மக்களிடம் பணம் வசூலித்து அதன் மூலம் படம் தயாரிக்கும் "crowd funding" எனப்படும் முறையில் கன்னடத்தில் உருவாகி சமிபத்தில் வெளிவந்து இந்திய அளவில் சினிமா ரசிகர்களையும் சினிமாவில் இருப்பவர்களையும் ஒரு சேர ஆச்சர்யப்படுத்திய "லூசியா"  திரைப்படத்தினை நேற்று பார்த்தேன்.. இத்திரைபடத்தை பற்றி கேள்வி படும் முன்பே தினகரன் வெள்ளி மலரில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்ட முறையைப் பற்றி படித்தேன்.. சினிமாவில் நுழையத் துடிப்பவர்களுக்கும் முதல் பட வாய்ப்பிற்காக ஏங்கி தவிக்கும் உதவி இயக்குனர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாய் இருந்த அந்த கட்டுரை இந்த படத்தின் இயக்குனர் பற்றி ஒரு நல்ல பிம்பத்தை என்னுள் விதைத்தது.. முதல் படம் பெரிய வெற்றி.. இருப்பினும் இவரின் இந்த "லூசியா" வை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. அதற்க்கு பதிலாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற "எங்கேயும் எப்போதும் " படத்தினை ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்திருக்கிறது.. பணம் மட்டுமே பிரதானம் என அவர் நினைத்திருந்தால் அந்த வாய்ப்பினை ஏற்று இருக்கலாம்.. ஆனால் தான் இயங்கும் கன்னட சினிமாவின் தரம் உயர வேண்டும் என நினைத்தவர் அந்த வாய்ப்பினை மறுத்து விட்டார்.. அதன் பலன் இந்திய அளவில் அவருக்கும் அவரின் "லூசியா"விற்கும் கிடைத்திருக்கும் இந்த மாபெரும் வரவேற்பு.. அவர் என்ன நினைத்து இத்திரைபடத்தை எடுத்தாரோ அது நடந்தே விட்டது.. ஆம்.. கன்னட சினிமா கவனிக்கப்பட்டு விட்டது.. நான் பார்த்த முதல் கன்னட படம் இதுவே.. நிச்சயம் பல பேர் பார்த்த முதல் கன்னட படம் இதுவாகவே இருக்கும் என்பதும் என் கணிப்பு.. பல ஆச்சர்யங்களை இத்திரைப்படம் நிகழ்த்தியிருக்கிறது.. இன்னும் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.. ஒரு இயக்குனர் தன் கதையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தான் நினைத்ததை திரையில் கொண்டு வரலாம் என்பதற்கு இத்திரைப்பட தயாரிப்பு ஒரு திறவுகோல்.. "crowd funding " முறையில் இனி பல திரைப்படங்களை பார்க்க போகிறோம் என்பதற்கு இத்திரைப்படத்தின் மிகபெரும் வெற்றி ஒரு விதை.. 
இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, வசனம், இசை, நடிப்பு, இயக்கம் இன்ன பிற விஷயங்கள் என்று எதையும் "விமர்சனம்" செய்வதை போல் எழுதி காமெடி செய்ய விரும்பவில்லை.. ஆகவே இதை விமர்சனம் என்ற கண்ணோட்டத்துடன் தொடர வேண்டாம்..

எங்கோ படித்த நியாபகம்.. எங்கு என்று தெரியவில்லை.. ஜேம்ஸ் காமேரூனிடம் "ஒரு திரைபடத்தை எப்படி சுவாரசியமாக்குவது..?" என்று ஒரு கேள்வி கேட்க பட்ட பொழுது அவர் அளித்த பதில்.. "படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனை சற்றும் அவன் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தினை கொடுத்து ஏமாற்ற வேண்டும். (ட்விஸ்ட் கொடுக்குறேன் பேர்வழி என்று சிலர் நம் உயிரை எடுப்பது இதில் விதிவிலக்கு) அப்படிபட்ட படங்களும் காட்சிகளும் மிகவும் சுவாரசியமாக அமைந்து விடும்.. காமரூனின் இந்த வார்த்தைகளை உண்மையாக்கிய சமிபத்திய தமிழ் படம்  "பீட்சா".. "நல்லா ஏமாந்தியா" என்று கடைசியில் ரசிகனை ஏமாளியாக்கி எல்லா ஏமாளிகளையும் திருப்தி செய்த படம்.. அதையே தான் "லூசியா"வும் செய்கிறது.. படம் பார்த்த நண்பன் ஒருவன் படத்துல "செம்ம ட்விஸ்ட்.. ஆனா அத முன்னாடியே கண்டுபிடிச்சிட்டேன்" என்று கூறியதால் நானும் படம் ஆரம்பித்த நொடி முதல் என் புலன் விசாரணையை தொடங்கி விட்டேன்.. மிஷன் சக்சஸ்.. 

படத்தில் நான் மிகவும் ரசித்ததில் ஒன்று.. கதாநாயகனாக நடித்தவரின் நடிப்பு.. புகழ் பெற்ற முன்னணி நடிகர், திரையரங்கில் டார்ச் அடிப்பவன் இருவருக்கும் உண்டான உடல் மொழியில் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார்..

சாதாரண கதை.. அசாத்தியமான திரைக்கதை.. மொத்ததுல குமுதா மட்டுமல்ல நானும் ஹாப்பி அண்ணாச்சி...