தலைப்பை படித்துவிட்டு பயந்து போன நண்பர்கள் மேலும் படிப்பதற்காக முன்பே சொல்லிவிடுகிறேன்.. இன்னும் எந்த வரிகளும் பாடலாக வில்லை.. பாடலாக்குவதற்க்கான முயற்சி மட்டுமே செய்து கொண்டிருக்கிறேன்..  நான் "கவிதை" என்று எழுத ஆரம்பித்ததே ஒரு விபத்து போல தான் நடந்தது.. கவிதை நூல்கள் வாசிப்பு, இலக்கண இலக்கிய அறிவு என்று பெரிய ஞானம் இல்லை.. ஆயினும் எழுதினேன்.. படித்துப் பார்த்த என் நலம் விரும்பும் நண்பர்களும் "நல்லா இருக்கு.. இன்னும் எழுதுடா.." என்று உசுப்பேற்றிவிட எதுகை மோனையோடு வார்த்தைகள் தேடித் திரியத் தொடங்கினேன்.. என் கவித் தொல்லையை அடிக்கடி சந்திக்க நேர்ந்த நண்பன் ஒருவன், அவன் நண்பனின் குறும்படத்திற்க்காக ஒரு பாடல் எழுதி தரும்படி கேட்டான்.. இசைக்கேற்ற பாடல் வரிகள் எழுதாமல் பாடல் வரிகளுக்கேற்ற இசையை அவர்கள் அமைத்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நானும் பாடல் வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறேன்... அந்த பாடல் வரிகள் தான் எக்ஸ்க்ளுசிவாக(?) உங்களுக்கு இங்கே... படித்து ரசியுங்கள்... 

பல்லவி :
பூலோகம் வந்த தேவதையே...
காதல் தந்த பேரழகே..
இருட்டாய் இருந்த என் வாழ்வில் 
விளக்காய் வந்து நின்றவளே..
நித்தம் இரவுக் கனவினில் புகுந்து 
முத்தங்கள் ஆயிரம் தந்தவளே..
காதலில் கரைகிறேன் பெண்ணே..
உன் விழிகளில் விழுந்ததன் பின்னே..

சரணம் 1:
இதயத்துடிப்பும் ஏறுதடி இதழோரம் 
புன்னகை நீ புரிந்தால்..
உலகமும் புதிதாய் தோன்றுதடி கைக்கோர்த்து 
உன்னுடன் நான் நடந்தால்..
என் வார்த்தைகளும் நாணம் கொள்ளும்
கவிதையென நீ பேசிடும் பொழுது..
கைகளும் ஏந்திடத் துடிக்கும் 
உன் கற்றைக் கூந்தல் காற்றில் தவழ்ந்திடும் பொழுது..
எத்தனை எத்தனை இன்பங்கள் தந்தாய்..
இன்னும் இன்னும் வேண்டும் என ஏங்கிட செய்தாய்..

சரணம் 2:
விண்மீன்களும் விட்டில் பூச்சியாய் 
மாறிப் போனதும் ஏனோ..?
வானவில்லும் வளைந்து நிற்கும் 
வண்ணக் குச்சியாய் தெரிவதும் ஏனோ..?
பனித்துளியும் சுடுவதாய் உணர்கிறேன் ஏனோ..?
அத்தனைக்கும் காரணம் காதல் வந்ததும் தானோ..?
தெரியவில்லை.. எதுவும் புரியவில்லை..
காதல் செய்திடும் ஜாலம் மூளை அறியவில்லை...


பின்குறிப்பு : அதென்ன தலைப்பு "நானும் என் பாடல் வரிகளும்" என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.. இதே போன்று பாடலாகாத பாடல் வரிகள் நிறைய கைவசம் இருக்கின்றன.. அதையும் பதிவிட வேண்டும்.. ஆகவேதான் இந்த தலைப்பு..