திங்கள், 28 அக்டோபர், 2013

உதவி இயக்குனர்களுக்கு 

ஒரு திரைப்படம் வெளி வந்து வெற்றி பெற்றால் அந்த படத்தின் இயக்குனரின் அறிவுத் திறமையை வியந்து புகழ்வோம்.. ஆனால் அதன் பின் ஒளிந்து கிடக்கும் பல உதவி இயக்குனர்களின் உழைப்பு கேட்பாரின்றி கிடக்கிறது... தான் நேசிக்கும் சினிமாவில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்ற எதிர்கால நம்பிக்கையோடும் விடா முயற்சியோடும் ஓடிக் கொண்டிருக்கும் பல உதவி இயக்குனர்களுக்கு இந்த கவிதையை சமர்ப்பிக்கிறேன்....

கனவுகள் விதைத்து காட்சிகள் வளர்க்கிறோம்...
பொருளாதார பூதத்தின் பிடிதனில் அறைபடுகிறோம்...
வெள்ளித்திரை தொட்டுவிட வேதனை சுமக்கிறோம்...
அவமானங்கள் அலைக்கழிக்க உதாசினங்கள் உயிர்பிழிய 
தனிமை நொடிகளில் இரவின் மடி நனைக்கிறோம்...
அடித்தாலும் உதைத்தாலும் தாய் பிரிய மறுக்கும் 
சேயாய் சினிமாவின் பாதம் தொடர்கிறோம்...
காரணம்....
என்றேனும் ஒரு நாள்
இருட்டறையில் எழும் கைத்தட்டலால்
வாழ்வு வெளிச்சம் பெரும் என்ற நம்பிக்கையில்...Posted on முற்பகல் 3:13 by Elaya Raja

No comments

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

தமிழ் நண்பர்கள் தளத்தில் "மோதிரம்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி உள்ளேன்..

 அன்பு மட்டுமே நம் கொடுப்பதை விட இரண்டு மடங்கு திரும்பி வரும்... உலகின் மிகபெரிய ஏழை அன்பு காட்ட ஆள் இல்லாதவனே... நண்பர்கள் கதையினை படித்து கருத்துகளை விட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்....

Posted on முற்பகல் 4:05 by Elaya Raja

No comments

வியாழன், 5 செப்டம்பர், 2013

நண்பர்களே... தமிழ் நண்பர்கள் என்ற தளத்தில் “துரோகத்தின்சம்பளம்” எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதி உள்ளேன்... அதைப் படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை அங்கே விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்... 

அன்பானவர்களுக்கு மத்தியில் வாழும் வாழ்வு மட்டுமே அர்த்தமுள்ளதாகிறது... அதை வலியுறுத்தும் விதமாய் கதை அமைத்துள்ளேன்.. கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன....

Posted on முற்பகல் 3:21 by Elaya Raja

No comments

யாராவது ஒரு ஆட்சியாளர், அல்லது மேல் மட்டத்தில் இருப்பவரோ தன் அதிகார பலத்தையோ தன் அடக்குமுறையையோ மற்றவர்கள் மீது செலுத்த முற்ப்பட்டால் “என்னய்யா இவன்.. ஹிட்லர் ஆட்சி நடத்துறான்..” என்று சொல்லக் கேட்டிருப்போம்... இப்படி அடக்குமுறைக்கும் சர்வாதிகாரத்திற்கும் ஒரு அடையாளமாய் மாறிபோன ஹிட்லர் பற்றி கனகச்சிதமாய் கூறும் நூல் தான் இந்த “ஹிட்லர்”... எனக்கு சிறுவயது முதல் ஹிட்லர் என்றால் அவரது சின்ன மீசை தான் நியாபகம் வரும்.. ஆனால் குட்டி மீசைக்காரர் செய்திருக்கும் விஷயங்கள் பற்றி படித்த பொழுது “கொய்யாலே.. நல்ல வேலை ஜெர்மனில பிறக்கல...” அப்படின்னு ஒரு நிம்மதி வந்தது... பன்னிரண்டு வருட ஆட்சி, அறுபது லட்சம் கொலைகள்.. இப்படி ஒரு சர்வாதிகாரி நிச்சயம் இனி சாத்தியம் இல்லை.. யூதர்கள் மீதான இவரின் இனவெறிச் செயல் படித்த நொடிகளில் நடுக்கத்தை கொடுத்தன...பா.ராகவன் அவர்களின் எழுத்து நடையை மிகவும் ரசித்தேன்.. பல இடங்களில் ஹிட்லரின் செயல்களை அவர் எள்ளிநகையாடும் விதம் என்னைக் கவர்ந்தன... அரசியல் ரீதியான புத்தகங்களை நான் அதிகம் வாசித்ததில்லை... ஹிட்லரின் அரசியல் வாழ்க்கையை இவர் எழுத்தாக்கி இருக்கும் விதம் அருமை... மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் படித்த ஒரு விறுவிறுப்பான புத்தகம்...

Posted on முற்பகல் 3:12 by Elaya Raja

No comments

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013


இன்னுமொரு காதல் தோல்வி கவிதைஉயிர் பறித்துச் சென்ற காதலியே...
ரணத்தில் வழியும் ரத்தம் காயலையே...
வெறும் சதைப் பிண்டமாய் என்னை செய்து விட்டாய்...
கல்யாணச் சந்தையில் இன்னொருவன் கரம் புகுந்து விட்டாய்..
நாடி நரம்பெல்லாம் கொதிக்குதடி...
கண்ணீர் வற்றிய கண்களும் வலிக்குதடி...

காதலின் மடிசுகம் கேட்டதில்லை..

கன்னி நீ என் விழிகளில் விழும் வரை..
அன்னைக்கு மாற்று என உன்னை நினைக்க வைத்தாய்...
உணர்வுகள் கரையும் தருணத்தில் என்னை உடைத்துவிட்டாய்..
உன் பாதச் சுவடுகள் பார்த்து மகிழ்ந்தவனை
பாவக் குழிதனில் தள்ளி புதைத்து விட்டாய்...
தேவதையே...
தெரிந்துதான் செய்தாயா இந்த பிழையை...

உன்னோடு ஒன்றாக பயணித்த பாதைகளை

தனியனாய் நான் தாண்ட நினைக்கையில்
நிழலற்ற நெறிஞ்சி முள் ஒன்று
என் நெஞ்சம் கீறிப் பார்பதென்னவோ..?
விடைகளை தொலைத்து நிற்கும் வினாக்கள் போல
மிச்சமிருப்பதென்னவோ காலம்
ஏதுமற்ற என் காதல் மட்டுமே...
வலி தந்து சென்ற என் கிளியே..
இனி இருள் மட்டும் தான் எனக்கு முடிவே...!

Posted on பிற்பகல் 7:36 by Elaya Raja

No comments

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

 நன்றி:

"தலைவா" படம்   பார்க்காமல் நொந்து போய் கிடக்கும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தாவிடினும் வார விடுமுறைகளில் ஏதேனும் புது படம் பார்க்கா விட்டால் கை நடுக்கமெடுக்கும் என் போன்ற சினிமா ரசிகர்களையேனும் திருப்தி படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிட நினைத்திருந்த திரைப்படத்தை 10ஆம் தேதியே வெளியிட்டு எங்கள் வயிற்றில் பால்வார்த்த "555" திரைப்படக்குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகள்...

பரத் விபத்துக்குள்ளாகும் ஒரு காட்சியுடன் தொடங்குகிறது திரைப்படம்.. விபத்திலிருந்து மீட்கப்படும் பரத் சிகிச்சை பெற்று உயிர் பிழைக்கிறார்... தன் காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் ஒரு வீடியோ சிடியையும் அவரின் நினைவாக வைத்திருக்கிறார்... தன் காதலியின் கல்லறைக்கு சென்று மெழுகுவர்த்தி ஏற்றி வருகிறார்... தன் அண்ணன் சந்தானத்தின் வற்புறுத்தலால் வேலைக்குச் செல்கிறார்.... வேலைக்குச் செல்லும் இடத்தில் ஒரு பெண்ணின் நட்புக் கிடைக்கிறது.. ஒரு நாள் வீட்டில் தான் வைத்திருந்த புகைப்படமும் சிடியும் காணாமல் போக அதற்க்கு காரணம் தன் அண்ணன் சந்தானம் தான் என்று அவரை அடித்து விடுகிறார்.. பரத் சிகிச்சை பெற்று வரும் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறார் சந்தானம்.. அந்த மருத்துவர் பரத்தின் காதலி, அந்த புகைப்படம், வீடியோ காட்சிகள் அனைத்தும் அவரின் கற்பனை என்கிறார்.. ஒரு கட்டத்தில் அவர்கள் சொல்வதை நம்பும் பரத் அடுத்தடுத்து நடக்கும் சில சம்பவங்களால் தன் காதலி கற்பனை அல்ல நிஜம் தான் என அறிகிறார்.. நிஜமென்றால் எதற்க்காக தன் அண்ணன் , மருத்துவர் என எல்லோரும் தன்னிடம் பொய் சொல்ல வேண்டும்..? தன்னுடன் விபத்தின் போது இறந்து விட்டதாக எண்ணிய காதலிக்காக யார் தன்னைக் கொல்ல முயல்கிறார்கள்..? என்கிற பரத்தின் தேடலுக்கான விடையே "555"

சொல்லாமலே, ரோஜாக் கூட்டம் , பூ போன்ற மென்மையான படங்களுக்கு பெயர் பெற்ற சசியின் முதல் ஆக்ஸன் பட முயற்சி... சசியின் ஆக்ஸன் முயற்சிக்கு சிக்ஸ்பேக் உடம்புடன் உயிர் கொடுத்திருக்கிறார் பரத்... பழனி, திருத்தணி போன்ற மொக்கை படங்களினால் துவண்டு போயிருந்த பரத் இதில் தன் நூறு சதவிகித உழைப்பைக் கொடுத்து படத்தின் வெற்றிக்கு உதவியிருக்கிறார்... காதல் காட்சிகளை விட ஆக்ஸன் காட்சிகளில் தூள் பரத்துகிறார்.... 

நாயகி மிர்த்திகா.. நடிப்பிலும் சரி அழகிலும் சரி சுமார் ரகமே.. சில காட்சிகளில் மட்டுமே ரசிக்க முடிந்தது... குறிப்பாக பரத்திடம் ஏதோ பவர் இருப்பதாக அவர் நம்பும் காட்சிகளில் அவரை ரசிக்க முடிந்தது...  ஹீரோவின் நண்பனாக மட்டுமே வந்து நம்மை சிரிக்க வைக்கும் சந்தானம் இதில் ஹீரோவின் அண்ணனாக வந்து நம்மை சிரிக்க வைத்து இறந்து போகிறார்.. இயக்குனர் நகைச்சுவைக்காக இன்னொரு கதாப்பாத்திரத்தை இணைக்க விரும்பாமல் சந்தனத்தை வைத்தே "காமெடி + செண்டிமெண்ட் " காம்பினேசனுக்கு முயற்சித்திருக்கிறார்.. இதில் செண்டிமெண்ட் ஏரியாவில் ஓரளவு வெற்றியே... இரண்டாவது நாயகியாக ஒரு வருகிறார் ( சாரி பா.. பேரு தெரியல) முதன்மை நாயகியே சுமார் எனும் போது இவர் மட்டும் என்ன...? வில்லனாக வருபவரும் சற்று தொங்கலாகவே இருக்கிறார்.. ஆனால் அவருக்கு ஏக பில்டப்...

திரைக்கதை சில இடங்களில் தொய்வாக இருந்தன... சமர் படத்தின் சாயல் படத்தின் பெரும் சறுக்கல் என்றே தோன்றியது... இடைச் செருகலாக பாடல்கள் படத்தின் பெரிய பலவீனம்.. ஒளிப்பதிவு நன்றாக இருந்தது... வசனங்களும் பாடல் இடங்களில் ரசிக்க வைத்தன...

என்னதான் படத்தின் சஸ்பென்ஸ் இறுதிவரை சரியாக கடைப்பிடிக்கப்பட்டிருந்தாலும் நடக்கும் விஷயங்களுக்கு காரணம் புரியாமல் ஹீரோவோடு சேர்ந்து நாமும் குழம்புவதால் ஏற்படும் சலிப்பை தவிர்க்க முடியவில்லை.. "படம் பாக்குறவங்கள லூசுன்னு நினைச்சிட்டாங்களா..?" என்ற பலரின் முனுமுனுப்புகள் நன்றாகவே கேட்டன.. 

படம் அரங்கு நிறைந்த காட்சியை ஓடியது..."தலைவா" படத்தின் தடை ஒரு காரணம் என்றாலும் பரத்தின் "சிக்ஸ்பேக்" உடம்பும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாதது... என் பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு நடுத்தரவயது பெண்மணி "எப்பப்பா.. பரத் சிக்ஸ்பேக் காட்டுவாரு..?" என்று உடன் வந்தவருடன் கேட்டுக் கொண்டே இருந்தார்.. 

பரத்தின் அசுர உழைப்பிற்கும், சசியின் முயற்சிக்கும் இந்த படத்தின் வெற்றி மட்டுமே பதிலாக இருக்க முடியும்... வெற்றி பெரும் என்று நினைக்கிறேன்.. பார்ப்போம்...

Posted on பிற்பகல் 8:43 by Elaya Raja

No comments

புதன், 31 ஜூலை, 2013புதுசா ஒரு படம் ரிலீஸ் ஆச்சினா என் பிரண்ட்ஸ்  படம் எப்டி இருக்குன்னு என்கிட்ட தான்  கேப்பாங்க... நான் ஒன்னும் ப்ரீவியு  ஷோ எல்லாம் பாத்திருக்க மாட்டேன் ... படத்தோட முதல் ஷோ முடிஞ்சதுமே இப்ப தான் ரிவியூ வந்துடுதே... அத படிச்சிட்டு அவங்களுக்கு படம் பத்தின தகவல கொடுப்பேன்... இத ஒரு பொது சேவையா நினைச்சி பண்ணிட்டு வரேன்... அப்டி நல்லா  இருக்குனு சொல்லி படத்துக்கு என் நண்பர்கள் கூட்டிட்டு  போய் படம் புடிக்காம  அவனுங்க கிட்ட அடிவாங்குன சம்பவங்கள் நிறைய... அதப் பத்தி எழுதுறதுனா எழுதிட்டே போகலாம்.. அவளோ இருக்கு... கொஞ்ச நாளா  இந்த மாதிரி சம்பவத்துல மாட்டாம இருந்தேன் ... ஆனா இந்த சொன்னா புரியாது படத்துல மாட்டிகிட்டேன்...


சிவா ஆங்கில படங்களுக்கு தமிழ் குரல் கொடுக்குற டப்பிங்  ஆர்டிஸ்ட்.... கல்யாணம் அப்டிங்கற சிக்கல்ல மாட்டிக்காம வாழ்க்கைய என்ஜாய் பண்ணனும்னு நினைக்குறவர்.. அம்மாவோட எமோசனல் பிளாக்மெயிலுக்கு பயந்து கல்யாணம் பண்ணிக்க சிவா சம்மதிக்க அவருக்கு பாக்குற பொண்ணு தான் வசுந்தரா... கல்யாணம் நிச்சயம் ஆகிடுது... ஆனா இந்த கல்யாணத்துல வசுந்தராக்கும் சம்மதம் இல்லன்னு சிவாக்கு தெரிஞ்சதும் ரெண்டு பெரும் சேர்ந்து இந்த கல்யாணத்த நிறுத்த பிளான் பண்றாங்க... கல்யாணத்த நிறுத்துனாங்களா...? இல்ல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களா..? இது தான்  சொன்ன புரியாது..

கதை என்னமோ பழசு தான்... ஏற்கனவே மாதவன், ஜோதிகா நடிச்சி வந்த "டும் டும் டும் " படக் கதை.. காமெடியா சொல்லி படத்த ரசிக்க வைக்க முயற்சி பண்ணிருக்காங்க.. அதுல பாதி சக்சஸ் ஆகிருக்காங்க.. இப்டி சொல்றேனா அதுக்கு முழுக் காரணம் சிவா தான்.. எல்லா டயலாக்ஸ்க்கும் ஒரே மாதிரியான ரியாக்சன்ஸ்... ஆனாலும் ரசிக்க முடியுது... வசுந்தரா நடிப்பும் சரி அழகும் சரி சுமார் தான்... சிவா பிரண்டா வர ப்ளேடு சங்கர் உண்மையாவே ப்ளேடு தான்... அந்த குண்டா வர பையன வச்சி சில இடத்துல சிரிக்க வைக்குறாங்க..

படத்துல பிளஸ்னு சொல்லனும்னா சிவா மட்டும் தான்... மைனஸ்னு சொல்லனும்னா ஏகப்பட்டது இருக்கு... எப்பவும் ஆங்க்ரி பேர்ட் விளையாடிட்டே இருக்குற பாட்டி கேரக்டர்... செம்ம கடுப்பா இருந்தது... அப்புறம் அந்த குண்டு பையன்... குண்டா இருந்தா எப்பவும் சாப்ட்டுக்கிட்டே தான் இருப்பாங்களா... குண்டா இருந்தா சாப்டுறத தவிர வேற வேலையே இருக்காதா... புதுசா யோசிங்க பாஸ்... அப்புறம் சாம் ஆண்டர்சன்... அவரைக் கலாய்ச்சி காமெடி பண்றேன்னு செம்ம மொக்க சீன் பண்ணிருக்காங்க... கடுப்பேத்துறாங்க மை லார்ட்... ரொம்ப நாடகத்தனமா இருந்தது நிறைய சீன்ஸ்.. என்ன தான் காமெடி படம்னாலும்  இப்டியா லாஜிக் இல்லாம கண்டபடி மொக்க போடுறது... இந்த படத்துக்கு கூட்டிட்டு போனேன்னு என் பிரண்ட்ஸ் எல்லாம் ஏதோ கொலைகாரணப் பாக்குற மாதிரி படம் முடியுற வரைக்கும் பாத்துட்டே இருந்தாங்க... இசை , ஒளிப்பதிவு எல்லாமே சுமார் ரகம் தான்...


மொத்ததுல சிவா இல்லனா இந்த படம் அதோ கதி தான்... 

Posted on முற்பகல் 10:32 by Elaya Raja

No comments

ஞாயிறு, 21 ஜூலை, 2013

மரியான் படத்துக்கு சனிக்கிழமை போக போகிறேன் என்றதும் வெள்ளிக்கிழமை படம் பார்த்து விட்ட என் நண்பன் ஒருவன் “மச்சான்.. உன் நல்லதுக்கு சொல்றேன்... வேணாம்... அந்த படம் பாக்குறதுக்கு பேசாம ஒரு குவாட்டர் அடிச்சிட்டு குப்புறப்படுத்து தூங்கிடு.. படம் செம்ம மொக்கை...” என்று வாய் மொழி விமர்சனம் கொடுத்துவிட்டான்... “ஐயையோ.. படம் எப்டி இருக்குனு தெரியாம ரிசர்வ் பண்ணி தொலைச்சிட்டோமே..” என்று நொந்து கொண்டே படம் பார்க்கச் சென்றேன்... என்ன ஆச்சர்யம்.. படம் எனக்கு மிகவும் பிடித்துப்போனது...


ஆப்பிக்காவில் வேலை பார்க்கும் தனுஷ் தன் காதலி பார்வதியிடம் தொலைபேசியில் பேசுவதிலிருந்து கதை தொடங்குகிறது... இரண்டு வருட தொழில் ஒப்பந்தம் முடிந்து தன் சொந்த ஊருக்கு திரும்பவிருக்கும் சந்தோஷத்தில் இருக்கும் தனுஷ் வாய்ஸ்ஓவரில் பிளாஷ்பேக் சொல்ல ஆரம்பிக்கிறார்... தன் கடலோரக் கிராமத்தில் மீன் பிடிக்கும் வேலை செய்து கொண்டிருக்கும் தனுஷ் மேல் பார்வதிக்கு ஏகப்பட்ட லவ்... ஆனால் அவரோ பார்வதியை வெறுத்து ஒதுக்குகிறார்...  நாற்பது நிமிடக் காட்சிகளுக்கு பிறகு காதலிக்க தொடங்கி விடுகிறார்... பார்வதியின் மேல் கண்ணாய் இருக்கும் அந்த ஊரு வட்டிக்காரன் ஒருவன் பார்வதியின் தந்தை வாங்கிய கடனுக்கு பதிலாக பார்வதியை கட்டிக் கொடுக்க கேட்க்க ஹீரோ என்ட்ரி.. ஒரு செம்ம பைட்... காண்டாகும் வட்டிக்காரன் ஒரே நாளில் கடனை திருப்பி செலுத்த சொல்ல வெளிநாட்டில் இரண்டு வருட ஒப்பந்தத்தில் வேலை பார்க்கச் செல்ல சம்மதித்து முன்பணம் வாங்கி கடனை செலுத்தி விட்டு காதலியிடம் விடை பெற்று சென்று விடுகிறார்... பிளாஷ்பேக் முடிகிறது... அடுத்த காட்சியே தனுஷ், தனுஷுடன் வேலை பார்க்கும் ஜெகன் மற்றும் ஒரு ஹிந்தி காரன் ஆகியோர் அந்த நாட்டு கொள்ளை கும்பல் சிலரால் கடத்தபடுகிறார்கள்... தனுஷ் வேலை பார்க்கும் கம்பெனியை மிரட்டி பணம் பறிப்பதே அவர்களின் திட்டம்... அவர்களிடமிருந்து தனுஷ் தப்பினாரா..? தன் காதலி பார்வதியை கரம் பிடித்தாரா என்பதே மரியான்...

தனுஷின் நடிப்புத் திறமைக்கு தீனி போட்டிருக்கும் படமிது... சும்மா புகுந்து விளையாடியிருக்கிறார்... ஒவ்வொருக் காட்சியிலும் ஏகப்பட்ட முகபாவனைகள்... நிறைய காட்சிகளில் கைத் தட்டல்களை அள்ளிச் செல்கிறார்.. பார்வதியுடனான காதல் காட்சிகளிலும் சரி அந்த கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொண்டதும் அவரின் நடிப்பும் சரி பார்த்து கொண்டே இருக்கலாம் என்ற அளவில் பிடித்துவிட்டது... பூ படத்தில் அறிமுகமான பார்வதி நடிப்பில் தனுஷிடம் போட்டி போடுகிறார்.. சில இடங்களில் அவரை மிஞ்சி விடுகிறார்.... மேக்அப் இல்லாமலே அழகாக தெரிகிறார்... தேசிய விருது வாங்கிய மலையாள நடிகர் சலீம் குமார் பார்வதியின் தந்தையாக வீணடிக்கப்பட்டிருக்கிறார்... உமா ரியாஸ்கான் தனுஷின் அம்மாவாக சில இடங்களில் நன்றாகவும் சில இடங்களில் செயற்கையாகவும் நடித்திருக்கிறார்... அப்புக் குட்டி, ஜெகன் இருவரும் சில இடங்களில் சிரிக்க வைத்து இறந்து போகிறார்கள்...

ரகுமான் இசையில் சோனாபெரியா, கடல் ராசா, இன்னும் கொஞ்ச நேரம், நெஞ்சே எழு பாடல்கள் அற்புதம்.. பின்னணி இசையும் அசத்தல்... மார்க் கொனிக்ஸ் ஒளிப்பதிவு கண்ணில் ஒற்றிக் கொள்ளும் அளவு அருமை... வசனங்கள் சில இடங்களில் நன்றாக இருந்தன...

படத்தில் நான் ரசித்த காட்சிகள் நிறைய... குறிப்பாக தனுஷும் ஜெகனும் சாப்பிடுவதைப் போல கற்பனை செய்து கொள்ளும் காட்சி.. தனுஷ் கொள்ளை கும்பலிடம் மாட்டிக் கொண்ட பின் தொலைபேசியில் பார்வதியிடம் பேசும் காட்சி... பார்வதி தனுஷ் வீட்டுக்குள் வந்து பேசும் காட்சி... படம் முடிந்து வெளியில் வந்த போது தனுஷ், பார்வதி இருவரும் மனம் முழுதும் நிறைந்திருந்தார்கள்... இருவருக்குமிடையே செம்ம கெமிஸ்ட்ரி... என்னவென்று தெரியவில்லை... கடைசியாக வந்த சில படங்களில் ஹீரோயின் உடன் நடிக்கும் காட்சிகளில் எல்லாம் காதல் பொங்கி வழிகிறது... தனுஷ் வாட்ச் பண்ண வேண்டிய வால் கிளாக் தான்...

தனுஷை ஒரு நடிகராக மட்டும் இல்லாமல் பாடலாசிரியராகவும் மிகவும் ரசித்தேன்... கடல் ராசா பாட்டின் வரிகளும் தனுஷின் முகபாவனைகளும் மிகவும் ரசிக்கும் படி இருந்தன...

சில காமெடிகளும் படத்தில் உண்டு... கடலுக்குள் சென்ற இடத்தில் சலீம் குமார் தீப்பெட்டி கேட்க அவர்களின் படகுக்கு அருகில் வரும் படகில் உள்ள  ஒருவரிடம் தீப்பெட்டி வாங்க கடலுக்குள் டைவ் அடித்து அந்த படகின் அருகில் சென்று தீப்பெட்டி வாங்கி வாய்க்குள் திணித்துக் கொண்டு வருகிறார் தனுஷ்... ஏங்க பாஸ்.. பக்கத்துல படக கொண்டு போனா கை நீட்டியே வாங்கலாமே... உங்க ஹீரோயிசத்தக் காட்ட வேற சீனே கிடைக்கலையா...? தனுஷ் ஒல்லியா இருக்குறதால அவரு பாடிக்கு ஏத்த மாதிரி வில்லன் இருக்கணும்னு ஆப்ரிக்காவுல ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த பசங்கள இழுத்து வந்து கழுத்துல மண்டையோடு, மூக்கு போடி டப்பா எல்லாம் போட்டு மூக்க விடைப்ப வச்சிக்க சொல்லி படம் எடுத்திருக்காங்க... அந்த லூசுங்க எப்ப பாத்தாலும் ஏதோ தோசை சுடுற மாதிரி துப்பாக்கி எடுத்து வானத்தைப் பாத்து சுட்டுக்கிட்டே இருக்கானுங்க...

பணம் சம்பாதிப்பதற்காக தன் அப்பா , அம்மா, மனைவி, குழந்தை, காதலி என்று அன்பானவர்களை பிரிந்து வெளிநாட்டில் எவனோ ஒருவனிடம் அடிமைப் பட்டுக் துயரம் காணும் ஒவ்வொருவருக்கும் இந்த படம் நிச்சயம் மிக நெருக்கமாக தோன்றும்...


இது போன்ற படங்களுக்கு மக்கள் ஆதரவு தரும் பட்சத்தில் தமிழ் சினிமாவில் இன்னும் சில புதுமையான கதைக் களம் நல்ல படங்கள் தோன்றும் வாய்ப்பு இருக்கிறது... என்னைப் பொறுத்த வரை இந்த திரைப்படம் தமிழ் சினிமாவின் மற்றுமொரு தரமான படம்....

Posted on முற்பகல் 12:06 by Elaya Raja

No comments

புதன், 17 ஜூலை, 2013

உறங்காமல் விழித்துக் கிடக்கும் தன் பிள்ளைக்கு ஒரு தாய் பாடும் தாலாட்டு என் கருவறை நிறைத்து வந்த கண்மணியே...
மெத்தையிலே விழி இன்னும் நீ மூடலையே...
தாலாட்டு பாடி உன்னைத் தூங்க வைக்க 
தாய் உன்னை மடி மீது ஏந்தி நின்றேன்...
நீ விழி மூடும் வரை நான் விழித்திருப்பேன்...
உன் கனவுகளையும் உனக்காக துவைத்து வைப்பேன்...
கண்ணுறங்கு என் செல்லமே...
கவலை சுமக்க நானிருக்கேன்...
என் உதிரமனைத்தையும் உனக்கூட்டி
உன்னை நான் வளர்த்தெடுப்பேன்...

Posted on முற்பகல் 9:37 by Elaya Raja

2 comments

நம் எல்லோருக்கும் இயக்குனர் சேரன் அவர்களை தரமான படங்களை இயக்கும் ஒரு இயக்குனராகவும் ஒரு நடிகராகவும் மட்டுமே தெரியும்... ஆனால் சினிமா எனும் வானில் சிறகு விரிக்க எண்ணற்ற அவமானகளையும் வலிகளையும் சுமந்து திரிந்த இளஞ்சேரன் எனும் இளைஞன் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது... அந்த இளைஞனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது இந்த "டூரிங் டாக்கீஸ்"

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு புத்தகம் படிக்கும் போது துக்கம், சந்தோசம், உற்சாகம் என்ற அத்தனை உணர்வுகளையும் ஒருசேர பெற்றேன்... ஒரு நல்ல வாசிப்பனுபவத்தை இந்த புத்தகம் கொடுத்தது... சேரனின் திரைப்படம் போன்றே இந்த புத்தகமும் ஒரு நேர்மையான படைப்பு... விடாமுயற்சியும் தளர்ந்து போகாத மனமும் உடைய ஒருவன் என்றும் தோற்றுப் போவதில்லை...  அதை ஆணித்தரமாகச் சொல்லும் மற்றுமொரு வெற்றியாளனின் கதை...

Posted on முற்பகல் 9:19 by Elaya Raja

No comments

புதன், 10 ஜூலை, 2013கொஞ்ச நாட்களாக விமர்சனம் எழுதுகிறேன் என்று இங்கே எதையும் கிறுக்காமல் இருந்தேன்... காரணம் என் விமர்சனங்களுக்கு வந்த விமர்சனங்கள்.. ஒரு படம் நல்லா இருக்குனு எழுதினா "ஏன்டா டேய்.. அது ஒரு படம்.. அத புடிச்சிருக்குன்னு வேற எழுதுறியா...?" என்று என் நண்பர் கூட்டம் சண்டைக்கு வந்தது... சரி என்று "படம் நல்லாவே இல்ல மொக்கப் படம்" அப்டின்னு எழுதினா,"டேய்.. அந்த படத்துக்கு என்னடா குறைச்சல்.. அதப் போய் நல்லா இல்லனு எழுதியிருக்க.." என்று மீண்டும் சண்டைக்கு வந்தது அதே நண்பர் கூட்டம்.. அடப் போங்கடான்னு அதான் கொஞ்ச நாள் சும்மா இருந்தேன்... ஆனா " நீ மறுபடியும் அதே பழைய பன்னீர் செல்வமா வரணும்.." அப்டின்னு சத்ரியன் பட வில்லன்  மாதிரி என் நண்பன் ஒருத்தன் "மச்சான்.. நீ கண்டிப்பா விமர்சனம் எழுதுற.."னு அன்புக் கட்டளை போட்டான்... நான் எழுதுறத படிக்குறதுக்கும் ஒரு வாசகன் இருக்கானேனு ஆனந்தக் கண்ணீரே வந்துடிச்சி... அதான் வட்டிக்கு கடன் வாங்கி "சிங்கம் 2" படத்த பாத்துட்டு விமர்சனம் எழுதுலாம்னு வந்துட்டேன்... விமர்சனம் படிச்சிட்டு ஏதும் பாராட்டனும்னு நினைச்சா என்னையும் என் நண்பனையும் சேர்த்து பாராட்டுங்க... திட்டணும்னு தோனுச்சினா என் நண்பன மட்டும் திட்டுங்க...

சிங்கம் 2 படத்தின் டீசெரில் சூர்யா அடிக்கடி டிவியில் வந்து "வாங்கல..." என்பதும் பஞ்ச் டயலாக் பேசிக்கொண்டே கார் கண்ணாடியை உடைப்பதுமாய் கடந்த ஒன்றரை மாதமாகவே அலப்பறை செய்துக் கொண்டிருந்தார்... அந்த விளம்பரங்களைப் பார்த்தே நண்பர்கள் பயந்தார்கள் படத்தைப் பார்க்க... தமிழ் சினிமாவில் வந்த இரண்டாம் பாகத் திரைப்படங்களின் படுதோல்வியே இந்த படத்தின் மீதும் ஒரு வித நம்பிக்கையின்மையை ஏற்ப்படுத்தியிருந்தது... ஆனால் முதல் பாகமோ இரண்டாம் பாகமோ கதையும் காட்சி அமைப்பும் பலமாக இருக்கும் பட்சத்தில் வெற்றி நிச்சயம் என்பதை சிங்கம் 2 நிரூபித்திருக்கிறது... சிங்கம் 2 படத்தின் கதை, சிங்கம் 1 படத்தின் இறுதியிலேயே சொல்லப்பட்டது தான்.. போலீஸ் வேலையை ராஜினாமா செய்வதைப் போல் செய்து விட்டு தூத்துக்குடி துறைமுகப் பகுதியில் ஆயுதக் கடத்தல் ஏதும் நடக்கிறதா என்று ஒரு பள்ளியில் என்சிசி மாஸ்டர் வேலை செய்து கொண்டே கண்காணித்து வருகிறார் துரைசிங்கம் சூர்யா... ஆனால் ஆயுதக் கடத்தல் ஏதும் நடக்கவில்லை பதிலாக போதைப் பொருள் கடத்தல் நடக்கிறது என்று கண்டுப்பிடிக்கிறார்... அந்த போதைப் பொருளை கடத்துவது ஊருக்குள் எதிரிகளைப் போல் நடித்து வரும் ரகுமான், முகேஷ் ரிஷி இருவரும்... இவர்களுக்கு ஹோல் சேல் சப்ளையர் இன்டர்நேஷனல் டிரக் டீலேர் டென்னி சபானி... இவர்களை எப்படிக் கையும் களவுமாக பிடித்து சட்டத்தின் முன் துரை சிங்கம் நிறுத்துகிறார் என்பதே சிங்கம் 2...

ஹரியின் திரைக்கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது சூர்யாவின் நடிப்பு... காட்சிக்கு காட்சி சூர்யா விளையாடி இருக்கிறார்... சண்டை, நடனம், செண்டிமெண்ட் என்று எல்லா ஏரியாவிலும் சூர்யா செம பிட்....என்ன எல்லாக் காட்சிகளிலும் பல்லைக் கடித்துக் கொண்டே பேசுவதும், ஹைபிட்சில் கத்துவதும் என்று சில இடங்களில் இம்சை செய்கிறார்...

சந்தானம் செம பார்மில் இருக்கிறார்... அதனால் வழக்கம் போல இதிலும் ரசிக்க முடிகிறது... விவேக் முதல் பாகத்தில் சிங்கிள் காமெடியன் என்பதால் காட்சிகள் அதிகம்... இதில் சிரிப்புக்கு ஏற்கனவே சந்தானம் இருப்பதால் விவேக்கை வைத்து காமெடி செய்கிறேன் என்று நல்ல வேலை எந்த காமெடியும் செய்யவில்லை... அனுஷ்காவிடம் முதல் பாகத்தில் இருந்த இளமையும் துறுதுறுப்பும் மிஸ்ஸிங்... காரணம் ஹன்சிகாவா என்று தெரியவில்லை... பாடல் காட்சிகளுக்கு லீடு கொடுக்க மட்டுமே அனுஷ்கா உதவி இருக்கிறார்...

சிங்கம் 1ல் பிரகாஷ் ராஜை மட்டுமே வேட்டையாடிய சூர்யா இதில் ரகுமான், முகேஷ் ரிஷி, வெளிநாட்டு வில்லன் டென்னி சபானி என்று மூன்று பேரை வேட்டை ஆடுகிறார்... வில்லன் எவளோ பெரிய ஆளா இருந்தாலும் ஹீரோ முன்னாடி சும்மா தூசு அப்டிங்கரதால டென்னிக்கு முதலில் கொடுக்கப்படும் பில்டப் எல்லாம் கிளைமாக்ஸில் சூர்யா டென்னியை தூக்கி போட்டு எத்தும் போது சுக்குநூறாகப் போகிறது...

சண்டைக் காட்சிகள் படத்திற்கு இன்னுமொரு பலம்... குறிப்பாக மழையில் நடக்கும் சண்டைக் காட்சி... ஒளிப்பதிவும் அந்த சண்டை காட்சியில் பயங்கரம்... சிங்கம் 2வில் பிடித்த இன்னொரு விஷயம் ஹன்சிகா... சூர்யாவை  காதலிக்குறேன் என்று அவரை சுற்றி சுற்றி வரும் காட்சிகளெல்லாம் "ரொம்ப நல்ல புள்ளையா இருக்காளே.. ப்ளீஸ் ஏத்துக்குங்க சிங்கம்" என்று கெஞ்ச தோன்றுகிறது.. விவேக்கிடம் பலித்துக் காட்டும் காட்சியில் "வாவ் " என்று எனக்குள்ளே ஒரு குரல் கேட்டது... 

படத்தில் வரும் எல்லாக் கதாப்பாத்திரங்களும் ஒரு விதப் பதட்டத்தோடே திரிகிறார்கள்... குறிப்பாக "நான் கடவுள்" ராஜேந்திரன் ... ராஜேந்திரன் கொடுத்தக் காசுக்கு அதிகமாகவே கூவி இருக்கிறார்... அவர் படபடப்போடு வரும் காட்சியெல்லாம் நானும் என் நண்பனும் சந்தானத்திற்கு சிரிப்பதை விட அதிகமாகவே சிரித்துக் கொண்டிருந்தோம்...

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசை சுமார் ரகமே... பாடல்கள் பெரிதாக ரசிக்கும் படி இல்லை.. பின்னணி இசை இம்சை... படத்தில் நடிகர்கள் கத்துவது பத்தாது என்று இவர் வேறு காதுக்குள் குச்சியை விட்டு ஆட்டுகிறார்.... ப்ரியனின் ஒளிப்பதிவு நன்று... டாப் ஆங்கிள் காட்சிகள் நன்றாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன... ஹரியின் திரைப்படங்களில் இதுவரை இல்லாத அளவு காட்சிகள் ஸ்டைலிஷாக இருந்தன.. குறிப்பாக சவுத் ஆப்ரிக்கா சேசிங் காட்சிகள்....

கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு காட்சியை நகர்த்தி சென்று விடுவதும்   ஒரு வசனத்தை கவனித்து அதன் அர்த்தத்தைப் புரிந்துக் கொள்வதற்குள் அடுத்த வசனத்தை முடித்து விடுவதும் ஹரியின் ஸ்டைல்... படம் முடிந்து வெளியே வந்த பிறகு தான்  "ஆமா இந்த படத்தோட கதை என்ன...?" என்று யோசிப்போம்... இந்த படமும் அதற்க்கு விதிவிலக்கல்ல... ஜெட் வேகத்தில் நகரும் காட்சிகள்  ஒரே நிமிடத்தில் ஒரு பக்க வசனம் என்று அதே ஹரி டெம்ப்ளட்... இருப்பினும் படத்தை ரசிக்க முடிகிறது..


பொதுவாக நல்ல தரமான கதை அம்சத்துடன் வரும் வரும் திரைப்படங்களை நல்ல
படம் என்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதும் மற்ற திரைப்படங்களை
அரைத்த மாவையே அரைக்கிறார்கள், குப்பை என்றும் விமர்சனங்கள் சாடுவது
உண்டு... ஆனால் என்னைப் பொறுத்த வரை காசுக் கொடுத்து படம் பார்க்க வரும்
ரசிகனையும் பணம் போட்டு படம் தயாரித்த தயாரிப்பாளரையும் திருப்திப்படுத்தும்
அனைத்து திரைப்படங்களும் நல்ல திரைப்படங்களே... அந்த வகையில் "சிங்கம் 2 "
நல்ல படம்...

Posted on முற்பகல் 9:16 by Elaya Raja

No comments