வித்தியாசமான தலைப்பினால் என்னில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம். தலைப்பை வைத்து நிச்சயம் படமும் ஒரு வித்தியாசமான கதைகளத்துடன் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை முழுவதுமாக நிவர்த்தி செய்தது இந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" திரைப்படம். மிகவும் எளிமையான கதைக்களம். ஆனால் அதை சொல்லி இருக்கும் விதம் நிச்சயம் ரசிக்கும்படியே உள்ளது.திருமணத்திற்கு இன்னும் இரண்டு நாட்களே இருக்கும் தருணத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாட செல்லும் நாயகன் கால் இடறி கீழே விழுகிறான். அப்படி விழும் பொழுது பின் தலையில் அடிபட சமீபகால நினைவுகளை மறந்து விட அதன் பின் நடக்கும் சுவாரசியங்களே நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். என்னை பொறுத்த வரை இந்த திரைப்படம் ஒரு நேர்மையான முயற்சி. திரைபடத்தின் சுவாரசியத்திற்காக எந்த வித திருப்பங்களையும் சேர்க்காமல் உண்மையாகவே நம் நண்பன் ஒருவனுக்கு இந்த நிலைமை நேர்ந்தால் என்ன செய்வோமோ அப்படியே நகர்கிறது காட்சிகள்.

நாயகனாக நடித்திருக்கும் விஜய் சேதுபதி நன்றாக செய்திருக்கிறார். அவரின் சமீபத்திய வெற்றியான பீட்சாவை போலவே இந்த படத்தையும் தன் நடிப்பால் தூக்கி நிறுத்திருக்கிறார். அவர் "என்னாச்சி.. கிரிக்கெட் விளையாண்டோம்.. நீ தானே அடிச்ச.." என்று ஒவ்வொரு முறை ஆரம்பிக்கும் போதும் நமக்கு எழும் ஒரு கோவமே அவர் நடிப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம்... விஜய் சேதுபதி வரும் காட்சிகளை விட அவரின் நண்பர்களாக வரும் அந்த மூவர் வரும் காட்சிகளே அதிகம். அருமையாக செய்திருக்கிறார்கள். அதுவும் பச்சி என்கிற பாலாஜியாக வரும் நபர் காட்டும் முகபாவங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன... நாயகிக்கு அதிக வேலை இல்லை என்றாலும் வரும் காட்சிகளை நிறைவாகவே செய்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியான காட்சிகள் ஏராளம்.. Reception காட்சியில் விஜய் சேதுபதி "ப்பா! யாருடா இந்த பொண்ணு.. பேய் மாதிரி இருக்கா.." எனும் போது நம்மால் சிரிப்பை அடக்காமல் இருக்க முடியவில்லை.  படமாக்கப்பட்ட location நாம் பார்த்து பழகிய இடங்கள் போலவே இருப்பதால் ஒரு படம் பார்த்த உணர்வை தராமல் சம்பவங்களை நேரில் நின்று பார்த்ததை போன்ற ஒரு உணர்வே தோன்றியது. ஒளிப்பதிவும் கனகட்சிதம். சின்ன சின்ன timing வசனங்களால் படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் புது முக இயக்குனர் பாலாஜி தரணிதரன். Reception காட்சியின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். நன்றாக இருப்பினும் நம் பொறுமையை கொஞ்சம் சோதிக்கிறது அந்த காட்சிகள்.

கருத்து சொல்கிறேன் பேர்வழி என்று படம் பார்க்க வருபவர்களை கொல்லாமல் கொடுத்த காசுக்கு மனம் முழுதும் மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வாய்த்த இந்த "நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்" மிஸ் பண்ண கூடாத ஒரு திரைப்படம்..