பீட்சாவின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கி வெளிவந்திருக்கும் படம்  "ஜிகர்தண்டா".. (உபரித்தகவல் : இது தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக இருந்த முதல் படம்.. படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் திருக்குமரன் எண்டெர்டைன்மெண்ட் சி.வி.குமார் குறைந்த பட்ஜெட்டில் ஒரு கதை கேட்க அதன் பின் கார்த்திக் எழுதியதே பீட்சா...)  போர்ப்ஸ் பத்திரிக்கையில்  2014ல் எதிர்பார்க்கப்படும் 5 படங்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே தமிழ் திரைப்படம் ஜிகர்தண்டா... படத்தின் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்றதும், ஜிகர்தண்டா "A dirty carnival" என்ற கொரிய படத்தின் காப்பி என்ற குற்றச்சாட்டும் படம் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியது.. இத்தனை எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளிவந்திருக்கும் ஜிகர்தண்டா எப்படி..?தனியார் தொலைக்காட்சி நடத்தும் குறும்பட போட்டியில் கலந்துகொள்ளும் ஹீரோ சித்தார்த் இரண்டு நடுவர்களில் ஒருவரால் எலிமினேட் செய்யப்படுகிறார்.. இன்னொரு நடுவராக வந்திருக்கும் தயாரிப்பாளர், சித்தார்த்க்கு ஆதரவாகப் பேசி அவருக்கு தன்னுடைய தயாரிப்பில் படம் இயக்க வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளிக்கிறார்.. அந்த தயாரிப்பாளர் ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு கேங்க்ஸ்டர் கதை கேட்க ஒரு நிஜ ரௌடியின் கதையை படமாக்க விரும்புகிறார் சித்தார்த்.. மதுரையில் அசால்ட் சேது என்று பெரிய ரௌடி இருப்பதாக நியூஸ் ரிப்போட்டேராக இருக்கும் தன் மாமா மூலம் தெரிந்து கொள்ளும் சித்தார்த் மதுரையில் இருக்கும் தன்னுடைய கல்லூரி கால நண்பன் கருணாகரன் உதவியை நாடுகிறார்.. முதலில் பயந்து மறுக்கும் கருணாகரன் பிறகு சித்தார்த்க்கு உதவி புரிகிறார்.. சேதுவை பற்றி தெரிந்து கொள்ள அவனுடைய கூட்டத்தில் இருக்கும் முக்கிய நபர்களை நெருங்குகிறார்கள் சித்தார்த் அண்ட் கருணா... சேதுவை இவர்கள் பின்தொடர்வதை சேது கூட்டத்தினர் கண்டுபிடித்துவிட அதன் பின் நடக்கும் களேபரங்களும், கலகலப்புக்களுமே "ஜிகர்தண்டா"..

ஜிகர்தண்டாவின் ஹீரோ சந்தேகமே இல்லாமல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தான்... கதையிலும் காட்சி அமைப்பிலும் ஒரு புதுவித அனுபவத்தை ஏற்படுத்தி சம்பவங்களை நேரில் பார்ப்பதை போன்ற உணர்வை தருகிறார்.. அந்த உணர்வை ஏற்படுத்துவதில் ஒளிப்பதிவும் முக்கிய பங்காற்றியிருக்கிறது... குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு காட்சி, கழிப்பறையில் சிம்ஹாவை கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சி... நாமே அங்கே இருந்து அதை பார்ப்பதை போன்ற ஒரு உணர்வு... படத்தின் அடுத்த ஹீரோ சேதுவாக நடித்திருக்கும் சிம்ஹா... ஒவ்வொரு காட்சியிலும் தூள் கிளப்புகிறார்... மிரட்டுவதிலும் சரி, நடிப்பு பயிற்சி எடுப்பதாக சிரிக்க வைப்பதிலும் சரி சூப்பர்... "அசோக்க்க்க்..." என அண்ணாமலைக் காட்சியை நடித்துக் காட்டும் காட்சி நினைத்து நினைத்து சிரிக்க வைக்கும்... இவருக்கு அடுத்து காட்சிகளை அதிகம் சுவாரசியப்படுத்தியது கருணாகரன்... "யாமிருக்க பயமே" படத்திற்கு அடுத்து இதிலும் பட்டையை கிளப்பியிருக்கிறார்... குருவம்மா கதை கேட்டுவிட்டு ஹலுசினசன் என்று சித்தர்த்திடம் விளக்கம் கொடுக்கும் காட்சியிலும், நடிப்பு பயிற்சி வகுப்பில் பாஸாகிடோம் என்று ரியாக்சன் கொடுக்கும் காட்சிலும் என்று நிறைய ரசிக்க வைத்தார்... ஒவ்வொரு காட்சியிலும் சித்தார்த் இருந்தாலும் சிம்ஹா,கருணாகரன் இவர்களே காட்சிகளை தன் வசமாக்கி கொண்டுள்ளனர்.. சித்தார்த் அவருக்கு ஒதுக்கப்பட்ட காட்சிகளை குறைவில்லாமல் செய்திருக்கிறார் அவ்வளவே...

படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு விஷயம் சந்தோஷ் நாராயணின் இசை.. பிண்ணனி இசையில் இசை சாம்ராஜ்யம் தான்... இடைவேளையின் போதான காட்சியில் வரும் இசை சூப்பர்... "பாண்டிநாட்டுக் கொடியின் மேலே" பாடலும், கிணற்றுக்குள் படமாக்கிய விதமும் நன்றாக இருந்தது... இரண்டாம்பாதி சற்று நீளம் என்ற போதிலும் அது பெரிய குறையாக உறுத்தவில்லை... 

ஒருவன் உங்களை பற்றி சினிமா எடுக்கிறேன் என்று சொன்னதும் 48 கொலைகள் செய்த ஒரு ரௌடி தான் செய்த அத்தனை கொலைகள் பற்றியும் சற்றும் யோசிக்காமல் வாக்குமூலம் கொடுப்பதை போலவா கொடுப்பார்...? கொடுத்ததோடு அல்லாமல் அதன் சினிமா கதாபாத்திரத்தில் தானேவா நடிப்பார்...? நம்பமுடியவில்லை... அத்தனை கொலைகள் செய்தவன் சினிமாவில் நடிகனாதும் அவன் செய்த குற்றங்கள் அனைத்தும் மறைந்துவிடுமா...?அசல் சினிமா தனம்... 

ஜிகர்தண்டா - காட்சிப்படுத்திய விதத்தில் ரசிகர்களை கவர்ந்து திருப்தி கொடுக்கும் திரைப்படம்...