே சுகமொன்றைப் பெற்றேன்...
பிஞ்சு பாதம் தூக்கி நடந்த போது 
இமை இருப்பதையும் மறந்து நின்றேன்...
அம்மா என்று அழைத்த நொடி 
பிறவி பூரணம் என்று நினைத்துக் கொண்டேன்...
என் அத்தனை உறவும் நீ தான் கண்ணே... 
வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுத்த என் மகனே