"ஆடுனக் காலும், பாடுன வாயும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாங்க.." அதே போல் எழுதிப் பழகிய கையும் சும்மா இருக்காது.. அதனால்  புதிதாக ஒரு பதிவு எழுதலாம் என்று தோன்றியது.. ஆனால் எதைப் பற்றி எழுதுவது... இங்கு எழுதுவதற்கு விஷயங்களுக்கா பஞ்சம்..? ஆனால் எனக்கு உருப்படியாக தெரிந்தது சினிமா மட்டுமே.. அதனால் எனக்கு பிடித்த, எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்களைப் பற்றி பதிவு எழுதலாம் என்று இதோ கிளம்பிவிட்டேன்.. 

பிடித்த திரைப்படங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் நிச்சயம் அதில் "அபூர்வ சகோதரர்கள்" திரைபடத்தை சேர்த்துவிடுவேன்.. அந்த அளவிற்கு எனக்கு பிடித்த திரைப்படம் அது.. 


விவரம் தெரிந்த நாள் முதலாக நான் ரஜினி ரசிகன்.. ( யாரும் சொல்லாத புது விஷயம் அல்ல இது.. எண்பதுகளுக்கு பிறகு பிறந்தவர்களில் 90 சதவிகிதம் "நான் ரஜினி ரசிகன்" என்ற முத்திரையோடு திரிபவர்களே.. எதனால் ரஜினியை பிடிக்கும் என்பதும் சொல்லித் தெரிய வேண்டிய விஷயமில்லை... ) ஆகவே ரஜினி படங்களை விரும்பி பார்த்த அளவிற்கு சிறு வயதில் கமல் படங்களை விரும்பி பார்த்ததில்லை.. ஆனால் எதேச்சையாக ஒரு நாள் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை பார்த்தேன்.. அன்று முதல் எத்தனை முறை இந்த படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினாலும் முதல் முறை பார்ப்பதைப் போலவே விரும்பி பார்க்க தொடங்கினேன்... "டேய்.. உன் படம் போட்டங்கடா.." என்று வீட்டில் எல்லோரும் சொல்லும் அளவிற்கு ரசித்து பார்ப்பேன்.. ஏன் அந்த அளவிற்கு இந்த படம் எனக்குப் பிடித்துப் போனது..?

"அபூர்வ சகோதரர்கள்" பார்க்கும் முன்பு வரை நான் பார்த்த திரைப்படங்கள் சராசரி உயரத்தில் இருக்கும் எம்ஜிஆர், ரஜினி ஆகியோர் எதிரிகளைப் பந்தாடும் திரைப்படங்களே.. கமல் நடித்த காக்கி சட்டை, விக்ரம் போன்ற படங்களையும் பார்த்திருக்கிறேன்... என்றாலும் உயரம் குறைவான, மற்றவரின் கேலிக்கு உள்ளாகும் நிலையில் உள்ள ஒருவன் தன் தந்தையைக் கொன்றவர்களை பழி தீர்க்கிறான் என்னும் ஒரு சுவாரசியம் படத்தை வேறு ஒரு தளத்தில் வைத்து என்னைப் பார்க்க செய்தது.. அத்தனை ஆர்வத்துடன் இந்த படத்தை முதல் முறை தொலைக்காட்சியில் நான் பார்த்தது இன்றும் என் நினைவில் தொக்கி நிற்கிறது...

படத்தின் அறிமுகக் காட்சிகளும் அதற்க்கு இளையராஜாவின் பின்னணி இசையும் அசத்தலாக இடம் பெற்றிருக்கும்.. இளையராஜாவின் இசை இந்த படத்தின் இன்னொரு நாயகன் என தாராளமாக சொல்லலாம்.. முக்கியமாக  படத்தின் தீம் மியூசிக்.. 

படத்தில் எனக்குப் பிடித்த சில முக்கியமான காட்சிகள்.. 
1) ரூபிணியுடன் கமல் ரெஜிஸ்டர் ஆபீஸ் செல்லும் காட்சி. டாக்ஸி டிரைவர் கல்யாண வாழ்த்து சொல்லியதும் அவனுக்கு டிப்ஸ் கொடுப்பதும், கல்யாணம் தன்னுடன் இல்லை என்று தெரிந்ததும் உடைந்து நொறுங்குவதும், அங்கு எல்லோரும் தன் உயரத்தைப் பற்றி  கேலி செய்யும் போது அழுகையுடன் கலந்த ஒரு அசட்டு சிரிப்பு சிரிப்பதும் என்று "கமல்" என்ற நடிகனை மறந்து விட்டு அப்புக்காக அந்த காட்சியில்  நம் மனம் கலங்கிடும்.. காதல் என்றால் என்ன என்று தெரியாத வயதில் அப்புவின் காதலுக்காக என்னை கலங்க செய்த காட்சி இது..
2) டெல்லி கணேஷை கொலை செய்யும் காட்சி.. "அட.. கொலைகாரப் பாவி.. கொலை பண்ற சீன்னு உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கா..?" என்று நினைக்காதீர்கள்... கொலையைக் கூட ஒரு கலையைப்(?) போல அதில் காட்சிப் படுத்தி இருப்பார்கள்.. அதனால்தான் சொன்னேன்..
3) "உன்னை நினைச்சேன்.. பாட்டு படிச்சேன்" பாடலும் அதை தொடர்ந்து வரும் காட்சிகளும்...

படத்தில் என்னை அசுவாரசியப்படுத்தும் காட்சிகள் என்றால் அது கமல், கௌதமி காதல் காட்சிகள் தான்.. படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இன்னொரு முக்கியமான அம்சம் நாகேஷை வில்லனாகப் பயன்படுத்தியது.. காமெடி, குணசித்திரம் மட்டுமே செய்து வந்த நாகேஷ் வில்லனாக நடித்தது அது தான் முதல் முறை என நினைக்கிறன்.. சிறப்பாகவே செய்திருப்பார்...

ஆகமொத்தம் எனது விருப்பத் திரைப்படங்களின் லிஸ்டில் என்றும் முதல் இடம் "அபூர்வ சகோதரர்கள்" திரைப்படத்திற்கே...