போர்களின் மூலம் ஒரு நாட்டை தன்  வசமாக்கிக் கொள்வது இருபதாம் நூற்றாண்டின் பிற்ப்பாதியில் உலகப் பேரரசு என்ற நாற்காலியை நோக்கி  ஓடிய  அமெரிக்காவிற்கு சற்று சவாலாக இருக்கவே அவர்கள் கண்டுபிடித்த தந்திரம் பொருளாதாரத்தின் மூலம் அந்நாட்டை அடிமைப்படுத்துவது. அவ்வாறு அடிமைப்படுத்தியதன் பின் அந்நாட்டின் இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் முடிந்த வரை சுரண்டுவது. குறிப்பிட்ட நாடுகளை அடிமைப்படுத்த அவர்கள் பயன்படுத்திய EHM (Economic Hit Man) என்றழைக்கப்படும் பொருளாதார அடியாளாகப் பணிபுரிந்த ஜான் பெர்கின்ஸ் என்பவர் எழுதிய நூலே இது. 
"நாட்டினை சீரமைப்பதற்கு கடன் கொடுக்கிறோம். அதன் மூலம் இந்த திட்டங்களை நிறைவேற்றினால் உங்கள் நாட்டின் பொருளாதாரம் இத்தனை சதவிகிதம் உயரும்.." என்று புள்ளிவிவரங்களின் மூலம் அதிகாரத்தில் இருப்பவர்களை சம்மதிக்கச் செய்வதே இந்த பொருளாதார அடியாட்களின் வேலை. அவ்வாறு சம்மதிக்காத அதிகாரிகளையும், அரசாங்கத்தையும் மற்றவர்களை கலகம் மற்றும் புரட்சி செய்ய தூண்டி விட்டு அந்த இடத்தில் தனக்கு சாதகமானவர்களை அமர்த்தி தான் நினைத்தை அமெரிக்கா அரசாங்கம் நிறைவேற்றிக் கொள்ளும். இந்த பொருளாதார அடியாட்கள் தனியார் நிறுவனங்களுக்காகவே பணிபுரிவார்கள். ஆனால் அந்த தனியார் நிறுவனங்கள் அரசாங்கத்தின் மறைமுக கூலிகள்.

ஈக்வடார், பனாமா , சவுதி அரேபியா, ஈராக், கொலம்பியா, வெனிசுலா என்று எண்ணெய் வள நாடுகளை கொள்ளைஅடிக்க அமெரிக்கா செய்த குள்ளநரி வேலைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த நூல். அவர்களுக்கு ஒத்துழைக்காத பனாமாவின் ஜெனரல் டோரிஜோஸ், ஈக்வடாரின் பிரசிடெண்ட் ரோல்டோஸ் போன்றவர்கள் விமான விபத்தில் இறந்தார்கள். நிற்க. கொல்லபட்டார்கள். அமெரிக்காவின் எண்ணெய் அரசியல் பற்றிய புரியதலை ஏற்படுத்துகிறது இந்த நூல். சமூக அக்கறை உள்ள அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய நூல். உலகமயமாக்கல் மீதான நமது பார்வையை இந்த நூல் மாற்றி அமைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை..