ஞாயிறு, 19 ஜனவரி, 2014

கடந்த வருடம் தான் முதன் முதலாக புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்தேன்.. சென்ற புத்தக காட்சிக்கு முன்பு வரை நான் புத்தகங்களை வெளியில் வாங்கி படித்ததில்லை.. எனது சொந்த ஊரில் உள்ள நூலகத்தில் இருந்து எடுத்து வந்த புத்தகங்களை மட்டுமே வாசித்து வந்தேன்.. நூலகத்தில் நான் எடுக்கும் புத்தகங்கள் மூன்று தான்.. ஆனால் அங்குள்ள அனைத்து புத்தகங்களையும் எடுத்து பார்த்து விடுவேன்.. அப்படி பார்ப்பதில் ஏதோ ஒரு ஆனந்தம்.. இப்படிப்பட்ட எனக்கு இப்படி புத்தக மலைகளுக்கு நடுவில் நிற்பது எத்தனை ஆனந்தம் என்று சொல்ல வேண்டியது இல்லை.. அதனால் அடுத்த புத்தக கண்காட்சியை ஆவலுடன் எதிர் பார்த்து கிடந்தேன்.. ஆனால் புத்தக கண்காட்சிக்கு முதல் நாள் செல்ல முடியாதபடி தல அஜித் தடுத்து விட்டார். அதனால் மறுநாளே செல்ல முடிந்தது.. பொருளாதார பற்றாக்குறையால் வாங்க நினைத்திருந்த சில புத்தகங்களை வாங்க முடியவில்லை.. அடுத்த முறையாவது இதை தவிர்க்க நினைக்கிறேன்.. பார்ப்போம்.. இந்த புத்தககண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள்.

உணவின் வரலாறு - பா.ராகவன் 
இந்த புத்தகத்தை நான் வாங்கிய முதல் காரணம் பா.ராகவன் அவர்கள். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். விறுவிறுப்பான எழுத்துக்கு சொந்தக்காரர்.
நாட்டுக் கணக்கு - சோம.வள்ளியப்பன் 
கச்சத்தீவு - ஆர்.முத்துக்குமார்
காவி நிறத்தில் ஒரு காதல், சிகரங்களை நோக்கி - வைரமுத்து
கிமு.கிபி - மதன் 
ஸீரோ டிகிரி - சாரு நிவேதிதா 
மாற்று சினிமா - கிராஃபியன் ப்ளாக் 
சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர் 

Posted on முற்பகல் 2:29 by Elaya Raja

No comments

புதன், 8 ஜனவரி, 2014

பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களும் குதூகலமும் தான். அந்த கொண்டாட்டங்களின் பெரும் பகுதியை ஆக்ரமிப்பது பண்டிகை தினமன்று வெளியாகும் திரைப்படங்களே. ஒரு சராசரி சினிமா ரசிகனுக்கு சினிமாவை தவிர்த்துவிட்டால் கொண்டாட்டமேது. அதுவும் மதம் போல சினிமா பரவிக்கிடக்கும் நம் தமிழ்நாட்டில்.

சினிமா, கலை எனும் வடிவத்தை தாண்டி வியாபாரம் எனும் வட்டத்திற்குள் வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டன. களம் மாற மாற சினிமா வியாபாரமும் தன முகத்தை மாற்றிக் கொண்டே வந்து கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய முகம் அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளிவந்து படம் பற்றிய கருத்துகளும், திருட்டு விசிடிக்களும் பரவும் முன் வசூலை வாரிக் கொள்ளுதல். “பல்லு இருக்குறவன் பக்கோடா திங்குறான் என்ற பழமொழிக்கேற்ப பெரிய பட்ஜெட், பெரிய ஸ்டார், பிரம்மாண்ட விளம்பரங்களோடு பெருவாரியான திரையரங்குகளை ஆக்ரமித்து வசூல் ஈட்டிக் கொள்கின்றன. இந்த பார்மெட்டில் புதுவரவுகள் வீரம் மற்றும் ஜில்லா.

எம்.ஜி.ஆர்.-சிவாஜி, ரஜினி-கமல், என்ற ஒப்பீட்டு வரிசையில் இடம் பெற்றவர்கள் விஜய்-அஜித். ஏற்கனவே இருவரின் படங்களும் ஒரே நாளில் பல முறை வெளிவந்திருந்தாலும் ஏழு வருடங்களுக்குப் பிறகு மோதிக் கொள்வதால் எதிர்பார்ப்புகள் இமயமலை அளவிற்கு எகிறிக் கிடக்கின்றன. அந்த எதிர்பார்ப்பு விஜய்-அஜித் ரசிகர்களுக்கிடையே மட்டுமல்ல சராசரி சினிமா ரசிகனையும் கூட “யார் படம் ஜெயிக்கும்? என்ற வாக்குவாதத்தில் பங்கு கொள்ள செய்திருக்கிறது. அலுவலகம், டீக்கடை, பேருந்து நிறுத்தம் என்று அனைத்து இடங்களிலும் இந்த “நீயா..? நானா..? ஓடிக் கொண்டிருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் விஜய்-அஜித் ரசிகர்கள் வார்த்தை போர் புரியும் போர்க்களமாகிவிட்டன. அந்த வாக்குவாதங்கள் புதிதல்ல என்றாலும் இந்த தருணத்தில் சற்று உக்கிரமடைந்திருக்கிறது  என்றே சொல்ல வேண்டும்.
விஜய்-அஜித் இருவரும் இன்று நல்ல நட்பு பாராட்டுகிறார்கள் என்றாலும் ரசிகர்கள் இவர்களின் திரைப்படங்களைப் பொறுத்த வரையில் இன்னும் முட்டிக் கொள்ளவே செய்கிறார்கள். படங்கள் வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே ப்ளெக்ஸ், பேனர் என்று அமர்க்களப்படுத்த தொடங்கிவிட்டார்கள். இதற்ககு முன்பு விஜய்-அஜித் படங்கள் ஒரே நாளில் ரிலீசான பொழுது ஏற்பட்ட மோதல்கள் இந்த முறை ஏற்படக்கூடாது என்று காவல் துறை எச்சரிக்கை விட்டிருந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் இடி இன்றி மழையேது..?

ஜில்லா ஜெயிக்க வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் ஆசை. வீரம் ஜெயிக்க வேண்டும் என்பது அஜித் ரசிகர்களின் ஆசை. இரண்டுமே ஜெயிக்க வேண்டும் என்பது சினிமாவை நேசிப்பவர்களின் ஆசை. அனைவரின் ஆசையும் நிறைவேற ஒரு நாள் பொறுத்திருப்போம்.


Posted on முற்பகல் 10:46 by Elaya Raja

No comments