முதன் முதலாக ஒரு ஆண்மகனுடன் ஒரே அறையில் அபர்ணா. நியாயமாக முதலிரவான இன்று அபர்ணாவின் மனதினை வெட்கமும், பதற்றமும், ஒரு வித அச்சமுமே ஆட்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்க்கு பதிலாக குழப்பமும், கவலையும், பயமுமே அவள் மனதில் நிரம்பிக் கிடந்தது. 13 மணிநேரங்களுக்கு முன்பு கழுத்தில் தாலி ஏறிய பெண்ணுக்கு குழப்பமும், கவலையும், பயமும் வேறு எதைப் பற்றி இருந்துவிடப் போகிறது..? அவளது மணவாழ்க்கையின் எதிர்காலம் குறித்தே அந்த பயம். சந்தோசம் பொங்க வேண்டிய நேரத்தில் அவள் பயம் கொள்ள காரணம் தாலி கட்டியதும் தன் கடமை முடிந்துவிட்டது என்ற முகபாவத்துடன் அவளோடு அமர்ந்திருக்கும் பார்த்திபன் தான்.

"என்ன அபர்ணா.. ஏதும் பேசமாட்டேங்குற.. உன்னை எல்லாரும் வாயாடின்னு சொன்னாங்க.." என்று பார்த்திபனே பேச்சை தொடங்கி வைத்தான்.
"நீங்க அமைதியா இருந்திங்கஅதான் நானும் ஏதும் பேசல.."
" சாரி.. கொஞ்சம் நெர்வஸா இருந்தது.. அதான்.." எனக் கூறி அசடு வழிவதைப் போல் சிரித்து விட்டு மீண்டும் தொடர்ந்தான்.
"நாம மேரேஜிக்கு முன்னால பேசிக்கிட்டது இல்ல.. அதனால உன்னப் பத்தி எனக்கு தெரியாது.. என்னை பத்தி உனக்கு தெரியாது.. ஸோ பர்ஸ்ட் என்னைப் பத்தி நான் சொல்றேன்.." கூறிவிட்டு ஏதோ சொற்பொழிவாற்றப் போவதைப் போல் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.. அபர்ணா எந்தவித அசைவுமின்றி கண்ணிமைக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள் ..
"எனக்கு சின்ன வயசுலிருந்தே அப்பானா ரொம்ப பயம்.. ஏன்னா அவரு வெளிய மட்டும் போலிஸ்காரரா இல்லாம வீட்டுக்குள்ளேயும் போலீசா இருந்தது தான்.. எனக்கு என் அம்மா, தங்கச்சி ரெண்டு போரையும் ரொம்ப பிடிக்கும்.. அம்மா இறந்தத இன்னவரைக்கும் என்னால தாங்கிக்க முடியல.."
இதைக் கூறும் பொழுது அவனது குரல் சற்று உடைந்ததைப் போன்று உணர்ந்தாள் அபர்ணா. ஆனால் அவனை ஆறுதல் படுத்துவதைப் போல் எந்த வார்த்தையும் கூற அவள் முற்படவில்லை. காரணம் முன்பே கூறியதைப் போல் அவள் மனதை முற்றுகையிட்டிருந்த அந்த குழப்பமும், கவலையும், பயமுமேதன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் தொடரலானான் பார்த்திபன்..
"சாரி.. அப்புறம் எனக்கு பிரெண்ட்ஸ் ரொம்ப ஜாஸ்தி.. மேரேஜிலையே பாத்திருப்பியே.. எல்லாரும் ஸ்கூல், காலேஜ், ஆபீஸ் பிரெண்ட்ஸ் தான்.. சண்டே ஆனா பிரெண்ட்ஸ் கூட சேந்துட்டு சென்னைய ஒரு ரவுண்டு வந்துடுவேன்.. பார்க், பீச், சினிமான்னு அலப்பறை பண்ணுவோம்.. ரஜினி, அஜித் படம்னா முதல் நாள் முதல் ஷோ எங்க இருந்தாலும் போய்டுவேன்.. எனக்கு புக்ஸ் படிக்குறதுக்கு ரொம்ப பிடிக்கும்.. கல்கி, சுஜாதா, அசோகமித்திரன் எல்லோரையும் படிச்சிடுவேன்.. அப்புறம்.." எனக் கூறிவிட்டு அபர்ணாவின் முகத்தைப் பார்த்தவன்..,
"தூக்கம் வருதா..? சாரி.. ரொம்ப மொக்கைப் போட்டேனோ.." என, அவள் "இல்லை" என்று கூறுவாள் என்ற நம்பிக்கையுடன் கேட்டான். அவளும் அவன் நம்பிக்கையை காப்பாற்றும் விதமாய்..
"ச்சே..ச்சே.. இல்லை" எனப் பொய் சொன்னாள்..
"ஓகே.. என்னைப் பத்தி சொன்னது போதும்னு நினைக்குறேன்.. நீ சொல்லு அபர்ணா உன்னைப் பத்தி, உன் பிரெண்ட்ஸ், பிடிச்ச மூவி, பிடிச்ச ஆக்டர், பிடிச்ச புக்ஸ் எதுவா இருந்தாலும் சொல்லு.." என்றான் பார்த்திபன்.

பார்த்திபன் கூறியதைப் போல் , வீட்டிலும், வெளியிலும் அனைவரிடமும் வாயாடி என்ற பட்டம் பெற்றவள் தான் அபர்ணா.. "காலையில சாப்டியா" என்று கேட்டால் கூட பத்து பக்கத்திற்கு பேசுபவள் இன்று வார்த்தைகள் அனைத்தையும் விற்றுவிட்டவள் போல் அமைதியே உருவாக தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் பேசுவாள் என்று சற்று நேரம் காத்திருந்த பார்த்திபன் ஏதும் அவள் பேசாதது கண்டு, சிரித்துக் கொண்டே 
"அபர்ணா.. வெக்கப்படாத.. எதாவது பேசு.." என்றான்..
கண்ணீர் துளிகளை தாங்கிய விழிகளுடன் அவனை நிமிர்ந்து பார்த்தவள்..
"என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா பிடிக்கலையா..?" என்றாள். அழுதபடி அவள் அவ்வாறு கேட்டது பார்த்திபனை கொஞ்ச நேரம் திகைக்க வைத்துவிட்டது. அபர்ணா எழுப்பிய கேள்வியில் எவ்வித தவறுமில்லை. அவள் மனதை அப்படிக் கேட்கும் நிலைக்கு சஞ்சலப்படுத்தியது பார்த்திபனே..

பி.எஸ்.சி முடித்த பார்த்திபனின் கனவு, ஆசை, லட்சியம் எல்லாம் சினிமா இயக்குனர் ஆக வேண்டும் என்பதே. ஆனால் அவனது அப்பாவின் கண்டிப்பு இயக்குனர் கனவிற்கு முட்டுக்கட்டைப் போட்டது. பார்த்திபனும் அவனது ஆசையை அப்போதைக்கு தள்ளி வைத்தானே தவிர முற்றிலும் ஒதுக்கிவிடவில்லை. அதனால் தற்காலிகமாக ஒரு BPO நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தான். அவனது அப்பாவின் சர்வாதிகார ஆட்சியில் பார்த்திபன், பார்த்திபனின் அம்மா, தங்கை சுமதி மூவரும் தாம் விரும்பியதை அவரிடம் கேட்பதை மறந்து விட்டு அவர் கொடுப்பதை விரும்பிட பழகிக் கொண்டனர். பார்த்திபனுக்கும், சுமதிக்கும் அம்மாவின் அன்பே அந்த சர்வாதிகார ஆட்சியில் கிடைத்த ஒரே ஆறுதல். அந்த ஆறுதலும் புற்று நோயால் பாதிக்கப்பட்டு பார்த்திபனின் அம்மா எவ்வித சிகிச்சையும் பலனளிக்காமல் இறந்த போது பறிபோனது. ஹிட்லர்(பார்த்திபனின் அப்பா) மனைவியின் மரணத்திற்கு வருந்தினாரா என்பதை பார்த்திபன் அறிய முற்பட்ட போது அந்த கரும்பாறையில் எந்த வித உணர்ச்சியும் அவனால் அறிய முடியவில்லை. அதன் பிறகு வீடே சூன்யம் பிடித்ததை போலாகிவிட்டது. கொஞ்சமாக வாழ்ந்து வந்த சிரிப்பும், மகிழ்ச்சியும் அந்த வீட்டை காலி செய்து கொண்டு சென்றுவிட்டது. ஒரு தாளின் ஒரே பக்கத்தில் எழுதிவிடக் கூடிய அளவிற்கே வீட்டில் உரையாடல் நடந்தது. பார்த்திபனுக்கும், சுமதிக்கும் அம்மா இல்லாத வீட்டில் வாழ்வது நரகத்தில் இருப்பதைப் போன்ற உணர்வையே கொடுத்தது.

பார்த்திபனின் அம்மா இறந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு ஹிட்லரின் உறவினர் ஒருவன் ஹிட்லரின் சொந்த ஊரான திருநெல்வேலி அருகேயுள்ள வள்ளியூரிலிருந்து வந்திருந்தார்.
"ஏம்ப்பா செல்வம்(ஹிட்லர்).. தங்கச்சி இறந்த பிறகு வீடே இப்படி ஆகிடிசேப்பா.. புள்ளைங்க ரெண்டும் சொரத்தையே இல்லாம இருக்கு.." என்றார் உறவினர்.
"நான் என்ன மச்சான் பண்றது.. இதுங்கள இப்புடி உட்டுட்டு அவ போய் சேந்துட்டா.. நான் தான் இங்க கிடந்து அல்லாடுறேன்.."
வீட்டின் முன் அறையில் நடந்த இந்த சம்பாசனை அங்கு நிலவிய அமைதியின் காரணமாய் உள் அறையில் படித்துக் கொண்டிருந்த சுமதிக்கு தெளிவாய்க் கேட்டன.

"இவரு என்ன பெருசா அல்லாடுறாரு.. எப்பவும் போல மூஞ்ச உம்முன்னு வச்சிட்டு தான் சுத்துறாரு.. நாங்க தான் அம்மா இல்லாம தவிக்குறோம்.." என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவளாய் அவர்கள் பேசிக் கொள்வதை மீண்டும் கவனிக்கத் தொடங்கினாள்.. 
"செல்வம்.. ஒரு கெட்டது நடந்த வீட்ல சீக்கிரம் ஒரு நல்லது பண்ணனும்னு சொல்வாங்க.. பேசாம நம்ம பார்த்திபனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வச்சிடேன்.."
"என்ன மச்சான் சொல்றிங்க.. அவனுக்கு என்ன வயசாகுது.. அதுக்குள்ள கல்யாணத்துக்கு என்ன அவசரம்..?"
"செல்வம்.. பெத்தவங்களுக்கு புள்ளைங்க எப்பவும் குழந்தைங்க தான்.. அதுக்காக கல்யாணம் பண்ணி வைக்காம விட்டுடலாமா..?? படிச்சி முடிச்சிட்டு புள்ளை நல்லா கைநிறைய சம்பாதிக்குறான்.. இதுக்கு மேல கல்யாணம் பண்ண என்ன வயசாகனும்னு சொல்ற.." என்று முடித்தார் அந்த உறவினர்.
எப்போதும் முடிவு தான் எடுப்பதே என்ற கொள்கையுடன் இருக்கும் செல்வம் அன்று ஏனோ சற்று யோசிக்க ஆரம்பித்தார். அந்த சிறிது நேர யோசனையை பயன்படுத்திக் கொள்ள நினைத்த உறவினர் மீண்டும் தொடர்ந்தார்..
"ஒன்னும் யோசிக்காத செல்வம்.. ஒரு மருமக வந்தா நம்ம சுமதிக்கு அம்மா இல்லாத குறை தெரியாத அளவுக்கு பாத்துக்குவா.. அதுமட்டுமில்லாம சுமதி வேற இந்த வருஷம் பன்னிரெண்டாவது வகுப்பு... புள்ள பரீட்சைக்கு படிக்குமா இல்ல உங்களுக்கு சமச்சி போட்டுட்டு இருக்குமா..? யோசிச்சிப்பாரு..."
ஏற்கனவே அந்த உறவினரின் வாதத்தில் அடங்கிப் போயிருந்த செல்வம் கடைசியாக அவர் சொன்னதைக் கேட்டு முற்றிலும் அமைதியாகிவிட்டார். சிறிது நேரம் கழித்து பேசத் தொடங்கிய செல்வம்..,
"சரி மச்சான்.. நீங்க இவ்ளோ தூரம் சொல்றிங்க.. பாக்கலாம்." என்றார்..
"செல்வம்.. நம்ம ஊர்லையே எனக்கு தெரிஞ்ச ஒருத்தரோட பொண்ணு இருக்கு.. நல்ல வசதி.. பொண்ணும் நல்லா இருக்கும்.. நீ சரின்னு சொன்னா அந்த பொண்ணயே நம்ம பார்த்திபனுக்கு முடிச்சிடலாம்.. என்ன சொல்ற..?"
"சரி மச்சான்.. ஒரு நல்ல நாள் பாத்து அந்த பொண்ண வந்து பாக்குறோம்.. எல்லாம் சரியா இருந்தா முடிச்சிடலாம்.."

இது அத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த சுமதிக்கு உற்சாகம் தாளவில்லை. தனக்கு அண்ணி வரப் போகிறாள் என்ற சந்தோசம் ஒரு புறம் இருந்தாலும் மனதின் ஒரு மூலையில் "அப்பாடா.. வீட்டு வேளையில் இருந்து இனி விடுதலை.." என்ற சந்தோசமும் சேர்ந்தே இருந்தது. பார்த்திபன் வந்ததும் சுமதி அவனிடம் இவை அனைத்தையும் கூறியதும் அவரின் சர்வாதிகாரம் இன்னும் அடங்காததை நினைத்து அவனுக்கு கோபமே மேலிட்டது. ஆத்திரம் அடக்க மாட்டாமல் அவரிடம் இதைப் பற்றிக் கேட்டும் விட்டான்..
"ஆமாடா.. உனக்கு கல்யாணம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கேன்.. அதுக்கென்னா இப்ப..?"
"என்னைக் கேக்காம எப்படி நீங்க முடிவு பண்ணலாம்..?" என்றான் பார்த்திபன். அவரை என்றும் எதிர்த்துப் பேசாத அவன் இன்று அப்படி பேசியதும், செல்வத்தின் உதடுகள் கோபத்தில் துடித்தன..
"என்னடா சம்பாதிக்க ஆரம்பிச்சிட்ட திமிரா..? உன்னைக் கேட்டா உன்னை பெத்தேன்.. உன்னைக் கேட்டா உனக்கு பேரு வச்சேன்.. உன்னைக் கேட்டா ஸ்கூல்ல உன்னை சேத்தேன்.. உன்னைக் கேட்டா காலேஜ்ல படிக்க வச்சேன்.. அப்புறம் இத மட்டும் என்ன மயித்துக்குடா நான் உன்கிட்ட கேக்கணும்."
"பெத்திங்க.. வளத்திங்க.. படிக்க வச்சிங்கனா அது உங்க கடமை... ஆனா கல்யாணம் என்னோட லைப் பிரச்சனை.. பெத்திங்ககுரதுக்காக என் வாழ்க்கைய நீங்க வாழ முடியாது.. நான் தான் வாழனும்.."
பேச்சு தடிப்பதைக் கண்டு சுமதி, பார்த்திபனை ஆசுவாசப்படுத்த முயன்றாள்..
"என்னடா என்னையே எதிர்த்துப் பேசுற.." என்று கையை ஓங்கிக் கொண்டு வந்த செல்வதை சுமதி தடுத்துக் கொண்டாள்..
"டேய்.. அடுத்த வாரமே  அந்த பொண்ண போய் பாக்குறோம்.. எனக்குப் புடிச்சிருந்தா பத்தே நாள்ல கல்யாணம்.." எனக் கூறிவிட்டு நகர்ந்தார் செல்வம். பார்த்திபன் பேச்சற்றவனாய் அங்கேயே நின்றிருந்தான்.

வள்ளியூரில் போய் அபர்ணாவை பார்த்ததும் செல்வத்திற்கு மிகவும் பிடித்துப் போய்விட்டது. அவள் காபி கொண்டு வந்து கொடுத்த பொழுது முகத்தைப் பார்த்து விட்டு திரும்பிக் கொண்டான் பார்த்திபன். சுமதிக்கும் அபர்ணாவை பிடித்துப் போய்விட்டது
"தம்பிக்கு வேலை என்ன..?" என்றார் அபர்ணாவின் அப்பா சுந்தரம்.
"கம்ப்யூட்டர் எஞ்சினீயரா இருக்காரு சென்னைல.. மாசம் முப்பதாயிரம் சம்பளம்.." என்றார் இந்த சம்பவம் நடக்க காரணமான அந்த உறவினர். பார்த்திபன் குறுக்கிட்டு..,
"அதெல்லாம் இல்லைங்க... BPO கம்பெனில வேலை பாக்குறேன்... மாசம் பதினைஞ்சாயிரம்  தான் சம்பளம்.." என்றான்.. பார்த்திபனின் இந்த நேர்மையான பேச்சில் அவன் மீது ஒரு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டுவிட்டது சுந்தரத்திற்கு. பிறகென்ன பத்தே நாளில் திருமணம் என்று ஏற்பாடாகிவிட்டது. பார்த்திபன் சென்னை வந்ததும் செல்வத்திடம் பேசிப் பார்த்தான் திருமணம் வேண்டாம் என்று. ஆனால் அவர் மசிவதாய் தெரியவில்லை.  பத்திரிக்கை விநியோகிப்பதில் சுந்தரமும், செல்வமும் பரபரப்பாக இருந்தனர். திருமணத்திற்கு நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் வள்ளியூர் சென்று சுந்தரத்தை சந்தித்தான் பார்த்திபன். அவனின் வரவை எதிர்பார்க்காத சுந்தரம்.., 
"என்ன மாப்ள.. திடீர்னு ஒரு போன் கூட பண்ணாம வந்திருக்கீங்க.." என்றார்..
"சார்.. இந்த கல்யாணம் வேணாம்.. தயவு செய்து நிறுத்திடுங்க.."
பார்த்திபன் கூறியதைக் கேட்டதும் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன சுந்தரத்திற்கு...
"மாப்ள.. கல்யாணத்துக்கு இன்னும் நாலு நாள் தான் இருக்கு.. இந்த நேரத்துல வந்து இப்படி ஒரு குண்டைத் தூக்கி போடுறிங்களே.. ஏன் மாப்ள.. என்னாச்சி சொல்லுங்க..."
"சார்.. இப்ப வந்து இப்படி சொல்றதுக்கு என்னை மன்னிச்சிடுங்க...ஆனா எனக்கு வேற வழி இல்ல.. என் சிச்சுவேசன் அந்த மாதிரி"
"இப்படி சொன்ன எப்படி மாப்ள.. என்ன காரணம்னு சொல்லுங்க.. என் மேல ஏதும் தப்பு இருக்கா..?"
"சார்.. உங்க மேல ஒரு தப்பும் இல்ல.. தப்பெல்லாம் என் மேலதான்.. என் அப்பா வற்புறுத்துனாருனு தான் நான் அன்னைக்கு பொண்ணு பாக்கவே வந்தேன்.. எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்ல.."
"விருப்பம் இல்லன்னு பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லிருந்தா இவ்ளோ தூரம் பிரச்னை வந்திருக்காதுல.."
"சார்.. புரிஞ்சிகோங்க.. என்னோட சேலரி வெறும் பதினைஞ்சாயிரம்தான்.. இந்த சேலரி வச்சிட்டு சென்னைல குடும்பம் நடத்துரதெல்லாம் ரொம்ப கஷ்டம் சார்.. பின்னாடி உங்க பொண்ணு தான் ரொம்ப கஷ்டப்படும்.. அதான் சொல்றேன்.. கல்யாணத்த நிறுத்திடுங்க..." 
"தம்பி.. சிட்டி மாதிரி இல்ல இங்க.. கல்யாணம் நிச்சயமாகி அது நின்னு போனா என் பொண்ண யாரு தம்பி கட்டிக்க வருவாங்க... ஊருக்குள்ள என் பொண்ணுக்கு தான் ஏதோ குறைன்னு பேசிக்குவாங்க.. சொந்தக்காரங்க முன்னாடி எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு போய் நிப்போம்.." எனக் கூறிவிட்டு கண்கலங்கினார் சுந்தரம்..

கல்யாணம் நின்றால் அதனால் அந்த பெண்ணுக்கு நிகழும் விளைவுகளை சுந்தரம் கூறக் கேட்டதும் கல்யாணத்தை நிறுத்த அவன் கூறிய காரணங்கள் உப்புசப்பிலாததாக அவனுக்கு தோன்றின. அமைதியாக அவர் அருகே சென்று கைகளை ஆதரவாய் பற்றியவாறு..,
"சார்.. அழாதிங்க.. நீங்க கல்யாண வேலைகளைப் போய் பாருங்க..." எனக் கூறிவிட்டு வந்துவிட்டான்.. 
இவை அத்தனையும் தெரிய வந்ததும் அபர்ணா நொறுங்கிப் போய்விட்டாள். அபர்ணாவிற்கு பார்த்திபனை பார்த்த மாத்திரத்திலேயே பிடித்துப் போய்விட்டது. அவனது கம்பீரமும், வெளிப்படையாக அவன் அன்று பேசியதும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால் இந்த திருமணத்தில் அவனுக்கு விருப்பமில்லையென்று தெரிந்ததும் கலங்கி விட்டாள்.

ஒரு வழியாக திருமணம் நடந்தேறியது. ஆனால் அபர்ணாவிற்கு தன் எதிர்காலம் குறித்த பீதி அவள் மனதை குடைந்து கொண்டே இருந்தது. திருமணதிற்கு வந்திருந்த உறவினர், நண்பர்களுடன் சிரித்தபடியே புகைப்படம் எடுத்துக் கொண்டாளே தவிர மனம் முதலிரவின் தனிமையில் பார்த்திபனிடம் கேட்பதற்கு சில கேள்விகளை ஒத்திகை பார்த்துக் கொண்டே இருந்தது.
"என்னை பிடிச்சிருக்கா.. பிடிக்கலையா..?"
"பிடிக்கலைனா பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்லியிருக்கலாம்ல.."
"கல்யாணம்னா விளையாட்டாப் போச்சா உங்களுக்கு.. வேணும்னா நடத்துறதுக்கும்.. வேணாம்னா நிறுத்துறதுக்கும்.." 

இந்த ஒத்திகையின் முதல் கேள்வியைத் தான் கேட்டுவிட்டு அழத் தொடங்கிருந்தாள் அபர்ணா..
"ஏய் அபர்ணா.. ஏன் அழுற..?"
"சொல்லுங்க.. என்னைப் பிடிச்சிருக்கா.. பிடிக்கலையா...?"
"பிடிக்காமலா உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. பிடிக்காமலா உன்னோட பேசிட்டு இருக்கேன்.."
"அப்புறம் ஏன் அப்பாக்கிட்ட கல்யாணத்த நிறுத்த சொல்லி சொன்னீங்க.."
"ஐயோ அது வேற அபர்ணா.. என்னோட சேலரி வெறும் பதினைஞ்சாயிரம் தான்.. அத வச்சிட்டு எப்படி பாமிலி ரன் பண்ண முடியும்.. அப்பாவும் அடுத்த வருஷம் ரிட்டயர்ட் ஆகிடுவாரு.. இதுல சுமதியோட படிப்பு செலவு இருக்கு.. அப்புறம் சுமதிக்கு மேரேஜ் பண்ணனும்.. இப்படி இருக்கும் போது நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு  குழந்தை பெத்துக்கிட்டா என்ன ஆகிறது.. அதனால தான் மாமாக்கிட்ட அப்படி சொன்னேன்.. மத்தபடி உன்னை பிடிக்காம இல்ல.." என்றான் பார்த்திபன்
அவனின் இந்த சமாதான பேச்சில் தன் அழுகையில் பாதியை கரைத்திருந்த அபர்ணா..,
"நிஜமா..?" என்றாள்..
"நிஜமா தான்.. கல்யாணம் பண்ண பிடிக்கலன்னா பொண்ணு பாக்க வந்தப்பவே சொல்ல வேண்டியது தானேன்னு மாமா கேட்டாரு.. அதுக்கு ரீசன் அவர்ட்ட சொல்லல.. ஆனா உன்கிட்ட சொல்றேன்.." எனக் கூறிவிட்டு அபர்ணாவை நெருங்கி வந்தான் பார்த்திபன். அவளின் சுவாசத்தின் சூட்டினை உணரும் அளவிற்கு அவளை நெருங்கிய பின் தொடர்ந்தான்..,
"அன்னைக்கு உன்ன பாத்ததுமே நான் ப்ளாட்.. ரொம்ப பிடிச்சி போச்சி.. இவ்ளோ அழகான பொண்ணு எனக்கு பொண்டாட்டியானு நினைச்சேன்.. அந்த நினைப்பிலையே கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லன்னு சொல்ல முடியல.. கல்யாணத்துல தான் எனக்கு விருப்பமில்லைனு மாமாகிட்ட சொன்னேன்.. உன் மேல இல்ல.."
பார்த்திபனின் இந்த வார்த்தைகளை கேட்டதும் அபர்ணாவின் முகம் பனி விலகிய பாதை போல், இருள் விலகிய மேகம் போல் பிரகாசமானது. மகிழ்ச்சியின் உச்சத்திற்கு சென்ற அபர்ணா பார்த்திபனை இறுக அணைத்துக் கொண்டாள்.
"அபர்ணா.." என்று அவள் காதோடு மெதுவாக அழைத்தான் பார்த்திபன்..
"ஹ்ம்ம்."
" லவ் யு..!"
"நானும் லவ் யு.." எனக் கூறி விட்டு வெட்கத்தில் பார்த்திபனின் நெஞ்சில் முகம் புதைத்தாள் அபர்ணா.. பார்த்திபனும் தன் கரங்களை கோர்த்து அபர்ணாவை இறுக அணைத்தான். அந்த அணைப்பில் அபர்ணா தன் எதிர்காலம் குறித்து எழுப்பியிருந்த சந்தேகக் கோட்டை சுக்கலாய் நொறுங்கிப் போனது..