அஞ்சான் செல்வதாகத்தான் முதலில் திட்டம்.. ஆனால் அஞ்சான் பார்த்த நண்பர்கள் அனைவரும் சொல்லிவைத்தார்ப்போல் "மச்சான்.. படம் சூர மொக்கைடா.. தியேட்டர் பக்கம் கூட போய்டாத" என்று தவகல் தந்துவிட்டதால் இருந்த ஒரே ஒரு நூறு ரூபாயை வீணாக்க விரும்பாமல் "கதை திரைக்கதை வசனம் இயக்கம்" செல்லலாம் என்று முடிவு செய்தேன்.. பார்த்திபன் நடிக்காமல் இயக்கம் மட்டுமே செய்திருக்கிறார் என்பது ஒரு ஆறுதலாக இருந்தாலும் வித்தியாசம் என்ற பெயரில் "குடைக்குள் மழை" போல் கூடி கும்மியடித்து விட்டால் என்ன செய்வது என்று கொஞ்சம் பயமாகவே இருந்தது.. இறுதியில் ஒரு வித அசட்டு தைரியத்தில் படம் பார்க்க நண்பர்களுடன் சென்று விட்டேன்... "இந்த கதையெல்லாம் உன்ன நாங்க கேட்டோமா.. படம் எப்படி அத மட்டும் சொல்லு.." என்று உங்கள் மைன்ட் வாய்ஸ் நினைக்கலாம்.. விமர்சனம் பண்ண வந்துட்டு நாலு பாரா கூட எழுதலனா எப்டிங்க.. இன்னும் கேமரா கோணம், இசை, நடிப்பு அப்டின்னு பல ஏரியாவ அலச வேண்டியது வேற இருக்கு... அதனால எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு படிங்க...


கதை என்னன்னா..? "டேய்.. அதான் "Story without a story" னு பார்த்திபனே டேக் லைன் போட்டாரே அப்புறம் என்னடா கதைன்னு நினைக்குரிங்களா..? கரெக்ட் தான்... ஒரு அசிஸ்டெண்ட் டைரக்டர் எப்படி தன்னுடைய முதல் படத்தை இயக்க கஷ்டப்படுறார் என்பதை தான் காட்சிகளாக நகர்த்தி இருக்கிறார் பார்த்திபன்.. நண்பர்களுடன் தன் வீட்டிலேயே ஸ்டோரி டிஸ்கசன் செய்யும் ஹீரோ, அதனால் வேலைக்கு செல்லும் தன் காதல் மனைவியுடன் சிறு சிறு மனவருத்தம், இந்த மனவருத்த சம்பவத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நாற்பது வருடமாக சினிமாவில் அசிஸ்டெண்ட் டைரக்டராகவே இருக்கும் தம்பி ராமையா, தம்பி ராமையாவை அடிக்கடி கலாய்க்கும் முரளி என்ற கதாபாத்திரம், கலகலப்பான வசனங்கள், பார்த்திபனின் அக்மார்க் குண்டக்க மண்டக்க வசனங்கள் என்று படம் நன்றாகவே செல்கிறது... சினிமா பற்றிய இன்றைய ரசிகர்களின் தெளிவு, சினிமா பற்றிய திரைத்துறையினரின் கண்ணோட்டம் என்று கதாபாத்திரங்கள் அலசுவதைப் போல் பல காட்சிகள்.. அதிலும் ஒரு தயாரிப்பாளர் அழைத்து கதை சொல்லி ஹீரோவை இயக்கி தர சொல்லும் காட்சி, வசனங்களால் ரசிக்கும் படி இருந்தது.. நிறைய இடங்களில் பார்த்திபனின் முத்திரை தனியே தெரிந்தது.. உதாரணமாக இரண்டாம் ஹீரோயினாக வரும் பெண்ணின் காதல் கடிதத்தை ஹீரோ படிக்கும் பொழுது "இரு மாராப்பு" என்று வாசிக்க அங்கே பார்த்திபன் தோன்றி கடிதத்தின் வார்த்தைகள் க்ளோஸ் அப்பில் காட்டி "பாருங்க.. நான் இறுமாப்புனு எழுதியிருக்கேன்.. அத அவன் இரு மாராப்புனு படிக்குறான்.. நீங்களும் கேட்டுட்டு சும்மா இருக்கீங்க.." என்று சொல்லும் காட்சி நன்று... 

முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா நிறைய  காட்சிகளை கலகலப்பாக்கி இருக்கிறார்.. அவர் வாயை திறந்தாலே "அடுத்து என்ன பிரச்சனையை கெளப்ப போறாரோ.." என்று அவரின் கதாபாத்திரம் மீது ஒரு வித ஆத்திரம் கிளம்பியது.. அது கதாப்பாத்திரத்தை படைத்த  பார்த்திபனுக்கும், அதை ஏற்று நடித்திருக்கும் தம்பி ராமையாவிற்க்கும் கிடைத்த வெற்றியாகவே நினைக்க தோன்றுகிறது... மற்றபடி ஹீரோ, ஹீரோயின் இருவரும் கொடுத்த வேலையை குறை சொல்ல முடியாத அளவிற்கு செய்திருக்கிறார்கள்... நிறைய நடிகர்கள் கௌரவ தோற்றத்தில் நடித்திருப்பது வெறும் விளம்பரம் மட்டுமே.. யாருக்கும் பெரிய முக்கியத்துவம் இல்லை.. ஆர்யா, அமலாபால் இருவருக்கு மட்டுமே காட்சிகளும், நடிப்பதற்கான வாய்ப்பும் அதிகம்... ஆர்யா சம்பளம் வாங்கிவிட்டு நடிக்கும் படத்திலையே நடிக்காமல் கடுப்பேத்துவார்.. இது சும்மா நடித்துக் கொடுத்தது... அதனால் இந்த ரியாக்சன் போதும் என்று நினைத்து விட்டார் போல.. வந்த அனைத்து காட்சிகளிலும் ஒரே ரியாக்சன்... 

குறைகளும் இல்லாமல் இல்லை...  டிஸ்கசன் டிஸ்கசன் என்று ஒரே அறைக்குள் நிறையக் காட்சிகள் நகர்வதால் சில இடங்களில் போர் அடித்தது... படத்தை அதுவரை போர் அடிக்காமல் நகர்த்தி வந்த காமெடி, ஆர்யா, அமலாபால் காட்சிகளின் போது மிஸ்ஸிங் என்பதால் அந்த காட்சிகளின் போது தான் லைட்டாக தூக்கம் வந்தது.. என்றாலும் படம் பற்றிய மதிப்பீட்டை அந்த காட்சிகள் மாற்றவில்லை... 

கதை திரைக்கதை வசனம் இயக்கம் - படத்தின் அருமையான வசனங்களுக்காகவும், தம்பி ராமையாவின் காமெடிக்காகவும் நிச்சயம் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்...

பச்சக்குதிரை பார்க்க தியேட்டர் போய் கதற கதற அழுதது இன்னும் நினைவில் இருக்கிறது.. ஆனால் இந்த படத்தின் மூலம் இயக்குனர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் நிச்சயம் back to form தான்.. நடிகராக அவர் பிடிக்கத் தவறிய பெரிய இடத்தை இயக்குனராக பிடிப்பார் என்று நம்பி வாழ்த்துவோம்...