நறுக்குத் தெறிக்கும் வசனங்களால் என்னை ரசிக்க வைத்த திரைப்படம். செத்து மடியும் மீனவ சமுதாயத்துக்காக திரையில் கொஞ்சமேனும் முயற்சி செய்திருக்கும் ஒரு திரைப்படம். வெறும் வியாபாரத்திற்காக இந்த கருவை கையாண்டு இருப்பினும் படம் பார்க்கும் அந்த நிமிடங்கள் நம்மில் ஒரு கேள்வியை இந்த திரைப்படம் ஏற்படுத்தி இருக்கிறது. வாழ வழி தேடிச் செல்லும் மீனவன் வாழ்வை தொலைத்து விடுகிறான். காலம் காலமாக நாம் செய்திதாள்களில் படித்து வரும் ஒரு விஷயம். ஆம் நமக்கு வெறும் விஷயம் என்ற அளவோடு முடிந்து விடுகிறது. கண்ணீர் துளிகள் மட்டுமே அவர்களின் காலம் முழுவதும் கூடவே வருகிறது. அந்த வலியை இந்த திரைப்படம் முழுவதும் பதிவு செய்யவில்லை என்றாலும் எடுத்துக் கொண்ட முயற்சி பாராட்டும் படி இருக்கிறது..விஷ்ணு கொடுத்த கதா பாத்திரத்திற்கு நிறைவு கொடுத்திருக்கிறார். குடித்துவிட்டு அலைவதாகட்டும் திருந்தி மீனவனாக மாற துடிப்பதாகட்டும் நடிப்பு கச்சிதம்.  சுனைனா, சரண்யா பொன்வண்ணன், "பூ" ராம், தம்பி ராமையா, வடிவுக்கரசி, பாண்டி அனைவரின் நடிப்பும் காட்சிகளின் சுவாரசியத்திற்கு கூடுதல் பலம். சமுத்திரக்கனி சில காட்சிகளே வந்தாலும் அவரின் நடிப்பும் பேசும் வசனங்களும் படம் முடிந்த நாம் மனதில் நிற்கின்றன..

பாடல்களும் அவை படமாக்கப்பட்ட விதமும் அருமை. குறிப்பாக " யார் வீட்டு மகனோ" ," பர பர" ஆகிய பாடல்கள். ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலம். சில காட்சிகள் நம்மால் யூகிக்கும் படியே இருப்பது குறையே. சீனு ராமசாமி எடுத்து கொண்ட களமும் அதை சொல்லி இருக்கும் விதமும் அவரின் அடுத்த படம் பற்றிய எதிர்ப்பார்ப்பை தூண்டி இருக்கிறது... சுனைனா வயதானதும் நந்திதா தாஸாக மாறுவது தான் கடைசி வரை எனக்கு நெருடலாகவே இருந்தது.. அது எப்டிங்க...?