வெற்றியின் வேர்கள்


வேலை ஏதும் கிடைக்காமல் விரக்தியின் விளிம்பில் இருக்கும் தன் மகனை ஆறுதல் சொல்லி தந்தை தேற்றுவதாய் "தமிழ் நண்பர்கள்" என்ற தளத்தில் நான் எழுதிய கவிதை..

என் விந்துக்கு விடை சொல்லி வெளிவந்த மகனே....
பணி தேடும் படலம் உனக்கோர்
பனிப்போராய் மாறியதோ...?
விரக்தியின் விரல்கள் உன்னை
ஒவ்வொரு நொடியும் சீண்டியதோ..?
உத்தியோகக் கனவு உன்னை வாட்டுவதால்
நீ முளைவிட்ட இந்த வீடு இன்று அந்நியமாய் தெரிகிறதோ..?
சோற்றுக் கவளம் உன் தொண்டைக் குழிதனில்
சம்மனமிடும் சமயங்களில் எல்லாம்
கரை தாண்டப் பார்க்கும்
என் கண்ணீர்த் துளிகளை அறிவாயா நீ...?
தனிமை தேடும் உன் தன்னிரக்கம்
என் நெஞ்சம் கிழிப்பதை உணர்வாயா நீ...?
வேண்டாம் மகனே வேண்டாம்...
தோல்வியின் மடி சாய்ந்தால் வெற்றி உன்னை எட்டி உதைக்கும்...
வியர்வைத் துளிகளை நீ விதைத்து நின்றால்
வெற்றி எனும் அறுவடை நிச்சயம் கிட்டும்...
பொருள் ஈட்டினால் மட்டுமே புத்தியுள்ளவன்
என்பது இந்த புற உலகத்தின் கருத்து...
அந்த காகித காந்திக்காக
உன் கண்ணியம் இழந்து விடாதே...
இலக்கை எட்டிப் பிடிக்க
எளிய வழி தேடாமல்
உன்னில் ஒளிந்து கிடக்கும்
உத்வேகம் தேடு....
வெற்றியின் வேர்கள் உன் காலடித் தடத்தில் காத்துக் கிடக்கும்...!