மரியான் படத்துக்கு சனிக்கிழமை போக போகிறேன் என்றதும் வெள்ளிக்கிழமை படம் பார்த்து விட்ட என் நண்பன் ஒருவன் “மச்சான்.. உன் நல்லதுக்கு சொல்றேன்... வேணாம்... அந்த படம் பாக்குறதுக்கு பேசாம ஒரு குவாட்டர் அடிச்சிட்டு குப்புறப்படுத்து தூங்கிடு.. படம் செம்ம மொக்கை...” என்று வாய் மொழி விமர்சனம் கொடுத்துவிட்டான்... “ஐயையோ.. படம் எப்டி இருக்குனு தெரியாம ரிசர்வ் பண்ணி தொலைச்சிட்டோமே..” என்று நொந்து கொண்டே படம் பார்க்கச் சென்றேன்... என்ன ஆச்சர்யம்.. படம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது...


ஆப்பிக்காவில் வேலை பார்க்கும் தனுஷ் தன் காதலி பார்வதியிடம் தொலைபேசியில் பேசுவதிலிருந்து கதை தொடங்குகிறது... இரண்டு வருட தொழில் ஒப்பந்தம் முடிந்து தன் சொந்த ஊருக்கு திரும்பவிருக்கும் சந்தோஷத்தில் இருக்கும் தனுஷ் வாய்ஸ்ஓவரில் பிளாஷ்பேக் சொல்ல ஆரம்பிக்கிறார்... தன் கடலோரக் கிராமத்தில் மீன் பிடிக்கும் வேலை செய்து கொண்டிருக்கும் தனுஷ் மேல் பார்வதிக்கு ஏகப்பட்ட லவ்... ஆனால் அவரோ பார்வதியை வெறுத்து ஒதுக்குகிறார்...  நாற்பது நிமிடக் காட்சிகளுக்கு பிறகு காதலிக்க தொடங்கி விடுகிறார்... பார்வதியின் மேல் கண்ணாய் இருக்கும் அந்த ஊரு வட்டிக்காரன் ஒருவன் பார்வதியின் தந்தை வாங்கிய கடனுக்கு பதிலாக பார்வதியை கட்டிக் கொடுக்க கேட்க்க ஹீரோ என்ட்ரி.. ஒரு செம்ம பைட்... காண்டாகும் வட்டிக்காரன் ஒரே நாளில் கடனை திருப்பி செலுத்த சொல்ல வெளிநாட்டில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் வேலை பார்க்கச் செல்ல சம்மதித்து முன்பணம் வாங்கி கடனை செலுத்தி விட்டு காதலியிடம் விடை பெற்று சென்று விடுகிறார்... பிளாஷ்பேக் முடிகிறது... அடுத்த காட்சியே தனுஷ், தனுஷுடன் வேலை பார்க்கும் ஜெகன் மற்றும் ஒரு ஹிந்தி காரன் ஆகியோர் அந்த நாட்டு கொள்ளை கும்பல் சிலரால் கடத்தபடுகிறார்கள்... தனுஷ் வேலை பார்க்கும் கம்பெனியை மிரட்டி பணம் பறிப்பதே அவர்களின் திட்டம்... அவர்களிடமிருந்து தனுஷ் தப்பினாரா..? தன் காதலி பார்வதியை கரம் பிடித்தாரா என்பதே மரியான்...

தனுஷின் நடிப்புத் திறமைக்கு தீனி போட்டிருக்கும் படமிது... சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார்... ஒவ்வொருக் காட்சியிலும் ஏகப்பட்ட முகபாவனைகள்... நிறைய காட்சிகளில் கைத் தட்டல்களை அள்ளிச் செல்கிறார்.. பார்வதியுடனான காதல் காட்சிகளிலும் சரி அந்த கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொண்டதும் அவரின் நடிப்பும் சரி பார்த்து கொண்டே இருக்கலாம் என்ற அளவில் பிடித்துவிட்டது... பூ படத்தில் அறிமுகமான பார்வதி நடிப்பில் தனுஷிடம் போட்டி போடுகிறார்.. சில இடங்களில் அவரை மிஞ்சி விடுகிறார்.... மேக்அப் இல்லாமலே அழகாக தெரிகிறார்... தேசிய விருது வாங்கிய மலையாள நடிகர் சலீம் குமார் பார்வதியின் தந்தையாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்... உமா ரியாஸ்கான் தனுஷின் அம்மாவாக சில இடங்களில் நன்றாகவும் சில இடங்களில் செயற்கையாகவும் நடித்திருக்கிறார்... அப்புக் குட்டி, ஜெகன் இருவரும் சில இடங்களில் சிரிக்க வைத்து இறந்து போகிறார்கள்...

ரகுமான் இசையில் சோனாபெரியா, கடல் ராசா, இன்னும் கொஞ்ச நேரம், நெஞ்சே எழு பாடல்கள் அற்புதம்.. பின்னணி இசையும் அசத்தல்... மார்க் கொனிக்ஸ் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவு அருமை... வசனங்கள் சில இடங்களில் நன்றாக இருந்தன...

படத்தில் நான் ரசித்த காட்சிகள் நிறைய... குறிப்பாக தனுஷும் ஜெகனும் சாப்பிடுவதைப் போல கற்பனை செய்து கொள்ளும் காட்சி.. தனுஷ் கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொண்ட பின் தொலைபேசியில் பார்வதியிடம் பேசும் காட்சி... பார்வதி தனுஷ் வீட்டுக்குள் வந்து பேசும் காட்சி... படம் முடிந்து வெளியில் வந்த போது தனுஷ், பார்வதி இருவரும் மனம் முழுதும் நிறைந்திருந்தார்கள்... இருவருக்குமிடையே செம்ம கெமிஸ்ட்ரி... என்னவென்று தெரியவில்லை... கடைசியாக வந்த சில படங்களில் ஹீரோயின் உடன் நடிக்கும் காட்சிகளில் எல்லாம் காதல் பொங்கி வழிகிறது... தனுஷ் வாட்ச் பண்ண வேண்டிய வால் கிளாக் தான்...

தனுஷை ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் பாடலாசிரியராகவும் மிகவும் ரசித்தேன்... கடல் ராசா பாட்டின் வரிகளும் தனுஷின் முகபாவனைகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தன...

சில காமெடிகளும் படத்தில் உண்டு... கடலுக்குள் சென்ற இடத்தில் சலீம் குமார் தீப்பெட்டி கேட்க அவர்களின் படகுக்கு அருகில் வரும் படகில் உள்ள  ஒருவரிடம் தீப்பெட்டி வாங்க கடலுக்குள் டைவ் அடித்து அந்த படகின் அருகில் சென்று தீப்பெட்டி வாங்கி வாய்க்குள் திணித்துக் கொண்டு வருகிறார் தனுஷ்... ஏங்க பாஸ்.. பக்கத்துல படக கொண்டு போனா கை நீட்டியே வாங்கலாமே... உங்க ஹீரோயிசத்தக் காட்ட வேற சீனே கிடைக்கலையா...? தனுஷ் ஒல்லியா இருக்குறதால அவரு பாடிக்கு ஏத்த மாதிரி வில்லன் இருக்கணும்னு ஆப்ரிக்காவுல ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த பசங்கள இழுத்து வந்து கழுத்துல மண்டையோடு, மூக்கு போடி டப்பா எல்லாம் போட்டு மூக்க விடைப்ப வச்சிக்க சொல்லி படம் எடுத்திருக்காங்க... அந்த லூசுங்க எப்ப பாத்தாலும் ஏதோ தோசை சுடுற மாதிரி துப்பாக்கி எடுத்து வானத்தைப் பாத்து சுட்டுக்கிட்டே இருக்கானுங்க...

பணம் சம்பாதிப்பதற்காக தன் அப்பா , அம்மா, மனைவி, குழந்தை, காதலி என்று அன்பானவர்களை பிரிந்து வெளிநாட்டில் எவனோ ஒருவனிடம் அடிமைப் பட்டுக் துயரம் காணும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் நிச்சயம் மிக நெருக்கமாக தோன்றும்...


இது போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு தரும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் இன்னும் சில புதுமையான கதைக் களம் நல்ல படங்கள் தோன்றும் வாய்ப்பு இருக்கிறது... என்னைப் பொறுத்த வரை இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மற்றுமொரு தரமான படம்....