வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

நேசித்தவளின் மரணத்தை தாங்க முடியாத ஒருவனின் கதறலாய், தமிழில் ஏற்கனவே இருக்கும் 32078513(எண்ணிக்கை இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்) கவிதைகளோடு நான் சேர்த்த 32078514வது சோக  கவிதை...

பனித்துளி பெண்ணே நீ கரைந்ததும் ஏனோ..?
தனிமையின் கையில் எனைக் கொடுத்ததும் ஏனோ...?
கதை பேசும் உந்தன் கண்கள் கனவாகிப் போனதடி..
நினைவுகள் மட்டும் இன்று நிஜமாக தோன்றுதடி...
எங்கே எங்கே உந்தன் வாசம்..
என் இதயம் கேட்குதடி உந்தன் நேசம்..

அதிகாலை பொழுதுகள் அழகாய் தொடங்கி வைப்பாய்..
உறங்கிடும் இரவுகள் அணைப்பினில் முடித்து வைப்பாய்..
கோலப் பொடிதனில் கோடி ஓவியம் தீட்டிடுவாய்..
வானவில் இழுத்து வந்து வாசலில் நிறுத்திடுவாய்..
குறும்பு செய்யும் தருணம் ஒரு குழந்தையென மாறிடுவாய்..
அன்பு தரும் பொழுது அன்னையென தோன்றிடுவாய்..
இறக்கைகள் கொடுத்தாய் இதயத்திற்கு..
அர்த்தங்கள் கொடுத்தாய் என் நிமிடங்களுக்கு...

இருப்பேன் என்று உன்னுடன் என்றாயே..
விடையில்ல கேள்வியை எனை மாற்றிவிட்டு சென்றாயே..
உணர்வுகள் தொலைத்து நிற்கிறேன் இங்கே..
என் உயிர் மலரே நீ போனதும் எங்கே..
சுற்றி இங்கே ஆயிரம் சொந்தம்..
என்றாலும் ஒருவனாய் உணருதே நெஞ்சம்...
வாய் விட்டு நான் கதறும் இந்நொடி 
இறந்தாலும் இன்பமே என் பூங்கொடி...

பின் குறிப்பு : நண்பன் ஒருவனின் குறும்படத்திற்க்காக எழுதப்பட்ட பாடலே இது... 
பின் குறிப்புக்கு ஒரு பின் குறிப்பு : இந்த பாடல் இதுவரை பாடலாகவே இல்லை... 

Posted on பிற்பகல் 11:27 by Elaya Raja

No comments

திங்கள், 10 பிப்ரவரி, 2014

கடந்த இரண்டு நாட்களாக சோக முடிவுகள் கொண்ட பருத்தி வீரன், பொற்காலம், போன்ற திரைப்படங்களை தொலைக்காட்சியில் பார்த்து நொந்து கிடந்த மனதிற்கு படம் முழுவதும் ஒரு வித பாஸிடிவ் எனர்ஜியை பரவ விட்டிருந்த "பண்ணையாரும் பத்மினியும்" ஒரு புத்துணர்வு கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கு பெற்று அனைவரின் பாராட்டு பெற்ற படம் குறும்படமே இந்த முழுநீள திரைப்படம். ஆனால்  அந்த குறும்படம் தான் இது என்று கூற முடியாத அளவிற்கு புது கதாபாத்திரங்கள் சேர்த்து அருமையான திரைக்கதையால் ரசிக்க வைக்கிறார் இயக்குனர் S.U.அருண்குமார்.பண்ணையாராக ஜெயபிரகாஷ் வெளுத்து வாங்குறார். எனக்கு மிகவும் பிடித்த நடிகர். மிகையில்லாத நடிப்பால் மனம் நிறைகிறார். இவரை விட பொருத்தமாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யாருமில்லை என்று நினைக்க வைக்கிறார். அவர் மட்டுமல்ல. படத்தில் உள்ள அனைவருமே தங்கள் கதாபாத்திரங்களுக்கு தங்கள் நடிப்பின் மூலம் உயிரூட்டி உள்ளனர். விஜய்சேதுபதி அறிமுக காட்சி மட்டும் மாஸ் ஹீரோவுக்கான என்ட்ரி. ஆனால் அதையும் நகைச்சுவையாய் மாற்றி சிரிக்க வைக்கிறார்கள். பீடை என்ற கதாபாத்திரத்தில் வரும் பாலா வரும் அத்தனை காட்சியிலும் சிரிக்க வைத்து செல்கிறார்.

படத்தின் உயிர்நாடியாக வரும் பத்மினி கார். ஒரு கதாபாத்திரமாகவே படம் பார்க்கும் ரசிகனின் மனதில் பதிந்து விடுகிறது. பால்ய வயதில் நாம் ஆசைப்பட்டு கிடைக்காதவை என்றும் வடுவாகவே நம் மனதில் வாழும் என்பதை "அட்டக்கத்தி " தினேஷ் கதாபாத்திரத்தின் மூலம் உணர வைக்கிறார்கள். இரண்டரை மணி நேரம் ஒரு கிராமத்திற்குள் வாழ்ந்து விட்டு வந்த உணர்வு படம் முடிந்து வெளியில் வரும் பொழுது மனதினை ஆக்கிரமித்திருந்தது. வன்மம், குரோதம், ரத்தம், சத்தம், அரிவாள் என்று ஏதுமில்லாத வெள்ளந்தி மனிதர்கள் வாழும் "பண்ணையாரும் பத்மினியும்" நிறைவான படம்.

கோடிகளை கொட்டி குப்பைகள் தரும் இயக்குனர்கள் விட சில கோடிகளில் சிறந்த படங்கள் தரும் இது போன்ற இயக்குனர்களே தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த தளத்திற்கு இட்டு செல்வார்கள் என்பது நிச்சயம்.

Posted on முற்பகல் 6:32 by Elaya Raja

No comments

வியாழன், 6 பிப்ரவரி, 2014


அமெரிக்க உலக வர்த்தக மைய கட்டடம் மீதான அல்கொய்தாவின் தாக்குதலுக்கு காரணமான விதை எங்கு விழுந்தது..? உலக நாடுகளின் தலைவன் என்ற மனபோக்கு கொண்ட அமெரிக்காவின் அத்தனை பாதுகாப்பு அரண்களையும் தாண்டி அதுவரை உலகம் கண்டிராத புதுவிதமான மாபெரும் தாக்குதலை எவ்வாறு அல்கொய்தா நடத்தியது என்று அலசும் நூல்.

புத்தகத்தின் தொடக்கம் ஆங்கில படங்களின் அறிமுக காட்சியை போல் தொடங்குகிறது. அந்த விறுவிறுப்பு சற்றும் குறையாமல் அடுத்தடுத்து வரும் பகுதிகளும் இருக்கின்றன. வர்த்தக மைய கட்டட தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்தையும் தெளிவாக விளக்கிச் செல்கிறது நூல்.

ஒசாமாவின் மதப் பற்று. அதன் மூலம் அவருக்கு கிடைத்த தொடர்புகள். அல்கொய்தா என்ற பெயரில் ஒரு இயக்கம் தொடங்கும் முன்பு ஒரு சிறு படையினை தோற்றுவித்து அதற்க்கு பயிற்சி கொடுத்தல். ஆப்கன் - சோவியத் படைகளுக்கிடையே நடந்த யுத்தம். அதில் ஒசாமாவின் படைகளின் பங்கு. அதன் மூலம் கிடைத்த அமெரிக்காவின் ஆதரவு. சவூதி அரேபியாவில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை வெறுத்த ஒசாமாவின் நிலைப்பாடு. உலக முஸ்லிம் இளைஞர் மத்தியில் பெரும் தாக்கத்தை தன் பேச்சின் மூலம் ஒசாமா ஏற்படுத்தியது. மொத்த அமெரிக்காவுமே நமது எதிரி என்ற மனநிலையை ஒசாமா பெறுவது. பகையின் உச்சமாய் உலக வர்த்தக மைய கட்டிட தாக்குதலை நிறைவேற்றுதல். இத்தனை பெரிய தாக்குதலை அல்கொய்தா திட்டமிடும் பொது அமெரிக்காவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் கொண்டிருந்த நிலை. அவர்கள் கோட்டை விட்ட இடங்கள் என்று அனைத்து தகவல்களையும் புள்ளி விவரங்களுடன் கூறும் ஒரு தெளிவான விறுவிறுப்பான நூல்.

Posted on முற்பகல் 12:47 by Elaya Raja

No comments

சனி, 1 பிப்ரவரி, 2014

மக்களிடம் பணம் வசூலித்து அதன் மூலம் படம் தயாரிக்கும் "crowd funding" எனப்படும் முறையில் கன்னடத்தில் உருவாகி சமிபத்தில் வெளிவந்து இந்திய அளவில் சினிமா ரசிகர்களையும் சினிமாவில் இருப்பவர்களையும் ஒரு சேர ஆச்சர்யப்படுத்திய "லூசியா"  திரைப்படத்தினை நேற்று பார்த்தேன்.. இத்திரைபடத்தை பற்றி கேள்வி படும் முன்பே தினகரன் வெள்ளி மலரில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்ட முறையைப் பற்றி படித்தேன்.. சினிமாவில் நுழையத் துடிப்பவர்களுக்கும் முதல் பட வாய்ப்பிற்காக ஏங்கி தவிக்கும் உதவி இயக்குனர்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாய் இருந்த அந்த கட்டுரை இந்த படத்தின் இயக்குனர் பற்றி ஒரு நல்ல பிம்பத்தை என்னுள் விதைத்தது.. முதல் படம் பெரிய வெற்றி.. இருப்பினும் இவரின் இந்த "லூசியா" வை யாரும் கண்டுக்கொள்ளவில்லை.. அதற்க்கு பதிலாக தமிழில் பெரும் வெற்றி பெற்ற "எங்கேயும் எப்போதும் " படத்தினை ரீமேக் செய்யும் வாய்ப்பு வந்திருக்கிறது.. பணம் மட்டுமே பிரதானம் என அவர் நினைத்திருந்தால் அந்த வாய்ப்பினை ஏற்று இருக்கலாம்.. ஆனால் தான் இயங்கும் கன்னட சினிமாவின் தரம் உயர வேண்டும் என நினைத்தவர் அந்த வாய்ப்பினை மறுத்து விட்டார்.. அதன் பலன் இந்திய அளவில் அவருக்கும் அவரின் "லூசியா"விற்கும் கிடைத்திருக்கும் இந்த மாபெரும் வரவேற்பு.. அவர் என்ன நினைத்து இத்திரைபடத்தை எடுத்தாரோ அது நடந்தே விட்டது.. ஆம்.. கன்னட சினிமா கவனிக்கப்பட்டு விட்டது.. நான் பார்த்த முதல் கன்னட படம் இதுவே.. நிச்சயம் பல பேர் பார்த்த முதல் கன்னட படம் இதுவாகவே இருக்கும் என்பதும் என் கணிப்பு.. பல ஆச்சர்யங்களை இத்திரைப்படம் நிகழ்த்தியிருக்கிறது.. இன்னும் நிகழ்த்திக் கொண்டே இருக்கிறது.. ஒரு இயக்குனர் தன் கதையில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் தான் நினைத்ததை திரையில் கொண்டு வரலாம் என்பதற்கு இத்திரைப்பட தயாரிப்பு ஒரு திறவுகோல்.. "crowd funding " முறையில் இனி பல திரைப்படங்களை பார்க்க போகிறோம் என்பதற்கு இத்திரைப்படத்தின் மிகபெரும் வெற்றி ஒரு விதை.. 
இத்திரைப்படத்தின் கதை, திரைக்கதை, ஒளிப்பதிவு, வசனம், இசை, நடிப்பு, இயக்கம் இன்ன பிற விஷயங்கள் என்று எதையும் "விமர்சனம்" செய்வதை போல் எழுதி காமெடி செய்ய விரும்பவில்லை.. ஆகவே இதை விமர்சனம் என்ற கண்ணோட்டத்துடன் தொடர வேண்டாம்..

எங்கோ படித்த நியாபகம்.. எங்கு என்று தெரியவில்லை.. ஜேம்ஸ் காமேரூனிடம் "ஒரு திரைபடத்தை எப்படி சுவாரசியமாக்குவது..?" என்று ஒரு கேள்வி கேட்க பட்ட பொழுது அவர் அளித்த பதில்.. "படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனை சற்றும் அவன் எதிர்பார்க்காத ஒரு திருப்பத்தினை கொடுத்து ஏமாற்ற வேண்டும். (ட்விஸ்ட் கொடுக்குறேன் பேர்வழி என்று சிலர் நம் உயிரை எடுப்பது இதில் விதிவிலக்கு) அப்படிபட்ட படங்களும் காட்சிகளும் மிகவும் சுவாரசியமாக அமைந்து விடும்.. காமரூனின் இந்த வார்த்தைகளை உண்மையாக்கிய சமிபத்திய தமிழ் படம்  "பீட்சா".. "நல்லா ஏமாந்தியா" என்று கடைசியில் ரசிகனை ஏமாளியாக்கி எல்லா ஏமாளிகளையும் திருப்தி செய்த படம்.. அதையே தான் "லூசியா"வும் செய்கிறது.. படம் பார்த்த நண்பன் ஒருவன் படத்துல "செம்ம ட்விஸ்ட்.. ஆனா அத முன்னாடியே கண்டுபிடிச்சிட்டேன்" என்று கூறியதால் நானும் படம் ஆரம்பித்த நொடி முதல் என் புலன் விசாரணையை தொடங்கி விட்டேன்.. மிஷன் சக்சஸ்.. 

படத்தில் நான் மிகவும் ரசித்ததில் ஒன்று.. கதாநாயகனாக நடித்தவரின் நடிப்பு.. புகழ் பெற்ற முன்னணி நடிகர், திரையரங்கில் டார்ச் அடிப்பவன் இருவருக்கும் உண்டான உடல் மொழியில் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார்..

சாதாரண கதை.. அசாத்தியமான திரைக்கதை.. மொத்ததுல குமுதா மட்டுமல்ல நானும் ஹாப்பி அண்ணாச்சி...

Posted on முற்பகல் 3:48 by Elaya Raja

No comments