வெள்ளி, 22 பிப்ரவரி, 2013ஒரு காதல் சண்டை

முன்குறிப்பு : சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்குங்குற மாதிரி சண்டை போட்டுக்காம காதல் பண்ற காதலர்கள் எங்க இருக்காங்க... கவிதைய ஆயுதமா வச்சிக்கிட்டு ஒரு ஜோடி சண்டை போட்டுக்குறாங்க அப்டின்னு ஒரு சின்ன கற்பனை தான் இது...


காதலி : 

என் வழிகளில் விழுந்து
விழிகளில் நுழைந்தவனே...
இதமாய் பேசி
என் இதயம் கரைத்தவனே...
கவிதைகள் சொல்லி
என்னில் காதல் விதைத்தவனே...
உண்ண மறந்தேனடா உன்னால்..
கனவுகளும் களவு போனதடா  இந்நாள்...
அலைபேசியை அணைத்தப்படியே
இறந்துவிடுகின்றன என் இரவுகள்...
பித்துப் பிடித்தவளாய்
வீட்டின் விட்டம் முறைக்கிறேன்...
அன்னையிடம் அனுதினமும்
வசைகள் பெறுகிறேன்...
காரணம் நீயென
கூறவும் வேண்டுமோ..?
சுற்றி சுற்றி வந்தாயடா
என் காதல் பெறும் முன்பு...
சுற்றித் திரிகிறாய்
உன் நண்பர்களோடு இன்று...
வேலையொன்றும் இல்லாத பொழுதும்
உன் வெட்டி பந்தா தாங்கவில்லை...
அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு
குரங்கு நீ பதிலளிக்கவில்லை...
தகிக்கிறது என் உள்ளம்...
தவறு செய்து விட்டோமோ என்று...
கொழுந்துவிட்டெரியும் என் கோபத் தீயை
அணைத்திட விரைந்து வருவாயா
என் அண்மைத் தொலைத்த காதலனே...

காதலன் : 

வார்த்தைகள் பல அடுக்கி
எனை வசைபாடித் தீர்த்தவளே...
காதலின் ஆரம்பத்தில்
அடிக் கரும்பாய் இனித்தவளே...
நித்தமும் சத்தம் போட்டு
என் நித்திரையைப் பறிப்பவளே...
அழகான உந்தன்
அகம்பாவம் கொல்லுதடி...
சண்டை போட்டு சண்டை போட்டே
என் சக்தியெல்லாம் தீர்ந்ததடி...
மன்னிப்பு கேட்பினும்
மறுத்து விட்டு செல்கிறாய்...
திட்டித் தீர்ப்பதையே
தீவிரமாய் செய்கிறாய்...
உன்னை விரும்புகிறேன் என்று
உரைத்துக் கொண்டேவா
இருக்கமுடியும் ஒவ்வொரு நொடியும்...
புரியவில்லையடி...
உன் புத்தி போடும் புதிர்...
கசக்க வைத்து விடாதே தேவதையே...
என் காதல் வாழ்வை...
தனிமையில் என்னைத் தள்ளும்
உன் வார்த்தைகளை
வழியனுப்பி விட்டு வா...
என்றும் நானிருப்பேன் உன்னவனாக...

Posted on முற்பகல் 4:09 by Elaya Raja

No comments

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013


எழுத்து எனும் வலைத்தளத்தில் நான் எழுதிய சில கவிதைகள்....

-----------------------------------------------------------------------------
குறுஞ்செய்திகள் 

ஆண்டுகள் 
பல
ஆனபொழுதும்
இன்றும்
என்
அலைபேசியில்
வாழ்ந்து கொண்டுதான்
இருக்கின்றன..
smiley உடன்
நீ
அனுப்பிய
குறுஞ்செய்திகள்...!!
------------------------------------------------------------------------------
ரிங்க்டோன்  

தப்பு தப்பாக 
நீ
பாடிய
அந்த
தமிழ் பாடல்தான்
இன்னும் இருக்கிறது...
என்
அலைபேசியின்
ரிங்க்டோனாக....
-------------------------------------------------------------------------------
முத்தம் 

உன்னிடம் 
முத்தம்
பெற
முயலும்
போதெல்லாம்
என்
உறக்கத்தை
கலைத்து
விடுகின்றன
பாழாய் போன
கொசுக்கள்....!
-------------------------------------------------------------------------------
கவிதைக்கு அழகு பொய் 

பெண்ணே....! 
மண் தரைக் கூட
நீ நடந்தால்
மலர்த் தரை
ஆகிறது....!
இப்பொழுது
தெரிகிறதா.....?
கவிதைக்கு அழகு
பொய் தான் என்று.....!

Posted on முற்பகல் 6:31 by Elaya Raja

No comments

திங்கள், 11 பிப்ரவரி, 2013

" ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார்..?" என்று சந்தியா கேட்ட கேள்விக்கு பேந்த பேந்த விழித்தான் அச்சு.. ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் அச்சுவும் சந்தியாவும் சேர்ந்தே பள்ளி செல்வது தான் வழக்கம்.. பள்ளி அவர்களின் வீட்டிலிருந்து மிகவும்  தூரமென்பதால் அச்சு சந்தியாவின் வீட்டில் வந்து அவளையும் தன்னுடன் சேர்த்து கூட்டி கொண்டு பள்ளிக்கு செல்வான்.. அவனுக்கு இப்படி வருவது சில சமயங்களில் சலிப்பை உண்டாக்கினாலும்  சந்தியாவை அழைத்து செல்ல வரும் போதெல்லாம் அவளின் அம்மா கொடுக்கும் அதிரசம், முறுக்கு போன்ற தின்பண்டங்களுக்காகவும் சந்தியாவின் சிரித்த களையான முகத்திற்க்காகவுமே அதை பொருத்து கொண்டான்.. வயல் வெளிகளும் கோவில் தோட்டங்களும் நிறைந்த அந்த கிராமத்துப் ஒற்றையடிப் பாதைகளில் விளையாடிக் கொண்டே பள்ளிக்கு செல்வதை இருவரும் வழக்கமாக வைத்திருந்தார்கள்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளையாட்டு என்பது அவர்களின் தீர்மானம்..  சண்டை போட்டு கொள்ளமால் குழந்தைகள் விளையாடும் விளையாட்டு என்றும் ஏதாவது உண்டா...? அவர்களின் விளையாட்டின் இடையே தினமும் சண்டையும் போட்டுக் கொள்வார்கள்.. அன்றும் அப்படியே ஆனது...  விடுகதைக்கு விடை தெரியாமல் அச்சு விழிப்பதை கண்டு அவனை கேலி செய்யத் தொடங்கினால் சந்தியா.. இதனால் கோவமடைந்த அச்சு அவளை தொடங்க இருவருக்கும் சண்டை முற்றியது.. என்றும் தன்னை எதிர்த்து அடிக்காத சந்தியா அன்று எதிர்த்து அடிக்க அச்சுவின் கோபம் எல்லை மீறியது.. அவளை பிடித்து அச்சு தள்ளிவிட  கீழே விழுந்தவளின் கைகளில் சிராய்ப்பு ஏற்பட்டது... அழுது கொண்டே எழுந்த சந்தியா பள்ளி நோக்கி தனியே நடக்க ஆரம்பித்தாள்.. அன்று தான் அந்த வருடத்தின் கடைசிப் பரீட்சை... சந்தியா காயம்பட்டதும் முதலில் வருத்தப்பட்ட அச்சு பிறகு  "எப்படி என்னை திருப்பி அடிக்கலாம்...?" என்று தன் செயலுக்கு நியாயம் கற்ப்பித்துக் கொண்டே இருந்தான்.. பரீட்சை முடிந்ததும் அச்சுவை எதிர்பார்க்காமல் சந்தியா வீட்டிற்கு   கிளம்பி விட்டாள்...சந்தியா தன்னை விட்டுவிட்டு வீட்டிற்கு சென்றது அச்சுவிற்கு கொஞ்சம் வருத்தமாகவும் இருந்தது..  அன்று இரவு தூங்கும் முன்பு "நாளைக்கு காலைல முதலப் போய் சந்தியா கிட்ட மன்னிப்பு கேட்கனும்.. இனிமே உங்கிட்ட சண்டை போட மாட்டேன்னு சாமி மேல சத்தியம் பண்ணி சொல்லணும்.." என்று நினைத்து கொண்டான்.. மறுநாள் காலை அச்சுவை அவளின் அம்மா எழுப்பினாள் " டேய் அச்சு.. எழுந்திரி டா.." என்றாள்.. தூக்கம் கலையாமல் எழுந்து உட்கார்ந்த அச்சுவிடம் அவளின் அம்மா " டேய் உன் ப்ரெண்ட் சந்தியா, அவங்க அம்மா, அப்பா எல்லாரும் வேற ஊருக்கு போறாங்க... சந்தியாவோட அம்மா உன்ன பாக்கனும்னு சொன்னங்க... போய் ஒரு எட்டு பாத்துட்டு வா டா..." என்றாள்... இதை கேட்டவுடன் தூக்கம் கலைந்த அச்சு சந்தியாவின் வீடு நோக்கி ஓடத் தொடங்கினான்.. சந்தியாவின் வீட்டை அடைந்த அச்சுவை பார்த்து சந்தியாவின்  அம்மா " டேய் அச்சு.. வா டா.. உன்ன தான் பாக்கனும்னு நினைச்சிட்டு இருந்தேன்... மாமாவுக்கு வேற ஊருக்கு மாத்தலாகிடிச்சி அச்சு.. அதன் அதான் இங்க இருந்து கெளம்பிட்டு இருக்கோம்.." என்றாள்... "மறுபடியும் எப்போ அத்தை இங்க வருவீங்க.." என்ற அச்சுவிடம் " இனி இங்க வர மாட்டோம் அச்சு.. மெட்ராஸ்க்கு போறோம்.." என்றாள்... அச்சுவிற்கு அழுகையே வந்துவிடும் போல இருந்தது... இனி சந்தியாவிடம் விளையாட முடியாது என்ற நினைப்பு அவனை மிகவும் கஷ்டப்படுத்தியது.. திடீரென ஏதோ நியாபகம் வந்தவனாய் திரும்பி ஓடினான்.. இரண்டு நாட்களுக்கு முன் சந்தியா அவனிடம் காற்றாடி செய்து தர சொல்லிக் கேட்டிருந்தாள்.. அவள் இங்கு இருந்து போகும் நேரத்தில் அவளுக்கு இந்த காற்றாடியை தர வேண்டும் என்று எண்ணியவன் ஒரு காற்றாடியை செய்து கொண்டு மீண்டும் சந்தியாவின் வீட்டிற்கு வந்த போது அவர்கள் வண்டியுடன் கிளம்பிச் செல்வதற்கு தயாராக இருந்தார்கள்... அச்சு நீட்டிய காற்றாடியை வாங்கி கொண்ட சந்தியா அவனிடம் ஒரு வார்த்தையும் பேசாமல் வண்டியில் ஏறிக்கொண்டாள்... புழுதிப் பறக்க சென்ற அந்த வண்டி சில நிமிடங்களில் அச்சுவின் கண்களிலிருந்து மறைந்து போனது...

15 வருடங்கள் ஓடிவிட்டன... அச்சு பொறியியல் படித்து விட்டு சில கம்பெனிகளுக்கு வேலைக்காக அப்ளை செய்திருந்தான்.. ஒரு நாள் சென்னைலுள்ள ஒரு கம்பனிலிருந்து நேர்முகத் தேர்விற்காக அச்சுவிற்கு தபால் வந்தது.. பெற்றோரிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு கிளம்பிய அச்சுவிற்கு சென்னைக்கு வருவது இது தான் முதல் முறை.. பேருந்து நிலையத்தில் இருந்து வெளியில் வந்ததும் ஒரு ஆட்டோவை பிடித்து எறிக்கொண்டவன் கம்பெனியின் முகவரியை கூற சரியான நேரத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான்... படிப்பை  நல்ல மதிப்பெண்களுடன் முடித்திருந்ததால் அச்சு எதிர் பார்த்ததைப் போலவே வேலையும் கிடைத்தது..  நாளையே வேளையில் சேர சொல்லிவிட்டதால் அந்த கம்பெனியில் இருந்த ஒருவரின் உதவியோடு அருகில் இருந்த ஒரு மென் ஹாஸ்டலில் அறை எடுத்து தங்கி கொண்டான்.. தனக்கு வேலை கிடைத்து விட்டதை பெற்றோரிடமும் சந்தோசத்துடன் பகிர்ந்து கொண்டவன் மறுநாள் வேலையில் சேர்ந்து விட்டான்.. சேர்ந்த முதல் நாளே அங்கே இருந்த திவ்யா என்றப் பெண்ணை பார்த்தவனின் கண்கள் அவளையே சுற்றி சுற்றி வந்தது... வேலையில் சேர்ந்து மாதம் இரண்டாகி விட்டது... இந்த இரண்டு மாதத்தில் அச்சுவிற்கு அங்கே நிறைய நண்பர்கள் கிடைத்திருந்தார்கள்.. அதில் திவ்யாவும் ஒருத்தி... அச்சுவின் வேடிக்கையான பேச்சை கேட்ப்பதற்க்காக எல்லோரும் அவனிடம் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள்... அதிலும் திவ்யா ஒன்றுமே இல்லாத விஷயத்தை கூட அச்சுவிடம் வந்து பேசிக்கொண்டிருந்தாள்... அச்சுவின் உடன் இருக்கும் ஆன் நண்பர்கள் " டேய் அச்சு.. திவ்யா யார்கிட்டயும் இப்டி வந்து பேச மாட்டா.. ஆனா உங்கிட்ட மட்டும் சுத்தி சுத்தி வந்து பேசுறா... என்னடா லவ் ஆ..? " என்று கிண்டல் செய்து கொண்டே இருந்தார்கள்.. அச்சு அதை உள்ளுர ரசித்தாலும் " டேய் அப்டி எல்லாம் ஒன்னும் இல்ல டா... அவ ஜஸ்ட் பிரெண்டா தான் என்கிட்ட பழகுறா... அதை தப்பா பேசாதிங்க..." என்று மறுத்து வந்தான்.. அவளின் மேல் அவனுக்கு காதல் இருந்தபோதும் எங்கே தான் காதலை சொல்லி இருக்கின்ற நட்ப்பும் போய் விடுமோ என்று பயந்து கொண்டு அவளாக சொல்லட்டும் என்று அமைதி காத்தான்...

ஒரு நாள் காலை திவ்யா அச்சுவின் காபின் அருகே  வந்து " அச்சு.. நாளைக்கு எங்க வீட்ல ஒரு பங்க்சன்... நீ கண்டிப்பா வரணும்.. அருண், கோகுல், ஷீலா, ப்ரியா எல்லாரும் கூட வராங்க... அவங்க கூட நீயும் சேந்து வந்துடு... கண்டிப்பா வரணும்... வரல உங்கிட்ட அப்புறம் பேச மாட்டேன்.." என்று கூறிவிட்டு  சென்றாள்... அச்சுவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை..  எப்டியாவது அவளோட அம்மா அப்பா ரெண்டு பேர்கிட்டையும் "நல்ல பையன்" அப்டின்னு பேர் வாங்கிடனும்.. " என்று முடிவெடுத்துக் கொண்டான்... மறுநாள் வாரவிடுமுறை என்பதால் மிச்சமிருக்கும் வேலைகளை அவசரகதியில் முடித்து விட்டு அறைக்கு கிளம்பிய அச்சு " காலைல சீக்கிரம் எழுந்திடனும்" என்று முடிவு செய்து கொண்டு தூங்கச் சென்றான்...

"வாம்மா ஷீலா.. நல்லா இருக்கியா..." என்று வாசற்ப்படியில் நின்று வரவேற்றார் திவ்யாவின் அப்பா... "நல்லா இருக்கேன் அங்கிள்.. நீங்க நல்லா இருக்கிங்களா... இவங்க எல்லாருமே எங்க ஆபீஸ் தான் அங்கிள்..." என்ற ஷீலாவைப் பார்த்து "அப்டியா ரொம்ப சந்தோசம்மா... போங்க எல்லாரும்  உள்ள போய் உக்காருங்க.." என்றார் அவர்.. ஷீலா , பிரியா, அருண், கோகுல் இவர்களுடன் அச்சுவும் உள்ளேப் போய் அங்கே போடப் பட்டிருந்த பாயில் உட்கார்ந்தான்... இவர்களுக்கு எதிர்முனையில் சிலர் பழத் தட்டுக்களுடன் அமர்ந்திருப்பதைப் பார்த்த அச்சு ஷீலாவை அழைத்து " ஷீலா.. இது என்ன பங்க்சன்" என்று கேட்டான்.. "அடப்பாவி என்ன பங்க்சன்னு தெரியாமலையே வந்துட்டியா..? திவ்யாவுக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம்... அவ சொல்லலையா உங்கிட்ட.." என்றாள் ஷீலா.. "இல்ல..." என்று கூறிய அச்சுவிற்கு கண்ணை இருட்டிக் கொண்டு வந்தது... சொல்லாத காதல் செல்லாது என்று தன்னை தானே தேற்றிக் கொண்டு சகஜமாக இருப்பது போல் நடித்தான்.. செதுக்கி வைத்த சிற்பம் போல் பட்டுச் சேலைக் கட்டி வந்து அங்கே நின்றாள் திவ்யா... எல்லோருக்கும் வணக்கம் வைத்தவளைப் பார்த்த அச்சுவிற்கு இவள் தனக்கு இல்லை என்று நினைக்கையில் நெஞ்சை எதுவோ பிசைந்தது... கல்யாணப் பத்திரிக்கையை வாசிக்க போகும் நேரத்தில் " ஒரு நிமிஷம்.." எனக் கூறிய திவ்யா..  " எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்ல.. நான் வேற ஒருத்தர விரும்புறேன்.. எனக்கும் அவருக்கும் ரிஜிஸ்தர் மேரேஜ் கூட ஆச்சி.." என்றாள்... இதை சற்றும் எதிர்ப்பார்க்காத அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.. இதை அவமானமாக உணர்ந்த மாப்பிள்ளை வீட்டார் கோபத்துடன் வெளியேறி விட திவ்யாவின் அப்பா அவளை ஆத்திரத்துடன் அறைந்து விட்டார்.. " ஏண்டி இப்டி பண்ண... லவ் பண்ணிருந்த எங்ககிட்ட முன்னாடியே சொல்லிருக்கலாம்ல.. இப்டி எங்கல சபைல வச்சி அசிங்கப் படுத்திட்டியே.." என்று கத்தினாள் திவ்யாவின் அம்மா.. அப்பொழுது தான் அச்சு கவனித்தான் திவ்யாவின் அம்மாவை.. எங்கோ பார்த்தது போல் இருக்கிறதே என்று.. திவ்யாவின் அப்பாவை பார்க்கும் போதும் இதே போல் தான் தோன்றியது... "சொல்லுடி.. யார லவ் பண்ற... சொல்லித் தொலை.." என்றாள் அவளின் அம்மா.. "இதோ இவனை தான் லவ் பண்றேன்.." என்று திவ்யா அச்சுவை கை காட்ட அங்கே இருந்த திவ்யாவின் சொந்தக்காரர்கள் சிலர் அச்சுவை அடிக்க கையை ஓங்கி கொண்டு ஓடினர்...  "இல்ல அவ போய் சொல்ற... நாங்க லவ் பண்ணவும் இல்ல.. மேரேஜ் பண்ணவும் இல்ல... நான் யாரையும் லவ் பன்னல" என்று அச்சு அலறினான்... "நீ இது வரைக்கும் யாரையும் லவ் பண்ணது இல்லையா..?" என்ற திவ்யாவிடம் "இல்ல.." என்றான் அச்சு... அழுது கொண்டே தன் அறைக்குள் ஓடிய திவ்யா திரும்பி வரும் பொழுது கையில் ஏதோ கொண்டு வந்தாள்... அச்சுவின் முன் வந்து நின்ற அவள் தன் கைகளை நீட்ட அதில் காய்ந்த ஒரு காற்றாடி இருந்தது... அச்சுவிற்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை... "சந்தியாவா நீ..?" என்றான் அதிர்ச்சியாக..."ஆமா.. நான் தான் சந்தியா... என் பேர இங்க வந்ததும் மாத்தி..." என்ற பொழுது கிர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று அலாரம் அடிக்க உதறிக் கொண்டு எழுந்தான் அச்சு... " இவளோ நேரம் கனவா கண்டுக்கிட்டு இருந்தோம்.." என்று நினைத்தவனுக்கு "எப்படி இத்தனை வருஷம் வராத சந்தியாவோட நினைப்பு  இப்ப வந்தது.." என்ற எண்ணமும் வந்தது... " முதல அப்பாவுக்கு போன் பண்ணி ஊருக்குள்ள யாருக்காவது சந்தியாவோட பாமிலி எங்க இருக்காங்கனு தெரியுமான்னு கேக்கணும்..." என்ற மனதுக்குள் முடிவெடுத்துக்கொண்டே தோளில் துண்டோடு குளியலறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்...

Posted on முற்பகல் 7:13 by Elaya Raja

No comments

சனி, 9 பிப்ரவரி, 2013

தமிழ் நண்பர்கள் வலைத்தளத்தில் "சருகாய் ஒருத்தி" என்ற தலைப்பில் முதன் முறையாக ஒரு சிறுகதை எழுதி உள்ளேன்... அந்த சிறுகதை உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் புள்ளிகளை (ரைடிங்) அங்கே விட்டு செல்லுங்கள்....


ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் அந்த சிறு கதையில் வரும் கலைவாணி போல தான்... நிஜத்தை தொலைத்து விட்டு நிழலின் மடி தேடி அலைகிறோம்... நாகரிகம் எனும் பெயரில் நாற்றமெடுத்து திரிகிறோம்... என்னில் இருக்கும் அந்த குற்ற உணர்வின் குரலாய் தான் இந்த  கலைவாணியை நினைக்கிறன்...

Posted on பிற்பகல் 11:09 by Elaya Raja

No comments

* அன்பின் அர்த்தமதை அன்னைக்கு அடுத்து
  எனக்கு காட்டியவளே....!!

* என் சிந்தையின் ஒவ்வொரு செல்லிலும் அமர்ந்து
  நாளும் எனை சிறைபிடிப்பவளே...!!
  நலமா நீ.....?
  நம்புகிறேன் நலம் என்று....!!

* தெரியுமா உனக்கு....??
   உன் உன்பிற்கு அடிமையான இந்த
  ஆடவனின் அவஸ்தைகள்....!!
  கேள்....!!

* உன்னோடு உரையாடாமல் இருக்கும்
  என் ஒவ்வொரு நொடியும்
  சத்தமின்றி ரத்தம் சிந்துகின்றன...!!

* மற்றவர்கள் பார்த்துவிடுவார்கள் என்ற
  பயத்தில் அழுகையைக் கூட
  புதைத்துக் கொள்கிறேன் என்னுள்....!!
  என் உதடுகளின் உதவியோடு.....!!

* படுக்கையில் நான் கிடக்கும் பொழுது
   உன் இனிய கனவுகள் வந்து
  கண்ணீரால் என் தலையணையை
  ஈரமாக்கிச் செல்கின்றன....!!

* தனிமையில் நொடிகணம் இருந்தாலும்
  தகிக்கிறது என் உள்ளம்...!!
  எங்கே தற்கொலை செய்து
  கொள்வேனோ என்று....!!

* பயப்படாதே...!!
  பாதை மாறமாட்டான் இந்த
  பைத்தியக்காரன்..!!

* இப்பொழுது தான் எனக்கே தெரிகிறது...!!
  என் உள்ளம் கொண்டிருக்கும்
  உன் மீதான என் அன்பினை....!!

* எட்ட நின்றாலும் என் எண்ணங்கள்
  என்றும் உன் வசமே......!!
  ஆம்..!
  உன்னை மறக்கும் நொடி தான்
 என் மரணம்.....!!

* உன்னோடு உரையாடிய அந்த
  ஒவ்வொரு நொடியும்
  என் இதயத் துடிப்போடு
  இன்னமும் இருக்கிறது....!!

* என் ஒவ்வொரு விடியலும்
  உன் நினைவோடு தான்
  தொடங்குகின்றன.....!!
  என் ஒவ்வொரு இரவும்
  உன் நினைவோடு தான்
  உறங்குகின்றன...!!

* நீ அறிமுகமான அந்த நொடி
  எனக்குத் தெரியாது பெண்ணே....!!
  நீ இப்படி வார்த்தைகளாய் என்னுள்
 வடிவம் பெறுவாய் என்று.....!!

* ஒரு நொடியேனும் எண்ணிப் பார்...!!
  அழகான உன் அன்பில்
  தொலைந்து போன என்னை...!!

* இப்படிக்கு...
 உன் நினைவுகளில் பிரிவினை மறப்பவன்....!!

Posted on பிற்பகல் 10:17 by Elaya Raja

1 comment

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013எழுத்து என்ற வலை தளத்தில் ரமணி எனும் புனைப் பெயரில் நான் எழுதிய ஒரு கவிதை...


*  என் உணர்வுகளுடன்
    உறைந்து போனவளே...!
    நீயின்றி நான் கழித்த
    என் இறந்த காலங்கள்
    இதோ உனக்காக....!

*  வறுமையின் மடியில் 
    நான் மடிந்து கொண்டிருந்ததை
   உணராமல் உன் மடித்தேடிய
   என் மடமையை நினைத்து
   சிரித்துக் கொண்டேன்
    சில காலம்....!

*  கலந்துரையாடிய
   என் கல்லூரித் தோழர்களுடன்
   என் காதலை காவியமென
   சொல்லிக் கொண்டேன்
   சில காலம்...!

*  உறக்கத்தில் உலா வரும்
  உன்னைப் பற்றியக்
  கனவுகளுக்காக சிலாகித்து
  காந்திருந்தேன் சில காலம்....!

*  உன் எழுத்துக்கள்
   அடங்கிய ஏடுகளை
   தடவிப் பார்த்து
   தத்தளித்தேன் சில காலம்...! 

*  உன் கரங்களில்
   வாழ்ந்த வளையல்களை
   முகர்ந்தது பார்த்து
   மோட்சம் பெற்றேன்
   சில காலம்....!

*  "உன்னை பாதைகளில்
   பார்த்து விட மாட்டோமா...?"
   என்று பதைபதைத்துக்
   கிடந்தேன் சில காலம்....!

*   "அவள் மனதின் எங்கேனும்
    ஒரு மூலையில் நான்
   படிந்திருப்பேனா?"
   என்று நினைத்து
   நித்திரை இழந்து
  திரிந்தேன் சில காலம்...!

*  வெட்கமின்றி கூறுகிறேன்....!
   காதல் ஒரு தீ...!
  அதை வெந்த பின்பே
  தெரிந்து கொண்டேன்....!

Posted on முற்பகல் 7:37 by Elaya Raja

2 comments

வியாழன், 7 பிப்ரவரி, 2013

முன்குறிப்பு : இந்தப் பதிவு "தண்ணீர் தேசம்" பற்றிய எனது விமர்சனம் அல்ல. அப்படி விமர்சனம் எழுதும் அளவிற்கு எனக்கு தகுதியிருப்பதாகவும் நினைக்கவில்லை. என் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் பதிவு மட்டுமே இது.


நான் கவிதைகள் வாசித்ததுண்டு. நாவல்களும் வாசித்ததுண்டு. ஆனால் கவிதை வடிவில் ஒரு நாவலை வாசித்ததே இல்லை. கவிதை வடிவில் ஒரு நாவலை ருசிகரமாக எழுத முடியுமா என்று இந்த தண்ணீர் தேசத்தை வாசிக்குமுன்பு என்னிடம் கேட்டிருந்தால் இல்லை என்பதே என் உறுதியான பதிலாக இருந்திருக்கும். ஆனால் இப்பொழுது நிச்சயமாக முடியுமென்பதே என் வாதம். 

கலைவண்ணன் ஒரு பத்திரிக்கை எழுத்தாளர். அவனது தமிழின் பால் கவரப்பட்டு காதல் புரிகிறாள் தமிழ் என்ற பெரிய தொழிலதிபரின் மகள். கலைவண்ணனும் அவளை காதலிக்கத் தொடங்க தன் ஒரே மகளின் ஆசைக்காக அவர்களின் காதலை அங்கீகரிக்கிறார் அந்த தொழிலதிபராகியத் தந்தை. இவர்களின் காதல் சென்னை கடற்கரையோரங்களின் பகுதிகளில்  வளர்ந்து கொண்டே வருகிறது. வழக்கம் போல ஒரு காலைப் பொழுதின் நேரத்தில் அவர்கள் காதல் புரியும் பொழுது அவர்களை ஒரு இயந்திரப் படகு கடக்கிறது. கலைவண்ணனின் மீனவ நண்பர்கள் நான்கு பேர் அந்த இயந்திரப் படகில் இருந்து இவர்களை அடையாளம் கண்டுகொள்கிறார்கள். "கடலுக்குள் மீனப் பிடிக்கச் செல்கிறோம்.. நீங்களும் வாருங்கள் எழுத்தாளரே... கடலுக்குள் சென்று மாலை மங்குவதர்க்குள் கரைக்கு திரும்பி விடலாம்" என்று கலைவண்ணனுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் அந்த மீனவ நண்பர்கள். இவனுள்ளும் அந்த ஆசை துளிர்விட தன் காதலி தமிழையும் உடன் வரக்கூறி அழைப்பு விடுக்கிறான். சிறுவயதில் சுற்றுலா சென்றிருந்த பொழுது படகில் இருந்து ஆற்றில் விழுந்த தோழி ஒருத்தி  இவள் கண் முன்னே இறந்துவிட அன்று முதல் இவளை தண்ணீர் பயம் பீடிக்கிறது. பிறகு அவனுக்காக சம்மதித்து தன் பயம் மறைத்து படகில் பயணிக்கிறாள் தமிழ். அந்தப் படகில் ஆறு ஜீவன்களுடன் ஏழாவதாக ஒரு ஜீவனும் பயணிக்கிறது. அந்த ஏழாவது ஜீவன் ஒரு சுண்டெலி. கரையிலிருந்து பல மைல் தொலைவு பயணித்து முடித்தப் பிறகு அந்த படகு இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிடுகிறது. வேறு ஏதாவது ஒரு கப்பல் அல்லது படகு வந்தால் மட்டுமே அவர்கள் அங்கிருந்து தப்பிக்க முடியும் என் சூழ்நிலை. ஒரு நாள், இரண்டு நாள் என்று நாட்கள் பயணிக்க அவர்கள் கொண்டு வந்த உணவும் குடிநீரும் குறைந்து கொண்டே வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த தண்ணீர் தேசத்திலிருந்து அந்த ஏழு ஜீவன்களும் பிழைத்தார்களா என்பதே இந்த "தண்ணீர் தேசம்"..


வைரமுத்து அவர்களின் எழுத்துக்கள் என்றுமே வசீகரமானவை. நாம் பலமுறை பேசி பழகிருக்கும் வார்த்தைகளை கூட அவர் பயன்படுத்தும் பாங்கு நம் மதி மயங்க செய்யும். இந்த நூலிலும் அவரின் கைவண்ணத்தில் உருவான சில வரிகள் என்னை மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டின. அவரின் தமிழ் ஆளுமை கண்டு பல வரிகளில் வியந்து போனேன்.

நியாயம், அநியாயம் இரண்டும் சூழ்நிலையை பொறுத்தே மாறுபடுகிறது என்பதை அவர் விளக்கி இருக்கும் இடம் நம் வாழ்வியலின் நிஜத்தை அறைந்து கூறுகின்றன. ஒன்றுமே இல்லாத இடத்தில எல்லாம் ஒன்று தான் என்பதையும் சைவம் அசைவம் என்ற மாறுபாடுகள் கொண்டு விளக்கி இருக்கிறார். அதோடு நில்லாமல் நம் அறிவிருக்கு எட்டாத பல அறிவியல் செய்திகளை திரட்டி ஒரே நூலில் எழுதியிருக்கிறார். அந்த வகையில் நிச்சயம் இது ஒரு விஞ்ஞான காவியம் என்றே சொல்ல வேண்டும்.

ஒரு நாவலை எந்த வடிவில் கூறினாலும் ஒரு வாசகனின் ரசிப்புத் தன்மை உணர்ந்து கூறினால் அந்த நூல் நூறு சதவிகித திருப்தியை அந்த வாசகனுக்கு கொடுக்கும் என்பதை ஆணித்தரமாக உணர்த்தியிருக்கிறார் "தண்ணீர் தேசம்" என்ற இந்த தரமான நூலின் மூலம். நிச்சயம் தவறவிடக் கூடாத நூல்..!

Posted on முற்பகல் 7:33 by Elaya Raja

No comments

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

கடல்,டேவிட் என்று இரண்டு பெரிய படங்கள் ஒரே நாளில் ரீலீஸ். எந்த படத்திற்கு செல்வது  இந்த வெள்ளிக் கிழமை இரவு என்று எனக்கும் என் நண்பர்களுக்கும் இடையில் சிறு குழப்பம். இறுதியில் "டேவிட்" செல்லலாம் என்று முடிவு செய்து முன்பதிவு செய்தோம். காரணம் மணிரத்தனத்தின் கடைசி சில படங்கள் பெரிதாக சொல்லிக் கொள்ளும் படி இல்லை. ஆகவே அதன் ரிசல்ட் தெரிந்தவுடன் அதற்க்கு செல்லலாம் என்று தான். கடைசில கவுத்துட்டாங்க மாப்ள.

ஆரம்பமே ஒரு மாதிரி இருந்தது. இருந்தாலும் நம்பி உக்காந்தோம். யார் யாரோ வராங்க. என்ன என்னமோ பேசிக்குராங்க.  ஒரு தமிழ் படத்துல என்ன நடக்குதுனே புரியாம நான் பாத்துட்டு வந்த மொத படம் இது தான்..விக்ரம் வர போர்சன் தனி. ஜீவா வர போர்சன் தனி. ஜீவா போர்சன் கூட சில இடங்கள்ல ரசிக்க முடியலனாலும் பாக்கவாது முடிஞ்சது. ஆனா விக்ரம் போர்சன் சான்சே இல்ல. செம்ம கடி. விக்ரம் ஸ்க்ரீன்ல வந்தாலே பயமா இருக்கு. ஒரு கருமாந்திரமும் புரியல. இதுல இருந்து இவங்க என்ன சொல்ல வராங்கனு தெரியல. அதுவும் நடுவுல நடுவுல விக்ரமோட அப்பானு ஒருத்தர் வராரு. அது என்ன கான்செப்ட்னு தெரியல. நீங்க யாராவது படம் பாத்து புரிஞ்சா சொல்லுங்க.. இன்டர்வெல் பிளாக் வரதுக்கு முன்னாடி ஒரு சீன் நல்ல இருந்தது. ஆகா இனி செம்மையா இருக்க போகுதுன்னு நம்பி இன்டர்வெல் முடிஞ்சதும் போய் உக்காந்தோம்.  அதுக்கு அப்புறம் தான் கொலையா கொன்னாங்க. ஜீவா ஒரு பக்கம் எனக்கு பதில் வேணும் பதில் வேணும்னு  திரியுறாரு.  விக்ரம் ஒரு பக்கம் சரக்கு எந்த எந்த ஸ்டைல்ல அடிக்காலம்னு  க்ளாஸ் எடுக்குறாரு. காமெடிங்கற பேருல மொக்க டயலாக்ஸ். அதுக்கும் சில பேரு கை தட்டும் போது ஒரு டவுட் கூட வந்தது. ஒரு வேளை நமக்கு தான் படம் புரியலையோனு. ராம ராஜன் ஒரு படத்துல கௌண்டமணி கிட்ட "ஆமா.. இழைல ஊறுகா இருந்துச்சி..?"னு கேக்குற மாதிரி என் நண்பன் ஒருத்தன் படம் முடிஞ்சதும் என்கிட்ட கேட்டான்  "படத்துல பாட்டு இருந்துச்சி...?" அப்டின்னு. பாவம் அந்த பயபுள்ளைய தப்பு சொல்ல முடியாது.. பாட்டு எது...? படம் எது..? அப்டின்னு புரியாத அளவுக்கு  படம் எடுத்தது அவங்க தப்பு. என்னமோ கடைசி வரைக்கும் ஒன்னும் புரியல. தண்டமா 120 ரூபா போனது தான் மிச்சம். சொந்த காசுல சூனியம் வச்சிக்குறதுனு கேள்வி பட்டிருக்கிங்களா... ?? அது இது தான்...

டைரக்டர் வித்தியாசமா கதை சொல்லனும்னு ஆசை பட்டு இருக்காரு. அது தப்பில்லை. அதுக்கு நம்மள பலியா கொடுத்தது தான் தப்பு. எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் தியேட்டர்ல படம் பாக்குறது. ஆனா ஏன்டா தியேட்டர்க்கு வந்தோம்னு இந்த படம் என்னை ரொம்ப பொலம்ப வச்சிருச்சி... ஆனா கொடுத்த காசுக்கு கொஞ்சம் உருப்படியா இருந்தது இன்டர்வெல் டைம்ல போட்ட trailers  தான். கேடி பில்லா கில்லாடி ரங்கா, ஆதி பகவன், விஸ்வரூபம் எல்லா trailers உம் போட்டாங்க.. இப்ப எல்லாம் trailer மட்டும் தான் நல்லா இருக்கு...  எப்டியோ என்னோட ஒரு வெள்ளிக் கிழமை வீணாப் போச்சி...

குறிப்பு : என்னோட அன்பான வேண்டுகோள்... தயவு செய்து யாரும் டேவிட் படம் ஓடுற தியேட்டர் பக்கம் கூட போய்டாதிங்க. 

Posted on பிற்பகல் 10:50 by Elaya Raja

No comments