பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களும் குதூகலமும் தான். அந்த கொண்டாட்டங்களின் பெரும் பகுதியை ஆக்ரமிப்பது பண்டிகை தினமன்று வெளியாகும் திரைப்படங்களே. ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு சினிமாவை தவிர்த்துவிட்டால் கொண்டாட்டமேது. அதுவும் மதம் போல சினிமா பரவிக்கிடக்கும் நம் தமிழ்நாட்டில்.

சினிமா, கலை எனும் வடிவத்தை தாண்டி வியாபாரம் எனும் வட்டத்திற்குள் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. களம் மாற மாற சினிமா வியாபாரமும் தன முகத்தை மாற்றிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய முகம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளிவந்து படம் பற்றிய கருத்துகளும், திருட்டு விசிடிக்களும் பரவும் முன் வசூலை வாரிக் கொள்ளுதல். “பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் என்ற பழமொழிக்கேற்ப பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார், பிரம்மாண்ட விளம்பரங்களோடு பெருவாரியான திரையரங்குகளை ஆக்ரமித்து வசூல் ஈட்டிக் கொள்கின்றன. இந்த பார்மெட்டில் புதுவரவுகள் வீரம் மற்றும் ஜில்லா.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி, ரஜினி-கமல், என்ற ஒப்பீட்டு வரிசையில் இடம் பெற்றவர்கள் விஜய்-அஜித். ஏற்கனவே இருவரின் படங்களும் ஒரே நாளில் பல முறை வெளிவந்திருந்தாலும் ஏழு வருடங்களுக்குப் பிறகு மோதிக் கொள்வதால் எதிர்பார்ப்புகள் இமயமலை அளவிற்கு எகிறிக் கிடக்கின்றன. அந்த எதிர்பார்ப்பு விஜய்-அஜித் ரசிகர்களுக்கிடையே மட்டுமல்ல சராசரி சினிமா ரசிகனையும் கூட “யார் படம் ஜெயிக்கும்? என்ற வாக்குவாதத்தில் பங்கு கொள்ள செய்திருக்கிறது. அலுவலகம், டீக்கடை, பேருந்து நிறுத்தம் என்று அனைத்து இடங்களிலும் இந்த “நீயா..? நானா..? ஓடிக் கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் விஜய்-அஜித் ரசிகர்கள் வார்த்தை போர் புரியும் போர்க்களமாகிவிட்டன. அந்த வாக்குவாதங்கள் புதிதல்ல என்றாலும் இந்த தருணத்தில் சற்று உக்கிரமடைந்திருக்கிறது  என்றே சொல்ல வேண்டும்.
விஜய்-அஜித் இருவரும் இன்று நல்ல நட்பு பாராட்டுகிறார்கள் என்றாலும் ரசிகர்கள் இவர்களின் திரைப்படங்களைப் பொறுத்த வரையில் இன்னும் முட்டிக் கொள்ளவே செய்கிறார்கள். படங்கள் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ப்ளெக்ஸ், பேனர் என்று அமர்க்களப்படுத்த தொடங்கிவிட்டார்கள். இதற்ககு முன்பு விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசான பொழுது ஏற்பட்ட மோதல்கள் இந்த முறை ஏற்படக்கூடாது என்று காவல் துறை எச்சரிக்கை விட்டிருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் இடி இன்றி மழையேது..?

ஜில்லா ஜெயிக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் ஆசை. வீரம் ஜெயிக்க வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் ஆசை. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் என்பது சினிமாவை நேசிப்பவர்களின் ஆசை. அனைவரின் ஆசையும் நிறைவேற ஒரு நாள் பொறுத்திருப்போம்.