A.R.முருகதாஸ் இயக்கத்தில் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் தாணுவின் பிரம்மாண்டத் தயாரிப்பில் விஜய் நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் "துப்பாக்கி".



ராணுவத்திலிருந்து விடுமுறைக்காக சொந்த ஊரான மும்பைக்கு வரும் விஜய்க்கு எதிர்பாராத விதமாக மும்பையில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தவிருக்கும் தீவிரவாதிகள் பற்றி தெரியவருகிறது. விஜய் எப்படி தீவிரவாதிகளின் சதிசெயல்களை முறியடித்து மும்பை மக்களை காப்பாற்றி வில்லனை வெற்றி கொள்கிறார் என்பதே "துப்பாக்கி" திரைபடத்தின் கதை..

கதையை படித்ததும் " யோவ்! இத தான்யா விஜய்காந்த் ரொம்ப நாளா பண்ணாரு.." னு நீங்க கேக்கலாம். இரண்டுக்கும் வித்தியாசம் உள்ளது. விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தமிழில் பேசியே கொல்லுவார். விஜய் ஹிந்தியில் பேசி அப்புறம் கொல்கிறார். இதனால் சாவது என்னமோ நாம் தான். 

விஜய் கொடுத்த வேலையை கச்சிதமாய் செய்திருக்கிறார். நடிப்பிலும் சற்று மெருகேறியிருக்கிறார். பாடல் காட்சிகளிலும் சண்டை காட்சிகளிலும் வழக்கம் போல நன்றாகவே செய்திருகிறார். சில காட்சிகளில் ஸ்டைலாகவும்  தெரிகிறார் ஆடை வடிவைமைப்பாளர் உதவியால். காஜல் மிக அழகாக இருக்கிறார். ஆனால் மிக குறைவான காட்சிகளே. அதிலும் லூசு பெண்ணாகவே வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பின்னணி குரல் சற்றும் பொருந்தவில்லை. சத்யன் மற்றும் ஜெயராம் இருவரும் சில காட்சிகளில் சிரிக்க வைக்கிறார்கள். வில்லனாக வரும் வித்யுத் நன்றாக செய்திருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முக்கியத்துவம் படத்தின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறது. சில காட்சிகள் லாஜிக் இல்லாமல் இருந்தாலும் படத்தின் விறுவிறுப்பு அதை மறக்கடிக்கிறது.


சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு ரிச்னெஸ் கொடுத்திருக்கிறது. சண்டை காட்சிகள் ரசிக்கும் படி படமாக்கபட்டிருக்கின்றன. பாடல் எடுக்கப்பட்ட விதம் நன்றாக இருப்பினும் தேவை இல்லாத இடங்களில் வருவதால் இடை செருகலாகவே தெரிகின்றன.ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் எத்தனை படங்களுக்கு அவரின் முந்தைய படங்களின் பாடல்களையே கொடுப்பார் என்று தெரியவில்லை.படத்தின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். படத்தின் பல காட்சிகள் இது ஹீரோ படமல்ல இயக்குனரின் படமென சொல்லாமல் சொல்கிறது. ஏழாம் அறிவில் சற்று சறுக்கிய முருகதாஸ் துப்பாக்கி படத்தின் மூலம் விட்ட இடத்தை பிடித்து விட்டார். 

விஜய் இது போன்ற விறுவிறுப்பான படங்களாக தேர்ந்தெடுத்து நடிக்கும் பட்சத்தில் அசைக்க முடியாத ஒரு நிலையான இடத்தை பிடிப்பார் என்பது உறுதி. ஆகமொத்தம் துப்பாக்கி ஒரு பக்கா action entertainer.