நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே நாளில் திரையரங்கில் இரண்டு திரைப்படங்கள் பார்த்தேன்.. அவை தெகிடி மற்றும் நிமிர்ந்து நில்.. தெகிடி  செல்வது  முன்பே திட்டமிட்டது... நிமிர்ந்து நில் திடிரென முடிவானது.. முதலில் தெகிடி திரைப்படம் பற்றிய என் திரை அனுபவத்தை சொல்லி விடுகிறேன்...ராஜேஷ் குமார் நாவல் படித்ததை போன்ற ஒரு உணர்வைக் கொடுத்தது தெகிடி.. மிக சிறிய அளவிலான கதாபாத்திரங்கள்.. முதலில் நல்லவர்களாய் சித்தரிக்கப்பட்டவர்கள் முடிவில் குற்றம் இளைப்பவர்களாய் இருப்பார்கள்.. என்று அக்மார்க் ராஜேஷ் குமார்  பாணியிலான திரைப்படம்.. ஆனால் சற்றும் அலுக்காமல் விறுவிறுப்பாய் நகர்கிறது திரைப்படம்.. தொழில்நுட்பரீதியாகவும் தெகிடி சிறப்பாக இருந்தது... குறிப்பாக படத்தின் பின்னணி இசை... காட்சிகளின் பரபரப்பை ரசிகனுக்குள் சுலபமாக கடத்தி விடுகிறது இசை.. வசனங்களும் வழ வழா என்று இல்லாமல் கட்சிதமாய் ரசிக்கும் விதமாகவும் இருந்தது... இப்படி ஒரு அருமையான திரில்லர் படத்தில் பொறி பறக்கும் சண்டைக் காட்சி ஒன்று இல்லாதது ஒரு சிறிய குறையே... இருப்பினும் படம் முடிந்து வெளியே வரும் பொழுது "படம் சூப்பர் .. இன்னொரு தடவை பாக்கணும்", "செம்ம ட்விஸ்ட்" என்று பல கமெண்ட்கள் காதில் விழுந்தன.. பார்வையாளர்களுக்கு கிடைக்கும் இந்த திருப்தியே படத்தின் வெற்றி.. மொத்தத்தில் நிறைவான ஒரு சஸ்பென்ஸ் திரில்லர்...


நிமிர்ந்து நில் திரைபடத்திற்கு எனக்கிருந்த ஆவல் இதன் இயக்குனர் சமுத்திரக்கனி என்பதே.. அவரை ஒரு நடிகராக விட , ஒரு இயக்குனராக விட ஒரு வசனகர்த்தாவாக மிகவும் ரசித்தேன்... நாடோடிகள் மற்றும் போராளி திரைப்படங்களின் நச் வசனங்களே அதற்க்கு காரணம்... நான் எதிர்பார்த்தை போன்றே இதிலும் நறுக்கு தெறிக்கும் வசனங்கள்... ஆனால் நன்றாக வசனம் எழுத வருகிறது என்பதற்காக நிமிட நேர இடைவெளி கூட இல்லாமல் திரையில் எல்லோரும் பக்கம் பக்கமாக வசனம் பேசிக்கொண்டே இருந்தால் படம் பார்க்கும் பார்வையாளனின் நிலை என்னவாகும்...?? தலை எனக்கும் கிறுகிறுத்து விட்டது... அந்நியன், ரமணா, சிட்டிசன் என்று பல படங்களின் தாக்கங்கள் படம் முழுவதும் இறைந்து கிடக்கின்றன...  முன்பாதியில் ஒருவன் தன் சட்டையை கிழிக்கும் பொழுது அமைதியாக இருந்து விடும் ரவி பின்பாதியில் இன்னொரு ரவியை கொள்ளும் அளவிற்கு கோபம் கொள்ளுவதும், தான் கல்யாணம் செய்து கொள்ள இருக்கும் பெண்ணை முதன் முறை சந்திக்கும் பொழுது ஒன்னாம் வகுப்பு படிக்கையில்  தான் பேச்சு போட்டியில் பெற்ற பரிசு என்று தேவையில்லாத விஷயங்களை பேசி மொக்கை போடும் ரவி பின்பாதியில் செம்ம ஷார்ப்பாக இருப்பதும் ரவியின் பாத்திரம் மீது ஒரு வித குழப்பத்தை ஏற்படுத்துகிறது... படத்தின் பாடல்கள் பெரிய முட்டுக்கட்டை... இடைவேளை முடிந்து படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களுக்குள் ஒரு பாட்டு வைத்தே ஆக வேண்டும் என்ற வட்டத்துக்குள் இருந்து என்று தமிழ் சினிமா வெளியில் வருமோ..? இரண்டு ரவியும் மோதி கொள்ளும் காட்சி அசல் சினிமா தனம்.. செய்தி தாள்களில் நாம் படித்த விஷயங்கள் அனைத்தையும் தொகுத்து பாட்டு, சண்டை, காமெடி என்று சில விஷயங்கள் சேர்த்து ஒரு திரைப்படமாக கொடுத்திருக்கிறார் சமுத்திரக்கனி... என்றாலும் இந்த திரைப்படம் பேசும் சமூகத்தின் அவலங்கள் மீதான அக்கறைக்காக நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம்...