ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013


இன்னுமொரு காதல் தோல்வி கவிதைஉயிர் பறித்துச் சென்ற காதலியே...
ரணத்தில் வழியும் ரத்தம் காயலையே...
வெறும் சதைப் பிண்டமாய் என்னை செய்து விட்டாய்...
கல்யாணச் சந்தையில் இன்னொருவன் கரம் புகுந்து விட்டாய்..
நாடி நரம்பெல்லாம் கொதிக்குதடி...
கண்ணீர் வற்றிய கண்களும் வலிக்குதடி...

காதலின் மடிசுகம் கேட்டதில்லை..

கன்னி நீ என் விழிகளில் விழும் வரை..
அன்னைக்கு மாற்று என உன்னை நினைக்க வைத்தாய்...
உணர்வுகள் கரையும் தருணத்தில் என்னை உடைத்துவிட்டாய்..
உன் பாதச் சுவடுகள் பார்த்து மகிழ்ந்தவனை
பாவக் குழிதனில் தள்ளி புதைத்து விட்டாய்...
தேவதையே...
தெரிந்துதான் செய்தாயா இந்த பிழையை...

உன்னோடு ஒன்றாக பயணித்த பாதைகளை

தனியனாய் நான் தாண்ட நினைக்கையில்
நிழலற்ற நெறிஞ்சி முள் ஒன்று
என் நெஞ்சம் கீறிப் பார்பதென்னவோ..?
விடைகளை தொலைத்து நிற்கும் வினாக்கள் போல
மிச்சமிருப்பதென்னவோ காலம்
ஏதுமற்ற என் காதல் மட்டுமே...
வலி தந்து சென்ற என் கிளியே..
இனி இருள் மட்டும் தான் எனக்கு முடிவே...!

Posted on பிற்பகல் 7:36 by Elaya Raja

No comments

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

 நன்றி:

"தலைவா" படம்   பார்க்காமல் நொந்து போய் கிடக்கும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தாவிடினும் வார விடுமுறைகளில் ஏதேனும் புது படம் பார்க்கா விட்டால் கை நடுக்கமெடுக்கும் என் போன்ற சினிமா ரசிகர்களையேனும் திருப்தி படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட நினைத்திருந்த திரைப்படத்தை 10ஆம் தேதியே வெளியிட்டு எங்கள் வயிற்றில் பால்வார்த்த "555" திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்...

பரத் விபத்துக்குள்ளாகும் ஒரு காட்சியுடன் தொடங்குகிறது திரைப்படம்.. விபத்திலிருந்து மீட்கப்படும் பரத் சிகிச்சை பெற்று உயிர் பிழைக்கிறார்... தன் காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒரு வீடியோ சிடியையும் அவரின் நினைவாக வைத்திருக்கிறார்... தன் காதலியின் கல்லறைக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வருகிறார்... தன் அண்ணன் சந்தானத்தின் வற்புறுத்தலால் வேலைக்குச் செல்கிறார்.... வேலைக்குச் செல்லும் இடத்தில் ஒரு பெண்ணின் நட்புக் கிடைக்கிறது.. ஒரு நாள் வீட்டில் தான் வைத்திருந்த புகைப்படமும் சிடியும் காணாமல் போக அதற்க்கு காரணம் தன் அண்ணன் சந்தானம் தான் என்று அவரை அடித்து விடுகிறார்.. பரத் சிகிச்சை பெற்று வரும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் சந்தானம்.. அந்த மருத்துவர் பரத்தின் காதலி, அந்த புகைப்படம், வீடியோ காட்சிகள் அனைத்தும் அவரின் கற்பனை என்கிறார்.. ஒரு கட்டத்தில் அவர்கள் சொல்வதை நம்பும் பரத் அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களால் தன் காதலி கற்பனை அல்ல நிஜம் தான் என அறிகிறார்.. நிஜமென்றால் எதற்க்காக தன் அண்ணன் , மருத்துவர் என எல்லோரும் தன்னிடம் பொய் சொல்ல வேண்டும்..? தன்னுடன் விபத்தின் போது இறந்து விட்டதாக எண்ணிய காதலிக்காக யார் தன்னைக் கொல்ல முயல்கிறார்கள்..? என்கிற பரத்தின் தேடலுக்கான விடையே "555"

சொல்லாமலே, ரோஜாக் கூட்டம் , பூ போன்ற மென்மையான படங்களுக்கு பெயர் பெற்ற சசியின் முதல் ஆக்ஸன் பட முயற்சி... சசியின் ஆக்ஸன் முயற்சிக்கு சிக்ஸ்பேக் உடம்புடன் உயிர் கொடுத்திருக்கிறார் பரத்... பழனி, திருத்தணி போன்ற மொக்கை படங்களினால் துவண்டு போயிருந்த பரத் இதில் தன் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்து படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்... காதல் காட்சிகளை விட ஆக்ஸன் காட்சிகளில் தூள் பரத்துகிறார்.... 

நாயகி மிர்த்திகா.. நடிப்பிலும் சரி அழகிலும் சரி சுமார் ரகமே.. சில காட்சிகளில் மட்டுமே ரசிக்க முடிந்தது... குறிப்பாக பரத்திடம் ஏதோ பவர் இருப்பதாக அவர் நம்பும் காட்சிகளில் அவரை ரசிக்க முடிந்தது...  ஹீரோவின் நண்பனாக மட்டுமே வந்து நம்மை சிரிக்க வைக்கும் சந்தானம் இதில் ஹீரோவின் அண்ணனாக வந்து நம்மை சிரிக்க வைத்து இறந்து போகிறார்.. இயக்குனர் நகைச்சுவைக்காக இன்னொரு கதாப்பாத்திரத்தை இணைக்க விரும்பாமல் சந்தனத்தை வைத்தே "காமெடி + செண்டிமெண்ட் " காம்பினேசனுக்கு முயற்சித்திருக்கிறார்.. இதில் செண்டிமெண்ட் ஏரியாவில் ஓரளவு வெற்றியே... இரண்டாவது நாயகியாக ஒரு வருகிறார் ( சாரி பா.. பேரு தெரியல) முதன்மை நாயகியே சுமார் எனும் போது இவர் மட்டும் என்ன...? வில்லனாக வருபவரும் சற்று தொங்கலாகவே இருக்கிறார்.. ஆனால் அவருக்கு ஏக பில்டப்...

திரைக்கதை சில இடங்களில் தொய்வாக இருந்தன... சமர் படத்தின் சாயல் படத்தின் பெரும் சறுக்கல் என்றே தோன்றியது... இடைச் செருகலாக பாடல்கள் படத்தின் பெரிய பலவீனம்.. ஒளிப்பதிவு நன்றாக இருந்தது... வசனங்களும் பாடல் இடங்களில் ரசிக்க வைத்தன...

என்னதான் படத்தின் சஸ்பென்ஸ் இறுதிவரை சரியாக கடைப்பிடிக்கப்பட்டிருந்தாலும் நடக்கும் விஷயங்களுக்கு காரணம் புரியாமல் ஹீரோவோடு சேர்ந்து நாமும் குழம்புவதால் ஏற்படும் சலிப்பை தவிர்க்க முடியவில்லை.. "படம் பாக்குறவங்கள லூசுன்னு நினைச்சிட்டாங்களா..?" என்ற பலரின் முனுமுனுப்புகள் நன்றாகவே கேட்டன.. 

படம் அரங்கு நிறைந்த காட்சியை ஓடியது..."தலைவா" படத்தின் தடை ஒரு காரணம் என்றாலும் பரத்தின் "சிக்ஸ்பேக்" உடம்பும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாதது... என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தரவயது பெண்மணி "எப்பப்பா.. பரத் சிக்ஸ்பேக் காட்டுவாரு..?" என்று உடன் வந்தவருடன் கேட்டுக் கொண்டே இருந்தார்.. 

பரத்தின் அசுர உழைப்பிற்கும், சசியின் முயற்சிக்கும் இந்த படத்தின் வெற்றி மட்டுமே பதிலாக இருக்க முடியும்... வெற்றி பெரும் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம்...

Posted on பிற்பகல் 8:43 by Elaya Raja

No comments